கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

19 பிப்ரவரி, 2021

சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளில் அதிகரிக்கும் இடைவிலகல்கள்?

 


நாடு முழுவதும் 1000 தேசிய பாடசாலைகளை உருவாக்குவதற்கான திட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்திருக்கும் நிலையில் பெருந்தோட்டப் பகுதிகளில் இயங்கும் பாடசாலைகள் வளப்பற்றாக்குறையுடன் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கதாகும். அதேவேளை மாணவரின் பாடசாலை இடைவிலகல்கள் காரணமாக பெருந்தோட்ட மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியாகும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக சப்ரகமுவ மாகாணத்திலுள்ள இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலுள்ள தமிழ் பாடசாலைகளில் 2016 ஆம் ஆண்டு ஆரம்ப வகுப்புக்களிலிருந்து 215 பேர் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகியுள்ளதுடன் இடைநிலை வகுப்பிலிருந்து 1275 பேர் இடைவிலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டங்கள், கல்வி சீர்திருத்தம் போன்ற மாற்றங்களை கல்வித்துறையில் ஏற்படுத்தினாலும் சகலரும் கல்வியைப் பெற்றுக்கொள்ளும் வசதி இலங்கையில் இருக்கின்றதா என்ற கேள்வியும் எழாமலில்லை.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களத்திடமிருந்து சப்ரகமுவ மாகாணத்தின் தமிழ்மொழி மூல பாடசாலைகளின் கல்வி நிலை தொடர்பில் அறிய முற்பட்ட போதே மேற்படி விடயங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. சப்ரகமுவ மாகாணத்திலுள்ள இரத்தினபுரி மாவட்டத்தில் 105 தமிழ் பாடசாலைகளும் கேகாலை மாவட்டத்தில் 102 தமிழ் பாடசாலைகளும் காணப்படுகின்றன. சப்ரகமுவ மாகாணத்தில் காணப்படுகின்ற ஆரம்பக்கல்வி பாடசாலைகளில் சராசரியா ஆரம்ப கல்விப் புலத்தில் 2015 ஆம் ஆண்டு முதல் 4500 – 5000 க்கும் இடைப்பட்ட மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இவ்வகையில் ஆரம்பக்கல்வியில் இடைவிலகல்கள் என்பது குறைவாகவே காணப்படுகின்றது. இடைநிலை வகுப்பில் கற்றலில் ஈடுபடும் மாணவர்களிடத்தே இடைவிலகளை அவதானிக்க முடிகின்றது. 2015 இல் தரம் 6 இல் 5104 மாணவர்கள் காணப்படும் நிலையில் 2018 இல் தரம் 9 இல் 4466 மாணவர்களே காணப்படுகின்றனர்.

2015 இல் தரம் 7 இல் 4665 மாணவர்கள் காணப்படும் நிலையில் 2018 இல் தரம் 10 இல் 3949 மாணவர்களே காணப்படுகின்றனர். அதேவேளை 2015 இல் தரம் 5 இல் 4736 மாணவர்கள் காணப்படும் நிலையில் 2018 இல் தரம் 8 இல் 4509 மாணவர்களே காணப்படுகின்றனர். சப்ரபமுவ மாகாணத்தில் ஆரம்ப கல்வியின் இடைவிலகல்கள் அண்ணளவாக 215 என்றளவில் காணப்பட்டாலும் 6 – 11 தரங்களில் இடைவிலகல்கள் 1275 ஆக காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. உயர்தர வகுப்புக்களில் கல்விபயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தளவில் காணப்படுவதற்கு மூன்று திறமைச் சித்திகளை பெற்றுக்கொள்ளாமை, கணித பாடத்தில் சித்தி பெறாமை, பாடசாலைகளில் இடவசதி இல்லாமையால் மீண்டும் கற்பதற்கான சூழ்நிலை காணப்படாமை போன்றவை காரணங்களாக கூறப்படுகின்றன. 

இரத்தினபுரி மாவட்டத்தில் உயர்தரத்தில் கணிதம், விஞ்ஞான பிரிவுகளை கற்பதற்கேற்ற பாடசாலைக்ள இல்லை. இதனால் இவர்களுடைய தெரிவு நுவரெலியா மாவட்டமாகவே இருந்தது. ஆனால் இரத்தினபுரி மாவட்ட மாணவர்களினால் நுவரெலியா மாவட்ட மாணவர்களின் வாய்ப்புகள் தட்டிப்பரிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்களின் காரணமாக நுவரெலியா மாவட்ட உயர்தர பாடசாலைகளுக்கு ஏனைய மாவட்ட மாணவர்கள் உள்வாங்கப்படுவது தடுக்கப்பட்டிருந்தாலும் சில பாடசாலைகள் அதிக அனுமதி கட்டணங்களுடன் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறான காரணங்களினால் வாய்ப்புக்கள் இல்லாத மாணவர்கள் புதிய துறையை தெரிவு செய்தல் அல்லது கல்வியை இடைநிறுத்தல் என்ற இரு தீர்மானங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கத் தூண்டப்படுகின்றனர். சப்ரகமுவ மாகாணத்தில் உயர்தர கணித, விஞ்ஞான தமிழ் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டாலும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதனால் வாய்ப்பிழந்த நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். 


சப்ரகமுவ மாகாணத்தில் ஆரம்பக் கல்வி பாடசாலைகள் 96 காணப்படுகின்றது. இதனால் ஆரம்பக்கல்வியில் பாரிய இடைவிலகல் ஏற்படுவது இல்லை. ஆனால் குடும்பத்தின் வறுமை, பெற்றோர்கள் இடமாற்றம் போன்ற காரணங்களால் தரம் 1 லிருந்து தரம் 5 வரும் வரை கற்றலை தொடராது இடைவிலகல் ஏற்படுகின்றது. இரண்டாம் நிலை பாடசாலைகள் 111 காணப்படுகின்றது. தரம் 5 லிருந்து தரம் 6 க்கு மாணவர்கள் வகுப்பேற்றப்படும் போது அம்மாணவர்கள் வேறு பாடசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதன் போது மாணவர்கள் அப்பாடசாலைகளில் தரம் 6 க்கு அனுமதிக்கப்படுகின்றார்கள். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய சகல மாணவர்களும் வெளி மாவட்டங்களுக்கு செல்வது குறைவு. அம்மாணவர்கள் இம்மாகாணத்திலேயே கல்வியை தொடர்கின்றனர். 

இவ்வாறு அனுமதி பெற்ற மாணவர்கள் வீட்டு வறுமை, குறித்த பாடசாலைக்கு நீண்ட தூரம் நடந்து செல்லல், தனியார் போக்குவரத்துக்கான நிதி சார்ந்த பிரச்சினைகள், அரச பேருந்து வசதிகளற்ற பிரதேசங்களில் வசித்தல் போன்ற காரணங்களினால் பாடசாலைக்குச் செல்லாது நின்று விடுகின்றனர். சப்ரகமுவ மாகாணத்தில் பெருந்தோட்டப் பாடசாலைகள் 166 காணப்படுகின்றன. எனவே பெற்றோர்களின் கற்றல் தொடர்பாக விழிப்புணர்வற்ற தன்மையும் இடைவிலகல்களுக்கு காரணமாக கூறமுடியுமென சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு 2015 ஆம் ஆண்டு 4655 மாணவர்களும் 2016 இல் 4523 மாணவர்களும் 2017 இல் 4552 மாணவர்களும் 2018 இல் 4465 மாணவர்களும் வருடாந்தம் அனுமதிக்கப்படுகின்றார்கள். அட்டவணை 01 இல் சப்ரகமுவ மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளில் வருடாந்தம் சாதாரண தர பரீட்சையில் சித்தியடையும் மற்றும் சித்தியடையாத மாணவர்கள் தொகை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராகவே வாழ்ந்து வருகின்றனர். எனவே கல்விக்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்த மட்டத்திலேயே இருக்கின்றன. இடைவிலகல் அதிகம் ஏற்படுவதால் மாணவர்கள் குறைவினால் பல பாடசாலைகள் மூடப்படும் அபாயத்துக்குள்ளும் தள்ளப்பட்டுள்ளன. சப்ரகமுவ மாகாணத்திலுள்ள 50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 230 பாடசாலைகள் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக கடந்த வருடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்திருந்தார். இதிர் கேகாலை மாவட்டத்தில் அதிகமாக 119 பாடசாலைகள் மூடப்படும் அபாயத்தில் இருக்கின்றன. இவ்வாறு பாடசாலைகள் மூடப்படுவதற்கு மாணவர்களின் வீழ்ச்சியும் ஒரு காரணமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதோடு, நாட்டில் ஏற்படும் குழப்ப நிலைகள், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள், நகர்புற பாடசாலைக்கு மாணவர்கள் செல்லுதல், தரம் ஒன்று அனுமதிக்கு விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாமை, பாடசாலைகளை ஒருங்கிணைத்தல் என்பனவும் காரணமாக கூறப்படுகின்றன. 

அட்டவணை 02 இல் சப்ரகமுவ மாகாண தமிழ்மொழி மூல பாடசாலைகளில் வருடாந்தம் உயர்தர பரீட்சையில் சித்தியடையும் மற்றும் சித்தியடையாத மாணவர்களின் தொகை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களுடைய கல்வி நிலை வீழ்ச்சியிலும் மற்றும் அவர்களுடைய இடைவிலகலிலும் ஆளணி பற்றாக்குறையும் தாக்கம் செலுத்துவதாக அமைகின்றது. அந்தவகையில் சப்ரகமுவ மாகாண தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 2663 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். அத்துடன் 330 ஆரம்பபிரிவு ஆசிரியர்களுக்கானதும் 572 இரண்டாம் நிலை ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களும் காணப்படுகின்றன. அதேவேளை இலங்கை அதிபர் சேவை தரத்துடன் 142 அதிபர்கள் காணப்படுவதுடன் 125 பேர் பதிற்கடமை ஆற்றுகின்றனர். அதனால் 125 அதிபர்களுக்கான வெற்றிடங்களும் காணப்படுகின்றன. 

எனவே புதிய கல்வி சீர்திருத்தத்தில் மாணவர்களின் இடைவிலகல்களை குறைக்கும் வகையிலும் அவர்கள் பயன்பெறும் வகையிலும் செயற்றிட்டங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். மாணவர்களின் இடைவிலகல்களை குறைப்பதற்கு தற்போது கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள திட்டம் தொடர்பில் வெளிப்படைத்தன்மை பேணப்படுவது அவசியம். தற்போது சப்ரகமுவ மாகாணத்தில் 1128 பாடசாலைகள் காணப்படுகின்றன. அவற்றில் தரம் 1 – 5 வரையான 387 பாடசாலைகளும் 1 – 8 வரையான 23 பாடசாலைகளும் 1 – 11 வரையான 428 பாடசாலைகளும் 6 – 11 வரையான 2 பாடசாலைகளும் 1 – 13 வரையான 174 பாடசாலைகளும் 6 – 13 வரையான 114 பாடசாலைகளும் காணப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக