கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், YouTube videos

17 மார்ச், 2016

இலங்கையை விழுங்கும் பொலித்தீன்

இலங்கையின் சுற்றுச் சூழலானது அண்மைய காலங்களில் மிகப்பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டு வருகின்றது. அவற்றில் முக்கியமாக கழிவகற்றல் என்பது மிகப்பெரும் பிரச்சினையாக இருப்பதுடன், பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனை அதிக தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இலங்கையின் நகர்ப்புறங்களிலேயே அதிகமான கழிவுகள்வெளியேற்றப்படுகின்றன. இவற்றை சேமிப்பதற்கான இடங்கள் குறைந்தளவில் இருப்பதும் மீள் சுழற்சிக்கு உட்படுத்த முடியாததுமே, கழிவுகள் பிரச்சினையை இலங்கை எதிர்நோக்க முக்கிய காரணமாகும்.
இலங்கையில் இவ்வருடம் முதல் பொலித்தீன் பாவனையை குறைப்பதற்காகவும் இயற்கை சூழலுக்கு உகந்த முறையிலான பொலித்தீன் பைகளை உருவாக்குவதற்குமான திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் ஏற்கனவே இயற்கை சூழலை பாதிக்கக்கூடியளவில் அதிகமான பொலித்தீன் கழிவுகள் வெளியேற்றப்பட்டுவிட்டன. தற்போது அரசால் வெளிப்படுத்தப்பட்டுள்ள திட்டம் காலதாமதமானாலும் அவசியமான ஒன்றாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியும். இலங்கையின் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை, எதிர்வரும் மாதங்களில் 20 மைக்ரோகிராம் அளவுக்கும் குறைவான பொலித்தீன்களை உற்பத்தி செய்வதனையும் விற்பதனையும் தடைசெய்வதற்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியிருக்கிறது.


கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட சூழலுக்கு உதவாத பொலித்தீன்களை, மீள் உற்பத்திக்கு உட்படுத்துவதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் முதல் இத்திட்டத்தினை கடுமையாக அமுல்படுத்துவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை திட்டமிட்டிருக்கிறது. ஆனால் இத்திட்டம் இம்மாதம் முழுமையாக அமுலுக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றதா என்பது பற்றி போதுமான விளக்கமளிக்கப்படவில்லை. பொலித்தீன்களை உற்பத்தி செய்யும் கம்பனிகளில் நிலுவையில் உள்ள பொலித்தீன்களை சூழலுக்கு உகந்த வகையிலும் சூழல் அதிகார சபையின் உத்தரவின்படியும் மாற்றியமைக்கக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுவிட்ட பொலித்தீன்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுவிட்டனவா? அல்லது தடை செய்யப்பட்டிருக்கின்றனவா?

2007 ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன கொண்டுவந்த தேசிய சுற்றுச்சூழல் விதியின்படி, உற்பத்தி செய்யப்படும் பொலித்தீன் அல்லது எந்தவொரு பொலித்தீன் தயாரிப்புகளும் 20 மைக்ரோன்ஸ் தடிப்புடையதாக இருத்தல் மற்றும் விற்பனை அல்லது உபயோகிக்கப்படும் பொலித்தீன்களும் 20 மைக்ரோன்ஸ் தடிப்புடையதாக அமைதல் வேண்டுமென வலியுறுத்தியிருக்கும் நிலையில், இன்றைய சூழ்நிலையில் நாட்டிலுள்ள அனைத்து விற்பனை நிலையங்களிலும் இவை பாவனைக்கு வந்துவிட்டதா? 2007 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டமே 2016 ஜனவரி முதலாம் திகதியே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், மக்களுக்கு வழங்கப்படவேண்டிய போதிய விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டிருக்குமா?

கடந்த சில வருடங்களுக்கு முன்பு 15 மைக்ரோன்ஸ் அளவே பொலித்தீன்களுக்கு ஆரம்ப தடிப்பு என கூறப்பட்டிருந்தது. பின்பு 17 மைக்ரோன்ஸ்களாக அதிகரிக்கப்பட்டு தற்போது 20 மைக்ரோன்ஸ்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இவ்விடயத்தில் சுற்றாடல் அதிகார சபையே நிலையான ஒரு தீர்மானத்தை முதலில் பின்பற்ற வேண்டும். பின்பு உற்பத்தி மற்றும் பாவனை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது பாவனையிலுள்ள பொலித்தீன் குப்பைக்குச் செல்லும் போது அது மக்குவதற்கு 1,000 வருடங்கள் எடுக்கலாம் என கணிப்பிடப்படுகிறது.

எனவே இதுவரையும் இலங்கையில் மண்ணோடு கலந்த பொலித்தீன்கள் மற்றும் பிளாஸ்ரிக்குகள் இன்னும் மண் வளத்தை பாதிக்கக்கூடிய நிலையிலேயே இருக்கின்றதென்பதை மறந்துவிடக்கூடாது. எரித்தாலும் சுவாசத்திற்கு ஒவ்வாத நச்சுவாயுவான டயோக்சினை வெளியேற்றும். எனவே இதற்கு ஒரே தீர்வு சூழலுக்கு உகந்த வகையான பொலித்தீன்களை உருவாக்குவதாகவே இருக்கும். வருடமொன்றுக்கு இலங்கையில் 500,000 மெற்றிக்தொன் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக்குகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றில் 70 வீதம் அதாவது 350,000 மெற்றிக் தொன்கள் உள்ளூர் பாவனைக்கும் 30 வீதமான (150,000 மெட்ரிக் தொன்கள்) ஏற்றுமதி வர்த்தகத்திற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது.

இவற்றில் 40 வீதமான ( 140,000 மெற்றிக் தொன்கள்) பிளாஸ்ரிக் மற்றும் தடிப்பமான பொலித்தீன்கள் மீள் சுழற்சிக்குட்படுத்தப்படுகின்றன. 160 நிறுவனங்கள் பிளாஸ்ரிக் மீள் உற்பத்தியில் ஈடுபடுகின்றன. இவை இன்னும் அதிகரிக்கப்பட வேண்டுமென சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. காரணம், 60 வீதமான (210,000 மெட்றிக் தொன்கள்) பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன்கள் கழிவுகளாக சேருகின்றன. இவற்றில் பொலித்தீன்கள் இலங்கையில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுகளாக இருக்கின்றன. கடந்த 2000 ஆம் ஆண்டே பங்களாதேஷ் பொலித்தீன் பாவனையை தடைசெய்துவிட்டது. ஆனாலும் அங்கு சட்டவிரோதமாக பொலித்தீன்கள் விற்கப்படுவதாக ஊடகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இலங்கையிலும் அவ்வாறு முற்றுமுழுதாக தடைசெய்தால் சட்டவிரோத பொலித்தீன் விற்பனை தலைதூக்கும் என்பது முக்கிய பிரச்சினையாக அமைந்துவிடும். இன்று இலங்கையில் நகர்ப்புறங்கள், தெருக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் என்பவற்றில் அதிகமான பொலித்தீன்களை காணமுடிகிறது. அடிப்படைக் கல்வி கட்டமைப்பான பாடசாலைகளில்கூட பொலித்தீன் பாவனையை தடுத்தல் அல்லது மீள் சுழற்சி பொருட்களை வேறுபடுத்தல் என்பன நடைமுறையில் அறிமுகம் பெறாமலேயே இருக்கின்றன. அதுமட்டுமல்லாது குளங்கள், ஆறுகள் என்பன கூட பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன்களை சுமந்து நிற்கின்றன. இவற்றால் மனிதன் எவ்வளவு ஆபத்துகளை சந்திக்கின்றானோ அதேயளவு ஆபத்துகளை விலங்குகள் மற்றும் மீனினங்களும் சந்திக்க நேருகின்றன. இவ்வாறு கழிவுகளாக சேருகின்ற குப்பைகள் நில மற்றும் நீரில் வாழும் உயிரினங்களின் மரணங்களுக்கும் வழிவகுக்கின்றன. நகர்ப்புறங்களில் வாழும் விலங்குகள், குறிப்பாக கால்நடைகள் புல் நிலங்கள் இல்லாததால் குப்பை மேடுகளில் உள்ள பொலித்தீன் சுற்றிய உணவுகளை உண்ணுகின்றன. அதேபோலவே சரணாலயங்களில் யானைகள் இந்த ஆபத்தினை அதிகம் எதிர்கொள்கின்றன. எனவே பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனை என்பது வெறுமனே மனித இனத்துக்குரிய பிரச்சினை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சூழலியல் உயிரினங்களுக்கும் பிரச்சினையான விடயம் என்பதில் தெளிவுறுதல் வேண்டும்.

சில நாடுகள், பிளாஸ்ரிக் பை வர்த்தகத்திற்கான வரியை அதிகரித்துள்ளன. தென்னாபிரிக்க அரசு, இலவசமாக பொதுமக்கள் பெற்றுக்கொள்ளும் பொலித்தீன் பைகளுக்கு தண்டப்பணத்தை அறவிடுகிறது. 1380 டொலர் அல்லது 10 வருட சிறைத் தண்டனையை பொலித்தீன் பாவனையால் அனுபவிக்க நேரிடுகிறது. இதனால் பொதுமக்களிடையே பொலித்தீன் பாவனை குறைவடைந்திருக்கிறது. இதனால் பொருட்களை வாங்குவோர் இலகுவாக மீள்சுழற்சிக்குட்படுத்தக்கூடிய தடிப்பமான, தரமான பிளாஸ்ரிக் பைகளை கொள்வனவு செய்கின்றனர். வேறுசில நாடுகள் பிளாஸ்ரிக் பைகள் மூலம் ஏற்படும் ஆபத்துகளை களைய தொடங்கியிருக்கின்றன. பெரும்பாலான நாடுகள் பொதுமக்களுக்கு பொருத்தமான தீர்வுகளை வழங்கியிருக்கிறது. இலங்கையில் சட்டங்கள் இவ்வாறு கடுமையாக இருக்கின்றதா?

இவற்றில் துணி மற்றும் கடதாசிகளாலான பைகளை கொள்வனவாளர்களுக்கு இந்நாடுகள் வழங்குகின்றன. இவை ஒரு சில உதாரணங்களே. ஆனால் இலங்கையில் இவ்வாறான எந்தவொரு பாதுகாப்பு அம்சங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. இலங்கையில் ஹோர்டன் சமவெளியில் மான்கள் இறப்பதற்கு அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்ரிக் பைகளை கொண்டு செல்வதும் ஒரு காரணமாக இருக்கின்றது. ஐக்கிய அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியகத்தின் 2001 ஆம் ஆண்டு தரவுகளின்படி, உலக முழுவதும் வருடமொன்றுக்கு 500 பில்லியன் தொடக்கம் ஒரு ட்ரில்லியன் வரையிலான பிளாஸ்ரிக் பைகள் பாவிக்கப்படுவதாக தெரிவிக்கின்றது.

இலங்கையில் ஒருநாளைக்கு 15 மில்லியன் லன்ஞ் சீட்டுகளும் 20 மில்லியன் சொப்பிங் பைகளும் உபயோகிக்கப்படுகின்றன. இவற்றில் பாதியளவு குப்பைகளாக மாற்றப்படுகின்றன. உலகளவில் மில்லியன்களுக்கும் மேல் பிளாஸ்ரிக் பைகள் நிலத்தில் வீசப்படுகின்றன. சுற்றாடலில் 100 வருடங்களுக்கு மேலான பிளாஸ்ரிக் பைகள் தேங்கிக் கிடக்கின்றன. அவை கடல், ஆறு, மண், ஏரி என சகல இடங்களிலும் பரந்து கிடக்கின்றன. இவை எதிர்காலத்தில் இச்சூழலில் வாழப்போகும் சந்ததியினருக்கு மிகப்பெரும் ஆபத்தை உருவாக்கும். எனவே பாடசாலை முதல் கழிவகற்றல், சூழலுக்கு ஒவ்வாத பொருட்களை கையாள்வதால் ஏற்படும் தீமை என்பன தொடர்பில் போதிய விளக்கமளிக்கப்படவேண்டும்.  எனவே உலகளவில் மட்டுமல்ல இலங்கையிலும் மறுத்தல் - Refuce ,  மீள்பாவனை - Reuse,  மீள்சுழற்சி - Recycle என்ற 3 R நடைமுறைகளை இவ்விடயங்களில் கையாளுதல் அவசியம். அதைவிடவும் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பைகளை மக்கள் பாவனையிலிருந்து தடுப்பதற்கு துணிப்பைகளை பாவித்தல், போத்தல் குடிநீர் வாங்குவதை நிறுத்தல், பிளாஸ்ரிக் போத்தல் மற்றும் பைகளுக்குப் பதிலாக கார்ட்போர்ட் அட்டைகளை உபயோகித்தல், ஸ்ரோக்களை தடைசெய்தல், அழிக்கக்கூடிய பிளாஸ்ரிக் முகசவர கத்திகளை உபயோகித்தல் போன்ற இலகு வழிகளை  முதலில் பின்பற்றலாம். கழிவுகள் எவ்வளவு ஆபத்தானவை மற்றும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவை என்பதை கொழும்பை அண்மித்த குப்பை மலைகளை அவதானித்தால் உணரமுடியும். எனவே ஆபத்தான பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக்குகளை பயன்படுத்தி இன்னும் சூழல் மாசுபடுவதை தடுப்பது அனைவரினதும் கடமை.
க.பிரசன்னா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக