உலகில் வேறொரு நாட்டின் கதையை நான் கூறவில்லை. இலங்கையில் இரத்தினபுரி மாவட்டம் ஓப்பநாயக்க பிரதேச செயலகத்துக்குட்பட்ட கஹவத்தை பெருந்தோட்ட கம்பனிக்குச் சொந்தமான அக்கரல்ல தோட்டம் மக்களின் நிலைமையே இது…
அக்கரல்ல தோட்டத்தில் வசிக்கும் 55 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இவ்வாறு சுத்தமான குடிநீர் இல்லாமல் சுகாதார சீர்கேட்டை எதிர்கொண்டுள்ளனர். மிக நீண்ட காலமாக இந்த பிரச்சினை இருந்தாலும் கடந்த இரண்டு வருடங்களாக இந்த குடிநீர் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. அதனால் மழைநீரை சேமித்து பருகிவரும் இந்த மக்கள் அதில் புழுக்கள் காணப்படுவதால் சிறுவர் முதல் முதியோர் வரை சுகாதார பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்துள்ளனர்.
தங்களின் குடிநீர் பிரச்சினை தொடர்பில் கருத்து வெளியிட்ட தாயொருவர், “எனது பிள்ளை பிறந்து 6 மாதம் முதல் கஹவத்தை வைத்தியசாலைக்கே கிளினிக் செல்கிறோம். தற்போது அவருக்கு 2 வயதாகிறது. குடிநீர் பிரச்சினையால் வயிற்றில் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு குடிநீர் பிரச்சினையால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்களிடம் தெரிவித்தாலும் பிள்ளைகளை முறையாக பராமரிப்பதில்லையென எங்களை குற்றம் சுமத்துகிறார்கள்” என தெரிவித்தார்.
இதற்கு முன்னர் 1934ம் ஆண்டு காலப்பகுதியில் ஆங்கிலேயரால் நிர்மாணிக்கப்பட்ட கிணற்றிலிருந்து இத்தோட்ட மக்களுக்கான குடிநீர் விநியோகம் இடம்பெற்றது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த நீர் விநியோக இயந்திரம் மற்றும் குடிநீர் இணைப்புகள் என்பன சேதமடைந்தமையால் உரிய வகையில் குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கிணற்றிலிருந்து நீரைப் பெற்றுக் கொள்வது இயலுமான விடயமாக இருந்தாலும் அதற்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் இணைப்புகள் வழங்கப்படுமாயின் அது சாத்தியமாகும் நிலை காணப்படுகிறது. அவற்றை பொருத்திக் கொள்வதற்கான வசதி அவர்களிடம் இல்லை. தோட்ட நிர்வாகமும் இதுவரை இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்தவில்லை. இந்த மக்களிடம் வாக்குகளை பெற்றவர்களும் அம்மக்களை கண்டுகொள்ளவில்லை. என்ன செய்வதென்று தெரியாமலேயே அவர்கள் காலத்தை கடக்கின்றனர்.
நாங்களும் எங்கள் பிள்ளைகளும் மழைநீரையே பருகுகிறோம். எங்களுக்கான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு இங்குள்ள தொழிலாளியொருவர் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “குடிநீர் மட்டுமல்லாது மலசலகூடம், பாதை என எந்த அடிப்படை வசதிகளும் எங்களுக்கு இல்லை. கர்ப்பிணித் தாய்மார்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு கூட கடும் பிரச்சினை காணப்படுகிறது. புழுக்கள் நிறைந்த மழைநீரையே வடிகட்டி குடிநீராக பயன்படுத்துகிறோம். அதனால் எங்களுக்கு வயிற்று வலி உள்ளிட்ட பல சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்” என தெரிவித்தார்.
இதனால் பெண்கள் சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என சகலரும் மிக நீண்ட தூரம் பயணித்து 1934ம் ஆண்டு காலப்பகுதியில் ஆங்கிலேயரால் நிர்மாணிக்கப்பட்ட கிணற்றிலிருந்து நீரை சுமந்து வருகின்றனர்.
பாடசாலை செல்லும் பிள்ளைகள், குழந்தைகளை கொண்ட பெற்றோர் மற்றும் தொழிலுக்குச் செல்வோர் என பலர் இங்கிருப்பதால் அவர்களால் தினந்தோறும் குறித்த கிணற்றிலிருந்து நீரை சுமந்து வர முடியாது. இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே அவர்கள் குடிநீருக்காக மழைநீரை சேமிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வீடுகளுக்கு முன்னால் பாரிய பரல்கள் மூலம் மழைநீரை சேமித்து அதனை குடிப்பதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். மழைநீரை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைப்பதால் அவற்றில் புழுக்கள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பருகும் அம்மக்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.
எனவே அக்கரல்ல தோட்டத்தில் வசிக்கும் 55 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு பொறுப்பான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்ட நிர்வாகம், சுகாதார உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.
நீர் வளம் மிக்க மலை நாட்டில் வாழும் அவர்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லையென்பது துரதிர்ஷ்டவசமான நிலைமையாகும். இலங்கையில் மலைநாட்டில் உற்பத்தியாகும் நீரை போத்தலில் அடைத்து நாடு முழுவதும் மட்டுமல்லாது உலகளவில் விற்பனை செய்வதை அனுமதிக்கும் இலங்கை அரசாங்கம், இலங்கை மக்களுக்கான சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

.jpg)


.jpg)
.jpeg)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக