கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

28 மார்ச், 2023

மத்தள சர்வதேச விமான நிலையம் : 63 கோடி வருமானம் ; 5876 கோடி செலவு


ஊழியர் கொடுப்பனவு, ஊழியர் போக்குவரத்து செலவு, நீர் மற்றும் மின்சார கட்டணம் என்பவற்றுக்காக 806 கோடி ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.

பாரிய முதலீட்டுடன் நிர்மாணிக்கப்பட்ட மத்தள சர்வதேச விமான நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டு 10 வருடங்கள் கடக்கின்ற நிலையிலும் எதிர்பார்த்தளவில் அதன்மூலம் நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. தற்போது குறித்த விமான நிலையத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும் வருமானம் அதன் செயற்பாட்டு செலவினங்களுக்கே போதுமானதாக இன்மையால் விமான சேவைகள் கம்பனியின் வருமானத்திலிருந்து அவற்றை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலைமையானது மக்கள் மீதான கடன் சுமையினை மேலும் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளது. 2013 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மத்தள சர்வதேச விமான நிலையத்தின் மூலம் 633.36 மில்லியன் ரூபா (633,364,859.00) வருமானமாக பெறப்பட்டுள்ளதுடன் 58,769.88 மில்லியன் ரூபா (58,769,883,088.00) செலவு ஏற்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் மத்தள சர்வதேச விமான நிலைய தகவல் அதிகாரிக்கு 28.03.2022 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு உரிய பதில் வழங்கப்படாமையால் 06.06.2022 ஆம் திகதி குறித்தளிக்கப்பட்ட அதிகாரிக்கு மேன்முறையீடு செய்யப்பட்டது. எனினும் உரிய பதில் வழங்கப்படாமையினால் 21.07.2022 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவில் மேன்முறையீடு மேற்கொள்ளப்பட்டது. 02.02.2023 ஆம் திகதி இடம்பெற்ற மேன்முறையீட்டு விசாரணையின் போது விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்துக்கு உரிய தகவலை வழங்குமாறு உத்தரவிடப்பட்டது. இதன்படி 03.03.2023 ஆம் திகதி விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தகவல் அதிகாரி திருமதி எம்.சி.ஜி.மஹிபாலவினால் வழங்கப்பட்ட தகவலிலேயே மத்தள சர்வதேச விமான நிலையத்தின் வருமானம் மற்றும் இழப்புக்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தினை உருவாக்கும் தேவையின் பிரகாரம் மத்தள சர்வதேச விமான நிலைய நிர்மாணம் சீன அரசின் சலுகை கடன் முறைமையின் கீழ் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு மற்றும் மக்கள் சீனக் குடியரசுக்கும் இடையே 2009 டிசம்பர் 23 ஆம் திகதி 209 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. 2000 ஹெக்டெயர் காணியை பயன்படுத்தி நிர்மாண நடவடிக்கைகள் 2009 நவம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் 2013 மார்ச் மாதம் 18 ஆம் திகதி பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. 

மத்தள சர்வதேச விமான நிலையம்

மத்தள விமான நிலையத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பு இலங்கையின் விமான சேவை நடவடிக்கைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக நடைபெற்றதுடன் இலங்கையில் மாற்று சர்வதேச விமான நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அவசியம் அவ்வப்போது ஏற்பட்டது. மாற்று விமான நிலைய நிர்மாணத்திற்குப் பொருத்தமான இடம் ஒன்றைத் தெரிவு செய்யும்போது தீவின் பல பிரதேசங்களில் உள்ள இடங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. 2000 ஆண்டு மார்ச் 24 ஆம் திகதி நீர்கொழும்பு கதிரானேயில் இடம்பெற்ற விமான விபத்தின் பின்னர் இத்தேவைப்பாடு அதிகளவில் உருவாகியிருந்தது. சாத்தியவள கற்கை மற்றும் சுற்றாடல் ஆய்வுகளின் பின்னர் இறுதியில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரவில பிரதேசம் அதற்காக தெரிவு செய்யப்பட்டு அங்கு அடிப்படை நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் போது பிரதேச மக்களின ; எதிர்ப்பினைக் கருத்திற் கொண்டு ஆரம்ப ஆய்வுகளின் பின்னர் மாற்று விமான நிலைய நிர்மாணிப்பதற்கு பொருத்தமான பிரதேசமாக மத்தள பிரதேசம் தெரிவு செய்யப்பட்டிருந்தது. ஹம்பாந்தோட்டை நகரிலிருந்து 15 கிலோ மீற்றர் வடக்குப் பக்கமாக அமைந்துள்ள சிறிய நகரமொன்றாக மத்தல பிரதேசத்தின் இந்த விமான நிலைய நிர்மாணத்தின் முதலாம் கட்டம் 2009 நவம்பர் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 

2000 ஹெக்டேயர் பரப்பளவிலான மத்தள விமான நிலைய செயற்திட்டம் நேரடி நிர்மாணத்திற்காக 800 ஹெக்டேயர் நிலப் பகுதியை பயன்படுத்தியுள்ளதுடன் சுற்றுப்புற சுற்றாடல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 1200 ஹெக்டேயர் நிலப்பகுதி பயன்படுத்தப்பட்டிருந்தது. அவ்வாறே விமான நிலைய நிர்மாணத்திற்காக மொத்தமாக 243.7 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டிருந்தது. 2013 மார்ச் மாதம் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு இணக்கச் சான்றிதழும் வானோடல் சான்றிதழும் வழங்கப்பட்டிருந்ததுடன் செயற்பாட்டு நடவடிக்கைகள் 2013 மார்ச் 18 ஆம் திகதி கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 


துபாயிலிருந்து வந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு340 விமானம் மத்தளைக்கு வருகை தந்த முதலாவது வர்த்தக விமானமாக இருந்ததுடன், அதன் பின்னர் துபாயிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த பிளய் துபாய் விமானம் மற்றும் சார்ஜாவிலிருந்து வந்த எயார் அரேபியா விமானம் மத்தள சர்வதேச விமான நிலையம் செயற்பட்டதன் பின்னர் மேற்கொண்ட முதலாவது சர்வதேச விமான சேவைகளாக இருந்தன.

விமான சேவைகளும் பயணிகள் வருகையும்

2013 ஆம் ஆண்டு மத்தள சர்வதேச விமான நிலையம் உத்தியோகபூர்வமாக தமது பணிகளை ஆரம்பித்துள்ள நிலையில் 2013 – 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 178,967 பயணிகளை மாத்திரம் கையாண்டுள்ளதுடன் 5633 விமானங்கள் தரையிறங்கியுள்ளன. அதிகபட்சமாக 2014 ஆம் ஆண்டு 40,386 பயணிகளை கையாண்டுள்ளதுடன் 1492 விமானங்கள் தரையிறங்கியுள்ளன. 2013 ஆம் ஆண்டு 36,137 பயணிகளையும் 2021 ஆம் ஆண்டு 32,957 பயணிகளும் 2017 ஆம் ஆண்டு 22,927 பயணிகளும் வருகைத் தந்துள்ளனர். ஏனைய ஆண்டுகளில் 20 ஆயிரத்துக்கும் குறைவான பயணிகளையே விமான நிலையம் கையாண்டுள்ளது. குறைந்தபட்சமாக 2019 ஆம் ஆண்டு 1403 பயணிகளே வருகைத்தந்துள்ளனர்.

வருமானமும் செலவும்

மத்தள சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினால் விமான வழிச்செலுத்தல் சேவை, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் மற்றும் பாதுகாப்பு சேவை என்பன வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது மத்தள சர்வதேச விமான நிலையத்தினூடாக ரெட்விங் எயார்லைன், உஸ்பெகிஸ்தான் எயார்லைன் என்பன விமான சேவையினை வழங்குவதுடன் விமான சேவைகள் நிறுவனத்தினால் விமான நிலைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தரைவழி போக்குவரத்தை ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ_ம் உணவு வழங்கல் சேவையினை ஸ்ரீலங்கன் கெட்டரிங் நிறுவனமும் விமான எரிபொருளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் வழங்கி வருகின்றன.


2013 ஆம் ஆண்டு மத்தள சர்வதேச விமான நிலையம் உத்தியோகபூர்வமாக தமது பணிகளை ஆரம்பித்துள்ள நிலையில் அந்த வருடத்தில் 48,010,898 ரூபா வருமானமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள போதும் 3,348,619,105 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 2014 ஆம் ஆண்டு 136,096,612 ரூபா வருமானமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 3,234,784,248 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு 93,471,586 ரூபா வருமானமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் 4,504,270,016 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு 77,998,185 ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளதுடன் 21,156,145,902 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.

மத்தள விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஊழியர்களின் போக்குவரத்துக்காகவும் அதிகமான தொகையினை செலவளிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. மேலும் மின்சாரம் மற்றும் நீர் கட்டணத்துக்காகவும் பெருந்தொகை செலவிடப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. வருமானமற்ற நிலையில் காணப்படும் விமான நிலையத்தின் செலவுகள் பன்மடங்கு காணப்படுகின்றது.

2013 – 2022 ஆம் ஆண்டு வரை ஊழியர்களின் கொடுப்பனவுகளுக்காக மாத்திரம் 6888.64 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2020 ஆம் ஆண்டு 679.35 மில்லியன் ரூபாவும் 2021 ஆம் ஆண்டு 876.69 மில்லியன் ரூபாவும் 2022 ஆம் ஆண்டு 1069.26 மில்லியன் ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளது. 2013 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஊழியர் போக்குவரத்துக்காக 169.34 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு 20.84 மில்லியன் ரூபாவும் 2022 ஆம் ஆண்டு 31.93 மில்லியன் ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளது.

2013 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மத்தள விமான நிலையத்தின் மின்சார கட்டணமாக  908.89 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது. 103.49 மில்லியன் ரூபா நீர் கட்டணமாக செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது. 

நாடு பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள நிலையிலும் மக்களுக்கான நிவாரணங்கள் வழங்குவதில் அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்யும் நிலையிலும் இலாபமற்ற ஒரு நிறுவனத்துக்காக பொதுமக்களின் பணம் பாரிய அளவில் வீணடிப்புச் செய்யப்படுகின்றது. நாட்டின் தேவைக்கு அபிவிருத்தி திட்டங்கள் மிகவும் அவசியமாகவுள்ள நிலையில் அரசியல் இலாபங்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு பாரிய சுமையினையே ஏற்படுத்துகின்றது.  

அரசாங்கத்தின் திட்டம் என்ன?

2021 ஆம் ஆண்டு மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டுச் செலவு அதே காலப்பகுதியில் அதன் வருமானத்தை விட 21 மடங்கு அதிகமாகும் என கணக்காய்வாளர் நாயகம் அறிவித்துள்ளார். விமான நிலையம் மற்றும் வானூர்தி சேவைகள் நிறுவனத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைகளை கடந்த டிசம்பர் 24ஆம் திகதி ஆய்வுக்கு உட்படுத்தும்போதே கணக்காய்வாளர் நாயகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக பெறப்பட்ட 19 கோடி அமெரிக்க டொலர் கடனுக்கான வட்டி உட்பட வருடாந்த கடன் தவணையாக 261 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை நிறுவனம் செலுத்தியுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்தள சர்வதேச விமான நிலையம் திறந்துவைக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த போதும் எதிர்பார்த்த வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நல்லாட்சி காலத்தில் விமான நிலையத்தின் சரக்கு வைக்கும் பகுதிகளை, நெல் சந்தைப்படுத்தும் சபை பயன்படுத்திக் கொள்வதற்கு அரச அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மத்தள சர்வதேச விமான நிலையம் நெல் களஞ்சியப்படுத்தும் இடமானது. இது தொடர்பில் பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. பல சர்ச்சைகளும் இது தொடர்பில் எழுந்தன.

இதேவேளை யானைகள் நடமாடும் பகுதியில் இந்த விமான நிலையம் அமைந்திருந்தமை காரணமாக, இரவு வேளைகளில் அவை தொடர்ந்தும் நடமாடுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 2016 ஆம் ஆண்டில் 300 பாதுகாப்புப் படை வீரர்களும் காவல்துரையினரும் மற்றும் தன்னார்வலர்களும் இந்த விமான நிலையத்திலிருந்து வன விலங்குகளை விரட்டும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். எனினும் அத்திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்தமுடியவில்லை.

மத்தள சர்வதேச விமான நிலையத்தை மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலா பயண நிலையமாக மாற்றியமைக்கும் ஐந்தாண்டு அபிவிருத்தி திட்டமொன்றினை சுற்றுலாத்துறை அமைச்சு முன்னெடுத்திருந்தது. மத்தள சர்வதேச விமான நிலையத்தினூடாக வருடத்திற்கு ஒரு மில்லியன் பயணிகள் மற்றும் 45,000 மெட்ரிக் தொன் சரக்குகளை கையாளக்கூடிய வகையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருந்தது.

விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் 'கவர்ச்சிகரமான பயணம்' எனும் தொனிப் பொருளில் தயாரித்துள்ள இந்த ஐந்தாண்டு திட்டத்தினூடாக 2025 ஆம் ஆண்டாகும் போது மத்தள சர்வதேச விமான நிலையம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் போன்ற சுறுசுறுப்பான விமான நிலையமாக மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்த்தது. ஆனால் இன்றளவிலும் வருமானம் ஈட்டும் மார்க்கமாக விமான நிலையத்தை செயற்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

இதேவேளை வெளிநாட்டு முதலீடுகளுடன் விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவற்றை வெற்றிகரமாக செயற்படுத்த முடியவில்லை. மக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலான திட்டங்களை அமுல்படுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பாக இருக்கும் நிலையில் பல வருடங்கள் கடந்தும் மக்களுக்கு பாரிய சுமையினை ஏற்படுத்தும் திட்டங்களை அரசியல் இலாபங்களுக்காக அரசாங்கம் முன்னெடுத்து தடுமாறுவதற்கு மத்தள சர்வதேச விமான நிலையம் மிகச் சிறந்த உதாரணமாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக