க.பிரசன்னா
மரண தண்டனை என்பது நீதிமன்றத் தீர்ப்பின் உச்சமாகவே பார்க்கப்படுகின்றது. இலங்கை உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் மரண தண்டனை அமுலில் இருக்கின்றன. பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் மரண தண்டனை உறுதிப்படுத்தப்படுகின்றன. கொலை, தேசத்துரோகம் அல்லது சதி, உளவு, யுத்தக்குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றுக்காக இம் மரண தண்டனை பொதுவாக அமுல்படுத்தப்படுகின்றன. சர்வதேச மன்னிப்புச் சபை 2013 ஆம் ஆண்டு வெளியிட்ட மரண தண்டனையை அமுல்படுத்துகின்ற 198 நாடுகளின் பட்டியலில் 98 நாடுகளில் சகல குற்றங்களுக்குமான மரணதண்டனை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஏழு நாடுகளில் பொதுக் குற்றங்களுக்கு மட்டுமான மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. 35 நாடுகளில் மரணதண்டனை சட்டத்தில் இருந்தும் அமுல்படுத்தப்படாமல் இருக்கின்றன. 58 நாடுகள் இன்னும் மரண தண்டனையை அமுல்படுத்தி வருகின்றன.
மரண தண்டனையானது ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு விதமான செயற்பாடுகளின் மூலம் நிறைவேற்றப்பட்டுவருகின்றன அமெரிக்கா போன்ற நாடுகளில் விஷ ஊசி ஏற்றி மரணதண்டனை நிறைவேற்றப்படுவதுடன், மத்திய கிழக்கு நாடான சவூதியில் பொது வெளியில் சிரச்சேதம் செய்யும் மதரீதியான வழக்கம் காணப்படுகிறது. அதேபோல இந்தோனேஷியாவில் துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. இந்தியாவில் தூக்கிலிடும் மரபு பின்பற்றப்படுகிறது. இலங்கையிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தாலும் தற்போது வழக்கில் இல்லாமல் இருக்கின்றது. பிரேசில், சிலி, எல்சல்வடோர், பியுஜி, இஸ்ரேல், கஸகஸ்தான், பெரு போன்ற நாடுகளில் பொதுக் குற்றங்களுக்கான மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஆசியாவின் கைத்தொழிலில் வளர்ச்சி நாடான தென்கொரியாவில் மரண தண்டனை சட்டத்தில் இருந்தும் அமுல்படுத்தப்படாத நாடாக இருக்கிறது. இலங்கையும் இவ்வகையிலேயே உள்ளடங்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கின்ற 47 நாடுகள் மரண தண்டனையை தடை செய்துள்ளன. உலகில் 60 வீதமான மக்கள் மரண தண்டனை அமுலில் உள்ள சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் வாழுகின்றனர். இலங்கையில் 1976 ஜூன் 23 ஆம் திகதியிலிருந்து மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. ஆனால் தொடர்ச்சியாக கொலை, போதைப் பொருள் கடத்தல் என்பவற்றுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் வாழ் நாள் முழுவதும் சிறையிலேயே கழிக்க வேண்டிய நிலைமை உருவானது. 2004 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் அம்பேபிடிய படுகொலை செய்யப்பட்ட பின்பு வன்புணர்வு, போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனையை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. நிரபராதிக்கெதிராக பொய் சாட்சியம் வழங்குதல், தேசத் துரோகம், ஆயுதக் கடத்தல், சில இராணுவக் குற்றங்கள் மற்றும் கடத்தல், கொள்ளை, ஆட்கடத்தல், போன்றவற்றுக்கு துப்பாக்கியை பயன்படுத்துதல் இவற்றுக்கு மரண தண்டனை வழங்கப்படுகின்றது. ஆனால் தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருப்பவர்கள் ஆயுள் முழுவதும் சிறையிலேயே வாழ்நாளை கழிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
1832 ஆம் ஆண்டு இலங்கையில் ஆளுநராக கடமையாற்றிய கமரூன் கொண்டுவந்த நீதி சீர்திருத்தங்களின் விளைவாகவே சிறைச்சாலைகள் தோற்றம் பெற்றன. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் திட்டத்தின் படி வெலிக்கடை சிறைச்சாலை தோற்றம் பெற்றது. 1844 இல் வெலிக்கடை சிறைச்சாலையும் 1875 இல் போகம்பர சிறைச்சாலையும் தோற்றம் பெற்றன. சிறைச்சாலைகள் தோற்றம் பெற்றும் கடுமையான தண்டனைகள் அமுல்படுத்தப்பட்ட போதும் சிறைச்சாலை செல்லும் கைதிகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படவில்லை. இதன்படி, 2016 ஆம் ஆண்டு 94,655 பேர் குற்றவாளிகளாக அடையாளங்காணப்பட்டு சிறைச்சாலைகளிலும் தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 88,729 ஆண்களும் 5926 பெண்களும் உள்ளடங்குவர்.
அதேபோல குற்றம் சாட்டப்பட்டவர்கள் 24,060 பேர் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 23,165 ஆண்களும் 895 பெண்களும் உள்ளடங்குவர். இவற்றில் சகல குற்றங்களுக்கான கைதுகளும் உள்ளடங்குகின்றன. இலங்கையில் மரண தண்டனையானது பல்வேறு காலப்பகுதிகளில் ஏற்படுகின்ற சம்பவங்களுக்கேற்ப மக்களால் கோரப்பட்டு வந்திருக்கின்றன. 2015 ஆம் ஆண்டு வட மாகாணத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 17 வயது மாணவி சிவலோகநாதன் வித்யா மற்றும் 5 வயதுடைய சிறுமி சேயாவின் வன்புணர்வு, கொலை என்பவற்றுக்குப் பின்னர் நாடுமுழுவதும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்ற கோஷங்கள் முன்வைக்கப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன் பின்னர் மாணவி வித்யாவின் படுகொலைச் சம்பவத்தின் குற்றவாளிகளான 7 பேருக்கு கடந்த மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. இதன்படி இலங்கையில் மொத்தமாக 1166 மரண தண்டனைக் கைதிகள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டிருந்தது. இதில் 333 கைதிகளின் மரண தண்டனை தீர்ப்பானது மேன்முறையீடு ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மரண தண்டனைக் கைதிகள் அனைவரும் நாடளாவிய ரீதியில் 5 சிறைச் சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்திருந்தார்.
தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைத்து மரண தண்டனைக் கைதிகளும் வெலிக்கடை, மஹர, பல்லேகல - தும்பர, அனுராதபுரம் மற்றும் பதுளை ஆகிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக இவ்வாறு 1166 மரண தண்டனைக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 333 பேரின் மேன்முறையீட்டு விசாரணைகள் நிறைவடைந்து அவர்களது மரண தண்டனை தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 326 பேரின் மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டு விசாரணைகள் நிலுவையில் உள்ளன. கடந்த மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரும் இதுவரை மேன்முறையீடு செய்ய வில்லை.
மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள 1166 பேரில் 37 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் வித்யா படுகொலையுடன் தொடர்புடைய வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் பல்லேகல, வெலிக்கடை மற்றும் மஹர ஆகிய சிறைகளில் அடைக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி 2006 - 2016 வரையான காலப்பகுதியில் 1554 பேர் மரண தண்டனை பெற்றுள்ளனர். இதில் 2006 இல் 165 பேர், 2007 இல் 176 பேர், 2008 இல் 128 பேர், 2009 இல் 108 பேர், 2010 இல் 96 பேர், 2011 இல் 107 பேர், 2012 இல் 131 பேர், 2013 இல் 124 பேர், 2014 இல் 153 பேர், 2015 இல் 186 பேர், 2016 இல் 180 பேரும் மரண தண்டனை பெற்றுள்ளனர். (தகவல்: சிறைச்சாலைகள் திணைக்களம்)
2012 - 2016 வரையான காலப்பகுதியில் நேரடியாக மரண தண்டனை பெற்றவர்களில் 2012 இல் 131 பேரும் (122 ஆண்கள், 9 பெண்கள்), 2013 இல் 124 பேரும் (120 ஆண்கள், 4 பெண்கள்), 2014 இல் 153 பேரும் (151 ஆண்கள், 2 பெண்கள்), 2015 இல் 186 பேரும் (179 ஆண்கள், 7 பெண்கள்), 2016 இல் 180 பேரும் (176 ஆண்கள், 4 பெண்கள்), உள்ளடங்குவர். இவ்வாறு மரண தண்டனை பெற்றவர்களில் 2012 இல் 76 பேர் நகரப்புறங்களையும், 55 பேர் கிராமப் புறங்களைச் சேர்ந்தவர்களாவர். அதேபோல் 2013 இல் 20 பேர் நகர், 104 பேர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள். 2014 இல் 37 பேர் நகர், 116 பேர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள், 2015 இல் 52 பேர் நகர், 134 பேர் கிராமப் புறங்களை சேர்ந்தவர்கள். 2016 இல் 69 பேர் நகர், 111 பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். (தகவல் : சிறைச்சாலைகள் திணைக்களம்)
இவ்வாறு கடந்த 5 வருடங்களில் மரண தண்டனை பெற்றோரில் அதிகமாக 510 பேர் கிராம மற்றும் பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். மரண தண்டனை பெற்றவர்களில் 34 பேருக்கு 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதே போல 2016 ஏப்ரலில் மேலதிகமாக 83 சிறைக்கைதிகளுக்கும் மே மாதம் 70 பேருக்கும் இவ்வாறு தண்டனை குறைப்பு செய்யப்பட்டிருக்கின்றன.மிகவும் கொடூரமான குற்றங்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் பாராளுமன்ற அனுமதி பெறப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இலங்கையில் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் ஜனாதிபதி குறிப்பிடும் திகதியில் தண்டனைக்கு ஆளாகுவார். அல்லது ஜனாதிபதி கருதும் பட்சத்தில் தண்டனைக் குறைப்பு செய்ய முடியும்.
இலங்கையில் அதிகமான மரண தண்டனை கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் 650 இற்கும் மேற்பட்ட மரண தண்டனைக் கைதிகள் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் 23 சிறைச்சாலை நிறுவனங்கள் இயங்குகின்றன. இவற்றில் 3 மூடிய சிறைச்சாலைகளும் 20 தடுப்பு சிறைகளும் உள்ளடங்கும். இதைவிட 10 வேலை முகாம்களும் இரண்டு திறந்த சிறைச்சாலை முகாம்கள், குற்றம் செய்த இளைஞர்களுக்கான பயிற்சிப் பாடசாலை ஒன்று, குற்றம் புரிந்த இளைஞர்களுக்கான சீர்திருத்தப்பள்ளி இரண்டு என்பன சிறைச்சாலை திணைக்களங்களில் இயங்குகின்றன. இலங்கையில் மாத்திரமல்லாது வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கையர் 10 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் ஏழு பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் இருவர் சவூதியிலும் ஒருவர் லெபனானிலும் உள்ளனர்.
இதேவேளை கடந்த 25 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையான மரண தண்டனைகள் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. 2015 இல் 1634 மரண தண்டனைகள் உலகளவில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 1634 மரண தண்டனைகளில் ஏறத்தாழ 90 வீதமான மரண தண்டனைகள் ஈரான், சவூதி அரேபியா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலே இடம்பெற்றுள்ளன. இதில் ஈரானில் 977 பேரும் பாகிஸ்தானில் 320 பேரும், சவூதியில் 150 பேருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.இலங்கையை பொறுத்தவரை பட்டதாரிகள் கூட மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார்கள். எனவே கல்வியறிவற்றவர்கள் மாத்திரமே தவறு செய்வார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 2016 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 21 பேர் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் 11 பேர் சித்தியடைந்துள்ளனர். சித்தியடைந்த 11 பேரும் மரண தண்டனைக் கைதிகளாவர். சிறைக் கைதிகளுக்கு அவசியமான கற்கை நடவடிக்கைகள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படித்த கைதிகளினாலேயே வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கைதிகளுக்கான ஒவ்வொரு நாளும் உணவு மற்றும் துணிக்காக 300 ரூபா வரையிலும் செலவு செய்யப்படுகிறது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களும் ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டியிருப்பதால் இலங்கை அரசால் அதிக தொகையினை செலவு செய்ய வேண்டியுள்ளது. அதேவேளை குற்றங்களும் அதிகரித்து வருகின்றது. குற்றவியல் நடவடிக்கைகள் சட்டம் 1979 இன், 285 ஆவது சரத்தின்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர், ஜனாதிபதி கையெழுத்திட்டதும் தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் சட்ட ரீதியாக இலங்கையில் மரண தண்டனை இருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இனி அமுல்படுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
இலங்கையில் 1802 ஆம் ஆண்டு தூக்குத்தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டதுடன் அதே ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாவது தண்டனை நிறைவேற்றப்பட்டது. இருந்த போதும் 1956 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் எஸ். டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மரண தண்டனையை இல்லாமலாக்கினார். ஆயினும் பண்டாரநாயக்க கொலை செய்யப்பட்டமையை அடுத்து 1959 ஆம் ஆண்டு மீண்டும் மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டது. இறுதியாக 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதியே இறுதியாக இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2002 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி வரை மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் சமீபகால குற்றங்கள், அரசியல் நடவடிக்கைகள் என்பன மீண்டும் மரண தண்டனையை தோற்றுவிக்குமா என்ற சந்தேகம் மேலெழுவதை தவிர்க்க முடியாதுள்ளது.
.........................................................................................................
மரண தண்டனையென்பது சாத்தியமில்லை. இது ஒரு குற்றத்துக்கான தீர்வாகாது. தற்போதைய சூழலில் மரண தண்டனையை கொண்டுவருவது அசாத்தியமானது. இவ்விடயத்தில் மனித உரிமைகள் ஸ்தாபனங்கள் விழிப்புடனே இருக்கின்றன. இலங்கை கூட இவை தொடர்பான சர்வதேச சாசனத்தில் கைச்சாத்திட்டிருக்கிறது. மரண தண்டனை பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிக்க வேண்டிய தேவை ஏற்படும். சிலவேளைகளில் பொது மன்னிப்பு வழங்கப்படலாம். மனித உரிமை ஆர்வலர்கள் தண்டனைகளில் திருத்தத்தை ஏற்படுத்த போராடி வருகின்றனர். எப்போதும் ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகாது. சவூதி போன்ற நாடுகளில் கொடூர தண்டனைகள் அமுலில் இருந்தாலும் குற்றங்கள் குறையவில்லையே? தண்டனைகள் எப்போதும் தவறு செய்பவர்களை திருத்துவதற்காகவும்! தவறு செய்பவர்கள் திருந்துவதற்காகவுமே வழங்கப்பட வேண்டும்.
நேரு கருணாகரன்
சட்டத்தரணி
...................................................................
குற்றங்கள் அதிகரிப்பதால் மரண தண்டனையை கொண்டுவரக் கோருகின்றனர். இதற்கு காரணம் பாலியல் வன்முறைகளாக இருக்கின்றன. ஆனால் அதற்காக மாத்திரம் கொண்டுவர முடியாது. மரண தண்டனை கொண்டுவரப்பட்டால் சில வேளைகளில் நிரபராதிகள் கூட கொல்லப்படலாம். சட்டம் ஒரு இருட்டறை என்றே சொல்லப்படுகிறது. வாதங்களின் மூலம் எதையும் வெல்லலாம். உண்மைகள் மறைக்கப்படலாம். ஒரு நிரபராதி கூட மரண தண்டனையை எதிர்கொள்ளலாம். அவ்வாறு கொல்லப்படுபவர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் யார் பொறுப்பு. இது நாகரீக சமூகம், பௌத்த நாடு. எல்லா மதங்களும் கொலைகளை ஏற்றுக் கொள்ளவில்லை.
மரண தண்டனை விதிப்பதால் மாத்திரம் குற்றங்கள் குறையாது. சமூககலாசாரத்தினாலேயே குற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் பாதிக்கப்படுபவர்களே தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால் இந்த கலாசாரத்தை உருவாக்கியவர்களே தண்டிக்கப்பட வேண்டும். இதுவே இளைஞர்களை பிழையான வழிகளுக்கு தூண்டுகிறது. சமயத் தலைவர்கள் இதுபற்றி பேசாது விலகிக் கொள்கிறார்கள். அரசியல்வாதிகளே போதைப் பொருட்களை கொண்டு வருகிறார்கள். பணத்துக்காகவே சகலதும் நடக்கிறது. வித்தியாவின் கொலை கூட பணத்துக்கானதே. எனவே சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டம் இதை கவனிக்காது. குற்றத்தை மட்டுமே கவனிக்கும். இதற்கு அரசும் சமயதலைவர்களும் முன்னெடுத்த நடவடிக்கை என்ன?
அருட் தந்தை சக்திவேல்
சமூக ஆர்வலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக