2021 ஜனவரி முதலாம் திகதியை கடந்து விட்டோம். ஆனால் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் தொடர்பில் இன்னும் தீர்மானம் கிடைக்கப்பெறவில்லை. தொழிற்சங்கத் தலைவர்கள் சிலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் மீண்டும் பேச்சுவார்த்தைகள் எப்போது முன்னெடுக்கப்படுமென்ற கேள்வி எழுந்திருக்கின்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறி ஒரு வருடம் கடந்திருக்கின்றது. அடுத்த தை பிறப்பதற்கு இன்னும் 14 நாட்கள் இருக்கின்றன. ஆனால் மலையக மக்களுக்கு இன்னும் ஒரு வழியும் பிறக்கவில்லை.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் நீடித்து வருகின்றது. 1000 ரூபா அடிப்படை நாட் சம்பளம் என்ற கொள்கையிலிருந்து 1000 ரூபா மொத்தச் சம்பளத்துக்கான அடிப்படை காய் நகர்த்தல்களையே முதலாளிமார் சம்மேளனம் மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் புதிய கூட்டு ஒப்பந்தமானது வெறுமனே தொழிலாளர்களின் வேதனத்தை மாத்திரம் நிர்ணயிப்பதாக அமைந்துவிடக்கூடாது. மாறாக அவர்களின் சுகாதாரம், உட்கட்டமைப்பு, வேலைதள உரிமைகள், வேலை நாட்கள் என சகல விடயங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
ஆனால் தற்போதைய ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் 1000 ரூபா என்பதை மாத்திரம் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளது. 1000 ரூபா நாட்சம்பளத்துக்கான பேச்சுவார்த்தைகளில் முதலாளிமார் சம்மேளனம் இரு பொறிமுறைகளை முன்வைத்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றன. முதலாவதாக, முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த சம்பளத்துக்கான உத்தேச வரைபில் அடிப்படைச் சம்பளம் 700 ரூபா எனவும் விலைக்கொடுப்பனவு 75 ரூபா எனவும் வருகைக் கொடுப்பனவு 70 ரூபாவாகவும் உற்பத்தி அதிகரிப்புக் கொடுப்பனவு 75 ரூபாவாகவும் ஊழியர் சேமலாப நிதிக்கான தொகை 105 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனடிப்படையிலேயே மொத்த சம்பளமாக 1025 ரூபாவை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனத்தினர் யோசனையை முன்வைத்துள்ளனர்.
இரண்டாவதாக, கலப்பு பொறிமுறை என்றவகையில் மூன்று தினங்களுக்கு அடிப்படை வேதன முறையின் கீழும் மூன்று நாட்களுக்கு வினைத்திறன் அடிப்படையிலான கொடுப்பனவின் கீழும் வேதனம் வழங்குவது தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவ்விரண்டு யோசனைகளும் அடிப்படைச் சம்பளம் 1000 ரூபாவை உறுதிப்படுத்தவில்லை. (அட்டவணை 01)
இவற்றுக்கும் மேலதிகமாக வெளியார் உற்பத்தி முறையினை அமுல்படுத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினராலும் குரல் கொடுக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்ற கோ~மும் அரசியல் தலைவர்களால் முன்வைக்கப்படுகின்றது. வெளியார் உற்பத்தி முறையினை முன்வைக்கும்போது தொழிலாளர்களுக்கு வெறுமனே தேயிலைச் செடிகளை மாத்திரம் பிரித்து வழங்குவதை விடுத்து காணியுறுதிகளுடன் வழங்குவதே பொருத்தமானதாக அமையும். அதேவேளை காணிகள் பெருந்தோட்டத்துறையைச் சாராத ஒருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதை முற்றாக தடுக்க வேண்டும்.
பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும் போதும் அல்லது அவை பகிர்ந்தளிக்கப்படும் போதும் சிங்கள குடியேற்றங்கள் அதிகம் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. 1972 ஆம் ஆண்டுக்குப்பின்னர் பெருந்தோட்டங்களை அரசாங்கம் சுவீகரித்த போது இந்நிலைமையை அவதானிக்க முடிந்தது. மீண்டும் அந்நிலைமை ஏற்படுமாயின் மலையக மக்களின் இனப்பரம்பல் விரிசலடைவதுடன் அவை அலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பாரிய தாக்கத்தினை செலுத்தக்கூடும். தோட்டத் தொழிலாளர்களையே பங்குதாரர்களாக மாற்ற வேண்டும். அவர்களுக்கு சிறுதேயிலை உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். மாறாக தேயிலைகளை மாத்திரம் பகிர்ந்தளிப்பதால் அவர்கள் மீண்டும் கூலிகளாகவே செயற்படும் நிலை ஏற்பட்டுவிடும். பெருந்தோட்டங்களில் தற்போது காணப்படும் தரிசு நிலங்களில் மீள் நடுகை ஆரம்பிக்கப்பட வேண்டும் அல்லது அக்காணிகள் மலையக மக்களுக்கே பகிர்ந்தளிக்க ஆவண செய்ய வேண்டும். இந்நடைமுறைகள் நிறைவேற்றப்படுமாயின் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பள அதிகரிப்புக்கும் பதிலாக அதிக நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால் தற்போது முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகள் கூட்டு ஒப்பந்தத்தை முன்னிலைப்படுத்தியே மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறு மீண்டும் கூட்டு ஒப்பந்தம் முன்னிலைப்படுத்தப்படுமாயின் தற்போதைய கூட்டு ஒப்பந்தமானது அமுலில் இருக்கும் வரை அரசாங்கத்தின் வாக்குறுதிகளோ அல்லது சம்பள அதிகரிப்புகளோ கம்பனிகளை கட்டுப்படுத்த முடியாது.
1994 ஆம் ஆண்டில் 72.24 ரூபாவாகவிருந்த நாட்சம்பளம் 83 ரூபாவாக உயர்த்தப்பட்டது. அன்று ஜனாதிபதியாகவிருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலையீட்டினால் அது சாத்தியமாகியிருந்தது. 1994 ஆம் ஆண்டுக்குப்பிறகு தோட்டத் தொழிலாளர்களின் வேதன விடயத்தில் தலையிடுவதை அரசாங்கம் நிறுத்திக்கொண்டமையினால் சம்பள விடயங்களில் தொழிற்சங்கங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிகளுக்கு இலகுவான விடயமாகவிருந்தது.
1992 ஆம் ஆண்டு தோட்டங்களின் முகாமைத்துவம் தனியார் கம்பனிகளிடம் கையளிக்கப்பட்டதால், தோட்டத் தொழிலாளர்களது வேதனங்கள் வேதனச்சபைகளின் தீர்மானங்களுக்கு உட்பட்டே இடம்பெற்றன. 1996 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வரவு – செலவு திட்டப்படி என்ற வகையில் 8.00 ரூபாவினை தொழிலாளருக்கும் செலுத்தவேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கைவிடுத்த நிலையிலும் வாழ்க்கைச் செலவுப்படியொன்று செலுத்தப்பட்டு வருவதால் இதனை வழங்க முடியாதென கம்பனிகள் மறுப்புத் தெரிவித்திருந்தன. அதேவேளையில் பொதுத்துறை ஊழியர்களுக்கு வரவு – செலவுத்திட்டத்தின் மூலம் 500 ரூபா வேதன உயர்வு வழங்கப்பட்டது. பின்னர் தனியார்த்துறை தொழில் வழங்குநரும் 400 ரூபாவினை வேதன உயர்வை வழங்கவேண்டுமெனவும் ஓய்வூதியம் பெறுவோருக்கு மாதாந்தம் 200 ரூபா அதிகரிப்பை வழங்கவேண்டுமெனவும் விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டது. ஆனால் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் வேதன உயர்வை வழங்கியிருந்த தொழில் வழங்குநர்கள் இத்தொகையை செலுத்த தேவையில்லையென கூறப்பட்டிருந்ததால் தோட்டத் தொழிலாளர்களுக்கு 400 ரூபா அதிகரிப்பு வழங்கப்படவில்லை.
எனவே அரசாங்கத்தின் தீர்மானமானது, கூட்டு ஒப்பந்தத்தைக் கட்டுப்படுத்தாது என்பதனை விளங்கிக்கொள்ள முடியும். தற்போதைய 1000 ரூபா வாக்குறுதியும் அவ்வாறானதே. 2000 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையான சுமார் 20 வருடங்களில் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு 599 ரூபாவும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு 602 ரூபாவுமே சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தில் அடிப்படைச்சம்பளத்தில் 200 ரூபா அதிகரிப்பு வழங்கப்பட்டு 700 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டது. எனவே 2021 ஆம் ஆண்டு முதல் 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கவேண்டுமாயின் கம்பனிகள் அடிப்படைச் சம்பளத்தை 300 ரூபாவால் அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
அத்துடன் 2003 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தமானது, 2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதியிலிருந்து (இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு ஜூலை இருபத்து நான்காம் திகதி) கணக்கிடக் கூடியதாக கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்டது. இக்கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கக்கூடிய வகையில் பல்வேறு சரத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அதன் பின்னர் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் இவற்றிலிருந்து விடுபட்டு வெறும் தொழிலாளர்களின் வேதனத்தை மாத்திரம் கணக்கிட்டனவே தவிர ஏனைய விடயங்களிலிருந்து விலகிக் கொண்டதாகவே அமைந்திருந்தது.
2003 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தில், தொழில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், ஊதியங்கள் மற்றும் விலைபங்கு, மேலதிக நேரவேலை, வேலைநாட்களும் சம்பள முற்பணங்களும், வேலை ஏற்பாடுகள், பணி நிலையும் அது தொடர்பான பிரச்சினைகளும், மிகை விகிதங்கள், வருகை போனஸ், சுகயீன விடுமுறை, ஓய்வு பெறும் வயது, மகப்பேறு நலன்கள், தொழில் முகாமைத்துவ உறவுகள், ஒழுக்காற்று நடவடிக்கை, குறைஃபிணக்கு நடைமுறை, தொழிலுறவு என 20 சரத்துக்களை உள்ளடக்கியிருந்தது. ஆனால் தற்போது அவற்றில் பெரும்பாலான விடயங்கள் பின்பற்றப்படுவதில்லை.
எனவே புதிய கூட்டு ஒப்பந்தமோ அல்லது வெளியார் உற்பத்தி முறையோ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நன்மை கருதியே மேற்கொள்ளப்பட வேண்டும். அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுக்கும் விடயமாக இவற்றை பார்க்க முடியாது. தொழிற்சங்கங்களும் கம்பனிகளும் தனிப்பட்டு செயற்படவும் முடியாது. தை மாதம் மதல் 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பில் தொழிலாளர்கள் இருக்கின்றார்கள். 1000 ரூபா சம்பளவுயர்வு கோரிக்கையானது 5 வருடங்களுக்கு முன்னர் வைக்கப்பட்ட கோரிக்கையாகும். அதே கோரிக்கை 5 வருடங்களுக்கு பின்னரும் மேலோங்கியிருக்கின்றது. அக்கோரிக்கை 2021 இல் நிறைவேறுமா என்பதே தற்போதுள்ள கேள்வி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக