கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், YouTube videos

21 மார்ச், 2024

1000 தேசிய பாடசாலைகளின் நீக்கம் :வளப்பகிர்வின் இடைவெளியை அதிகரித்துள்ளது


வவுனியா வளாகம் (தற்போது வவுனியா பல்கலைக்கழகம்)

வவுனியா வளாகத்துக்கு நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் அதிகம் உள்வாங்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தாலும் அவை மிகக் குறைந்தளவாகவே இருக்கின்றன. அதிகபட்சமாக 2015 - 2019 வரையான நான்கு கல்வியாண்டுகளுக்கு அதிகபட்சமாக முகாமைத்துவ கற்ககைகளுக்கு 15 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். திட்ட முகாமைத்துவ கற்கைக்கு 10 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். ஏனைய பிரிவுகளுக்கு மிகக் குறைந்த மாணவர்களே அனுமதி பெற்றுள்ளனர். (அட்டவணை 01)

2015 - 2019 வரையான நான்கு கல்வியாண்டுகளுக்கு கண்டி, பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 398 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ள போதும் அவர்களில் 67 பேர் மாத்திரமே தமிழர்களாவர். ஏனையோர் சிங்களவர்களாவர்.

இயற்பியல் விஞ்ஞான பிரிவுக்கு 2015 - 2019 வரையான நான்கு கல்வியாண்டுகளுக்கு கண்டி, பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 48 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ள போதும் அவர்களில் நால்வர் மாத்திரமே தமிழர்களாவர்.

உயிரியல் விஞ்ஞான பிரிவுக்கு 2015 - 2019 வரையான நான்கு கல்வியாண்டுகளுக்கு கண்டி, பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 46 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ள போதும் அவர்களில் ஆறு பேர் மாத்திரமே தமிழர்களாவர்.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவுக்கு 2015 - 2019 வரையான நான்கு கல்வியாண்டுகளுக்கு கண்டி, பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 53 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ள போதும் அவர்களில் இருவர் மாத்திரமே தமிழர்களாவர்.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவுக்கு 2015 - 2019 வரையான நான்கு கல்வியாண்டுகளுக்கு கண்டி, பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 94 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ள போதும் அவர்களில் 11 பேர் மாத்திரமே தமிழர்களாவர்.

தென்கிழக்கு பல்கலைக்கு அதிகம் உள்வாங்கப்படும் மலையக மாணவர்கள்


 

தென்கிழக்கு பல்கலைக்கு அதிகம் உள்வாங்கப்படும் மலையக மாணவர்கள்


ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் 2017 - 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கற்கை நெறிகளை முன்னெடுப்பதற்கு நுவரெலியா, பதுளை, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 642 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 13 பேர் பல்கலைக்கழக கல்வியை இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கற்கை நெறியை தொடருவதற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களில் 46 பேர் விலங்கு விஞ்ஞானத்தில் விசேட இளமானி கற்கைக்கும் 50 பேர் ஏற்றுமதி விவசாயத்தில் விசேட விஞ்ஞான இளமானி கற்கைக்கும் 33 பேர் தேயிலை தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டலில் விசேட விஞ்ஞான இளமானி கற்கைக்கும் 36 பேர் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் விசேட தொழில்நுட்ப இளமானி கற்கைக்கும் 51 பேர் நீர்வள தொழில்நுட்பத்தில் விசேட விஞ்ஞான இளமானி கற்கைக்கும் 31 பேர் பனை மற்றும் லேடெக்ஸ் தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டல் ஆகியவற்றில் விசேட விஞ்ஞான இளமானி கற்கைக்கும் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் 47 பேர் தொழில்துறை தகவல் தொழில்நுட்பத்தில் விசேட இளமானி கற்கைக்கும் 41 பேர் கணினி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் விசேட விஞ்ஞான இளமானி கற்கைக்கும் 40 பேர் கனிம வளங்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் விசேட விஞ்ஞான இளமானி கற்கைக்கும் 48 பேர் தொழில் முயற்சியாண்மை மற்றும் முகாமைத்துவத்தில் வணிக முகாமைத்துவ இளமானி கற்கைக்கும் 46 பேர் விருந்தோம்பல், சுற்றுலா மற்றும் நிகழ்வுகள் முகாமைத்துவத்தில் வணிக முகாமைத்துவ இளமானி கற்கைக்கும் 87 பேர் உயிர் அமைப்புகள் தொழில்நுட்பத்தில் இளமானி கற்கைக்கும் 86 பேர் பொறியியல் தொழில்நுட்பத்தில் இளமானி கற்கைக்கும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

நுவரெலியா மாவட்டத்திலேயே குறைந்தளவான பல்கலைக்கழக அனுமதி பதிவாகியுள்ளது

 


நுவரெலியா மாவட்டத்திலேயே குறைந்தளவான பல்கலைக்கழக அனுமதி பதிவாகியுள்ளது


2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்ட கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி என்பவற்றால் பரீட்சைகள் உரிய வேளைக்கு நடத்தப்படுவது தடைபட்டது. அந்நிலைமை இன்று வரை நீடிக்கின்றது. இதனால் மாணவர்கள் மனதளவில் அசௌகரியங்களுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த வருடம் இடம்பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மத்திய மாகாணத்திலிருந்து 34,191 மாணவர்கள் பரீட்சைக்குத்
தோற்றியிருந்த்ததுடன் அவர்களில் 21,031 பேர் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இவ்வாறு பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டாலும் பலர் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதியை கொண்டிருக்கவில்லை என்பது முக்கிய குறைபாடாகும்.

இவற்றில் உயிரியல் விஞ்ஞான பிரிவுக்கு 2119 பேரும் இயற்பியல் விஞ்ஞான பிரிவுக்கு 1717 பேரும் வர்த்தகப் பிரிவுக்கு 4804 பேரும் கலைப் பிரிவுக்கு 7858 பேரும் பொறியியல் தொழில்நுட்பத்துக்கு 1182 பேரும் உயிரியல் தொழில்நுட்பத்துக்கு 1222 பேரும் பல்கலைக்கழககங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றிருந்தும் மலையகத்திலிருந்து 600 - 700 வரையான மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றிருந்தனர்.

மத்திய மாகாணத்தில் 2016 - 2020 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானம், இயற்பியல் விஞ்ஞானம், வர்த்தகம், கலை, பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் அமைப்பு தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களின் சதவீதம் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. மாகாண தரவரிசையில் மத்திய மாகாணம் 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பின்னடைவை சந்தித்துள்ளதாக மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் தகவல்களின் மூலம் அறிய முடிகின்றது.

1 மார்ச், 2024

பல்கலைக்கழக நுழைவுத் தகுதியில் வில்கமுவ கல்வி வலயம் முதலிடம்

 


பல்கலைக்கழக நுழைவுத் தகுதியில் வில்கமுவ கல்வி வலயம் முதலிடம்


மலையகத்திலிருந்து உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கு மாணவர்கள் எவ்வாறான சிரமங்களை எதிர்கொள்கின்றார்களோ, அதைவிட அதிகமான நெருக்கடிகளை பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையை முன்னெடுப்பதில் எதிர்கொள்கின்றனர். இவற்றில் பிரதானமாக பொருளாதார நெருக்கடியை குறிப்பிட முடியும். குறிப்பாக பல்கலைக்கழக கல்வி நான்கு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்தாலும் நெருக்கடி நிலைமைகளில் ஏழு வருடங்கள் கூட கல்வியை தொடர வேண்டிய நிலையை உருவாக்குகிறது. எனவே அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு நாம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்? இவ்வாறான விடயங்களை அரசியல் ரீதியாக மாத்திரம் தீர்க்க முடியாது. அதற்கு சமூக பொறுப்பு கொண்ட அனைவரும் முன்வருவதும் அவசியமாகும்.

பெரும்பாலான மாணவர்கள் கலை மற்றும் வர்த்தகப் பிரிவுகளையே அதிகம் தெரிவு செய்வதை பல்கலைக்கழக புள்ளிவிபரங்கள் மூலம் அறிய முடிகின்றது. அதற்கு எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள வளங்களும் முக்கிய காரணமாகும்.

இவ்விடயம் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தாவது, “இலவசக் கல்வி கிடைப்பதில் தாமதம், ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் கலைப்பிரிவுகளே அதிகம் உருவாக்கப்பட்டமை போன்ற விடயங்கள் விஞ்ஞான, கணித பாடங்களுக்கான இடைவெளியை அதிகரித்துள்ளது. பல்கலைக்கழகத்தில் கலைத்துறையை தெரிவு செய்பவர்கள் மீண்டும் ஆசிரியர்களாக இணைந்து கொண்டாலும் விஞ்ஞான பிரிவை தெரிவு செய்பவர்கள் மீண்டும் ஆசிரியர்களாக வருவது மிகவும் குறைவு. இவ்வாறான விடயங்களை கவனத்தில் கொள்ளாமல் கல்வியில் மேம்பட்ட சமூகத்தை உருவாக்கமுடியாது. எனவே மாணவர்கள் இல்லாதது எமது பிரச்சினையல்ல. ஆசிரியர்கள் இல்லாமையே எமது பிரச்சினை. இதற்காகவே இந்தியாவிலிருந்து துறைசார்ந்த ஆசிரியர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும், எதிர்ப்புகளால் கைவிடப்பட்டது” என தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பல்கலைக்கழகத்தில் கற்பவர்களை பகுதி நேர ஆசிரியர்களாக உள்வாங்கும் ஒரு திட்டம் முதலாவதாக பதுளை சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டு பெறுபேற்றை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டது. பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதில் சமூகம் சார்ந்த தீர்மானங்களை முன்னெடுக்காவிட்டால் மலையகத்தில் இவ்வாறான பிரச்சினைகள் நீண்டு கொண்டே செல்லும். நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் உயர்தரத்துக்கு வெளிமாட்ட மாணவர்களை இணைப்பதற்கு விதிக்கப்பட்ட தடையால் நன்மைகளும் இருக்கின்றன. அதிக மாணவர்களை வகுப்புகளில் இணைப்பதால் ஆசிரியர்களுக்கான வேலைப்பளு மேலும் அதிகரிக்கப்படுகின்றது. அத்துடன் மேலதிக வகுப்பறைகளை உருவாக்குவதற்கான இடப்பற்றாக்குறையும் உருவாகின்றது. அதனை தவிர்ப்பதற்கு இவை வாய்ப்பேற்படுத்தியது.” எனவும் தெரிவித்தார்.

பல்கலைக்கழக அனுமதியில் மத்திய மாகாணம் தொடர்ச்சியாக தேசிய அளவில் பின்னடைவையே சந்தித்துள்ளமையை மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் மூலம் அறியமுடிகின்றது. பல்கலைக்கழக நுழைவுத் தகுதிக்கான பாடசாலை பரீட்சார்த்திகளின் செயல்திறன் அடிப்படையில் ஹட்டன் கல்வி வலயம் 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கம்பளை, வலப்பனை மற்றும் வில்கமுவ கல்வி வலயங்கள் தொடர்ச்சியான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன. வத்தேகம, கட்டுகஸ்தோட்டை மற்றும் ஹங்குராங்கெத்த கல்வி வலயங்கள் தொடர்ச்சியாக பின்னடைவை சந்தித்துள்ளன. (அட்டவணை 01) எனினும் இவை பல்கலைக்கழக தெரிவில் தாக்கம் செலுத்தவில்லை.