இந்நாட்டில் ஆட்சிக்கு யார் வந்தாலும் அதிகாரத்தை தக்கவைப்பதற்காக யாருடனும் எந்த ஊழல் தரப்புடனும் கூட்டணி அமைப்போம் என்ற வார்த்தைக்கு விதி விலக்காக இதுவரை யாரும் செயற்படவில்லை.
ஊழலற்ற அரசாங்கம், ஊழல் குற்றச்சாட்டுக்களை கொண்ட அரசியல் கட்சிகளுடன் கூட்டணி இல்லை, முன்னைய அரசாங்கத்தின் ஊழல் குற்றச்சாட்டுக்கள் விசாரணை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளுடன் ஆட்சியை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தன்னுடைய அரசியல் அபிலாசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக அத்தகைய வாக்குறுதிகளை புறந்தள்ளி செயற்படுவதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இந்நிலையில் நுவரெலியா மாவட்டம் உட்பட ஏனைய மாவட்டங்களில் சேவல் சின்னத்தில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படுவார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை கடந்த 16 ஆம் திகதி தீர்மானம் மேற்கொண்டது.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னிலை பெற்ற சபைகள் உட்பட நுவரெலியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முன்னிலை பெற்ற கட்சிகளின் உறுப்பினர்களின் தொகை அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தை அமைத்துக் கொள்வதே பொருத்தமானது என்ற கருத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள 12 உள்ளூராட்சி மன்றங்களிலும் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெற்றுக்கொள்ளாத நிலையில், கடந்த 17 ஆம் திகதி முதல் நுவரெலியா மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பெரும்பான்மையை தீர்மானிப்பதற்கான வாக்கெடுப்பு மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் ஆரம்பமானது.
இதனடிப்படையில் கடந்த 17 ஆம் திகதி கொட்டகலை மற்றும் அக்கரப்பத்தனை பிரதேச சபைகளின் அதிகாரத்தை இ.தொ.கா. மற்றும் தே.ம.ச. என்பன இணைந்து கைப்பற்றின. கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளராக இ.தொ.கா.வின் ராஜமணி பிரசாத்தும் பிரதி தவிசாளராக தே.ம.ச. உறுப்பினர் ஜேசுதாசன் யாஹுலமேரியும் தெரிவாகினர். அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளராக இ.தொ.காவைச் சேர்ந்த திருமதி ரதி தேவி தெரிவு செய்யப்பட்டார்.
18 ஆம் திகதி நுவரெலியா மாநகர சபை, நுவரெலியா பிரதேச சபை மற்றும் தலவாக்கலை லிந்துலை நகர சபைக்குமான வாக்கெடுப்பும் இடம்பெற்றது. இதன்போது, நுவரெலியா மாநகர சபையின் மேயராக தே.ம.ச உறுப்பினர் உபாலி வனிகசேகர, பிரதி மேயராக இ.தொ.காவைச் சேர்ந்த சிவன் ஜோதி யோகராஜ் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை கொத்மலை, அம்பகமுவ, நோர்வூட், மஸ்கெலியா, வலப்பனை, ஹங்குராங்கெத்த பிரதேச சபைகளுக்கும் ஹட்டன் - டிக்கோயா நகர சபைக்கான வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெற்றுக்கொள்ளாத மன்றங்களில் கூட்டணி மூலம் ஆட்சியை கைப்பற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்று வந்தது. ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த தமிழ் முற்போக்கு கூட்டணியும் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் ஆரம்பம் முதலே பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வந்த போதும் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் கொழும்பில் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வகிக்காத உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு எதிர்த் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளுக்கிடையே இணக்கப்பாடு எட்டப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட முக்கிய எதிர்க் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இவ்வாறு பல பேச்சுவார்த்தைகளை எதிர்க்கட்சிகளுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொண்ட போதும், இறுதியில் சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க, தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் அனைவருக்கும் அல்வா கொடுத்து விட்டு தேசிய மக்கள் சக்தியுடன் இணையும் தீர்மானத்தை ஜீவன் தொண்டமான் அறிவித்தது ஏன்? என்ற வலுவான கேள்வி எழுகிறது.
இந்நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பன உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்பாகவே தேசிய மக்கள் சக்தியை இலக்கு வைத்து பிரசாரங்களை முன்னெடுத்ததுடன், தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தை கைப்பற்றுவதை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தன. ஆனால் தேர்தலுக்குப் பின்னர் பொது எதிரணிக் கூட்டுக்குள் இணைந்து செயற்படுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றுக்கிடையே இணக்கப்பாடு எட்டப்படவில்லை.
தேசிய மக்கள் சக்தி 08 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை பெற்றிருந்தாலும் தனி பெரும்பான்மையை பெற முடியாத நிலை ஏற்பட்டது. மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களுடன் கூட்டணி அமைக்க முயற்சிக்கவில்லையெனவும் சுயேச்சைக் குழுக்களுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாகவும் தேசிய மக்கள் சக்தி தெரிவித்தது.
இதனடிப்படையில் ஆளும் தேசிய மக்கள் சக்தியை விடவும் எதிர்க்கட்சிகள் அதிக ஆசனங்களை பெற்றுள்ள சபைகளில் ஆட்சியை தீர்மானிப்பதற்கான முயற்சிகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன இணைந்து மேற்கொண்டன. எனினும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைமைப் பதவியை பங்கிடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை காரணமாக பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை.
அந்தக் கலந்துரையாடலின் போது கொட்டகலை, நுவரெலியா, அக்கரபத்தனை மற்றும் நோர்வூட் பிரதேச சபைகளின் தலைவர் பதவியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கு வழங்குவது என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஹட்டன் - டிக்கோயா நகர சபை, தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் தலைமைப் பொறுப்புக்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கு வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதிக எண்ணிக்கையிலான ஆசனங்களை கொண்ட உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர் பதவியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கைப்பற்றுவதை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்றுக்கொள்ளவில்லை.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர் பதவியை சமமாகப் பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொள்ளவில்லை என்றால், எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்திலும் அதிகாரத்தை நிறுவுவதில் எந்தக் கட்சியையும் ஆதரிக்கப் போவதில்லை என்றும் அந்த உள்ளூராட்சி நிறுவனங்களில் எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரம் வெளிப்படையாக அறிவித்தார்.
இந்த இழுபறிகளுக்கு மத்தியிலேயே தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஒப்பந்தத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எட்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியமைத்த பின்னர் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்கள் குழு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்பிலும் குடும்ப ஆட்சி தொடர்பிலும் ஊழல் விவகாரங்கள் தொடர்பில் வெளிப்படையாக கருத்து வெளியிட்டிருந்ததை அனைவரும் அறிவார்கள்.
ஆனால் தற்போது இந்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறந்து தேசிய மக்கள் சக்தி எந்த அடிப்படையில் இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து கொண்ட என்பதை நினைக்கும் போது, “அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா…” எனும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் வசனங்களே ஞாபகத்திற்கு வருகின்றன.
கந்தப்பளை காணி ஊழல், பொகவந்தலாவ மாணிக்கக்கல் அகழ்வு, கொட்டகலை நகரசபைக்குட்பட்ட பத்தனை பகுதியில் அமைக்கப்பட்ட கடைத்தொகுதி குத்தகையில் குளறுபடி மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள், ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தை சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது சுமத்தப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது என்பதும் கவனத்துக்குரியது.
ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு தற்போதைய பெருந்தோட்ட அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கள விஜயத்தை (11.12.2024) மேற்கொண்ட போது, இ.தொ.க. பிரமுகர் ஒருவர் மது போதையில் அங்குள்ள அறையொன்றில் தங்கிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
சௌமியமூர்த்தி ஞாபகார்த்த மன்றம் குடும்ப சொத்தாக பயன்படுத்தப்படுவதாக கூறி தொடர்புடைய சட்டத்தை திருத்துவதற்கு 28.04.2025 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
கடந்த 7 ஆம் திகதி இ.தொ.கா.வின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வின் போது, பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து கொடுத்தால் எங்களது முழுமையான ஆதரவை அரசாங்கத்திற்கு வழங்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி விவாதமொன்றின் போது, பாராளுமன்ற உறுப்பினர் கிட்னண் செல்வராஜ் இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்கப்படாதென திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
இவ்வாறு ஒவ்வொரு தரப்பும் தங்களுக்குள் மாறி மாறி குற்றச்சாட்டையும் சேறுபூசல்களையும் மேற்கொண்டவர்களே இன்று அதிகாரத்துக்காக இவற்றை மறந்து மக்களின் வாக்கை பங்கு போட்டுள்ளனர்.
மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதையும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் கூட்டணி அமைக்கப்படவில்லை என்பது தெளிவான விடயமாகும். மறுபுறம் தேசிய மக்களின் ஆட்சியில் பங்காளிகளாக செயற்படப் போகும் எதிர்தரப்பின் ஊழல் குற்றச்சாட்டுக்கள் இனிமேல் எந்தளவுக்கு நம்பகத்தன்மையுடனும் நேர்மையுடனும் விசாரிக்கப்படும் என்பதுவும் சந்தேகமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக