கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

2 ஜூன், 2023

9 பேரை பலி கொண்ட நானு ஓயா – ரதல்ல குறுக்கு வீதி


நுவரெலியா மாவட்டத்தில் மிகவும் அபாயகரமான வீதியாக நானுஓயா - ரதல்ல குறுக்கு வீதி அடையாளம் காணப்பட்டுள்ளது. அடிக்கடி இடம்பெறும் வீதி அமைப்பு, விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் என்பவற்றை கவனத்தில் கொண்டு இதனை அபாயகரமான வீதியாக நாம் அடையாளப்படுத்தலாம். எனினும் வீதி அமைப்பினை விடவும் வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதிகளின் கவனயீனத்தினாலும் அதிகமான விபத்துக்கள் பதிவு செய்யப்படுகின்றன. வீதி சமிக்ஞைகள், அறிவிப்பு பதாதைகள் என்பவற்றை அலட்சியப்படுத்தி போக்குவரத்து செய்வதே இதற்கு முக்கிய காரணமாகும். எனினும் இவ்வாறான சம்பவங்களை தவிர்ப்பதற்காக பொலிஸாரால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றை உதாசீனம் செய்து மீண்டும் விபத்துக்களை ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த ஜனவரி 20 ஆம் திகதி நானு ஓயா – ரதல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் (5 ஆண்கள், இரண்டு பெண்கள்) 53 பேர் படுகாயமடைந்திருந்தனர். கொழும்பு, தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்த பஸ், ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்த வேன் மற்றும் ஆட்டோவை மோதித் தள்ளியதில் வேனில் பயணித்த அறுவரும் ஆட்டோவில் இருந்த அதன் ஓட்டுநரும் உயிரிழந்திருந்தனர்.  இச்சம்பவத்தின் பின்னர் குறித்த வீதி தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இதன் பின்னர் இவ்வீதியால் வாகனங்கள் பயணிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. 

இவ்விபத்துக்குப் பின்னர் கடந்த மே 6 ஆம் திகதி மீண்டும் அதே பகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியிருந்தது. எனினும் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. வீதியில் பயணிப்பது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையிலும் குறைந்த நேரத்தில் பயணிப்பதற்காக இவ்வீதியினை பயன்படுத்தும் சாரதிகள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதில்லை.

விபத்துக்களில் 9 பேர் பலி: 102 பேர் காயம் 

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் நானு ஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற விபத்துக்கள் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நுவரெலியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் நானுஓயா பொலிஸ் நிலையத்தினால் தகவல் வழங்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் நானு ஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் 2015 – 2023 ஜனவரி வரையான காலப்பகுதியில் 37 விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் இதில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 69 பேர் சிறு காயங்களுக்கும் 33 பேர் படுகாயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜனவரி 20 ஆம் திகதி இடம்பெற்ற விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் (B2158/2023) வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமைக்காக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் வாகனங்கள் பறிமுதல் மற்றும் தண்டப்பணம் எவையும் விதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த வீதியில் இடம்பெற்ற விபத்துக்கள் மனித தவறுகளால் இடம்பெறவில்லை என்றே பொலிஸார் தெரிவிப்பதாக அமைந்துள்ளது. தண்டப்பணம் அறவிடப்படாமையினால் விபத்துக்களினால் பொதுச்சொத்துக்கள் மற்றும் மனித உயிர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவது யார்? என்ற கேள்வியும் எழுகின்றது. இப்பகுதியில் இடம்பெறும் விபத்துக்கு காரணமானவர்கள் உரிய வகையில் சட்டத்தின் முன் நிறுத்தும் போதே மீண்டும் விபத்துக்கள் ஏற்படுவதை ஓரளவுக்கு குறைக்க முடியும்.


இவ்வீதியில் லொறிகளே அதிக விபத்துக்களை எதிர்கொண்டுள்ளன. 2015 – 2023 ஜனவரி மாதம் வரை 22 லொறிகள் விபத்துக்களை சந்தித்துள்ளன. மேலும் எட்டு முச்சக்கர வண்டிகள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், நான்கு வேன்கள், நான்கு பஸ்கள் விபத்துக்களை எதிர்கொண்டுள்ளன. வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமை, தடுப்புகள் செயலிழந்தமை, கவனயீனம், மோசமான வாகன செலுத்தப்பட்டமை போன்ற காரணங்களினாலேயே அதிகமான விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமையினால் 21 விபத்துக்களும் பொறுப்பற்ற வகையில் வாகனம் செலுத்தியமையால் 4 விபத்துக்களும் கவனக்குறைவாக வாகன செலுத்தியமையால் 4 விபத்துக்களும் வாகன தடுப்பு செயலிழந்தமையினால் 6 விபத்துக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நானு ஓயா பொலிஸ் வழங்கிய தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்பலி ஏற்படுத்திய விபத்துச் சம்பவங்கள்

நானு ஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் 2015 ஆம் ஆண்டு 9 விபத்துக்களும் 2016 இல் 4 விபத்துக்களும் 2017 இல் 3 விபத்துக்களும் 2018 இல் ஒரு விபத்தும் 2019 இல் இரண்டு விபத்துக்களும் 2020 இல் 7 விபத்துக்களும் 2021 இல் 5 விபத்துக்களும் 2022 இல் 5 விபத்துக்களும் 2023 ஜனவரியில் ஒரு விபத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் உயிர் பலி ஏற்படுத்திய மூன்று விபத்துச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


2017.04.01 – கவனயீனமான மற்றும் விவேகமற்ற வாகன செலுத்துகையினால் லொறி சாரதியினால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டமையினால் விபத்து ஏற்பட்டு ஒருவர் பலி.

2021.02.06 - கவனயீனமான மற்றும் விவேகமற்ற லொறி சாரதியின் வாகன செலுத்துகையினால் லொறியானது முச்சக்கரவண்டியுடன் மோதுண்டதில் ஒருவர் பலி.

2023.01.20 – பொறுப்பற்ற வகையில் சாரதி பஸ்ஸை செலுத்தியமையால் குறித்த பஸ்ஸானது, வேன் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதியதில் ஏழு பேர் பலி.

தடைகளை மீறி போக்குவரத்து செயற்பாடு

ஜனவரி 20 ஆம் திகதி இடம்பெற்ற பாரிய விபத்துக்குப் பின்னர் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட அபிவிருத்திக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் 5 தொன்களுக்கும் குறைவான எடையுள்ள வாகனங்கள் பயணிப்பதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்திருந்தார்.

வீதி அதிகாரசபையுடன் இணைந்து தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நடவடிக்கை ஜனவரி 25 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தின் பின்னர் தொடர்ந்து ஒரு மாதம் நானுஓயா, லிந்துலை பொலிஸார் கனரக வாகனங்கள் செல்லாத வகையில் அதிதீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். எனினும் பாதுகாப்பு விலக்கிக்கொண்ட பின்னர் மீண்டும் தடைகளை மீறி வாகன போக்குவரத்து இடம்பெற்று வருகின்றது.


கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற பாரிய விபத்துக்குப் பின்னர் தொடர்ச்சியாக இரண்டு விபத்துக்கள் இவ்வீதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.  தற்போது தடைகளை மீறி மீண்டும் கனரக வாகனங்கள் பயணிப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களும் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

ஹட்டன் - நுவரெலியா வீதி அபிவிருத்தி

ஹட்டன் தொடக்கம் நுவரெலியா மாவட்டத்தில் சந்தைக்கான அணுகமுறையை முன்னேற்றமடையச் செய்வதன் மூலமும் தென் மாகாணத்தில் சமூக, பொருளாதார வளர்ச்சியை தூண்டச் செய்து அபிவிருத்திக்கான சமச்சீரான தன்மையை உருவாக்குவதற்கு ஹட்டன் - நுவரெலியா நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் ஹட்டன் தொடக்கம்  நுவரெலியா வரை 35.6 கிலோ மீற்றரை முன்னேற்றவும் புகையிரத கடவைப் பாலத்தின் கீழ் கொட்டகலை கால்வாய் மற்றும் நானுஓயா நிர்மாண வேலையை நடத்தவும் திட்டமிடப்பட்டது. கொரிய அரசாங்கம், பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தின் ஊடாக இச்செயற்றிட்டத்துக்கு கடன் வழங்கியது. இச்செயற்றிட்டம் 2011 டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலமே ரதல்ல குறுக்கு வீதி அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ரதல்ல குறுக்கு வழியூடாக நானுஓயா நகரத்தை சென்றடைவதற்கு 3.8 கிலோமீற்றர்களை மாத்திரமே கடக்க வேண்டியுள்ளது. ஆனால் ரதல்ல – டெஸ்போர்ட் வழியாக நானுஓயா நகரத்தை அடைவதற்கு 13.3 கிலோ மீற்றர்களை கடக்க வேண்டும். இதனால் சாரதிகள் நேரத்தை மிச்சப்படுத்தவும் தூரத்தை குறைத்துக்கொள்ளவும் ரதல்ல குறுக்கு வீதியினை பயன்படுத்துகின்றனர். டெஸ்போர்ட் வழியாக நானுஓயா நகரத்தை அடையும் வீதியினை கனரக வாகன சாரதிகள் பயன்படுத்தினால் விபத்துக்களை குறைத்து பாதுகாப்பாக பயணிக்க முடியும். குறித்த வீதி செப்பனிடப்பட்டு போக்குவரத்துக்கு உகந்த வீதியாகவே காணப்படுகின்றது. எனினும் கனரக வாகன சாரதிகள் இவ்வீதியினை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்து விபத்துக்குள்ளான வாகனங்கள் டெஸ்போர்ட் வழியாக நானுஓயா செல்லும் வீதியினை பயன்படுத்தியிருந்தால் விபத்துக்களில் இருந்து தவிர்த்துக்கொண்டிருக்க முடியும். தற்போது ரதல்ல – டெஸ்போர்ட் வழியாக நானுஓயா நகரத்தை அடையும் வீதி புனரமைப்பு செய்யப்பட்டிருந்தாலும் பயணிகள் போக்குவரத்து சேவையினை தவிர்த்து ஏனைய வாகனங்கள் ரதல்ல குறுக்கு வீதியினூடாகவே பயணிக்கின்றன. இதனால் இவ்வீதியினூடாக விபத்தினை குறைப்பது கடினமான பணியாக இருக்கின்றது.

சாரதிகள் மற்றும் பயணிகளின் கவனத்துக்கு…

இலகுவாக போக்குவரத்தினை முன்னெடுப்பதற்கு வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தாலும் விபத்துக்களை தவிர்த்து பயணிப்பதற்கு சாரதிகள் கவனம் செலுத்த வேண்டும். முடிந்தவரை பாதுகாப்பான வீதிகளை பயண்படுத்துவதற்கு பொதுமக்கள் அவதானம் செலுத்த வேண்டும். ரதல்ல குறுக்கு வீதியில் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாரும் கடும் போக்குவரத்து விதிமுறைகளை அமுல்படுத்த வேண்டும். நேரத்தையும் பணத்தையும் மீதப்படுத்துவதற்காக ஆபத்தான போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றி தமது உயிரை பணயம் வைப்பதை பயணிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். பயணிப்பதற்கு முன்னர் தமது பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துவதற்கான திட்டமிடல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். வீதிகளின் இருப்பக்கமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு குறியீடுகள் தொடர்பில் சாரதிகள் அவதானம் செலுத்த வேண்டும். தங்களுடைய வாகனங்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது சாரதிகளின் கடமையாகும்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக