ஒவ்வொரு தடவையும் அரசாங்கங்கள் மாறும்போதும் அந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குகின்ற மலையகத் தலைவர்களுக்கு ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு வழங்கப்படுவது காலாகாலமாக இடம்பெறும் ஒரு நிகழ்வாகும். இவ்வாறு வழங்கப்படும் அமைச்சுக்களில் முன்னெடுக்கப்புடும் திட்டங்கள் தொடர்பிலான ஆவணங்கள் அடுத்த அமைச்சு மாற்றத்தின் போது இல்லாமல் செய்யப்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சுக்கு தகவல் கோரிக்கை முன்வைக்கப்பட்டு பின்வரும் விடயங்கள் தொடர்பில் தகவல் கோரப்பட்டது.
- 2010 – 2015 வரையான காலப்பகுதியில் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட கால்நடைகள் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு கடன்கள் தொடர்பான விபரம்
- 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மலையகப் பெருந்தோட்டங்களில் உருவாக்கப்பட்ட பிரஜாசக்தி நிலையங்கள் தொடர்பான விபரம்
- பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட மாடி லயன் வீட்டுத்திட்டம் தொடர்பான விபரம்
- பெருந்தோட்ட சிறுவர்களுக்காக உலக வங்கியின் மூலம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகால முன்பள்ளி கல்வி அபிவிருத்தி திட்டம்
30.04.2019 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கையின் பிரகாரம் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் தகவல் அதிகாரியினால் 22.06.2019 ஆம் திகதி வழங்கிய பதிலில் அமைச்சானது 2015 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டமை காரணமாக தகவல் கோரிக்கையின் 1 ஆம் மற்றும் 2 ஆம் விடயம் தொடர்பான கோரிக்கைக்கான தகவல்கள் இல்லையெனவும் 3 ஆவது தகவல் கோரிக்கை தொடர்பில் அமைச்சினால் தோட்ட சமூகத்துக்காக தனி வீடுகளே அமைக்கப்பட்டதாகவும் 4 ஆவது தகவல் கோரிக்கை இணைக்கப்பட்டுள்ளதாகவும் பதில் வழங்கப்பட்டது. எனினும் சட்டத்தில் குறித்தளிக்கப்பட்ட காலத்துக்குள் பதில் வழங்க தவறியமையால் 31.07.2019 ஆம் திகதி குறித்தளிக்கப்பட்ட அதிகாரிக்கு மேன்முறையீடு மேற்கொள்ளப்பட்டது. எனினும் பதில் வழங்காமையினால் 31.07.2019 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் மேன்முறையீட்டு விசாரணை
குறித்த விடயம் தொடர்பில் தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணையின் போது அமைச்சானது, 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகவும் அதற்கமைவாக அதற்கு முன்னதான தகவல்கள் தமது உடமையில், கட்டுக்காப்பில், கட்டுப்பாட்டில் இல்லையெனவும் பகிரங்க அதிகார சபையான மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு தெரிவித்தது.
எனினும் அமைச்சானது 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டாலும் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களான பிரஜாசக்தி, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனம் என்பன தொடர்ச்சியாக அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டாளரால் ஆணைக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் அமைச்சின் உருவாக்கமானது வெறும் பெயர் மாற்றமே எனவும் 2015 ஆம் ஆண்டு அமைச்சு உருவாக்கப்பட்ட போதும் அது தொடர்பிலான பதிவுகள் மற்றும் ஆவணக்கோவைகள் பகிரங்க அதிகார சபைக்கு மாற்றப்பட்டு இருக்கும் என ஆணைக்குழு கருதியது.
இதேவேளை முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பில் நிதிக்குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமையால் தகவல் கோரிக்கைகள் அதன் உடமையில் காணப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
எனினும் வர்த்தமானி அறிவித்தல் மற்றும் பிரதமரினால் அனுப்பப்பட்ட கடிதத்தில் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் அமைச்சின் எல்லைக்குள் இல்லையென வாதிடப்பட்டது. இருப்பினும் 2018 ஆம் ஆண்டு அமைச்சின் வருடாந்த அறிக்கையில் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றமும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு தொடர்ச்சியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 19.014.2021 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அமைச்சானது, தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சு என பெயரிடப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. மேலும் குறித்த மீள்தாபனமானது வெறுமனே பெயர் மாற்றம் என்பதுடன் அமைச்சின் ஒவ்வொரு மீள்தாபனத்தின்போதும் ஆவணங்கள் கைமாற்றப்பட்டிருக்க வேண்டும் எனவும் அடையாளம் காணப்பட்டது.
பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், கொவிட் தொற்று என்பவற்றுக்கு மத்தியில் தகவல் கோரிக்கை தொடர்பில் பதில் வழங்குவதற்கு அமைச்சு தவறியிருந்தது. இறுதி வரையும் அமைச்சின் ஆவணக்கோப்புகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை.
அமைச்சுக்களின் பெயர் மாற்றங்கள்
தேர்தலில் வெற்றியிட்டி அமைக்கப்படும் ஒவ்வொரு அரசாங்கத்திலும் தமக்கு ஆதரவளிக்கும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படுவது வழமையாக இருக்கின்றது. இந்த வழமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்திலிருந்து ஆரம்பமானது.
தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் சமுக அபிவிருத்தி அமைச்சு (2005), இளைஞர் அலுவல்கள் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு (2006 – 2009), சமுக அபிவிருத்தி மற்றும் சமத்துவமின்மையை இல்லாதொழித்தல் அமைச்சு, கால்நடை வள மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு (2010 – 2014), சமூக பொருளாதார, நலன்புரி மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி அமைச்சு (2015 ஜனவரி தொடக்கம் ஆகஸ்ட் வரை), மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு 2015 செப்டெம்பர் முதல் 2019 டிசம்பர் 9 ஆம் திகதி வரை), சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு (2019 – 2020), தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு (2021 – 2022) என தொடர்ச்சியாக பெயர் மாற்றம் பெற்று வந்த நிலையில் தற்போது நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சின் பெயர்கள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வந்தாலும் அவற்றின் கீழுள்ள நிறுவனங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி காலத்தில் புதிதாக அரச நிறுவனம் உருவாக்கப்பட்டு அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டது.
ஆவணக்கோப்புகளுக்கு என்ன நடந்தது?
2010 – 2015 வரையான காலப்பகுதியில் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட கால்நடைகள் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு கடன்கள் தொடர்பான விபரம், 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மலையகப் பெருந்தோட்டங்களில் உருவாக்கப்பட்ட பிரஜாசக்தி நிலையங்கள் தொடர்பான விபரம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட மாடி லயன் வீட்டுத்திட்டம் தொடர்பான விபரம் போன்றவை முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சுக்களுக்கு உரியதான விடயங்களாகும். இவை தொடர்பான எவ்வித வெளிப்படைத்தன்மைகளும் அக்காலப்பகுதியில் காணப்படவில்லை.
பாராளுமன்ற சட்டம் 19ஃ2005 இன் கீழ் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் 2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் கீழ் இயங்கிய ஹட்டன் தொழில் பயிற்சி நிலையம், இறம்பொடை கலாசார நிலையம், நோர்வூட் விளையாட்டுத் தொகுதி மற்றும் 44 பிரஜாசக்தி நிலையங்கள் அனைத்தும் 2016.07.02 ஆம் திகதிய அமைச்சரவை அங்கீகாரத்தின் பிரகாரம் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சின் 2018 ஆம் ஆண்டு செயலாற்றுகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே அமைச்சின் மூலமே பிரஜாசக்தி நிலையங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லையென கூறப்பட்டிருந்தது. தற்போதுள்ள அமைச்சும் அதே காரணத்தை கூறி தப்பித்துக்கொள்ள முயற்சிக்கும்.
எனினும் 2015 ஆம் ஆண்டு புதிய அமைச்சு உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அமைச்சிலுள்ள நிறுவனங்கள் முன்னைய அமைச்சுக்களை பிரதிநிதித்துவப்படுத்தியவையாகும். எனவே ஆவணங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது சகல அமைச்சு அதிகாரிகளின் கடமையாகும். எனவே இங்கு தவறிழைத்தது அமைச்சரா அல்லது அமைச்சு அதிகாரிகளா என்ற கேள்வி எழுகின்றது. சௌமியமூர்த்தி தொண்டான் ஞாபகார்த்த மன்றத்தில் இடம்பெற்றதாக கூறப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் நிதிக்குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் அவை தொடர்பான எவ்வித பதிவுகளும் அமைச்சில் பேணப்பட்டிருக்கவில்லை என்பதை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் அறிந்து கொள்ள முடிந்தது. வெளிப்படையாக அரசியல் தலைமைகள் விமர்சித்துக் கொண்டாலும் ஆவணங்களை மறைப்பதன் மூலம் தமக்குள் ஆதரவளித்துக் கொள்வதாகவே தெரிகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக