கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

7 செப்டம்பர், 2021

11 வருடங்களில் மூடப்பட்ட 206 தேயிலை தொழிற்சாலைகள்


பெருந்தோட்டங்களில் தற்போது மூடப்பட்டுள்ள தேயிலை தொழிற்சாலைகளை இடைநிலை சிகிச்சை நிலையங்களாக மாற்றும் யோசனையை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வைத்திருந்தார்.  இலங்கையிலுள்ள பெரும்பாலான தேயிலை தொழிற்சாலைகள் 150 வருடகாலம் பழைமையானவை என்பதுடன் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டதாகும். பிரச்சினை இதுவல்ல. பெருந்தோட்டங்களில் தேயிலை தொழிற்சாலைகள் நேற்று மூடப்பட்டவையல்ல. அவை பல தசாப்தங்களாக மூடப்பட்டுள்ளதுடன் சில தேயிலை தொழிற்சாலைகளின் இரும்புகள் விற்கப்பட்டும் விட்டன. ஆனால் இன்றுள்ள தலைவர்களும் இதற்குமுன் இருந்த தலைவர்களும் அவ்வாறு மூடப்பட்ட தொழிற்சாலைகளை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது தொடர்பில் எவ்வித கரிசனையும் கொண்டிருக்கவில்லை. 

அதேவேளை ஒரு பிரதேசத்திலுள்ள தேயிலை தொழிற்சாலையை மூடும்போது அங்குள்ள தொழிலாளர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். அந்தவகையில் நாட்டில் தற்போது இயங்குகின்ற மற்றும் மூடப்பட்டுள்ள தேயிலை தொழிற்சாலைகள் தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக தேயிலை சபைக்கு முன்வைத்த நிலையில் பின்வரும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் நாட்டில் தற்போது 708 தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருவதுடன் 2010 - 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 206 தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இறப்பர் தொழிற்சாலைகள் தொடர்பான விபரங்களை கோரி இறப்பர் திணைக்களத்துக்கு விண்ணப்பித்தும் இதுவரை தகவல்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை. 

தற்போது 708 தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருவதாக கூறப்பட்டாலும் அவற்றில் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு கீழ் 261 தொழிற்சாலைகளும் இலங்கை அரச பெருந்தோட்டயாக்கத்தின் கீழ் 3 தொழிற்சாலைகளும் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் கீழ் 4 தொழிற்சாலைகளும் செயற்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மீதமுள்ள 440 தேயிலை தொழிற்சாலைகளின் முகாமைத்துவம் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. ஒருவேளை அவை சிறுதேயிலை தோட்ட உற்பத்தியாளர்கள் மற்றும் தனிநபர்களுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என கருத முடியும். 

தேயிலை தொழிற்சாலைகளில் 6 -7 பிரிவுகள் இயங்கி வருகின்றன. அவற்றில் அண்ணளவாக 50 - 60 வரையான தொழிலாளர்கள் கடமையாற்றுகின்றனர். 2010 - 2021 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 206 தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 11,330 தொழிலாளர்கள் (அண்ணளவாக) வேலையிழப்பு அல்லது மாற்று தொழில்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது தேயிலை தொழிற்சாலைகள் மூடப்படுவதால் அங்குள்ள தோட்டங்களில் பறிக்கப்படும் தேயிலை கொழுந்துகள் வேறு தோட்டங்களிலுள்ள தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது. அதன்போது ஏற்படுகின்ற செலவுகளை ஈடுசெய்வதற்கு தோட்ட நிர்வாகம், தொழிலாளர்கள் பறிக்கும் தேயிலையின் அளவில் குறிப்பிட்ட கிலோவினை வெட்டுவதன் மூலம் ஈடுசெய்கின்றது. இல்லையெனில் அன்றாடம் பறிக்கும் தேயிலை கொழுந்தின் அளவு மட்டுப்படுத்தப்படுகின்றது.

இதனால் மேலதிக தேயிலை அறுவடையின் மூலம் தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய வருமானம் இழக்கப்படுகின்றது. இதேவேளை வேறு தொழிற்சாலைகளுக்கு தேயிலை கொழுந்துகள் கொண்டு செல்லப்படும் போது இங்குள்ள தோட்ட நிர்வாகத்தின் விதிமுறைகளையே இங்குள்ள தொழிலாளர்களும் பின்பற்ற வேண்டும். அவர்கள் எதிர்பாரக்கும் தரத்தில் தேயிலை கொழுந்துகள் கொய்யப்படவில்லையாயின் அவை திருப்பி அனுப்பப்படுவதுடன் தேயிலை குப்பைகளாக கொட்டப்படும் நிலை காணப்படுகின்றன. இதனால் தொழிலாளர்கள் கடும் கெடுபிடிகளுக்கு ஆளாகின்றனர். 

மேலும் தேயிலை தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு அப்பகுதியில் பறிக்கப்படும் தேயிலை கொழுந்தின் அளவு குறைவும் ஒரு காரணமாகும். எனவே தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகங்களே மேற்கொள்ள வேண்டும். தேயிலை மலைகள் முறையாக முகாமைத்துவம் செய்யாமல் கைவிடப்படுதல், தேயிலை வளர்ச்சிக்கான உரங்கள் இடாமை மற்றும் மீள் நடுகைகளை மேற்கொள்ளாமை போன்ற காரணிகள் தேயிலை உற்பத்தியினை பாதிக்கின்றன. ஆனாலும் தொழிலாளர்கள் அதிக தேயிலையினை பறிப்பதற்கு வற்புறுத்தப்படுகின்றனர்.

எனவே தேயிலை தொழிற்சாலைகள் மூடப்படுவதால் தோட்ட நிர்வாகங்களுக்கு ஏற்படும் இழப்புகளை விடவும் தொழிலாளர்கள் அதிக பாதிப்பினை எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது. இதனால் முடிந்தளவு தேயிலை தொழிற்சாலைகளை மூடாமல் இயக்க வேண்டிய பொறுப்பு தோட்ட நிர்வாகத்துக்கு இருப்பதுடன் காலத்துக்கு தேவையான வகையில் அவற்றில் தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டிய தேவையும் இருக்கின்றது. தற்போது இயங்குகின்ற பெரும்பாலான தேயிலை தொழிற்சாலைகள் ஆங்கிலேயரினால் உருவாக்கப்பட்டவையாக இருப்பதுடன் அப்போதைய தொழில்நுட்பமே இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை சுமார் 150 வருடங்கள் பழைமையானவையாகும். எனவே அவற்றை மேம்படுத்துவதற்கான வழிகளை பெருந்தோட்ட கம்பனிகள் அரசாங்கத்துடன் இணைந்து ஆராய வேண்டும். 

நாட்டில் தற்போது செயற்படுகின்ற தேயிலை தொழிற்சாலைகளில் வருடாந்தம் சுமார் 300 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்படுவதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. மேலும் போதுமான தேயிலை இலை வழங்கப்படாமை, பதிவு செய்யப்பட்ட தேயிலை உற்பத்தியாளர்களின் நிதி சிக்கல்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத உற்பத்தி முறைகளில் ஈடுபடுவதால் தேயிலைத் தொழிற்சாலைகள் இலங்கை தேயிலை சபையினால் பதிவு செய்யப்படாமை போன்ற காரணிகளினால் பல தேயிலை தொழிற்சாலைகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே உற்பத்தியை அதிகரிப்பதும் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தி முறைகளை பின்பற்றுவதும் தேயிலை தொழிற்சாலைகள் திறமாக இயங்குவதற்கு வழி ஏற்படுத்தலாம். அதேவேளை தற்போது மூடப்பட்ட தொழிற்சாலைகளை வெறுமனே இரும்புகளுக்காக விற்காமல் அங்கு தொழில் பயிற்சிகள், சுயதொழில் ஊக்குவிப்புகள் மற்றும் தோட்ட சுகாதார தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கான வைத்தியசாலைகளாக மாற்றுதல் போன்ற வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.   

அதேவேளை 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்~ வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் தற்போது மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகளை கண்டறிந்து தோட்டத்துறையை உள்ளடக்கும் வகையில் புதிய கைத்தொழில் வலயம் ஆரம்பிக்கப்டுமென தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கான எவ்வித ஆயத்தங்களும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. 

மேலும் தோட்டங்களில் உள்ள பழைய தோட்ட பங்களாக்கள் மற்றும் கைவிடப்பட்டுள்ள தேயிலை தொழிற்சாலைகளை சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய வகையிலான பங்களாக்களாக மாற்றுவதற்கான தேவையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போன்ற தேர்தல் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் தோட்டத்துறையினை அபிவிருத்தி செய்யும் மற்றும் வாழ்வாதாரங்களை ஊக்குவிக்கும் எவ்வித வாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை. மாறாக தினந்தோரும் தங்களுடைய வேதன கோரிக்கைக்காக தோட்டத் தொழிலாளர் போராடிக்கொண்டே இருக்கின்றார்கள். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக