கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 ஜூன், 2018

மாணவர்களை இலக்கு வைக்கும் போதை

நாட்டில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாடசாலை மாணவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம், போதைப்பொருள் விற்பனை என்பன இவற்றில் பிரதானமானவையாக காணப்படுகின்றன. நாட்டின் 38 வீதமான பாடசாலை மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவதற்கு ஊக்கவிக்கப்படுவதாக அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலைமை நீடிக் குமானால் எதிர்கால சமுதாயம் போதைப்பொருளுக்கு அடிமையான சமூகமாக மாறக்கூடிய வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகின்றது.
இவ்வாறான நிலைமைக்கு பிரதான காரணம் போதைப் பொருட்களை இலகுவாக யாரும், எங்கும் பெற்றுக் கொள்ள முடியும் என்கின்ற நிலையே காரணமாகும். போதைப்பொருள் ஒழிப்பிற்காக விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டாலும் அவற்றையும் தாண்டி தாராளமாகவே போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக பாடசாலை மாணவர்கள் இதில் அதிகமாக பாதிக்கப்படுவதற்கு பாடசாலை சிற்றுண்டிச் சாலைகளிலேயே போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதும் பிரதான காரணமாகவிருக்கின்றது.
கொழும்பு நகர்புறங்களில் இருக்கின்ற பிரபல பாடசாலைகளின் சிற்றூண்டிச் சாலைகளில் போதைப் பொருள் கலந்த டொபி விற்பனை செய்யபடுவதாக அண்மையில் இலங்கை சிற்றுண்டிச் சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் வெளிப்படையாகவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான செயற்பாடுகளை பாடசாலை நிர்வாகங்கள் கண்டு கொள்ளாமையும் இவை வெளியுலகுக்கு தெரியவருமாயின் பாடசாலையின் அபகீர்த்திக்கு பங்கம் ஏற்படுமென்று கருதியும் அவற்றை மூடிமறைத்து விடுகின்றனர். பாடசாலை மாணவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் துஷ்பிரயோகங்களில் எவ்வாறு ஆண், பெண் இருபாலாருமே பாதிக்கப்படுகின்றார்களோ அதுபோலவே போதைப் பொருள் பாவனையும் காணப்படுகின்றது.
பாடசாலை சிற்றுண்டிச் சாலைகளில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் போதை கலந்த டொபியை பெண் பிள்ளைகளும் அதிகமாக உட்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே போதைப் பொருள் ஒட்டுமொத்த மாணவ சமூ கத்தையுமே சீரழிப்பதாகவே இருக்கின்றது. குருநாகல் மாவட்டத்தில் 15-19 வயது வரையிலான 60 வீதமான பாடசாலை மாணவர்கள் மது, சிகரட், கஞ்சா, போதை மாத்திரை , போதை கலந்த டொபி என்பவற்றை பயன்படுத்துவதாக ஆய்வுகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே பாடசாலை சமூகம் போதைப் பொருட்களினால் அபாயகரமான கட்டத்தை எட்டியிருப்பதாகவே கருத வேண்டி யுள்ளது. தமது வயதுக்கு மீறியவர்களுடன் நட்பினை ஏற்படுத்திக் கொள்ளுதல், போதைப் பொருள் பாவனையாளர் மற்றும் விற்பனையாளர் என்பவற்றுடன் தொடர்பிலிருத்தல், போதைப் பொருட்களை கொள்வனவு செய்யுமளவுக்கு பணத்தினை பெற்றுக் கொள்ளும் வசதி இருத்தல், சக மாணவர்களுக்கு போதைப் பொருள் பாவனையை தூண்டுதல் போன்ற காரணிகள் பாடசாலை மாணவர்கள் அதிகம் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதற்கு பிரதான காரணங்களாக இருக்கின்றன.
இன்றைய மாணவர்கள் தங்களது பிரியாவிடை வைபவங்களுக்கே மதுபான வகைகளை சாதாரணமாக பயன்படுத்தும் நிலைகாணப்படுகின்றது. இதைவிடவும் விசேட வைபவங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என்பன மதுபானம் உட்பட சகல போதைகளுடன் நடைபெறுவதும் இயல்பான விடயமாகவே மாறிப் போய்விட்டது. இதனை பெற்றோர்களும் பாடசாலை நிர்வாகமும் பெரிதாய் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்வதும் கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது. ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களுடைய பிள்ளைகள் பெரும் சொத்தாக இருந்தாலும் அவர்களின் நன்னடத்தைகளுக்காக அவர்களை கண்டிக்க வேண்டியதும் அவசியமாகும்.
பிள்ளைகள் போதைகளுக்கு அடிமையான பின்பு அவர்களை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதைவிட அவர்கள் அடிமையாகாமல் பார்த்துக் கொள்வதே புத்திசாலித்தனமாகும். பாடசாலை மாணவர்களின் ஆர்வத்தையும் இயலாமையையும் பயன்படுத்தி அவர்களிடம் போதைப் பொருட்களை திணித்து அதிக இலாபம் சம்பாதிக்கின்ற விற்பனையாளர்களை இனம் கண்டு கொள்ள வேண்டிய தேவையும் அவசியமாகின்றது. பெரும்பாலான போதைப்பொருள் விற்பனையாளர்கள் அரசியல் மற்றும் பாதுகாப்பு பலம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். இதனால் அவர்களை நெருங்குவதும் எளிதான காரியமாகவும் இருப்பதில்லை.
இவ்வாறான போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் நினைவாற்றல் அதிகரித்தும், தூக்கம் வராது என பிரசாரம் செய்து சிறுவர்களிடையே போதைப் பொருட்களை விற்பனை செய்வதாகவும் இவை திட்டமிட்ட வகையில் செயற்படுத்துவதாகவும் ஆய்வுகள் மூலம் தெரியவருகின்றன. இலங்கையில் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களே அதிகமாக போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக 2016 ஆம் ஆண்டின் கைதுகளில் கஞ்சா குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11,500 பேர் 29 வயதுக்குட்பட்டவர்களாகவும் ஹெரோயின் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 2920 பேரும் 29 வயதுக்கு குறைவானவர்களாகவும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது ஹெரோயின் பாவிப்போரின் மொத்த தொகையினரில் 15 வீதமானோர் 19-25 வயதுக்கு இடைப்பட்டவர்களாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தொடர்ச்சியாக பெருமளவானோர், போதை பொருளுக்கு அடிமையாவதற்கு சகநண்பர்களின் தூண்டுதலும் அழுத்தமுமே பிரதான காரணமாக இருக்கின்றது. 50 வீதமானோர் இன்பத்துக்காகவும் பொழுது போக்குக்காகவும் போதைப் பொருளை பயன்படுத்துவதோடு, 39 வீதமானோர் ஆர்வத்தின் காரணமாக முதல் தடவையாக போதைப் பொருளை பயன்படுத்துகின்றனர். 11 வீதமானோர் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை காரணம் காட்டி போதைப் பொருளை பயன்படுத்துகின்றனர். எனவே மேற்கூறிய காரணங்களை தவிர்க்கும் போது எம்மால் போதையிலிருந்து விலகுவதற்கான சுதந்திரமான வழி கிடைக்கின்றது. ஆனால் இதை பலரும் அலட்சியம் செய்வதே போதைக்கு அடிமையாகும் நிலையை தூண்டுகிறது.
இலங்கைக்கு பல்வேறு மார்க்கங்களூடாகவும் போதைப் பொருளானது நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் இலங்கையானது போதைப் பொருள் விற்பனையின் மத்தியஸ்தமாக செயற்படுகின்றதா என்ற அச்சநிலையை சகலருக்கும் தோற்றுவித்திருக்கின்றது. இலங்கைக்குள் தாராளமாக போதைப் பொருட்கள் பாவனையில் இருக்கின்றமையே அதன் நுகர்வோர் அதிகரிப்பிற்கு பிரதான காரணமாக இருக்கின்றது. தினந்தோறும் ஏதோவொரு மார்க்கமாக இலங்கைக்குள் பலவிதமான சட்டவிரோத போதைப் பொருட்கள் உள்நுழைந்து வருகின்றன.
எனவே இலங்கைக்குள் நுழையும் இவ்வாறான போதைப் பொருட்களின் வரவை முதலில் நாம் கட்டுப்படுத்த வேண்டும். கடற்படையினர், சுங்க அதிகாரிகள், அதிரடிப்படையினர் இதற்காக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். போதைப் பொருள் தொடர்பான முறைப்பாடுகளை 1984 எனும் இலக்கத்தினூடாக அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபைக்கும் 0114554561 எனும் இலக்கத்தினூடாக ஜனாதிபதியின் போதைப் பொருளுக்கெதிரான செயலணிக்கும் அழைத்து தெரிவிக்கலாம்.
2017 ஆம் ஆண்டு இரண்டு முகவரமைப்பு நிறுவனங்கள் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்கள், குழந்தை பராமரிப்பு நிலைய உத்தியோகத்தர்கள், அரச மற்றும் சட்ட உத்தியோகத்தர்கள் என்போருக்கிடையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன. 2017 ஆம் ஆண்டு இறுதிவரை 126,456 பாடசாலை மாணவர்களுக்கு 614 விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மேற்கொண்டிருந்தது. ஆனால் அவை போதுமானவையாக இல்லை. இன்னும் மிக அதிகமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை சகல போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கங்களுக்கும் இருக்கிறது.
20 வயதுக்குட்பட்ட பெண்களின் கர்ப்பம் இளவயது கர்ப்பமாக கொள்ளப்படுகிறது. இவ்வாறு இளவயது கர்ப்பத்திற்கு மது, கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் பாவனை காரணமாக இருப்பதாக உறுதியான ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் பாவனை பாலியல் செயற்பாடுகளை தூண்டுவதே இதற்கு பிரதான காரணமாகும். எனவே போதைப் பொருள் பாவனையானது பல்வேறு வகையில் மனித சமுதாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது.
அதேவேளை இலங்கையில் யானைத் தாக்குதலில் உயிரிழப்பவர்களில் 70 சதவீதத்தினர் குடிபோதையில் சென்று பலியாவதாக ஆய்வில் தெரியவந்துள்ளதென வனஜீவராசிகள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் சுமித் பிலம்பிட்டிய தெரிவித்துள்ளார். யானை - மனித மோதலின் காரணமாக வருடாந்தம் சராசரியாக 70 மனிதர்களும், 250 யானைகளும் பலியாகின்றன. இதில் உயிரிழக்கும் பெரும்பாலானோர், அதாவது 70 வீதமானோர் குடிபோதையில் இரவு நேரங்களில் யானைகள் உலாவும் இடங்களுக்குச் செல்லும் போதே தாக்குதலுக்கு இலக்காவதாக அண்மைய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
எனவே போதைப் பொருள் பாவனையானது மனித நடவடிக்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உயிர்பலியை கூட ஏற்படுத்திவிடுகின்றது. மேலும் வடக்கில் யுத்தத்தின் பின்னர் போதைப் பொருள் பாவனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அவ்வாறு அதிகரித்திருப்பது எதிர்காலத்தில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் அச்சம் சமூகவியலாளர்கள் மத்தியில் காணப்பட்டாலும் இவற்றை தடுப்பதற்கான போதிய திட்டங்கள் எவையும் போதியளவில் முன்னெடுக்கப்படாமை பெரும் குறையாகவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகளின்படி போதைப் பொருட்களுடன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 8 யுவதிகள் மற்றும் 53 இளைஞர்கள் வியாங்கொடையில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தங்களது நண்பர் ஒருவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் போதைப்பொருள் பாவித்ததாக அந்த இளைஞர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். எனவே எதிர்காலத்தை நோக்கி இலங்கையில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்வதாக கூறிக்கொண்டு வானுயர கட்டிடங்களையும் நெடுஞ்சாலைகளையும் அமைப்பதால் மாத்திரம் சமூகத்தை உயர்த்திவிட முடியாது.
சமூக சீரழிவுகளை ஏற்படுத்துகின்ற இவ்வாறான போதைப்பொருள் பாவனைகளை முதலில் தடுக்க வேண்டும். சமூகம் வளர்த்துவிட்டது. நவீனமடைந்துவிட்டது என்பதற்காக பிறந்தநாள் கொண்டாட்டத்தில் போதைப் பொருள் பார்ட்டியை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே வீட்டில் பெற்றோரும் பாடசாலையில் ஆசிரியர்களும் பிள்ளைகளை கவனிக்க வேண்டியது அவசியமாகின்றது. அதேவேளை பாதுகாப்பு அதிகாரிகளும் இளம் சமூகத்தின் மீதான பார்வையை விரிவுபடுத்த வேண்டும். போதைப் பொருளற்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அனைவரும் கைகோர்க்க வேண்டும்.
க. பிரசன்னா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக