நாட்டில் தற்போது குற்றங்கள் மலிந்து கிடக்கின்றன. கொலை, கொள்ளை, வன்முறைகள் என பல இவற்றில் உள்ளடங்குகின்றன. சில கொலைகளுக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டாலும் பல கொலைகள் இன்னும் தீர்வு எட்டப்படாமலேயே இருக்கின்றன. அந்த வகையில் ஹூணுமுல்ல கெலேபிடில்ல, கொட்டலியந்தவத்த என்ற இடத்தில் வெளிநாட்டு பெண்ணொருவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இத் தோட்டத்தில் அப்புஹாமிலாகே காமினி எட்வர்ட் என்பவர் கவலாளியாக தொழில் புரிந்து வந்தார். இவர் 50 வயது நிரம்பிய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். பிள்ளைகள் இருவரும் பாடசாலை செல்லும் வயதுடையவர்களாவர்.
இவ்வேளையில் கடந்த 2 ஆம் திகதி காலை காமினியின் பிள்ளைகள் இருவரும் பாடசாலை செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். எதிர்பாராக வகையில் அவர்களது வீட்டு முற்றத்தில் பொலிஸ் ஜீப் வண்டியொன்று வந்து நின்றது. ஜீப் வண்டியிலிருந்து இறங்கிய பொலிஸ் குழுவொன்று தீவிரவாதிகளை பிடிப்பதற்கு வந்தது போன்று காமினியின் வீட்டை சுற்றி வளைத்தனர். அச் சந்தர்ப்பத்தில் அக்கு ழுவை வழிநடத்தி வந்த பொலிஸ் அதிகாரி காமினியின் வீட்டினுள் நுழைந்தார். வீட்டு அறைகளை சோதனை செய்தார். காமினி வேலை செய்யும் தோட்டத்தின் உரிமையாளரான வெளிநாட்டுப் பெண், பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்து செய்திருந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ் காமினையை கைது செய்தனர்.
வீட்டு காவலாளியான காமினியின் மூலம் வீட்டிலுள்ள சிலபொருட்கள் திருட்டுப் போயுள்ளதாக கூறியே திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் அம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. பொலிஸார் காமினியை கைது செய்யும் வரைக்கும் தன் பிள்ளைகளை பாடசாலைக்கு கூட்டிச்செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். காமினியை கடுமையான வார்த்தைகளிலேயே பொலிஸார் அழைத்திருந்தனர். காமினியை அவரது பிள்ளைகளுக்கு முன்பே கடுமையான வார்த்தைகளால் ஏசியும் அடித்தும் பொலிஸ் வாகனத்தில் ஏற்றிக் கூட்டிச் சென்றனர். பொலிஸார் சந்தேகநபரை குற்றச் செயலுக்காக கைது செய்வது அவ்வாறே. கைது செய்யப்பட்ட காமினியை மறுநாள் 3 ஆம் திகதி மீகமுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்திருந்தனர்.
அதன்படி கடந்த 10 ஆம் திகதி வரை அவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதியினால் உத்தரவிடப்பட்டிருந்தது. மறுநாள் 4 ஆம் திகதி காலை அவசரமாக குறித்த சந்தேக நபர் சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததையடுத்து சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நோய் தீவிரமடைந்ததால் மேலதிக சிகிச்சைகளுக்காக சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியரின் அனுமதியுடன் மீகமுவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாரென தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் சுகவீனமடைந்ததால் சந்தேகநபர் காமினி மரணடைந்ததாக வைத்தியரினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
காமினி நோய் வாய்ப்பட்டதால் இறக்கவில்லையென்றும் கைது செய்யப்பட்டு மறுநாள் நாம் சென்று பார்க்கும் போது அவர் நன்கு அடிபட்டு மிகவும் முடியாத நிலையிலேயே காணப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
‘ அண்ணா மிகவும் மோசமாக தாக்கப்பட்டிருந்ததை நான் பார்த்தேன். உடம்பு முழுவதும் இரத்தம் உறைந்து போயிருந்தது. உடம்பு நீலம் பூத்து போய் இருந்தது. அவர் என்னுடன் மிகவும் கஷ்டப்பட்டே பேசினார். கடைசியாக அண்ணாவை அடித்தே கொண்றுவிட்டார்களென’ காமினியின் சகோதரியொருவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு காமினியின் மகள் அழுதவாறே கூறிய விடயம் கேட்போர் மனதை கதிகலங்க வைப்பதாக அமைந்தது. சீருடை அணிந்த பொலிஸார், காமினியின் பிள்ளைகள் முன்பே காமினியை பேசிய வார்த்தைகள், நடந்து கொண்ட விதம் என்பன காட்டு மிராண்டித்தனமானதென்பது குறிப்பிடத்தக்கது.
‘ தந்தை எங்களை பாடசாலைக்கு கூட்டிச் செல்ல வேண்டுமென தெரிவித்தார். கடினமான தூஷண வார்த்தைகள் பேசி அவர்கள் பாடசாலைக்குச் செல்வார்கள் எங்களோடு வா என அழைத்தனர். அதன்பிறகு கொஞ்சம் இருங்க சேர், நான் மலசல கூடம் சென்று வருகிறேன் என்று அப்பா சொன்னார். நீ நினைத்தாயா அங்கு மலசல கூடமில்லையென்று பொலிஸார் தெரிவித்தனர்.இப்போது நீ எங்களோடு வா என்று நாயை இழுத்துச் செல்வது போல் சேர்ட் கொலரை பிடித்து இழுத்துச் சென்றனர். கூட்டிச் செல்லும் போது அடித்தார்கள்.’ என அச்சிறுமி சொல்லும் போது கேட்டவர்களுக்கு உடம்பு புல்லரித்து போய் விட்டது.
‘ அப்பா நீதிமன்றம் செல்லும் போது என்னை அருகே அழைத்தார். என்னை அழைத்து பாடசாலைக்குச் சென்றாயா எனக் கேட்டார். நான் இல்லையென்று பதிலளித்தேன். அப்பாவை சிறைக்கு அனுப்பிவிட்டார்கள் என்று கேள்விப்பட்டவுடன் தெரிந்த ஒருவர் அப்பாவை பார்க்கச் சென்றார். ஆனால், அப்பாவை பார்க்கவிடவில்லையென்று அவர் தெரிவித்தார். அதன் பிறகு அவர் ‘என் அப்பா இறந்துவிட்டதாக சொன்னார் ’ அவர் அந்த பிள்ளையை கட்டியணைத்தவாறே மேற்கண்ட விடயங்களை தெரிவித்தார். அவர் அழுதவாறே அந்த சிறுமிக்கு கூறியதை பார்க்க முடியாமல் சுற்றி நின்றவர்கள் கதறினர்.
இறுதியில் சந்தேகப்பட்டு கைது செய்த அந்த அப்பாவி காமினியை பொலிஸார் அடித்தே கொன்றுவிட்டாரகள். மரண விசாரணையில் பொலிஸார் கைது செய்யப்பட்ட பின்னரே காமினி இறந்துள்ளதாக பதிவான செய்தி நாடு முழுவதையும் திரும்பிப் பார்க்கச் செய்தது. இச் சம்பவம் தொடர்பான விசாரணை அதன்பிறகே ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 5 ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது ;
4 ஆம் திகதி புதன்கிழமை இரவு 8.40 மணியளவில் மீகமுவ வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் மீகமுவ பொலிஸ் நிலையத்திற்கு தகவலொன்று கிடைக்கப்பெற்றது. அந்த தகவலுக்கமைய மீகமுவ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அப்புஹாமிலாகே காமினி எட்வர்ட் என்ற பெயருடைய நபர் மீகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே மரணமடைந்தாரென தெரிவிக்கப்பட்டது. இம் மரணம் தொடர்பாக மீகமுவ பொலிஸ் மூலம் கடந்த 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. மீகமுவ மரண விசாரணை அதிகாரி மீகமுவ வைத்தியசாலைக்குச் சென்று சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனை மேற்கொண்டார். இச் சம்பவத்துக்கு காரணமான விடயங்களை பரிசீலனை செய்வதற்கும் மரண விசாரணை நடத்துவதற்கும் மீகமுவ வைத்தியசாலை வைத்தியதிகாரி நியமிக்கப்பட்டார்.
மீகமுவ வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர் எச்.என்.ருஹூல் ஹக் என்பவர் மரணம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டதுடன் மரண விசாரணை அறிக்கையையும் வெளியிட்டிருந்தார். அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது ;
உடலில் ஏற்பட்ட அழுத்தமான ஆழமான காயங்களினாலேயே மரணம் சம்பவித்தது. உடம்பு முழுவதும் 20 க்கும் மேற்பட்ட காயங்கள் காணப்பட்டன. இக் காயங்களால் ஏற்பட்ட கஷ்டங்களாலும் வலியினாலுமே சந்தேகநபர் இறந்துள்ளதாக வைத்திய அதிகாரி அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். வைத்திய அதிகாரியின் அறிக்கையில் பலத்த தாக்குதலால் ஏற்பட்ட மரணம் தொடர்பான விபரங்களே தெரிவிக்கப்பட்டிருந்தன.
இச் சம்பவத்துக்குப் பிறகு வெளியான அறிக்கையின் பின்பு கடந்த 5 ஆம் திகதி வியாழக்கிழமை மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரியின் நிபந்தனையின் பெயரில் திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர்கள் இருவரும் பொலிஸ் கொஸ்தபால் ஒருவரும் திவுலப்பிட்டி பொலிஸ் நிலையத்திலிருந்து பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இவ்விடமாற்றம் இடம்பெற்று ஒரு மணித்தியாலத்தின் பின் திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் பொறுப்பதிகாரியாக கடமை புரிந்த பொலிஸ் பரிசோதகர் சமன் பிரியங்கர கமகே என்பவர் கைது செய்யப்பட்டார்.
இச் சம்பவம் இடம்பெற்று மறுதினமான செவ்வாய்க்கிழமை ( 10 ஆம் திகதி) மீகமுவ பிரதான நீதிவான் ருச்சிர வெலிவத்த முன்னிலையில் சமன் பிரியங்கர கமகே என்ற பெயருடைய மேற்படி சூத்திரதாரி பொலிஸ் பரிசோதகர் ஆஜர்செய்யப்பட்டார். அவர் சம்பந்தமாக வேறொரு விசாரணை இடம்பெறுவதாகவும் பொலிஸ் அதிகாரியால் தெரிவிக்கப்பட்டது. அன்று அநியாயமாக இறந்துபோன அப்பாவியான காமினியின் 19 ஆவது நாள் புண்ணிய தானமாகும். அதனால் காமினியில் வீட்டிலிருந்து எவரும் வழக்கன்று சமுகமளிக்கவில்லை. இருந்தாலும் இந்த நபர் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக கடந்த 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாள் குறிக்கப்பட்டது.
மீகமுவ பொலிஸ் நிலைய பிரதி பொறுப்பதிகாரி லலித் ரோஹண கமகேயின் தலைமையின் கீழ் மீகமுவ பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லர் அடங்கிய பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்புக்காக நாட்டு மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டபின் பொலிஸாரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இறந்த கடைசியொருவராக கைவல அப்புஹாமிலாகே காமினி எட்வர்ட் இருக்க வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இலங்கையில் பொலிஸ் தடுப்பு காவலில் இருக்கும் சந்தேகநபரொருவர் இறப்பது இது முதற் தடவையல்ல. இருப்பினும் இதுவரைக்கும் எவ்விதமான பாதுகாப்பு முறைகளும் அற்றவகையிலேயே சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்படுகின்றனர். நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்படும் வரை சந்தேகநபரை குற்றவாளியாக உறுதிப்படுத்த முடியாதென்பதுடன் தண்டனைகள் வழங்கவும் முடியாது. ஆனால், இங்கு நீதியையும் தாண்டி பொலிஸாரின் அசமந்தபோக்கும் காட்டுமிராண்டித் தனமும் உயிர்களை பலியெடுத்து வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக