கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

13 ஆகஸ்ட், 2018

பூமாலை கட்டுவது தொழிலல்ல: கலை

’பூக்களே சற்று ஓய்வெடுங்கள்’ என்று கவிஞன் பாடிச் சென்றாலும் பூக்களை வைத்து பூமாலை கட்டுபவர்களின் பணி ஓய்வில்லாமலேயே தொடர்கின்றது. இந்தப் பூமாலை கட்டும் தொழிலானது இயற்கையோடு இணைந்ததொரு பணியாகவே இருக்கின்றது. மழை, வரட்சி என்பன கூட இத்தொழிலை தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றன. மழை, வரட்சி காலங்களில் மரக்கறிகளின் விலைகள் ஏறுவதுபோல பூக்களின் விலையும் கடும் ஏற்றத்தைச் சந்தித்து விடுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதனை மாலையாக்கி விற்பனை செய்து அதன் மூலமே தங்களது வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் பூமாலை கட்டுபவர்கள் பார்த்துக் கொள்கின்றார்கள்.

இன்று எந்தவொரு விசேட வைபவங்களையும் நாம் பூக்கள் இல்லாமல் அலங்கரிப்பதில்லை. அந்தளவுக்கு இன்று பூக்களுக்கும் பூமாலைகளுக்கும் கிராக்கியுண்டு. ஆனால் இன்று அலங்காரங்களுக்கு பிளாஸ்டிக் பூக்களும் மாலைகளும் பயன்படுத்துவது ஓரளவுக்கு அதிகரித்துள்ளமையால் பொதுநிகழ்வுகளில் இயற்கை பூக்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளன. ஆனாலும் எமது கலாசார நிகழ்வுகளான திருமணம், திருவிழா ஏனைய சகல சமய அனுட்டானங்களின் போதும் இந்தப் பூக்களுக்கும் பூமாலைகளுக்கும் அதிகமான கிராக்கியுண்டு. இவ்வாறு பூக்களைப் போலவே தங்களது வாழ்வாதாரமும் பூக்க வேண்டுமென்ற ஆவலுடன கொழும்பு கொச்சிக்கடை சென், அந்தனிஸ் மாவத்தையில் பூமாலை வியாபாரத்தில் ஈடுபடுகின்ற சிலரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அவர்களுடன் அளவலாவிய சந்தர்ப்பங்களில் அவர்களுடைய தொழில் அனுபவமும், தொழில் நுணுக்கமும் வேகமும் எம்மை வியப்பில் ஆழ்த்தியது.


சுயதொழில் ஊக்குவிப்புகளுக்காக பல்வேறு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கின்ற அரசாங்கம் அதனை கிராமிய மட்டத்துள்ளே மட்டுப்படுத்திக் கொண்டுள்ளது. ஆனால் நகர்புறங்களில் இவ்வாறு தமது சொந்த முயற்சியினால் சுயதொழிலில் முன்னேறத் துடிப்பவர்களை அடையாளம் காண்பதற்குத் தவறியிருப்பதாகவே நாம் கருத வேண்டியுள்ளது. பூமாலை, பூமணவறை, முத்துமணவறை மற்றும் சகலவிதமான பூவேலைகளும் இவர்களால் செய்து தரப்படுகின்றன. வாழ்க்கையின் செழிப்புக்குப் பூக்கள் உதாரணமாகக் காட்டப்படும் சந்தர்ப்பத்தில் பூக்கடை தொழிலாளர்களின் ஊக்குவிப்புகள் தொடர்பிலும் நாம் சிந்திக்க வேண்டும். இவ்வாறான பல யோசனைகளுடனும் எண்ணங்களுடனும் பூமாலை கட்டுபவர்களைத் சந்தித்த வேளை ’மழையில் நனைந்த மல்லிகைப் பூவே’.. என்ற பாடலின் ரசனையோடு பூமாலைகளை கட்டுவதில் அதிகம் நாட்டம் கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.

பதுளையைச் சேர்ந்த பிரதீபன் தன்னுடைய அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்து கொள்கின்றார். நான் 4வருடங்களாக இத்தொழிலை செய்து வருகின்றேன். இத்தொழிலுக்கான பூக்களை நாம் பதுளை, மதுரங்குளி, மாத்தளை போன்ற பகுதிகளில் இருந்து பெற்றுக்கொள்கின்றோம். ஒரு நாளைக்கு சம்பள செலவுகள் எல்லாவற்றையும் கழித்து 1000 ரூபாவரையும் சேமிப்பதற்கான வருமானம் கிடைக்கும். கோயில் விசேடங்கள், விசேட தினங்களில் பூக்கள், மாலைகளின் விற்பனை சிறப்பாக இருக்கும். நான் நாள் சம்பளத்துக்கு தொழில் செய்கின்றேன். வருடம் முழுவதும் எமது விற்பனை நிலையம் திறந்தே இருக்கும். தேவையானால் விடுமுறை பெற்றுக் கொள்ளலாம்.
                                             ***************************************

நான் ஆனந் தேசிகன். நாங்கள் பரம்பரையாகவே இத்தொழிலை மேற்கொண்டு வருகிறோம். நான் இத்தொழிலுக்கு வந்து 29 வருடங்களாகிவிட்டது. எனக்கு எட்டு வயதிலிருந்தே தொழிலைப் பற்றித் தெரியும். எமது தொழிலுக்கு தேவையான பிச்சுப்பூ பதுளையிலிருந்தும் செவ்வந்தி-தியத்தலாவ, காட்டுமல்லி-கற்பிட்டி, மதுரங்குளி போன்ற பகுதிகளிலிருந்தே வருகின்றன. டிசம்பர்- பெப்ரவரி மாதம் வரையில் பூக்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். முகூர்த்த நேரங்களில் பூக்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டால் விலையதிகரிக்கும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

தினசரி பூமாலைகளின் விற்பனை சாதாரணமாக இடம்பெற்று வருகின்றது.
நவராத்திரி, சித்திரைப் புத்தாண்டு, பொங்கல், கோவில் விசேடங்களின் போது அதிகமாக விற்பனையாகும். இது பதிவுசெய்யப்படாத ஒரு தொழிலாக இருப்பதால் எங்களுக்கென்று எந்தவிதமான சுயதொழில் ஊக்குவிப்புகளும் கிடைக்கப் பெறுவதில்லை.
                                                      ***********************************

எனது பெயர் விஜயகுமார். நான் 20 வருடங்களாக பூமாலை கட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றேன். காட்டுப்பூ மாலைகளே அதிகமாக மக்களால் வாங்கப்படுகின்றது. பூக்களை பதுளை, பண்டாரவளை போன்ற இடங்களிலிருந்து ரயில் மூலமாகப் பெற்றுக்கொள்கின்றோம். அதற்கான செலவுகளும் பின்னர் மாலைகளால் பெற்றுக்கொள்கின்ற வருமானமும் ஓரளவுக்கு சமமாக இருக்கும். விசேட தினங்களின் போது அதிக இலாபத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும். சுயதொழில் கடன்கள், உதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் தொழில் பதிவு, ஓ.டி போன்றவற்றை கேட்கிறார்கள். ஆனால் அந்தளவுக்கு இத்தொழிலில் எங்களுக்கு வருமானம் இல்லை.
                                        *******************************************

நான் 30 வருடங்களாக இத்தொழில் இருக்கிறேன். தூர இடங்களிலிருந்து பூக்களைப் பெற்று மாலையாக்கி அதனை விற்பனை செய்கின்றபோது ஒரு நாளைக்கு லாபமும் இருக்கும் நஷ்டமும் இருக்கும். சில நாட்களில் வருமானமே இல்லாமலிருக்கும். அந்நேரத்தில் சொந்தப் பணத்தில் சம்பளம் கொடுக்க வேண்டியேற்படும். திருமணம், கோவில் விசேடங்கள் போன்றவற்றின் போது வியாபாரம் அதிகமாகவிருக்கும். காட்டுமல்லி மாலையொன்று 100 ரூபாவிற்கும், பிச்சுப்பூ 150 ரூபாவுக்கும் விற்பனை செய்கின்றோம். வருமானத்துக்கு ஏற்ற வகையில் இவற்றை விற்பனை செய்ய வேண்டும்.

எங்களுக்கென்று எந்தக் கடன் உதவிகளும் வழங்கப்பட்டதில்லை. அதனை
நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. அன்றாடம் கிடைக்கும் வருமானத்தை வைத்து, செலவுகளைப் பார்த்து கொள்ள வேண்டியதுதான். எனது ஆரம்ப காலங்களில் காட்டுமல்லி மாலையொன்று 50 சதத்துக்கு விற்பனையானது. தற்போது 100 ரூபாவாக இருக்கின்றது. அன்று கடைக்கான கூலி
நாளொன்றுக்கு 2 ரூபாவாக இருந்தது. ஆனால் இன்று முந்நூறு ரூபாவாக இருக்கிறது. இவ்வாறே காலத்துக்குக் காலம் விலைவாசியும் ஏற்றம் காண்கிறது என்கிறார் மாணிக்கம். இவ்வாறு பூக்கடைகாரர்கள் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். இவர்கள் தங்களுக்கான பூக்களை வெளியிடங்களிலிருந்தே கொண்டுவர வேண்டும், கடைக்கான கூலி, சம்பள செலவுகள் எனப் பல சிக்கல்களுக்கு மத்தியிலேயே தங்களது வருமானத்தைத் தேடிக் கொள்கின்றார்கள். அதிகமாக ஆண்களே இத்தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்களே தவிர பெண்களைக் கண்டு கொள்வது மிகவும் குறைவாகவே இருக்கின்றது. பெண்கள் செயற்கை (பிளாஸ்டிக்) பூக்களை கொண்டு மணப்பெண் அலங்காரங்கள், பூச்செண்டுகள் போன்றவற்றைத் தயாரிப்பதை அதிகமாக்கியிருக்கிறார்கள்.

பூக்கடைக்காரர்களின் வாழ்வாதாரத்துக்காக எந்தவித உதவிகளும் இதுவரை வழங்கப்பட்டதில்லை. அவர்களுடைய தொழிலுக்கு ஓய்வூதியமோ, ஓய்வோகிடையாது. முடியும் வரையும் உழைத்துக் கொண்டே இருக்க முடியும் இவர்களுக்கென்று நிரந்தரமான தொழில் பதிவுகள் கிடையாது. எனவே குறைந்தபட்சம் இதனைப் பதிவு செய்யும் தொழிலாக மாற்றி அவர்களுக்குச் சொந்தமான வியாபார நிலையங்களை உருவாக்கித்தர வேண்டும். சாதாரண வியாபார நிலையங்கள், நிறுவனங்கள் போன்றவற்றில் தொழில் செய்வோருக்குரிய சுகாதாரக் காப்புறுதி, ஊ. சே. நி/ ஊ.ந.நி போன்ற எந்தவிதமான அடிப்படை சலுகைகளும் கிடையாது. எனவே அரசாங்கத்தினால் சுய கைத்தொழிகளுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்புத் திட்டங்களுக்குள் பூக்கடைக் காரர்களையும் உள்வாங்க வேண்டும். பூமாலை தாயாரிப்பதென்பது தொழிலல்ல. அதுவொரு கலை. அக்கலையை அழிவுறாமல் காப்பது பூக்களை நேசிக்கும் அனைவருக்குமுரியது. பூக்களும் பூமாலைகளும் இல்லாத விசேடங்களையோ, கிரியைகளையோ, சம்பிரதாயங்களையோ காண்பது அரிது. அதேபோலவே பூமாலைகளை ஒருவர் விரும்பும் வகையில் உருவாக்கி கொடுப்பதென்பதும் இலகுவான விடயமல்ல. அதனைச் செவ்வனே நிறைவேற்றித் தரும் பூக்கடை வியாபாரிகளை வாழ்த்துவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக