கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

14 ஜூன், 2023

உயிர்காக்கும் சேவைக்கு உதவுவோம்


இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இலங்கையில் உருவாக்கப்பட்ட உயிர்காக்கும் சுவசெரிய அம்புலன்ஸ் சேவை தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. நாடுமுழுவதும் பல உயிர்களை காப்பற்றும் சேவையை சிறப்பாக முன்னெடுத்த சுவசெரிய இன்று இன்னொருவரின் தத்தெடுப்புக்காக காத்திருக்கின்றது. கொவிட் காலத்தில் தமது உறவுகளை காப்பற்றுவதற்காக பரிதவித்த பலரின் ஏக்கங்களை சுவசெரிய அம்புலன்ஸ் சேவை நிறைவேற்றியிருந்தது. திறைச்சேரியினால் முழுமையான நிதியொதுக்கீடுகளை மேற்கொள்ள முடியாமையினால் 2023 ஆம் ஆண்டில் தனது சேவையை முழுமையாக முன்னெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் சுகாதார வசதிகளில் பின்தங்கியுள்ள கிராமங்கள் மற்றும் தோட்ட மக்கள் கடும் பாதிப்பினை எதிர்கொள்வார்கள் என்பது தெளிவாகியுள்ளது.

இரண்டு மாகாணங்களில் 88 அம்புலன்ஸ்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட 1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேiவாயனது, தற்போது 1390 உறுப்பினர்களைக் கொண்ட ஆர்வமுள்ள குழுவுடன் 297 அம்புலன்ஸ்கள் கொண்டு 24 மணி நேர அவசர மருத்துவ சேவையை வழங்கி வருகின்றது. 2016 முதல், விபத்துக்கள், நோய்கள் மற்றும் அவசரகால சூழ்நிலைகளைத் தடுப்பது, அவசரநிலைகளில் மக்களை விரைவாகவும் திறமையாகவும் காப்பாற்றுவது மற்றும் உதவுவது மற்றும் நோய் மற்றும் காயங்களுக்குப் பிறகு மக்களை மறுவாழ்வு செய்வது சுவசெரியவின் பணியாக உள்ளது.

2015 இல் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வர் அம்புலன்ஸ் வலையமைப்புடன் கூடிய நவீன அவசர மருத்துவ சேவைக்கான முன்மொழிவை பிரதமரிடம் முன்வைத்தார். இந்திய அரசாங்கத்தின் தாராளமான மானியத்தின் ஆதரவுடன், ஜூலை 27, 2016 அன்று முதல் 1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவை அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு சவால்களுக்குப் பின்னர் தற்போது முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் அவசர மருத்துவ சேவையினை இலவசமாக வழங்கி வருகின்றது.

இந்நிலையில் 1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவையானது, பொருளாதார நெருக்கடியின் மத்தியில் உயிர்வாழ்வதற்காக நிதி திரட்டும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. திறைச்சேரியில் இருந்து அதன் செயற்பாடுகளுக்கு முழுமையாக நிதியளிக்க முடியாமையால் 2023 ஆம் ஆண்டு சேவையினை நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுவசெரிய அம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெருநிறுவனங்களையும் தனி நபர்களையும் 1990 அம்புலன்ஸ் சேவையை காப்பாற்ற 5 மில்லியன் ரூபா செலவில் ஒரு அம்புலன்ஸை தத்தெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது இந்த சேவை மூலம் நாடு முழுவதும் 297 அம்புலன்ஸ்கள் இயக்கப்படுவதுடன் தினசரி 1050 க்கும் மேற்பட்ட அவசரநிலை சேவைகளை வழங்குகின்றது. நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் சராசரியாக 11.5 நிமிடங்களில் பதிலளிப்பதுடன், உலக நாடுகளை விட மிக சிறந்த சேவையினை வழங்கி வருகின்றது.

இந்நிலையில் 1990 சுவசெரிய மன்றத்திலிருந்து (RTI/2022/JAN/01) தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களிலும் 297 சுவசெரிய அம்புலன்ஸ் சேவையில் ஈடுபடுவதாகவும் இவற்றில் அதிகமாக மேல் மாகாணத்தில் 56 அம்புலன்ஸ்கள் சேவையில் உள்ளதாகவும் மத்திய மாகாணத்தில் 46, கிழக்கு மாகாணத்தில் 29, வடமத்திய மாகாணத்தில் 26, வட மாகாணத்தில் 21, வடமேல் மாகாணத்தில் 31, சப்ரகமுவ மாகாணத்தில் 25, தென் மாகாணத்தில் 34, ஊவா மாகாணத்தில் 29 அம்புலன்ஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் மக்கள் தொகை, பரப்பளவு மற்றும் பொலிஸ் நிலையத்தின் இருப்பிடத்தின் அடிப்படையில் அம்புலன்ஸ்கள் பகிர்ந்தளிக்கப்பட்டாலும் பின்னர் இது கணினிமயமாக்கப்பட்ட அமைப்பை அடிப்படையாகக் கொண்டு செயற்படுத்தப்படுகின்றது. 1990 சுவசெரிய மன்றத்தில் 31.12.2021 ஆம் திகதி அடிப்படையில் 678 அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர்களும் அவசர தகவல் செய்திகளை பெற்று சேவை வழங்கும் 38 பேரும் 583 அம்புலன்ஸ் சாரதிகளும் கடமையாற்றுகின்றனர்.

சுவசெரிய அம்புலன்ஸ் சேவையின் மூலம் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களுக்கு மாத்திரமே சேவைகள் வழங்கப்படுகின்றன. இறந்த நோயாளிகளின் போக்குவரத்து சாதாரண செயல்பாட்டு அவசரநிலைகளுக்கு இடையூறு விளைவிக்கும் என்பதால் உயிரிழந்தவர்களின் உடல்களை ஏற்றுவதற்கு சுவசெரிய அம்புலன்ஸ் சேவை வழங்கப்படுவதில்லை. 

சுவசெரிய மன்றத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் செலவுகளுக்காக அரசாங்கத்தினால் 2019 – 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 4888.34 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 2019 ஆம் ஆண்டு 1003.66 மில்லியன் ரூபாவும் 2020 ஆம் ஆண்டு 1836.68 மில்லியன் ரூபாவும் 2021 ஆம் ஆண்டு 2048 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

‘அம்புலன்ஸ் ஒன்றை ஏற்றுக்கொள்’

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையால் திறைசேரியினால் சுவசெரிய அம்புலன்ஸ் சேவைக்கு முழுமையாக நிதியளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பெருநிறுவனங்களிடம் அம்புலன்ஸ் ஒன்றை தத்தெடுக்குமாறு சுவசெரிய அம்புலன்ஸ் சேவையின் ஸ்தாபகர், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கோரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கையின் முதலாவது வைத்தியசாலைக்கு முந்திய சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவையை நிலைநிறுத்துவதற்கு நிதிக்கான அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அரசாங்கம் கடன் பெற்றுள்ள நிலையிலும் அவை இலங்கையின் மீட்சிக்கு போதுமானவையாக இல்லை. 


தற்போது நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கி அவசர அம்புலன்ஸ் சேவையை வழங்கி வரும் சுவசெரிய, இதுவரை 14 இலட்சத்திற்கும் அதிகமான அவசர நிலைமைகளுக்கு பதிலளித்து உதவி வழங்கியுள்ளது. இந்த சேவை தொடர்ந்து இயங்குவதற்கு அரசாங்கத்திடம் இருந்து 3.9 பில்லியன் ரூபாவை கோரியுள்ள நிலையில், திறைசேரி 2.5 பில்லியன் ரூபாவை மாத்திரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அத்தியாவசிய பொதுச் செலவினங்களுக்காக நிதியை விடுவிக்குமாறு திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பெருநிறுவனங்களிடம் அம்புலன்ஸ் ஒன்றை தத்தெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதுடன் இந்த தகுதியான நோக்கத்திற்கான அனைத்து நன்கொடைகளுக்கும் 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் எனவும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன் உதவியினை வழங்கமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஒரு அம்புலன்ஸை தத்தெடுப்பதற்கு 5 மில்லியன் ரூபாவினை வழங்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

1.5 பில்லியன் நிதிப் பற்றாக்குறை

சுவசெரிய அம்புலன்ஸ் சேவையானது, தற்போது 1.5 பில்லியன் ரூபா நிதி பற்றாக்குறையினை எதிர்கொண்டுள்ள நிலையில் பல முன்னணி பெருநிறுவனங்களினால் 525 மில்லியன் ரூபா சிதியுதவிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. சுவசெரிய அம்புலன்ஸ் சேவையின் நிர்வாகம் விடுத்த வேண்டுகோளையடுத்து இந்த நிதியுதவிகள் வழங்கியுள்ளது. 

இதன்படி 105 அம்புலன்ஸ்களை தத்தெடுத்து இதுவரை 525 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு பல நிறுவனங்கள் ஆர்வம் கொண்டுள்ளன. பெறுமதியான பராமரிப்புச் செலவை ஆதரிப்பதற்காக ஒரு வரடத்துக்கு அம்புலன்ஸ் ஒன்றுக்கு 5 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்டதன் மூலம் தனியார்துறை மூலம் பொதுமக்களுக்கு அவசர சிகிச்சை சேவை தொடர்ச்சியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த வருடத்துக்காக 1 பில்லியன் ரூபா நிதியினை திரட்ட வேண்டிய தேவை எழுந்துள்ளது. நிதி பற்றாக்குறை தொடருமானால் இந்த திட்டத்தை மேலும் ஒருவருட காலத்துக்கு நீடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நிதியானது, வாகனம் மற்றும் மருத்துவ உபகரணங்களை பராமரித்தல், பணியாளர்களின் சீருடைகள் மற்றும் பாதுகாப்பு தடை பராமரிப்பு, ஊழியர்களுக்கான தொடர்ச்சியான பராமரிப்பு போன்ற சேவைகளை முன்னெடுப்பதற்கு பயன்படுத்தப்படவுள்ளது.

அம்புலன்ஸ் சேவைக்கு கட்டணம் அறவிடும் செயற்றிட்டம்

2019 ஆண்டிற்காக அரசாங்கத்தினால் மன்றத்திற்கு வழங்கப்பட்டிருந்த நிதி ஏற்பாடுகள் 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளின் போது முறையே 25 சதவீதம், 50 சதவீதம் மற்றும் 75 சதவீதம் வரை குறைப்பதற்கு 2019 ஆகஸ்ட் 27 திகதி அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன், நிதி ஏற்பாடுகள் குறைக்கப்பட்ட பின்னர் மன்றத்தை நடாத்திச் செல்வதற்கான பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கும் படி அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அவ்வாறான பிரேரணை ஒன்று 2021 நவம்பர் 30 திகதி வரை சமர்ப்பித்திருக்காததுடன், இந்த நிலைமை மன்றத்தின் தொடர்ந்தியங்கும் தன்மையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துமென அவதானிக்கப்பட்டிருந்ததாக 2020 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயக அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சுவசெரிய மன்றத்தினால் உரிய அனைத்து ஆவணங்கள் மற்றும உரிமைகள் குறிப்பிட்ட அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டதெனவும், மொத்தச் செலவுகள் மீளளிப்புச் செய்யப்படாமல் செயற்பாட்டு அலுவல்களை செயற்திறனுடன் செயற்படுத்துவதில் கடினங்கள் தொடர்பாக சுட்டிக்காட்டியது. இதேவேளை அம்புலன்ஸ் சேவையின் ஒரு வருகைக்கு 2 டொலர் வீதம் அறவீடு செய்வதற்கான திட்டம் ஒன்றை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும், அரசாங்கம் மாற்றமடைதல் மற்றும் அமைச்சுக்கள் மாற்றமடைதல் என்பவற்றால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாத நிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுவசெரிய மன்றமானது சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமாக இருப்பதால், மருத்துவ விநியோகப் பிரிவினால் மருந்துகளை கொள்வனவு செய்யும் இயலுமை உள்ள போது, 297 அம்புலன்ஸ்களில் பயன்படுத்துவதற்கான மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை மருத்துவ விநியோகப் பிரிவானது கடந்த வருடத்தில் கொள்வனவு செய்ததை விட அதிக விலைக்கு வெளிவாரி தரப்பினரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டிருந்ததுடன், இதற்காக 8,721,138 ரூபா செலவிடப்பட்டிருந்தது.

எனினும் மருத்துவ விநியோக பிரிவு மருந்துகள் மற்றும் நுகர்வுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் அல்ல என்றும், மருத்துவ விநியோக பிரிவில் இருந்து மருந்துகளை கொள்முதல் செய்வதற்கான கொள்முதல் நடைமுறைகளை பின்பற்ற முடியாதிருந்தது என்றும் 2020 ஆம் ஆண்டில், மாதாந்தத் தேவைகளுக்காக மருத்துவ விநியோகப் பிரிவுக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன், அதன்படி ஒரு குறிப்பிட்ட தொகை இலவசமாகப் பெறப்பட்டதுடன் பெறப்பட்ட தொகை தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லாததால் வெளிவாரி வழங்குநர்களிடமிருந்து பெறப்பட்டது. என்பதுடன், இதன் போது அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திடமிருந்து கொள்வனவு செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் சுவசெரிய மன்றம் தெரிவித்துள்ளது.

எதிர்காலம் என்ன?

சுவசெரிய அம்புலன்ஸ் அவசர உதவி சேவையானது, சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளில் பின்தங்கியுள்ள மக்களுக்கு துரித சேவையினை வழங்கும் மார்ரக்கமாக இருக்கின்றது. குறிப்பாக தோட்டப் புறங்கள் மற்றும் பின்தங்கிய கிராமங்களில் இந்த சேவை இன்னும் விரிவுபடுத்தப்பட்ட நிலையில் இல்லாவிட்டாலும் தற்போது வழங்கப்படும் சேவைகள் உதவியாக அமைந்துள்ளன. நோயாளர்களின் போக்குவரத்து செலவுகளை குறைத்தல், அவசர முதலுதவி சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுதல் என்பன இலகுபடுத்தப்பட்டுள்ளன. 

நாடு பொருளாதார ரீதியில் சவால்களை எதிர்கொண்டாலும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வது அரசாங்கத்தின் கடமையாகும். கொவிட் தொற்றுக் காலப்பகுதியில் நோயாளர்களை சிகிச்சைகளுக்கு அனுப்புவதில் பாரிய போக்குவரத்து சிக்கல்கள் காணப்பட்டன. இதன்போது சுவசெரிய அம்புலன்ஸ் சேவை உதவியாக அமைந்திருந்தது. தற்போது சுவசெரிய அம்புலன்ஸ் சேவை பாரிய நிதி நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில், 1990 சுவசெரிய மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியினை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவை பலனளிக்கவில்லை.  இதனால் அவற்றுக்கு பெருநிறுவனங்களிடமிருந்தும் நிதி திரட்டும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டது. எதிர்காலத்தில் முறையான நிதி ஒதுக்கீட்டினை அரசாங்கம் மேற்கொள்ளவில்லையாயின் மீண்டும் நிதி நெருக்கடிக்குள் அம்புலன்ஸ் சேவை சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தை இலவசமாக செயற்படுத்த முடியாவிடினும், குறைந்தபட்சம் அறவிடக்கூடிய கட்டண முறை தொடர்பில் அரசாங்கம் பரிசீலனை மேற்கொள்ள வேண்டும். அதற்கான திட்டங்களை வகுப்பதும் அவசியமாகும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக