கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

19 பிப்ரவரி, 2021

1000 ரூபாவில் 1000 பிரச்சினைகள்


பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்துக்கான போராட்டங்கள் கடந்த 6 வருடங்களாக நீடித்து வரும் நிலையில் முழுமையாக 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்துக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதிலிருந்து தொழிற்சங்கங்கள் தவறியுள்ளன. 1999 ஆம் ஆண்டு தொடக்கம் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயமும் ஏனைய சேமநலன்களும் தீர்மானிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முதன் முறையாக சம்பள நிர்ணய சபையின் மூலமாக தொழிலாளர்களின் நாட்சம்பளம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபையினால் 1000 ரூபா வழங்கப்பட்டு விட்டதாக தொழிற்சங்கங்கள் வாதிட்டாலும் அவர்களின் ஏனைய உரிமைகள் மற்றும் நலன்கள் இல்லாமலாக்கப்பட்டு நிரந்தரமில்லாத 1000 ரூபாவே பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட கம்பனிகளால் 900 ரூபாவும் வரவு - செலவுத்திட்ட கொடுப்பனவாக 100 - 140 ரூபாவினையும் சேர்த்து 1040 ரூபா வரையில்  வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதுடன் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் என்பன ஆட்சேபணைகளை தெரிவிப்பதற்காக 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது சம்பள நிர்ணய சபையின் மூலமாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தீர்மானிக்கப்பட்டுள்ளமையினால் கூட்டு ஒப்பந்தம் வலுவிழக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே தொழிலாளர்களின் ஏனைய நலன்களை உறுதிப்படுத்தக்கூடிய எந்த வாய்ப்புகளும் இல்லாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. 1000 ரூபா என்ற அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதே தவிர மக்களுடைய நலன்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. 

இதன் மூலம் தொழிலாளர்களுக்கான மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவு உட்பட ஏனைய கொடுப்பனவுகள், நிர்ணயிக்கப்பட்ட வேலை நாட்கள், நிர்ணயிக்கப்பட்ட கொழுந்து அறுவடை என்பன இல்லாமலாக்கப்பட்டுள்ளன. தற்போது 13 நாட்கள் மாத்திரமே வேலை வழங்க முடியுமென பெருந்தோட்ட நிறுவனங்கள் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொழிலாளர்களுக்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தலாம். மாதம் 13 ஆயிரம் என்ற வரையறைக்குள்ளேயே தொழிலாளர்கள் இயங்க வேண்டிய நிலையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் தொழிலாளர்களுக்கு வருடாந்தம் 300 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டுமென்ற நிபந்தனை காணப்பட்டாலும் அவை முதலாளிமார் சம்மேளனத்தினால் நிராகரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் தற்போது எவ்விதமான ஒப்பந்த பொறிமுறைகளும் இல்லாமல் தொழிலாளர்களுக்கு உறுதியான வேலைநாட்கள் வரையறுக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 

தற்போது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் சம்பளத்தை தீர்மானிக்கும் நிலை இருக்கின்றது. ஆனால் சம்பள நிர்ணய சபையின் மூலம் தொழிலாளர்களின் சம்பளம் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் எப்போது சம்பள பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கூட்டு ஒப்பந்தம் தவிர வேறு எந்தவொரு பொறிமுறைகளும் இன்றிய நிலையில் தொழிலாளர்களின் உழைப்பு அடகு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாதமொன்றுக்கு கட்டாயமாக தொழிலாளர்களுக்கு 13 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும். அதற்கு நாளாந்த சம்பளமாக 1000 ரூபா வழங்கப்படும். 13 நாட்களுக்கு பின்னரான வேலை நாட்களுக்கு அடிப்படைச் சம்பளமான 900 ரூபாவா அல்லது 1000 ரூபாவா வழங்கப்படும் என்பதும் தெளிவில்லாத நிலையே கானப்படுகின்றது. 

2019 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தின் படி வழங்கப்படுகின்ற 750 ரூபா சம்பள கொடுப்பனவின்போதே தொழிலாளர்களுக்கு குறைந்தளவான வேலை நாட்களே வழங்கப்படும் நிலை காணப்பட்டது. புதிய ஒப்பந்தத்தின் பின்னர் அவற்றில் எவ்வாறான மாற்றங்கள் கொண்டு வரப்படுமென தெரியவில்லை.

இதேவேளை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதத்தில் 13 நாட்களே வேலை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் வருடாந்த வருமானத்தில் 69 ஆயிரம் ரூபாவை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 2019 கூட்டு ஒப்பந்தத்தின்படி தோட்டத் தொழிலாளர்களுக்கு 750 ரூபா வழங்கப்பட்டதுடன் 300 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டுமென்ற சரத்து காணப்பட்டது. இதன்மூலம் தொழிலாளர்கள் 2 இலட்சத்து 25 ஆயிரத்தை வருமானமாக பெற்றிருந்தனர். 

ஆனால் தற்போது 13 நாட்களே வேலை நாட்களாக காணப்படுவதால் வருடத்தில் 156 நாட்களே வேலை நாட்களாகும். இதன்மூலம் 1 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாவினையே வருமானமாக பெற முடியும். இதன்படி 69 ஆயிரத்தை தொழிலாளர்கள் இழக்கின்றனர். அதுமட்டுமல்லாது கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு 28 சலுகைகள் வழங்கப்படுகின்றன. அவையனைத்தும் இல்லாமல் போகும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஏனவே மேற்படி விடயங்களையும் தொழிலாளர்கள் சிந்திக்க வேண்டும். 1000 என்ற எண்ணிக்கை கிடைத்ததை மாத்திரம் கரத்தில் கொள்ளக்கூடாது. அது எவ்வாறு கிடைத்தது?. அதற்கு பின்னரான நிலைமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். தொழிற்சங்கங்கள் கேட்டுக்கொண்டதுக்கு இணங்க வேலைநிறுத்தங்களை மேற்கொண்ட தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களிடம் விளக்கங்களை பெறவும் உரித்துடையவர்கள். எனவே தற்போதைய 1000 ரூபா கோ~த்துடன் பிரச்சினைகள் முற்றுபெறபோவதில்லை. இனிமேல்தான் ஆரம்பமாகும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக