கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

8 ஆகஸ்ட், 2025

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட 91 கோடி ரூபா நிதி எங்கே?

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான வளங்களை அதிகரிப்பது தொடர்பாக ஒவ்வொரு அரசாங்கங்களும் வாக்குறுதி வழங்கும் நிலையிலும் அவை செயற்படுத்தப்படுவதில் பாரிய முன்னேற்றங்கள் இல்லையென்பதை நடைமுறையில் அறிந்துகொள்ள முடியும். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் ஊடாக பல பெருந்தோட்ட பாடசாலைகளில் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதும், திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டமையால் பல பாடசாலைகள் வளப்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டன.

2020 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் நடவடிக்கையில் பல பெருந்தோட்ட பாடசாலைகள் உள்ளடக்கப்பட்ட போதும், தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டதால் அந்த எதிர்பார்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த 10 வருடங்களில் நாட்டிலுள்ள பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு அரசாங்கம் ஒதுக்கிய நிதி மற்றும் அங்கு நிலவும் ஆளணி பற்றாக்குறை என்பவற்றை ஆராய்வதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விடயத்தை நோக்கலாம்.

2024.12.24 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு சுமார் 5 மாதங்களின் பின்னர் தகவல்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவு நடவடிக்கை எடுத்திருந்தது.

குறிப்பாக கட்டிட நிர்மாணம், புனரமைப்பு மற்றும் பாடசாலை பொருட்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 2016 - 2024 ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கம் ஒதுக்கிய நிதியில் சுமார் 91.36 கோடி ரூபா செலவு செய்யப்படவில்லை என்பது தெரிய வந்தது.

மேலும் 79 அதிபர் பதவி வெற்றிடங்களும் 2665 ஆசிரியர் வெற்றிடங்களும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நுவரெலியா மாவட்டத்தில் 314 பெருந்தோட்டப் பாடசாலைகள் காணப்படும் நிலையில் 354 அதிபர்கள் கடமையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டப் பாடசாலைகள்

நாட்டிலுள்ள கொழும்பு, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, பதுளை, மொனராகலை, குருநாகல், இரத்தினபுரி மற்றும் கேகாலை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 864 பாடசாலைகள் பெருந்தோட்டப் பாடசாலைகளாக கல்வி அமைச்சால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் அதிகபட்சமாக நுவரெலியா மாவட்டத்தில் 314 பாடசாலைகளும் பதுளை மாவட்டத்தில் 165 பாடசாலைகளும் கண்டி மாவட்டத்தில் 113 பாடசாலைகளும் இரத்தினபுரி மாவட்டத்தில் 97 பாடசாலைகளும் கேகாலை மாவட்டத்தில் 69 பாடசாலைகளும் பெருந்தோட்ட பாடசாலைகளாக இருக்கின்றன.

864 பெருந்தோட்டப் பாடசாலைகளில் 199,737 மாணவர்கள் கல்வி கற்பதுடன் 13,264 ஆசிரியர்களும் 785 அதிபர்களும் கடமையாற்றுகின்றனர். ஆனால் 864 பெருந்தோட்டப் பாடசாலைகளில் 119 பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலுள்ள 166 பெருந்தோட்டப் பாடசாலைகளில் 83 பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் காணப்படுகின்றது. ஏனைய 9 மாவட்டங்களிலும் 36 அதிபர் வெற்றிடங்கள் காணப்படுகின்றது. ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் 314 பெருந்தோட்டப் பாடசாலைகள் காணப்படும் நிலையில் 354 அதிபர்கள் கடமையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மேலதிகமாக 40 அதிபர்கள் கடமையில் இருக்கின்றனர்.

பெருந்தோட்டப் பாடசாலையில் ஆசிரியர் வெற்றிடங்கள்

பெருந்தோட்ட பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்பது மிக நீண்டகால பிரச்சினை. இதற்கு ஆசிரியர் இடமாற்றம் முறையாக இடம்பெறாமையும் முக்கிய காரணமாகும். மேல், வடமேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் காணப்படும் 864 பெருந்தோட்டப் பாடசாலைகளில் 2665 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதிகபட்சமாக மத்திய மாகாணத்தில் 1174 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களும் சப்ரகமுவ மாகாணத்தில் 720 ஆசிரியர் வெற்றிடங்களும் ஊவா மாகாணத்தில் 499 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களும் காணப்படுகின்றன. ஆரம்பக்கல்வி, ஆரம்பக்கல்வி ஆங்கில மொழி, கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், இரண்டாம் மொழி சிங்களம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

பெருந்தோட்ட பாடசாலைகளில் கற்கும் மாணவர்களில் அதிகமானோர் உயர்தரத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான பிரிவுகளை தேர்வு செய்வதில் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில், அவர்கள் குறித்த பிரிவை தேர்வு செய்வதற்கு ஏற்ற வகையிலான அறிவைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான ஆசிரியர் வளங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்களா? என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.

மேலும் பெருந்தோட்டப் பாடசாலைகள் கடமையாற்றும் 13,264 ஆசிரியர்களில் 5586 ஆசிரியர்கள் மாத்திரமே பட்டதாரி ஆசிரியர்களாக காணப்படுகின்றனர். இதில் 5151 ஆசிரியர்கள் பட்டதாரிகளாக ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டவர்களாக இருக்கும் நிலையில் தேசிய கல்வியியற் கல்லூரியிலிருந்து வெளியேறிய ஆசிரியர்களில் 438 பேர் மாத்திரமே பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்கள்.

ஏழு தேசிய பாடசாலைகளே காணப்படுகிறது…

864 பெருந்தோட்டப் பாடசாலைகளில் ஏழு பாடசாலைகள் மாத்திரமே தேசிய பாடசாலைகளாக காணப்படுவதுடன் 857 பாடசாலைகள் மாகாண பாடசாலைகளாக கல்வி அமைச்சால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. களுத்துறை, நுவரெலியா, காலி, மாத்தறை, மொனராகலை, கேகாலை, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் எந்தவொரு பெருந்தோட்ட பாடசாலையும் தேசிய பாடசாலையாக அங்கீகரிக்கப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக அங்கீகரிக்கும் செயற்றிட்டத்தின் அடிப்படையில் பல பெருந்தோட்டப் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக அங்கீகரிக்கப்பட்ட போதும், அத்திட்டம் கைவிடப்பட்டமையால் அந்த முயற்சிகளும் கைகூடவில்லை. இதன்போது நுவரெலியா மாவட்டத்தில் 16 பாடசாலைகள் இந்த வாய்ப்பை இழந்திருந்தன.

தற்போது கம்பளை, வத்தேகம, மாத்தளை, பதுளை, பசறை, நிவித்திகல ஆகிய கல்வி வலயங்களிலுள்ள ஏழு பெருந்தோட்டப் பாடசாலைகள் மாத்திரமே தேசிய பாடசாலைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள 864 பெருந்தோட்டப் பாடசாலைகளில் 418 ஆரம்ப பாடசாலைகளும் (வகை 3, தரம் 1-5), 273 சாதாரண தரம் வரையான பாடசாலைகளும் (வகை 2, தரம் 1-9, 1-11), 1சி பாடசாலைகள் 145 (உயர்தரத்தில் கலை, வர்த்தக பிரிவு), 1ஏபி பாடசாலைகள் 28 (உயர்தரத்தில் கலை, வர்த்தகம், கணிதம், விஞ்ஞான பிரிவு) என்பன உள்ளடங்கும். இதனடிப்படையில் உயர்தரப் பிரிவில் கணிதம் மற்றும் விஞ்ஞான பிரிவுகளைக் கொண்ட 28 பாடசாலைகள் மாத்திரமே காணப்படுகின்றது. இதனால் உயர்தரத்தில் கணித, விஞ்ஞானப் பிரிவை தெரிவு செய்யும் மாணவர்கள் நகர்புற பாடசாலைகளுக்கே செல்ல வேண்டிய நிலையும் அதிக போட்டித் தன்மை காணப்படுவதும் இத்துறையில் பிரகாசிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவுக்கு காரணமாக அமைந்துள்ளது.

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான நிதியொதுக்கீடுகள்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செலவுத் தலைப்பு இலக்கமான 126 இன் கீழ் பொதுக் கல்விக்கு 2025 ஆம் ஆண்டில் முதல் 4 மாதங்களில் 42.8535 பில்லியன் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வொதுக்கீட்டில் பெருந்தோட்ட பாடசாலை அபிவிருத்தி கிளைக்கு 110.5 மில்லியன் ரூபா மூலதன ஒதுக்கீடாக வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிரல் அமைச்சிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 42.8535 பில்லியன் ஒதுக்கீட்டினுள் பெருந்தோட்ட பாடசாலைகளில் கல்விசார் மற்றும் கல்விசாரா பணியாளர்களது சம்பளம், படிகள் போன்ற மீண்டுவரும் செலவுகளும் அனைத்து தேசிய பாடசாலைகளுக்கு உரிய திருத்த வேலைகள், ஆசிரியர் பயிற்சிகள் மற்றும் உபகரணக் கொள்வனவு செய்வதற்கான மூலதனச் செலவுகள் உள்ளடங்கியுள்ளது.

ஆகையால் பெருந்தோட்ட பாடசாலைக்கு மாத்திரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையினை குறிப்பாக கூற முடியாதெனவும் ஒவ்வொரு பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் செயலமர்வுகளிலும் பங்கேற்பவர்களில் பெருந்தோட்டப்புறப் பாடசாலைகளின் ஆசிரியர்களும் உள்ளடங்குவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பாக கட்டிட நிர்மாணம், புனரமைப்பு மற்றும் பாடசாலை பொருட்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 2016 - 2024 ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கம் ஒதுக்கிய நிதியில் சுமார் 91.36 கோடி ரூபா செலவு செய்யப்படவில்லை என்பது தெரிய வந்தது. பெருந்தோட்டப் பாடசாலைகளுக்காக 2016 - 2024 ஆண்டு காலப்பகுதியில் 174.25 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் 82.86 கோடி ரூபாவே செலவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 91.39 கோடி ரூபா செலவு செய்யப்படவில்லை.

மனிதவள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 2015 - 2023 ஆம் ஆண்டுவரை 23.1 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதும், 16.05 மில்லியன் ரூபாவே விடுவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 14.98 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு மில்லியன் ரூபா எஞ்சியுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட பாடசாலைகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லையா?

இலங்கையில் இலவச கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு பல தசாப்தங்களுக்குப் பின்னரே பெருந்தோட்டப் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. அதற்கு முன்பாக தோட்டங்களே பெருந்தோட்ட பாடசாலைகளை செயற்படுத்தின. இதனால் ஏனைய பாடசாலைகளை விடவும் பெருந்தோட்டப் பாடசாலைகள் மீது விசேட கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இதற்காகவே கல்வி அமைச்சால் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு விசேட பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் வளங்கள், ஆளணி மற்றும் ஏனைய செயற்றிட்டங்கள் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு சென்றடைவதும், அவற்றுக்கான நிதியொதுக்கீடுகளும் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருப்பதை அவதானிக்க முடிகின்றது. மேற்கூறப்பட்ட கல்வி அமைச்சு தகவல்களின் அடிப்படையில் பின்வரும் விடயங்களை அவதானிக்கும் போது இவ்விடயங்கள் எமக்கு புலப்படுகின்றன.

• 864 பெருந்தோட்டப் பாடசாலைகளில் 119 பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் மேலதிகமாக 40 அதிபர்கள் பதவியில் உள்ளனர்.

• பெருந்தோட்டப் பாடசாலைகளில் 2665 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதிகபட்சமாக மத்திய மாகாணத்தில் 1174 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

• ஆரம்பக்கல்வி, ஆரம்பக்கல்வி ஆங்கில மொழி, கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், இரண்டாம் மொழி சிங்களம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

• பட்டதாரி ஆசிரியர் நியமனங்களைத் தவிர்த்து, கல்வியியற் கல்லூரிகளிலிருந்து வெளியேறும் ஆசிரியர்கள் தங்களது உயர் கல்வி தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை.

• பெருந்தோட்டப் பாடசாலைகளில் ஏழு பாடசாலைகள் மாத்திரமே தேசிய பாடசாலைகளாக காணப்படுகிறது. களுத்துறை, நுவரெலியா, காலி, மாத்தறை, மொனராகலை, கேகாலை, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் எந்தவொரு பெருந்தோட்ட பாடசாலையும் தேசிய பாடசாலையாக அங்கீகரிக்கப்படவில்லை.

• 1சி பாடசாலைகள் 145 (உயர்தரத்தில் கலை, வர்த்தக பிரிவு), 1ஏபி பாடசாலைகள் 28 (உயர்தரத்தில் கலை, வர்த்தகம், கணிதம், விஞ்ஞான பிரிவு) உள்ளது. இதனடிப்படையில் உயர்தரப் பிரிவில் கணிதம் மற்றும் விஞ்ஞான பிரிவுகளைக் கொண்ட 28 பாடசாலைகள் மாத்திரமே காணப்படுகின்றது.

• 2016 - 2024 ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கம் ஒதுக்கிய நிதியில் சுமார் 91.36 கோடி ரூபா செலவு செய்யப்படவில்லை.

இவ்வாறு பல்வேறு பற்றாக்குறைகள் மற்றும் முறையற்ற நிர்வாகம் என்பவற்றால் பின்தங்கிய நிலையிலேயே பெருந்தோட்டப் பாடசாலைகள் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

கடந்த வரவு செலவுத்திட்டத்திலும் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டாலும், இலங்கை அரசாங்கம் போதியளவு ஒதுக்கீடுகளை மேற்கொள்ளவில்லை. முன்னைய அரசாங்கங்களால் செயற்படுத்தப்பட்டு, தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை முன்னெடுப்பதற்கு போதிய நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுமாயின் பல பெருந்தோட்ட பாடசாலைகளின் வளப்பற்றாக்குறைகளை தீர்க்க முடியும்.

மலையக தமிழ் சமூகம் அதிகமாக வசிக்கின்ற பிரதேசங்களில் வதிவிட வசதிகளைக் கொண்ட உயர்தர விஞ்ஞானம் மற்றும் கணிதம் கற்பிக்கக்கூடிய 1ஏபி பாடசாலைகளும் தேசிய பாடசாலைகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், கல்வியியற் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. குறிப்பாக கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் தகைமை பெற்ற ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகின்றது. மலையகத் தமிழ் பிள்ளைகளுக்கு கல்வித் துறையில் முறையான மாற்றத்தையும் சமவாய்ப்பையும் தேசிய மக்கள் சக்தி உறுதிப்படுத்தும் என அதன் ஹட்டன் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனினும் பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் குறைப்பாடுகளை அரசாங்கத்துக்கு கொண்டு செல்லவும் அரசாங்கத்தின் ஊடாக பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்குமான செயற்பாடுகளை முன்னெடுக்கப் போவது யார் என்பதே தற்போதுள்ள பிரச்சினை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக