கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

8 ஆகஸ்ட், 2025

முறையற்ற பாலத்தால் குடிநீரை இழந்த மக்கள்

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட புளூம்பீல்ட் தோட்டத்தின் நிலையே இது

சுத்தமான  குடிநீர் என்பது அனைவரின் உரிமையாகும். ஆனால் இலங்கையில் நீருற்றுக்கள் ஆரம்பிக்கும் மற்றும் நீர் வளம் நிறைந்த மலையகத்தில் பல தோட்ட மக்கள் இன்னும் குடிநீருக்கான சிக்கலை எதிர்கொண்டுள்ளனர் என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகின்றதா?

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்குச் சொந்தமான பிரவுன்ஸ்விக் தோட்டம், புளூம்பீல்ட் பிரிவில் வசிக்கும் சுமார் 245 க்கும் மேற்பட்ட குடும்பங்களே ஒரு சிறிய பாலத்தின் விளைவாக  சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். குறித்த தோட்டத்தில் வசிக்கும் 800 க்கும் அதிகமான மக்களும் பாடசாலை பிள்ளைகளும், வயோதிபர்கள் உள்ளிட்ட அனைவரும் கழிவு கலந்த நீரையே குடிநீராக பயன்படுத்தும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
 
இந்நிலைக்கு காரணம் புளூம்பீல்ட் பாடசாலைக்கு செல்லும் பிரதான பாதையில் அமைக்கப்பட்டுள்ள 8 அடி நீளம் கொண்ட பாலம் முறையாக அமைக்கப்பட்டமையினாலும்  பாதையின் அருகில் வடிகாண்களும் அமைக்கப்படாமையினாலும் மழைக்காலத்தில் வெள்ள நீர் பெருக்கெடுத்து குடிநீர் தொட்டிகளுக்குள் கலப்பதால் மக்கள் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

மேலும் குறித்த ஒரு சிறிய பாலம் முறையற்ற விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் பாலம் மழைக்காலத்தில் குப்பைகளால் முற்றாக அடைப்பட்டு வெள்ள நீர் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதால் அருகிலுள்ள மைதானம் வெள்ளக்காடாக மாறும் நிலை உருவாகியுள்ளது.

வெள்ளநீர் பாலத்தைக் கடந்து சொல்லமையினால் குப்பைகள் அடைத்துக் கொள்வதால் நீர் மைதானம் முழுவதும் நிரம்புகின்ற காரணத்தால் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவு நீர்  குடி நீர்க்காக அமைக்கப்பட்டுள்ள நீர் தாங்கியை சென்றடைந்து அதனுள்  கலப்பதால் மக்கள் அந்நீரையே பரு வேண்டியுள்ளதால் பல்வேறு நோய்களுக்குள்ளாகின்றனர்.

அதிக மழைக்காலங்களில் குறித்த பாலத்தினூடாக  பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகள் மழைக்காலத்தில் பெரும் அச்சத்தின் மத்தியில் செல்ல வேண்டியுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் இந்த இடத்தில் நடந்து சென்ற ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தெய்வாதீனமாக உயிர் பிழைத்த சம்பவமும் பதிவாகியுள்ளது.

இது குறித்து பாடசாலை நிர்வாகத்திடமும் பல தடவைகள் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இப்பகுதி கிராம சேவை அதிகாரியிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை இம்மக்களுக்கான உரிய தீர்வு கிடைக்கவில்லை. தினசரி தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்த நீரையே எதிர்பார்த்துள்ள மக்களுக்கு தற்போது கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் பாடசாலை பிள்ளைகளும் அருந்தும் குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் இந்த நீரை அருந்த முடியாத நிலையிலும் தண்ணீருக்கு வேறு வழி இன்றியும் பல்வேறு சிரமங்களுக்கு இந்த மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே குறித்த பாடசாலைக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தை திருத்தியமைப்பதன் மூலமும் இப்பகுதி வழியாக செல்லும் ஆற்றை அகலப்படுத்துவதன் ஊடாகவும் இம்மக்களுக்கான குடிநீர் ஆதாரத்தை உறுதிப்படுத்த முடியும். எனவே இது தொடர்பில் பாடசாலை நிர்வாகமும் இது குறித்து கவனம் செலுத்த வேண்டுமெனவும் மற்றும் நோர்வூட் பிரதேச செயலகம் உரிய கவனம் செலுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயத்தில் தோட்ட நிர்வாகமும் உரிய அரச அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும் எனக்கூறி தோட்ட மக்கள் கடந்த 20 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் இருந்து பேரணியாக சென்ற மக்கள் பாடசாலை நுழைவாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தற்போது குடிநீர் பெறப்படும் ஊற்று நீர் நிலை அமைந்திருக்கும் பகுதி மிகவும் தாழ்வான பிரதேசமாகும். இதனால் இதற்கு  500 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையின் கழிவுகள் 100 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள லயன் அறைகளின் கழிவுகள் எல்லாமே இவ் ஊற்று நீர் நிலையின் அருகிலுள்ள ஓடை வழியாகவே செல்கின்றன. இத்தோடு மிருக கழிவுகளும் இவ் வழியே வெளியேறுகின்றன. இதன் அருகில் அமைந்திருக்கின்ற ஆற்றிலும் வெள்ளம் ஏற்படுமாயின் மொத்த நீர் நிலையும் வெள்ளக்காடாகி விடும். அத்தோடு இந்த நீர் நிலையானது முறையாக மூடிய நிலையில் இல்லை திறந்த நிலையிலேயே காணப்படுகிறது.
 
இதனால் விலங்குகள் விழுந்து இறந்தாலோ அல்லது இரசாயனங்கள் ஏதும் கலக்கப்பட்டாலோ அவை கவனத்தில் கொள்ளப்படாத நிலையே காணப்படுகிறது. இவ்வாறு இத்தனை பாதிப்புக்களையும் எதிர்கொள்கின்ற இந்நீரானது எந்தவிதமான சுத்திகரிப்பும் இன்றி மக்களுக்கு நேரடியாகவே விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் எந்தவொரு அனர்த்தத்திலும் இலகுவாக பாதிக்கப்படக் கூடிய நிலையிலேயே இங்குள்ள மக்கள் இருக்கின்றனர்.
 
முன்னாள் அமைச்சர் திகாம்பரத்தினால் நல்லாட்சி அரசாங்கத்தில் மஸ்கெலியா பிரதேச மக்களுக்கு தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக இந்தப் பிரதேசத்தில் சூறாவளி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டதாக அறிவித்திருந்தனர். இதன்போது குடிநீர், பாதைகள், மைதானங்கள், வீடமைப்புப் போன்ற திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளில் ஈடுபட்டனர். காட்மோர் தோட்டத்தில் லார்ச்பீல், மொக்கா கீழ்ப் பிரிவு , லங்கா டிவிசன், கெஸ்கீபன் டிவிசன், எமலினா டிவிசன், புளூம்பீல்ட் டிவிசன், குயின்ஸ்லேண்ட் டிவிசன், மஸ்கெலியா சண்முகநாதர் தேவஸ்தான கலாசார மண்டபம், கங்கேவத்தை , லக்ஸபான சென்அன்றூஸ் கீழ்ப்பிரிவு, லக்ஸபான டிவிசன், நயின்சா தோட்டம் ஆகியன உட்பட 13 தோட்டங்களில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இப் பயணத்தின் போது மஸ்கெலியா, புளூம்பீல்ட் தோட்ட குடிநீர் திட்டத்துக்கான அடிக்கலும் நாட்டப்பட்டது. ஆனால், திட்டம் செயற்படுத்தப்படவில்லை.

தற்போது அரச சார்பற்ற நிறுவனமொன்று குடிநீர் திட்டத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தாலும் அது மக்களுக்கு பயன் தராத திட்டமான்றாகவே மாறியுள்ளது. பாலம் புனரமைக்கப்பட்டு அவ்வழியாக செல்லும் ஆறு அகலப்படுத்தப்படாவிட்டால் இந்நிலை நீண்ட காலத்துக்கு தொடரும். மக்களின் போராட்டத்துக்குப் பின்னர் மஸ்கெலியா பிரதேச சபையின் ஊடாக ஆற்றை அகலப்படுத்தும் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மக்கள் தொடர்ச்சியாக முகங்கொடுத்து வரும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கு மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக