கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

28 மார்ச், 2023

மலையகம் 200: நிலவுரிமையற்ற மலையக சமூகம்?


2015 – 2022 ஆம் ஆண்டு வரை பெருந்தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களில் 6681 வீடுகளுக்கான நில உரித்துக்கள் இன்னும் வழங்கப்படவில்லை.

மலையக மக்களின் காணி உரிமைக்காக போராடி 200 வருடங்களை கடந்துள்ளனர். இந்த காலப்பகுதியில் காணி உரிமைக்காக போராடி பல தியாகிகள் உயிர் நீத்தும் உள்ளனர். அவ்வப்போது வந்த அரசாங்கங்கள் தங்களின் அரசியல் இருப்புகளுக்காக மலையக மக்களுக்காக வீடமைப்புத் திட்டங்களை அமுல்படுத்தி மக்களுக்கு வழங்கியிருக்கும் நிலையிலும் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மலையக மக்களின் தனி வீட்டு கனவில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இலங்கை அரசாங்கத்தின் வீடமைப்பு திட்டங்கள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடனான வீடமைப்புத் திட்டங்கள் என பலரின் தனி வீட்டு கனவுகள் நனவாக்கப்பட்டன. எனினும் நிலங்களுக்கான உரித்துக்கள் வழங்கப்பட்டு நிலத்தை சொந்தமாக்கி தருவதில் அரசாங்கம் இன்னும் உறுதியான நிலைப்பாட்டுக்கு வரவில்லை.

மலையகப் பெருந்தோட்டங்களில் இதுவரை வழங்கப்பட்ட வீடுகளுக்கான நில உரித்துக்கள் வழங்கப்படாமை மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்ட உரித்துக்களின் சட்டபூர்வ தன்மை என்பவற்றில் இன்னும் மக்களுக்கு போதிய தெளிவின்மை காணப்படுகின்றது. இந்நிலையில் 2015 – 2022 ஆம் ஆண்டு வரை பெருந்தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களில் 6681 வீடுகளுக்கான நில உரித்துக்கள் இன்னும் வழங்கப்படவில்லை என்பதை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் எம்மால் அறிந்துகொள்ள முடிந்தது.

அரசாங்கத்தால் எடுக்கப்படுகின்ற கொள்கை ரீதியான தீர்மானங்களின் அடிப்படையில் 2009 ஆம் ஆண்டின் போது ஆரம்பிக்கப்பட்ட தோட்ட வீடமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் புதிய வாழ்வாதார வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டம் ஆகவும் 2015 ஆம் ஆண்டின் போது 100 நாட்கள் நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணைவாக ஒரு விசேட நிகழ்ச்சித்திட்டமாகவும் அமுல்படுத்தப்பட்டது. இவ் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் 2015 ஆம் ஆண்டிலிருந்து பசுமையான தங்க வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டங்களாக அமுல்படுத்தப்பட்டதுடன் அவை ஒப்பந்த அடிப்படை, நலனாளிகள் தலையீட்டின் அடிப்படை ஆகிய இரண்டு வகைகளாக அமுல்படுத்தப்பட்டன. வீட்டின் உரிமை மாத்திரமின்றி 7 பேர்ச் காணியின் உரிமையையும் ஒப்படைப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

புதிய வாழ்வாதார வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம்

இந்த வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் 4 கட்டங்களின் கீழ் அமுல்படுத்தப்பட்டன. ஒரு வீட்டிற்காக ரூபா 240,000 உதவிப் பணமும் 275,000 ரூபா கடன் பணமுமாக ஒரு வீட்டிற்கு 515,000 ரூபா வழங்கப்பட்டிருந்தது.

பசுமையான தங்க வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம்

இவ்வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்காக அமைச்சின் மூலம் வீடுகளை நிர்மாணிப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களின் பிரகாரம் ஒரு வீட்டின் பெறுமதியில் 494,000 ரூபா 4 வீத வட்டி விகிதத்தின் கீழான கடன் அடிப்படையிலானதுடன் மிகுதி 506,000 ரூபாவானது, அமைச்சினால் பொறுப்பேற்கப்படுகின்றது. மேற்கூறிய கடன் பணத்தை மீள அறவீடு செய்வதற்கு மாதாந்த தவணைப்பணம் 3,800 ரூபாவாக 180 தவணைகளில் அறவீடு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அமப/17/0306/739/002 ஆம் இலக்க 2017 பெப்ரவரி 06 ஆந் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் கீழ் மேற்கூறிய வீடுகளுக்காக ஒரு வீடு 1,000,000 ரூபா பெறுமதியில் 480,000 ரூபா மானியமாகவும் 520,000 ரூபா கடனாக வழங்குமாறும் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

நலன் பெறுனர் தலையீட்டிலான வீடுகள்

2018 ஆம் ஆண்டில் நலன் பெறுனர்கள் தலையீட்டிலான வீடுகளுக்கான வழிகாட்டல்கள் கையேட்டின் பிரகாரம் ஒரு வீட்டிற்காக 7 பேச்சஸ் காணி வழங்கப்பட்டிருந்ததுடன் ஒரு வீட்டின் பரப்பளவு 556 சதுர அடியாகும். அது ஒரு இருக்கை அறை, ஒரு வறாந்தா, 2 படுக்கை அறைகள், ஒரு சமையலறை, ஒரு மலசலகூடம் என்பவற்றை கொண்டிருந்தது. ஒரு வீட்டுக்காக 1,000,000 ரூபா மதிப்பிடப்பட்டதுடன் 480,000 ரூபா மானியமாகவும் 520,000 ரூபா கடனாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. கடன் தவணைப்பணத்தை 15 ஆண்டுகளில் செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இந்திய அரசாங்கத்தின் உதவியிலான வீட்டுத்திட்டம்

மலையக பெருந்தோட்ட மக்களின் தொடர்வீட்டு வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து அவர்களின் நீண்டகால கனவான தனி வீட்டுத்திட்டத்தை உருவாக்கி குடியமர்த்தும் நோக்குடன் இந்திய அரசாங்கத்தினால் மலையக மக்களுக்கு 14,000 தனி வீட்டுத்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவற்றில் முதற் கட்டமாக 4000 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்திய அரசாங்கத்தினால் இரண்டாம் கட்டமாக 10,000 தனி வீடுகளை அமைப்பதற்கான உதவிகள் வழங்கப்பட்டன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையினை திறந்து வைக்கும் நிகழ்வில் இத்திட்டம் தொடர்பில் அறிவித்தார். 10,000 தனி வீடுகளை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதி 2018.02.16 ஆம் திகதி கிடைக்கப்பெற்றதுடன் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தனிகராலயத்தில் 2018.08.12 புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இத்திட்டத்துக்காக இந்திய நன்கொடையாக 9500 மில்லியன் ரூபாவும் அரசாங்கத்தின் பங்களிப்பாக 1500 மில்லியன் ரூபாவும் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.

நில உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா?

மலையக மக்களின் தனிவீட்டுக்கனவு தொடர்பில் பன்னெடுங்காலமாக பேசப்பட்டு வந்தாலும் 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவற்றுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவற்றில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி போக்கு காணப்பட்டது. 7 பேர்ச் காணியில் தனி வீடுகளை அமைக்கும் நடைமுறை இக்காலப்பகுதியில் பின்பற்றப்பட்டது. இதனடிப்படையில் 2015 – 2022 ஆம் ஆண்டுக்காலப் பகுதியில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு, சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகியவற்றினால் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களில் 6681 வீடுகளுக்கான நில உரித்துக்கள் இன்னும் வழங்கப்படவில்லை என்பதை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் எம்மால் அறிந்துகொள்ள முடிந்தது.


நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயற்பட்ட தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் தகவல் அதிகாரி வீ.அருள்ராஜாவினால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைவாக, 2015 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைச்சினால் 273 தோட்ட வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டங்களும் 4000 இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியிலான வீடமைப்புத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட 273 தோட்ட வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டங்களில் 250 வீட்டுத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் 23 வீட்டுத்திட்டங்கள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை. 

இதேவேளை இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களில் 84 கட்டங்களில் 3819 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் 181 வீடுகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

2015 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைச்சினால் 273 தோட்ட வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டங்களில் 4378 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. ஆனால் அவற்றில் 1038 வீடுகளுக்கு மாத்திரமே காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. 3340 வீடுகளுக்கு இன்னும் காணி உறுதிகள் வழங்கப்படவில்லை.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் முதல் கட்டமாக வழங்கப்பட்ட 4000 வீடுகளில் இதுவரை 659 வீடுகளுக்கு மாத்திரமே காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. 3341 வீடுகளுக்கான காணி உறுதிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி உறுதிகள் காணி வழங்கல் (விசேட சட்ட ஏற்பாடு) சட்டத்துக்கு அமைவாக முன்னெடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வீட்டுத்திட்டங்களுக்கான காணி சுவீகரிப்புகள், சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு காணி சீர்திருத்த ஆணைக்குழு மற்றும் பிரதேச செயலகங்களின் அனுமதி போன்றவை தொடர்பான எவ்வித தகவல்களும் இல்லை எனவும் அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே அரசாங்கத்தினால் மலையக பெருந்தோட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கு காணி உறுதிகள் வழங்குவதில் உள்ள தடைகள் தொடர்பில் நாம் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகின்றது. அத்துடன் வழங்கப்பட்ட காணி உறுதிகள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பது தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

நில உரித்துகளின் சட்டபூர்வதன்மை

2015 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வழங்கப்பட்ட 1679 காணி உறுதி பத்திரங்களின் சட்டபூர்வ தன்மை தொடர்பில் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினராலும் கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பில் தெளிவினை பெற்றுக்கொள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜாவிடம் வினவிய போது, ‘2015 ஆம் ஆண்டு நல்லாட்சிக்குப் பிறகு இரண்டு காணி உறுதிகள் வழங்கப்பட்டது. பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் அமரர் வேலாயுதத்தினால் 100 நாள் செயற்றிட்டத்தின் மூலம் பசுமை பூமி என்ற பெயரில் அமைச்சின் அனுமதியுடன் ஏற்பாட்டு கடிதம் வழங்கப்பட்டது. அது காணி உறுதி பத்திரம் அல்ல. மீரியபெத்த வீட்டுத்திட்டத்துக்கும் இவ்வாறே வழங்கப்பட்டது. 100 நாள் செயற்றிட்டத்தின் பொருட்டே ஏற்பாட்டு பத்திரம் வழங்கப்பட்டது. எனினும் அது ஒரு ஏமாற்று வேலையாகவே அமைந்தது. அதன் பின்னர் காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க, பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திஸாநாயக்க மற்றும் தோட்ட வீடமைப்பு அமைச்சர் திகாம்பரம் ஆகியோரால் கூட்டு அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதனடிப்படையில் பின்னர் காணி அமைச்சராக பொறுப்பேற்ற கயந்த கருணாதிலக்கவினால் பெற்றுக்கொடுக்கப்பட்ட காணி உறுதிப் பத்திரமே மலையக பெருந்தோட்ட மக்களுக்கு அமைக்கப்பட்ட வீடுகளுக்கு வழங்கப்பட்ட உச்சப்பட்ச காணி உறுதிப்பத்திரமாகும்.’ என தெரிவித்தார்.

‘டன்சினன், டயகம இந்திய வீடமைப்புத் திட்டம், காலி மாவட்டம் தலங்கம பகுதியில் இக்காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. இவை காணி அமைச்சு, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் அனுமதியுடன் வழங்கப்பட்டது. அவ்வாறு அதிகபட்சமாக சுமார் 400 காணி உறுதிகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. இது முழுமையான காணி உறுதி இல்லையென்றால் அவ்வாறு கூறுபவர்கள் முழுமையான காணி உறுதி தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். பசுமை பூமி காணி உறுதிகள் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினால் வழங்கப்படவில்லை. முன்னாள் அமைச்சர் அமரர் சந்திரசேகரன் வழங்கிய வீடுகளில் இவ்வாறான சிக்கல்கள் காணப்படுகின்றன. (பொகவந்தலாவ பாரதிபுரம்) அவ்வீட்டுத் திட்டங்களுக்கான காணி வரையறுக்கப்படவில்லை. அவ்வீட்டுத்திட்டம் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்டது. அவர்களே அதற்கான காணி உறுதிகளை வழங்க வேண்டும். எனினும் அதற்கான ஆதாரங்கள், கோப்புகளே தற்போது இல்லை.’ எனவும் மேலும் தெரிவித்தார்.

மக்களின் பொறுப்பு என்ன?

வீட்டுத்திட்டங்களுக்கான உறுதிகளை அரசாங்கம் வழங்கினால் அவற்றை மாவட்ட காணி காரியாலயத்தில் பதிவு செய்ய வேண்டியது மக்களின் கடமையாகும். பெருந்தோட்ட மக்களிடம் காணி உரிமை தொடர்பான அனுபவமின்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே அவை தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி காணி பதிவினை முறையாக மேற்கொள்ள வழிநடத்த வேண்டும். மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்டகட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, காணி அமைச்சு மற்றும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு இணைந்து வழங்கிய காணி உறுதிகள் சட்டரீதியானவையாகவும் விற்பனை மற்றும் வங்கியில் கடன் பெறக்கூடிய வகையிலான உரித்துக்களாக காணப்படுகின்றன. இவ்வாறு வழங்கப்பட்ட காணி உரித்துக்கள் முழுமையாக சகலருக்கும் வழங்கப்படவில்லையாயினும் வழங்கப்பட்ட காணி உரித்துக்களை பதிவு செய்து கொள்வது பயனாளர்களின் கடமையாகும்.

முழுமையான தீர்வு எப்போது?

2015 – 2022 ஆம் ஆண்டு வரை பெருந்தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களில் 6681 வீடுகளுக்கான நில உரித்துக்களை பெற்றுக்கொடுப்பது யாருடைய பொறுப்பு? அரசாங்கத்தின் அவ்வப்போதைய கொள்கை தீர்மானங்களுக்காகவும் ஆட்சியாளர்களின் அரசியல் நிலைப்பாட்டுக்காகவும் உருவாக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களில் மக்களால் முழுமையான பயனை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. 100 நாள் செயற்றிட்டத்தில் வழங்கப்பட்ட பசுமை பூமி திட்டம், சுவர்ண பூமி, ரன் பிம நிகழ்ச்சித்திட்டங்களின் மூலம் வீடுகளை பெற்றுக்கொண்ட மக்களுக்கான காணி உறுதிகள் மற்றும் 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கான காணி உறுதிகள் என்பன மக்களுக்கு எப்போது பெற்றுக்கொடுக்கப்படும். தனி வீடுகளை அமைத்து மக்களின் லயன் வாழ்க்கைக்கு விடை கொடுப்பதாக பிரசாரம் முன்வைக்கப்பட்டாலும் அவர்களுக்கான காணி உரிமையினை நிலை நிறுத்துவதற்கான முழுமையான முயற்சிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றே கூற வேண்டியுள்ளது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக