கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

30 ஜூன், 2015

எகிப்து எழுச்சி நினைவுதினம்

2011ஆம் ஆண்டு எகிப்தில் ஆட்சிமாற்றத்திற்காக ஏற்பட்ட போராட்டம் இன்றும் முடிவு பெறாமல் அதன் நான்காவது கட்டத்தை
எய்தியிருக்கிறது. இன்னொரு டூனிசியா என்றழைக்குமளவுக்கு எகிப்து 2011ஆம் ஆண்டு பாரியதொரு புரட்சியினை சந்தித்து ஹொஸ்னி முபாரக்கின் பதவி கவிழ்ப்பினை சமூகத்தின் மத்தியில் நியாயப்படுத்தியது. சர்வாதிகார ஆட்சிகளின் முறியடிப்பாக தொடர்ந்தேர்சியாக மத்தியக் கிழக்கில் ஏற்பட்ட அரசுகளுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் எகிப்தும் தன்னை இணைந்து கொண்டது.
இதன் விளைவாக ஒவ்வொரு வருடமும் ஜனவரி 25ஆம் திகதியை மக்கள் எழுச்சி நினைவுதினமாக அந்நாட்டு மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இடம்பெற்ற இவ்வருட எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் 20 பேர் வரை கொல்லப்பட்டனர். 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட மக்கள் எழுச்சியில் சுமார் 150 பேர் வரை கொல்லப்பட்டிருந்ததுடன், 4000 பேர் வரையில் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


தலைநகர் கெய்ரோ மற்றும் அதனை அண்டியப் பகுதிகளில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டங்களின்போது பலர் காயமடைந்திருந்தனர் என்பதுடன் இறந்தவர்களில் 3 பொலிஸாரும் உள்ளடங்குவர். முன்னாள் எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கை பதவி கவிழ்ப்பதற்கான மக்கள் போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதே இவ்வார்ப்பாட்டத்தின் முக்கிய நோக்கமாகவும் இருந்தது. ஆனால், முபாரக்கின் பதவி கவிழ்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போதான கொலைக்குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை 2011ஆம் ஆண்டே எகிப்து நீதிமன்றம் கைவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும், தற்போது பதவியிலிருக்கும் ஜனாதிபதி அல் சிசியின் ஆட்சி இராணுவ தன்மையுடையதென கூறும் மக்கள், அவ்வரசுக்கு எதிர்ப்பினையும் வெளியிட்டிருந்தனர். எகிப்தில் இன்றும் போராடுபவர்களில் மாணவர்கள், தொழிலாளர்கள், கூலிகள், வேலையில்லாப் பட்டதாரிகளாகவே காணப்படுகின்றனர். எகிப்தில் 90% மக்கள் உழைப்பவர்களாகவே இருக்கின்றனர்.

2011ஆம் ஆண்டின் ஜனவரியில் ஏற்படப்போகும் மக்கள் புரட்சி தொடர்பில் சில முக்கிய மேற்கத்தேய நாடுகள் முன்கூட்டியே அறிந்திருந்தன. டூனிசியாவில் இடம்பெற்ற மக்கள் புரட்சிக்கு முன்பே எகிப்திலும் இடம்பெறுமென அவை சரியாகவே கணித்திருந்தன. அதாவது, ரோமர்களின் காலத்தில் எகிப்து உணவுக்களஞ்சியமாக செயற்பட்டது. ஆனால், இன்று அங்கு நிலவும் வறுமை, தொழில் வாய்ப்பின்மை, வருமானம் குறைவு, பொருட்களின் விலையேற்றம் என்பன இன்று எகிப்து மக்களின் அன்றாட பிரச்சினைகளாக எழ ஆரம்பித்துவிட்டன. இதுவே, மக்கள் புரட்சிக்கு அடிப்படை காரணமாகும்.

அத்தோடு எகிப்து மக்களிடையே சமூக நிலைகள் மிகவும் தாழ்ந்த மட்டத்திலேயே காணப்படுகிறது. அதாவது, ஒரு நாளுக்கு 2 டொலர்களுக்கும் குறைவான வருமானத்தை பெறும் மக்கள் தொகை 40%மாக அதிகரித்துள்ளது. 8.5 கோடி பேர் வாழும் எகிப்தில் 43 வீதமானோர் வறுமை நிலையில் வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு உலகளவில் மனிதஉரிமை மீறல்களும், சித்திரவதைகளும் மற்றும் காவல் நிலையங்களில் கொலைகள் ஏற்படும் நாடுகளில் எகிப்தும் ஒன்றாக மாறிப்போயிருந்தது.

இதன் தொடர்ச்சியாகவே மாற்றத்தை விரும்பும் சிலரால் இணையத்தில் 2008ஆம் ஆண்டு ‘ஏப்ரல் 6 இயக்கம்’ உருவாக்கப்பட்டது. இதன்பின் 2010 டிசம்பர் காலப்பகுதியில் வன்முறையில் எகிப்து இளைஞன் பொலிஸாரால் சுட்டுக்கொள்ளப்பட்டதினால், தொடர் வன்முறைகள் இடம்பெற்றன. இதனால் ஏப்ரல் 6 இயக்கத்தினால் ஜனவரி 25ஆம் திகதி எகிப்து மக்கள் புரட்சி நினைவு தினமாக அறிவிக்கப்பட்டது. ஜனவரி 25ஆம் திகதி எகிப்தின் பொலிஸ் தினம் என்பதுடன் அன்றைய நாள் பொது விடுமுறையுமாகும். பொலிஸ் நாளிலேயே பொலிஸுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவை எகிப்து அரசுக்கு எதிரான புரட்சியாகவும் மாற்றப்பட்டது.

1977ஆம் ஆண்டுக்குப்பிறகு ரொட்டி எழுச்சிக்குப்பின் எகிப்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தவும் சட்டப்படி தடைவிதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், சட்டத்தை மீறி 30 ஆண்டுகளுக்குப் பிறகு எகிப்து வரலாறு காணாத புரட்சியை கண்டிருந்தது. 25ஆம் திகதி தொடர்ந்த இவ்வார்ப்பாட்டம் தொடர்ந்து சென்றது. 150 பேர் கொல்லப்பட்டதுடன் 4000 பேர்வரை காயமடைந்தனர். போராட்டம் இராணுவத்தினரை கொண்டு முறியடிக்கப்பட்டு வந்தாலும் மக்கள் எழுச்சியின் வீரியம் குறையவில்லை.

பின்பு இராணுவமும் ஹொஸ்னி முபாரக்கிற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்று செயற்படத் தொடங்கியவுடன் முபாரக், தனது ஆதரவாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கி மக்களுக்கு எதிராக போராடச் செய்தார். இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர் என்பதுடன், மக்கள் புரட்சி இன்னும் செழுமைப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே ஒவ்வொரு ஜனவரி 25ஆம் திகதியும் மக்கள் எழுச்சி நினைவு தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால், இன்றும் கூட மக்கள் புரட்சிக்கு தீர்வு வழங்கப்படவில்லை. அவை தீர்க்கப்படுவதாகவும் இல்லை.

2013ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அனுமதி இன்றிய ஆர்ப்பாட்டங்களுக்கான தடைச்சட்டத்தை அல் சிசி அரசு கடுமையாக கடைபிடித்து வருகிறது. இதனை மீறியதாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், நாட்டின் பலமிக்க இஸ்லாமிய அமைப்பினையும் ஒடுக்கி வருகிறது. அத்தோடு மக்கள் எழுச்சி நினைவு தினத்திலேயே முபாரக்கின் இரு மகன்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இவர்கள் அதிகபட்ச தடுப்பு காவலில் இருந்தமையால் இவர்களை எகிப்து நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. பொது நிதியினை கையாண்டமை, தனியார் சொத்துக்களை மேம்படுத்தியதை என்பவை தொடர்பாகவே இவர்கள் தண்டனை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. மக்கள் எழுச்சியின் விளைவுக்கு காரணமானவர்கள் அத்தினத்தில் விடுதலை செய்யப்பட்டது எகிப்து அரசின் இன்னொரு சதியா?

க.பிரசன்னா
01.02.2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக