- 8 வருடங்களில் 399 லயன் குடியிருப்புகள் தீக்கிரை
- அதிகமாக நுவரெலியா மாவட்டத்தில் 366 லயன் அறைகள் தீக்கிரை
- இரத்தினபுரி, கண்டி, பதுளை மாவட்டங்களில் 33 லயன் அறைகள் தீக்கிரை
“தீ விபத்தின் போது எங்களுடைய லயன் குடியிருப்பு பகுதியில் மூன்று கைக்குழந்தைகள், வயோதிபர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக, கல்வியியற் கல்லூரி, உயர்தரம் மற்றும் புலமைப்பரீட்சைக்கு தோற்றவிருந்த பலரும் இருந்தனர். கல்வி கற்றவர்களின் சகல ஆவணங்களும் இவற்றில் தீக்கிரையானது. எரிந்த ஆவணங்கள் பலவற்றை இன்றும்கூட எங்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. பாதிக்கப்பட்ட எவருக்கும் இன்னும் வீட்டுவசதிகள் ஏற்படுத்தப்படாமல் மின்சாரம் இன்றிய நிலையில் தற்காலிக குடியிருப்புகளிலேயே வசித்து வருகிறோம்.” என 2021 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி மஸ்கெலியா குயின்ஸ்லேண்ட் தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் இவ்வாறு தெரிவித்தார். (பாதுகாப்பு கருதி தகவல் வழங்கியவரின் விபரங்கள் தரப்படவில்லை). இதன்போது குறித்த தோட்டத்தில் 20 குடியிருப்புகள் தீக்கிரையாகி இருந்தன. தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மலையக மக்களின் நிலை இவ்வாறே இருக்கின்றது.
200 வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்து இலங்கை தோட்டங்களில் பணியாற்றுவதற்காக அழைத்துவரப்பட்ட எமது முதாதையர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட குடியிருப்புகளில் தற்போதும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கான மாற்று தீர்வுகள் மிக நீண்ட காலமாக இழுபறியிலேயே இருக்கின்றது. மலையக பெருந்தோட்டங்களில் 150 வருடங்களுக்கும் அதிகம் பழைமையான லயன் அறைகள் தற்போது அங்கு வசிக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையை தோற்றுவித்துள்ளது. பெருந்தோட்டங்களில் தீ விபத்துக்களினால் சேதமடைந்த குடியிருப்புகள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள் எந்த அரச நிறுவனங்களிலும் முறையாக இல்லையென்பதும் வருத்தத்துக்குரியது.
மலையக பெருந்தோட்டங்களில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட எத்தனையோ குடும்பங்கள் இன்னும் நிரந்தரமான மற்றும் பாதுகாப்பான வீடுகளை பெற்றுக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை வழங்கும் பொறிமுறை எவையும் தற்போது அரசாங்கத்திடம் இல்லை. 2015 - 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களும் தற்போது கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மலையகத்தில் முன்னெடுபக்கப்படவிருந்த 10,000 வீட்டுத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளையும் லயன் குடியிருப்புகள் அற்ற பாதுகாப்பான தனி வீடுகளை அமைக்கும் பணிகளும் கனவாக மாறியுள்ளது.
“தீ விபத்தின் பின்னர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள், அரசுசாரா அமைப்புகள் நிவாரணங்களை வழங்கின. அதன் பின்னர் இன்று மூன்று வருடங்களாகியும் எந்த அரசியல்வாதியும் கட்சிகளும் வரவில்லை. வீட்டுத்திட்டத்துக்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தற்காலிக குடியிருப்புகளை அமைத்துக்கொள்ள தகரமும் மரங்களும் மாத்திரமே வழங்கப்பட்டன. தோட்ட நிர்வாகமும் அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.” என தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பெண் மேலும் தெரிவித்தார்.
லயன் குடியிருப்புகளில் ஏற்பட்ட தீ விபத்துக்கள்
ஊடக அறிக்கையிடல் மூலம் திரட்டப்பட்ட அடிப்படையில், நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 8 வருடங்களில் (2015 ஜனவரி - 2023 ஜூலை) 399 லயன் குடியிருப்புகள் தீ விபத்தினால் முழுமையாக சேதமடைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான லயன் வீடுகளின் தீ விபத்துக்களுக்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை. இவற்றில் அதிகமான தீ விபத்து சம்பவங்கள் நுவரெலியா மாவட்டத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் 366 லயன் வீடுகளும் கண்டி மாவட்டத்தில் 19 லயன் வீடுகளும் பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் தலா ஏழு லயன் குடியிருப்புகளும் இவ்வாறு தீ விபத்தை எதிர்கொண்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் 16 பொலிஸ் பிரிவுகளிலுள்ள தோட்ட லயன் அறைகளில் தீ விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகமாக மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் 58 லயன்களும் ஹட்டன் பொலிஸ் பிரிவில் 54 லயன்களும் லிந்துலை பொலிஸ் பிரிவில் 55 லயன்களும் தலவாக்கலை பொலிஸ் பிரிவில் 44 லயன்களும் இராகலை பொலிஸ் பிரிவில் 42 லயன்களும் தீ விபத்தை எதிர்கொண்டுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, பலாங்கொடை பொலிஸ் பிரிவுகளிலும் பதுளை மாவட்டத்தில் பதுளை, பசறை, அப்புத்தளை பொலிஸ் பிரிவுகளிலும் கண்டி மாவட்டத்தில் புஸ்ஸலாவ, கலஹா பொலிஸ் பிரிவுகளிலும் இவ்வாறு லயன் குடியிருப்புகளில் தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
இவ்வருடத்தில் (2023 ஜூலை) முதல் ஏழு மாதங்களில் 53 லயன் வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இவற்றில் 52 வீடுகள் நுவரெலியா மாவட்டத்திலும் ஒரு வீடு பதுளை மாவட்டத்திலும் தீக்கிரையாகியுள்ளது. இவ்வருடம் ஜனவரி 15 ஆம் திகதி தலவாக்கலை மிடில்டன் தோட்டத்தில் 12 வீடுகள் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டிருந்தது. இது இவ்வருடத்தில் பதிவு செய்யப்பட்ட முதலாவது தீ விபத்து சம்பவமாகும். மேலும் கினிகத்தேன கெனில் வத்த, இராகலை கீழ்பிரிவு, பெரிய ராணிவத்தை ஆகிய தோட்டங்களிலும் லயன் வீடுகளில் தீவிபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
லயன் வீடுகளில் தீ விபத்துக்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றாலும் இதுவரை தீ விபத்துக்களுக்கான காரணம் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. மின்கசிவு அல்லது வீடுகளிலுள்ள விளக்குகளினால் ஏற்படும் தீ விபத்துக்களே அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன. லயன் அறைகளுக்கு மின்சாரம் வழங்கும் நடவடிக்கைகள் 1990 ஆம் ஆண்டுகளுக்குப் பின்பே ஆரம்பிக்கப்பட்டது. அப்போது வழங்கப்பட்ட மின் இணைப்புகளுக்கான மின் கட்டமைப்புகளே (வயரிங்) தற்போதும் பாவனையில் இருக்கின்றன. சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக மின் கட்டமைப்புகளில் பெரும்பாலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. இதுவும் தீ விபத்துக்கு ஒரு காரணமாக கூறப்படுகின்றது. எனினும் லயன் குடியிருப்புகளை புனரமைப்பு செய்தவர்கள் இவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். மின்சாதனங்களினால் ஏற்படும் தீ விபத்துக்களும் லயன் அறைகள் தீ விபத்தை எதிர்கொள்வதற்கு காரணமாக அமைந்துள்ளன.
அதிக தீ பரவலுக்கான காரணம் என்ன?
பெருந்தோட்ட லயன்கள் அதிகம் தீ விபத்துக்கு உள்ளாவதற்கு நெருக்கமே பிரதான காரணமாக அமைந்துள்ளது. ஒரு தொடர் லயன் குடியிருப்பில் 16 - 20 வரையான வீடுகள் அமைந்திருப்பது இலகுவில் தீ பரவலுக்கு காரணமாக அமைகின்றது. லயன் வீடுகளில் காணப்படும் அட்டல் எனப்படும் (வீட்டு கூரைக்கு கீழான பகுதி) பகுதியானது, தொழிலாளர்களின் சமையல் தேவைக்கான விறகு சேகரிக்கும் பகுதியாக காணப்படுகின்றது. இதனால் ஒரு வீட்டில் பரவும் தீ மிகவும் வேகமாக ஏனைய லயன்வீடுகளுக்கும் பரவும் சாத்தியம் காணப்படுகின்றது. இதனாலேயே லயன் குடியிருப்பை ஒழித்து தனி வீடுகளை உருவாக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது.
அத்துடன் தீ பரவல் ஏற்பட்டால் அவற்றை தீயை உடனடியாக அணைப்பதற்கான எவ்வித வழிமுறைகளும் லயன் குடியிருப்புகளில் இல்லை. குடிநீர் தேவைக்கு மாத்திரமே பெரும்பாலும் நீர் சேமித்து வைக்கும் நிலை காணப்படுகின்றது. அவை தீயை அணைப்பதற்கு போதுமானவையாக இல்லை. தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டிருக்குமாயின் அங்கு நீரை கொண்டு தீயை அணைப்பது மாற்று விளைவுகளை ஏற்படுத்தும். இருக்கும் நீரை கொண்டு தீயை அணைக்க முயற்சிக்கும் முன்பே முழு குடியிருப்பு தொகுதியும் தீயால் பாதிக்கப்படுகின்றது.
பெரும்பாலும் லயன் குடியிருப்புகள் தீ விபத்துக்கு உள்ளானால் தீயணைப்பு கருவிகளை பயன்படுத்துவதற்கான எவ்வித வசதிகளும் இல்லை. பிரதேச மற்றும் நகர சபைகளில் மாத்திரம் தீயணைப்பு வண்டிகள் காணப்படுகின்றன. நகர் பகுதிகளில் தீ ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு வாககனங்கள் செல்லும் நிலை காணப்பட்டாலும் நகரத்திலிருந்து மிக நீண்ட தூரங்களில் இருக்கின்ற தோட்டபுறங்களுக்கு செல்லும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. வீதி கட்டமைப்புகளும் மோசமாகவே இருக்கின்றன. தோட்ட நிர்வாகத்திடமும் அதற்கான வசதிகள் இல்லை. நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன், லிந்துலை, நுவரெலியா நகர சபைகளில் மாத்திரம் தீயணைப்பு வாகனங்கள் காணப்படுகின்றன. குறிப்பிட்ட நகரத்திலிருந்து 30 - 50 கிலோமீற்றர் தூரத்திலேயே பல தோட்ட குடியிருப்புகள் காணப்படுகின்றன. இவையும் தீ பரவலுக்கு முக்கிய காரணமாகும்.
லயன் குடியிருப்புகள் இன்னும் தோட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. அததனால் உடனடியாக அவர்களுக்கான புதிய குடியிருப்புகளை ஏற்படுத்துவதற்கும் காணி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதும் கடினமான பணியாக இருக்கிறது. அத்துடன் தீ விபத்து அனர்த்தமாக கருதப்படாமையால் ஒரு விபத்தாக கருதி கைவிடப்படும் நிலையும் காணப்படுகின்றது.
பெருந்தோட்டங்களில் லயன் குடியிருப்புகள்
நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, பதுளை உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெருந்தோட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் தங்குமிடத் தேவைக்காக 39,799 தனி வீடுகளும் (2020.12.31 திகதிக்கு) 29,567 தனி வீடுகளும் 73,130 தனி லயன் வீடுகளும் 68,628 இரட்டை லயன் வீடுகளும் 1637 மாடி லயன் வீடுகளும் 15,480 தற்காலிக குடியிருப்புகளும் காணப்படுவதாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் 2020 ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 180 வருடங்களுக்கு அதிகம் பழைமையான லயன் குடியிருப்புகளே அதிகம் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படுகிறன. இவற்றில் பல லயன்கள் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படாமல் வாழ்வதற்கு பொருத்தமற்ற மிகவும் ஆபத்தான பகுதிகளாக இருக்கினறன. எனவே இவ்வாறான லயன் அறைகளே தற்போது பெருந்தோட்ட மக்களுக்கு ஆபத்தாகவும் அமைந்துள்ளது. முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமானால் நிர்மாணிக்கப்பட்ட மாடி லயன்கள் நவீன லயன் அறைகளாக காணப்படுகின்றன. இலங்கை சுதந்திரமடைந்து 75 வருடங்கள் கடக்கின்ற நிலையிலும் அவற்றை மாற்றியமைப்பதற்கு எந்த அரசாங்கமும் முறையான திட்டத்தை வகுக்கவில்லை. அவ்வப்போது ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தனி வீட்டுத்திட்டங்களை ஆரம்பித்தாலும் 5 வருடங்களின் பின்னர் அவை கிடப்பில் போடப்படுகின்றன.
“தற்காலிக குடியிருப்புகளில் வெயில் காலங்களில் கடும் வெப்பம் நிலவுகிறது. மழை காலங்களில் அதிக சத்தம் மற்றும் நீர் ஒழுகும் நிலை காணப்படுகிறது. இவற்றுடனே குழந்தைகள், சிறுவர்கள், வயோதிபர்கள் வசித்து வருகின்றனர். எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் வசிக்கும் எங்களுக்கு உதவுவது யார்? எங்களுக்கான வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இதுவே தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மஸ்கெலியா குயின்ஸ்லேண்ட் தோட்ட மக்களின் கோரிக்கையாகவிருக்கிறது.
200 வருடங்களாக இலங்கையில் வாழும் இலங்கை பொருளாதாரத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்கி வரும் மலையக மக்களின் வாழ்விட பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும். அதனை ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கமும் மறுக்க முடியாது. ஆனால் மலையக மக்களுக்கான சலுகைகளை வழங்குவதில் எந்த அரசாங்கமும் பெரிதாக அக்கறை காட்டியதாக தெரியவில்லை. கடந்த காலங்களில் தீ விபத்து மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்ட மக்களுக்கு வீடமைப்புத் திட்டங்களில் முன்னரிமை வழங்கப்பட்டாலும் அவற்றில் பெரும்பாலான திட்டங்கள் தற்போது பூர்த்தி செய்யப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன. பூர்த்தி செய்யப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கும் காணி உரித்துகள் வழங்கப்படவில்லை. எனவே பெருந்தோட்ட லயன் குடியிருப்புகளில் இடம்பெறும் தீ விபத்துகளை குறைப்பதற்கு அவர்களுக்கு பாதுகாப்பான தனி வீடுகளை வழங்குவதே நியாயமான தீர்வாக அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக