நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியானது, அதிக மக்கள் வறுமையை எதிர்நோக்குவதற்கு பிரதான காரணமாக இருக்கின்றது. தொடர்ந்து நிலவிய பணமதிப்பிழப்பு, உணவுப்பொருட்களின் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு என்பன மக்களை நிலைகுலையச் செய்தது. தற்போது நாடு ஸ்திரமடைந்து வருவதாக அரசாங்கம் குறிப்பிட்டாலும் வறுமையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட குழுக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அஸ்வெசும நலன்புரித்திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி கொடுப்பனவு வழங்கும் பணிகளை இம்மாதம் முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, வறிய மற்றும் மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு 04 பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதோடு, அங்கவீனமானவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கும் அஸ்வெசும திட்டத்தின் கீழ் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
அதற்கமைய தற்காலிக நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் 400,000 பேருக்கான 2500 ரூபா மாதாந்த கொடுப்பனவு 2023 டிசம்பர் 31 வரையிலும் வழங்கப்பட இருப்பதோடு பாதிக்கப்படக் கூடிய 400,000 பேருக்கான 5000 ரூபா கொடுப்பனவு 2024 ஜூலை 31 வரையிலும் வழங்கப்படவுள்ளது. மேலும் வறியோர் என்று அறியப்பட்ட பயனாளிகள் 800,000 பேருக்கான 8500 ரூபா கொடுப்பனவும் மிக வறுமையான 400,000 பயனாளிகளுக்கு மாதாந்தம் 15,000 கொடுப்பனவும் 2023 ஜூலை 01 முதல் மூன்று வருட காலத்திற்கு வழங்கப்படவுள்ளன.
மேற்படி நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள 340 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து 3,712,096 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. இவற்றில் 20 இலட்சம் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அண்மையில் பெயர்பட்டியல் வெளியிடப்பட்டபோதும், தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லையென கோரி நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் பெருந்தோட்ட மக்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் 982,770 முறைப்பாடுகளும் 62,386 ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் அஸ்வெசும நலன்புரித்திட்டம் பெருந்தோட்ட மக்களின் முழுமையான வறுமை நிலையை போக்குவதற்கு உதவுமா என்பது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது.
பெருந்தோட்டத்தில் வறுமை நிலை
2019 ஆம் ஆண்டு பதிவாளர் திணைக்களத்தின் தகவல் மூலங்களின் அடிப்படையில் களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி மொத்த தோட்ட சனத்தொகை 949,365 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 101,079 சிங்களவர்களும் 840,447 தமிழர்களும் 6629 முஸ்லிம்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகமாக நுவரெலியா மாவட்டத்தில் 385,417 தமிழர்களும் பதுளை மாவட்டத்தில் 150,890 தமிழர்களும் இரத்தினபுரி மாவட்டத்தில் 90,648 தமிழர்களும் கேகாலை மாவட்டத்தில் 50,334 தமிழர்களும் தோட்டங்களில் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தகவல் மூலங்களின் அடிப்படையில் தேசிய வறுமை சதவீதம் 4.1 வீதமாக காணப்படுகின்றது. இதேவேளை நகர்புறத்தில் 1.9 சதவீதமும் கிராமபுறத்தில் 4.3 சதவீதமும் தோட்டபுறத்தில் 8.8 சதவீதமுமாக காணப்படுகின்றது. (தகவல்: சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு - வருடாந்த செயலாற்றுகை அறிக்கை - 2019)
லிர்ன்ஏசியா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் தொகை 4 மில்லியனால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு வறுமைக்கோட்டின் கீழ் 3 மில்லியன் மக்கள் காணப்பட்ட நிலையில் தற்போது 7 மில்லியன் இலங்கையர்கள் (மொத்த சனத்தொகையில் 31 வீதம்) 7 மில்லியன் இலங்கையர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் தொகையில் 81 வீதமானோர் கிராமபுறங்களில் வசிப்பதாக 2023 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாகவும் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கிராமபுறங்களில் வறுமை நிலை இரு மடங்காகியுள்ளதோடு நகர்புற வறுமை மும்மடங்காகவும் அதிகரித்துள்ளது. பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்களே வறுமையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதோடு சமூகத்தில் அரைவாசிக்கும் அதிகமானோர் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
அண்மையில் உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட சந்திப்பின்போது, ‘முந்தைய சமுர்த்தி திட்டத்தில் பெருந்தோட்ட மக்களை சேர்த்துக் கொள்வதில் குறைபாடு நிலவியதாக நாம் அறிந்துள்ளோம். இது சமுர்த்தி அல்ல. இந்த அஸ்வெசும திட்டம் உலக வங்கியின் நிதியுதவியுடனான நலிவுற்ற மக்களுக்கான மாதாந்த கொடுப்பனவு திட்டமாகும். பெருந்தோட்ட மக்களுக்கு நியாயமான வாய்ப்புகளை வழங்காமல் இத்திட்டத்தை முன்னெடுக்கமாட்டோம்.’ என்ற உறுதி மொழியை உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பாரிஸ் ஹெடாட் செர்வோஸ் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். எனினும் தற்போது வெளியிடப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலில் பெருந்தோட்ட மக்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஆங்காங்கே போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
வறுமையை போக்க நிவாரணங்கள் உதவுகின்றதா?
நாட்டில் வறுமை நிலை அதிகரித்துள்ள நிலையிலும் நிவாரணங்கள் வழங்கும் செயற்பாடுகள் வெற்றியளிக்காத நிலையிலேயே காணப்படுகின்றது. சமுர்த்தி கொடுப்பனவிலும் தொடர்ச்சியாக சர்ச்சை காணப்படும் நிலையில் அஸ்வெசும நலன்புரித்திட்டம் தொடர்பிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிவாரணங்கள் வழங்குவதற்கான பொறிமுறை அரசாங்கத்திடம் இல்லாமையே இதற்கு பிரதான காரணமாகும்.
லிர்ன்ஏசியா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கையில் 7 மில்லியன் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழே வாழ்வதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போதைய சமூக நலத்திட்டங்கள் வறுமை நிலையிலுள்ளவர்களை சென்றடைவதில் தோல்வியடைந்துள்ளது. வறுமையில் அடிமட்டத்தில் வாழும் கடைசி பத்து வீதமாக வீடுகளில் வெறும் 31 வீதமான வீடுகளே சமுர்த்தி திட்டத்தை பெறும் நிலையில் 4 வீத வசதி படைத்த பணக்கார வீடுகளிலுள்ள மக்களும் சமுர்த்தி நலத்திட்டத்தை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அஸ்வெசும திட்டத்தில் நன்மையை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையுள்ளவர்களில் அனைவரும் அத்திட்டத்துக்கு பதிவு செய்யமாட்டார்களென ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பயனாளிகள் தொடர்பான விண்ணப்பங்களை அரசாங்க அதிகாரிகளே பூர்த்தி செய்வதால் அவர்களுடன் சுமுகமான நட்புடன் உள்ளவர்கள் அஸ்வெசும திட்டத்தில் பதிவு செய்துள்ள போதும், போதியளவு சமூகத்துடன் தொடர்பில் இல்லாதவர்களுக்கு இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வோ, விண்ணப்பிப்பதற்கான தெளிவோ இல்லை.
இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கும் நலன்களை பெற்றுக்கொள்வதற்குமான தகைமைகள் பற்றிய உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்பட்டமை இத்திட்டத்துக்கு சிலர் பதிவு செய்யாமல் இருந்தமைக்கு காரணமாக அமைந்துள்ளது.
கடந்த சில வருடங்களில் ஏனைய நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்து நலன்களை பெற்றுக்கொள்ள தெரிவு செய்யப்படாதவர்கள், இம்முறையும் கிடைக்காது என்ற மனநிலையில் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கவில்லை என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு வறுமையும் நிவாரணங்களும் மக்களை அதிகம் பாதித்த சம்பவங்களே கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன. பெருந்தோட்ட மக்களில் பெரும்பாலானோர் தகுதியிருந்தும் சமுர்த்தி திட்டத்தில் புறக்கணிக்கப்படும் நிலையே இன்று வரை தொடர்கின்றது. தகுதியில்லாத பலருக்கு நிவாரணங்கள் கிடைக்கப்பெறுவதால் தகுதியுடைய பலருக்கான வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. அஸ்வெசும திட்டத்திலும் பல தோட்டபுற மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமையை அண்மைக்காலங்களாக அவர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் மூலம் அறிய முடிகின்றது.
அரசாங்கத்தின் அவதானம்
‘2001 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலப் பலன்கள் சட்டத்தின் படி, தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 06 துறைகளின் பிரகாரம் குறிகாட்டிகளின் கீழ் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இதன்படி, தகுதியான பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது இறுதிப் பட்டியல் அல்ல என்பதை வலியுறுத்த வேண்டும். தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பெயர் உள்ளடங்காத நபரோ அல்லது குடும்பத்தாரோ இருப்பின் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. பல்வேறு பிரச்சாரங்கள் அல்லது தனிப்பட்ட அழுத்தங்கள் காரணமாக மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், சில அரசியல் குழுக்களின் தேவைக்காக போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். மேலும், அரசினால் அறிவிக்கப்பட்ட முறைக்கு ஏற்ப அனைவரும் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேல்முறையீட்டு காலம் முடிவடைந்த பிறகு அஸ்வெசும சமூக நலப் பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத் தயாரிக்க எதிர்பார்ப்பதாக’ நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது மேன்முறையீட்டுக்காலம் நிறைவடைந்துள்ளது. தகுதியான பயனாளர்களை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டங்களில் வசிக்கும் அரைவாசிக்கும் மேற்பட்டோர் வறுமையில் வாடுவதாக ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தகுதியான நபர்களை தெரிவு செய்வதற்கான பணிகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய தேவையுள்ளது. பெருந்தோட்ட மக்களின் உறுதியான தகவல்களை அறிந்த அரச அதிகாரிகள் அல்லது நிறுவனங்கள் தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்த பணியினை நிறைவேற்ற வேண்டும்.
இதேவேளை அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பிலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது தொடர்பிலும் பொதுமக்களிடையே விளக்கமில்லாத நிலை காணப்படுகின்றது. எனவே இத்திட்டத்தை முன்னெடுக்கும் அதிகாரிகள் அவர்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தில் தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கு முதலில் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாகும். எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளாமல் திட்டத்துக்குள் உள்வாங்கப்படவில்லை என குறை கூறுவதும் வீணான முயற்சியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக