கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், YouTube videos

28 ஏப்ரல், 2019

இளைஞரும் சமூக ஊடகமும்

இன்றைய தொழில்நுட்ப உலகிற்கு ஈடுகொடுக்கும் வகையில் இணையத்தின் வளர்ச்சியும் அதனோடிணைந்த சமூக வலைத்தளங்களின் பாவனையும் அதிகரித்திருக்கின்றது. அதுபோலவே எதிர்மறையான தாக்கங்களும் முளைத்துள்ளன. இன்றைய இணையப் பாவனையாளர்களிடையே தகவல் பரிமாற்று ஊடகமாக சமூக வலைத்தளங்கள் முதன்மையிடம் பிடித்துள்ளன. ஒருசெய்தியை உடனுக்குடன் பகிரவும் அதிகமான லைக்குகளை பெறவும் பலரும் சம்பளமில்லாத பகுதிநேர தொழிலாக சமூக வலைத்தளங்களை பாவிக்கத்தொடங்கிவிட்டனர். அதன் விளைவு போலிச் செய்திகளின் வருகை அதிகரித்துவிட்டது. இது தனிமனித உணர்வுகளை காயப்படுத்தும் செயற்பாடாகவும் அமைந்துவிட்டது.

உலகளாவிய ரீதியில் 70 சதவீதமான இளையவர்கள் இணையம் மூலம் மிரட்டப்படுவதையும் தொந்தரவுக்குள்ளாவதையும் தடுப்பதற்கு ஒன்றுபட்டு நடவடிக்கையெடுக்க வேண்டுமென யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளை பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்தலும் இணையத்தளம் தொடர்பான வலுவூட்டலும் என்ற யுனிசெப்பின் 2018 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இலங்கையில் 52.8% இளைஞர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதாகவும் அவர்களின் சராசரி வயது 13 ஆக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. சைபர் தளமூடான மிரட்டல் அனுபவத்தை ஆண்பிள்ளைகளிலும் பார்க்க பெண் பிள்ளைகளே அதிகம் கொண்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இலங்கையிலுள்ள சகல பிள்ளைகளுமே வன்முறை, துஷ்பிரயோகம், சுரண்டல் என்பவற்றிலிருந்தும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் யுனிசெப் அழைப்பு விடுத்துள்ளது.



இலங்கையில் இணையப்பாவனை தொடர்ந்து அதிகரித்து வருவதும் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளின் பாவனையும் சமூக வலைத்தளங்களின் மீதான மோகத்தை சகலருக்கும் தூண்டிவிட்டுள்ளது. குறிப்பாக முகப்புத்தகங்களில் பகிரப்படுகின்ற தகவல்கள் வேகமாக மற்றொருவரை சென்றடைவதை இலகுப்படுத்தியுள்ளன. இலங்கையில் அண்மைய கண்டி, திகன கலவரமானது சமூக வலைத்தளங்களினாலேயே தீவிரமடைந்ததும் இதனால் சிலநாட்களுக்கு சமூக வலைத்தளங்களை இலங்கை அரசாங்கம் முடக்கியிருந்தமையும் முக்கியமாகும். கண்டி கலவரம் தொடர்பான பதிவுகள் உள்ளூர் மொழியில் (தமிழ் அல்லது சிங்களம்) இருந்தமையும் தமிழ் வாக்கியங்களை ஆங்கில எழுத்துக்களில் (கலவரம் -ஓச்டூச்திச்ணூச்ட் ) பதிந்திருந்தமையும் கலவரத்தைத் தூண்டுவதான பதிவுகள் அதிகம் பகிரப்படுவதற்கும் அதனை பேஸ்புக் நிறுவனத்தினால் நீக்கப்படமுடியாமைக்குமான காரணமாகவும் அமைந்துவிட்டது. இதனாலேயே இந்நிறுவனம் தற்போது உள்ளூர் மொழியியலாளர்களை கடமைகளில் அமர்த்தியும் உள்ளது.

இவ்வாறு சமூகவலைத்தளங்களில் இருக்கின்ற சாதகமான விடயங்கள் இழிவான செயல்களை செய்யத் தூண்டுபவர்களுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஆனால் அதிகபட்சமாக பயனாளர்களின் கணக்குகளை நீக்கும் அதிகாரத்தை மாத்திரமே பேஸ்புக் நிறுவனம் கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். இதனால் அவ்வாறான பதிவுகள் வேரொருபெயரில் புதிய கணக்கினூடாக ஆரம்பிக்கப்படுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. கணினி அவசரநிலை தயார்படுத்தல் குழுவின் (இஉகீகூ) 2017 ஆம் ஆண்டுக்கான தரவுகளில் சமூகவலைத்தளங்கள் தொடர்பான 3685முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2010ஆம் ஆண்டு 80 முறைபாடுகளும் 2016இல் 2200 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவற்றில் 2018 போலி சமூக வலைத்தள கணக்கு தொடர்பிலும் சமூக வளைத்தள கணக்கு ஊடுருவல் தொடர்பாக 829முறைப்பாடுகளும், புகைப்பட துஷ்பிரயோகம் தொடர்பாக 416முறைப்பாடுகளும், சைபர் குற்றம் தொடர்பாக 57 முறைப்பாடுகளும் தொலைபேசி இலக்கங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பாக 54முறைப்பாடுகளும், ஆபாச வீடியோக்கள் தொடர்பாக 17 முறைப்பாடுகளும், புலமைச்சொத்து மீறல் தொடர்பாக 7 முறைப்பாடுகளும், ஏனைய குற்றங்கள் தொடர்பாக 287முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே சமூகவலைத்தள பாவனை அதிகரித்துச் செல்வது போன்றே அதற்கெதிரான முறைப்பாடுகளும் அதிகரித்துச் செல்கின்றன. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் சைபர் குற்றத் திணைக்களத்திடம் மாதத்திற்கு 300வரை பதிவாகின்றன. ஆனால் இவை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வது மிகவும் குறைவாகவே இருக்கின்றது. காரணம், பெரும்பாலான கணக்குகள் போலித்தகவல்களை கொண்டிருப்பதும், சந்தேக நபர்களை அடையாளம் காண்பதிலும் இருக்கின்ற பிரச்சினையாகும். ஆனால் முறைப்பாட்டாளர்கள் சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்கும் பட்சத்தில் அவர்களை இலகுவில் அடையாளங்கண்டு விசாரணைகள் மேற்கொள்வதற்கு இலகுவழியேற்படுகின்றது. ஆனால் சமூக ஊடக பதிவுகளின் மூலம் பாதிக்கப்படும் நபர் ஒருவர் மீண்டும் அதேவழியில் பதிவுகளை இட்டு எதிர்ப்புகளை வெளியிடுவதால் எவ்விதமான நன்மைகளும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.

பெரும்பாலும் ஒரு நாளைக்கு 1-5 மணித்தியாலங்களை 50 வீதமான இலங்கையர்கள் சமூக ஊடகங்களில் செலவழிக்கின்றனர். 10 வீதமானோர் ஒரு நாளைக்கு 6மணித்தியாலங்களை சமூக ஊடகங்களில் செலவழிப்பதோடு, 40 வீதமானோர் ஒரு மணித்தியாலத்துக்கும் குறைவான நேரத்தினை செலவழிக்கின்றனர். அவ்வாறு சமூக வலைத்தளங்களை உபயோகிப்போர் சக அழுத்தம், ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்டறிதல், தொழிலாக வைத்திருத்தல், புதிய நட்புறவை தொடங்குதல், தகவல்கள் பெறல், பல்லூடக பகிர்வு, உறவுகளை பேணுதல் (குடும்பம் மற்றும் நண்பர்கள்) போன்ற காரணங்களுக்காக அதிகம் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர். ஆனால் இக்காரணங்களில் எவை சமூகவலைத்தளங்களில் குற்றங்களைப் புரிய தூண்டுகின்றன என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது.

பொதுவாக இலங்கை இளைஞர், யுவதிகள் பல்வேறு சமூக ஊடக வன்முறைகளுக்கு ஆளாகும் ஒரு நிலை காணப்படுகின்றது. சிலவன்முறைகள் தெரியாமல் நடைபெற்றாலும் சில தெரிந்து சிக்கிக் கொள்ளும் விடயங்களும் இருக்கின்றன. அந்த வகையில், பின்வரும் சம்பவங்கள் சமூகஊடகங்களினால் ஏற்பட்ட பிரச்சினைகளாக இலங்கை கணினி அவசர நிலை தயார்படுத்தல் குழுவினால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. எனது பெயரில் போலிக்கணக்கொன்று உருவாக்கப்படுதல், கணக்கு ஊடுருவல் (சமூகஊடகம், மின்னஞ்சல் கணக்கு) தவறான வழியில் எனது புகைப்படம் பயன்படுத்தப்படல், ஆபாச தொடர்புகளை நான் பெற்றுக்கொண்டேன் அல்லது அதற்கு இலக்கானேன், இணையம் மூலமாக மிரட்டல்களுக்கு முகம் கொடுத்தல், அச்சுறுத்தும் வகையிலான தகவல்களை எதிர்க்கொண்டேன், இணையம் மூலமான ஏமாற்றுதல் (பண அட்டை மோசடி), அநாமதேய மின்னஞ்சல், வைரஸ் தாக்குதல், ஏனையவை எனப் பல்வேறு வகையான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

எனவே சமூக ஊடகங்கள் மூலமாக எப்போதும் ஒரே வகையிலான அச்சுறுத்தல்கள் பாவனையாளர்களுக்கு கிடைக்கப்பெறுவதில்லை. அது பலவழிகளில்  வருகின்றன. இவற்றிலிருந்து விடுபடுவது பாவனையாளர்களின் கைகளிலேயே இருக்கின்றது. எப்போதுமே புகைப்படங்களையும் சொந்த தகவல்களையும் பகிரும் முன் அவை தொடர்பான பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக சிந்திக்க வேண்டும். சமூக ஊடகங்களில் இடப்படுகின்ற பதிவுகள் ஒரு சில நொடிகளில் பலராலும் பகிரப்பட்டு விடுகின்றன. அவற்றின் உண்மைத் தன்மை தொடர்பில் யாரும் சிந்திப்பதில்லை. இதன் விளைவாகவே போலிச் செய்திகளின் களமாக சமூக ஊடகங்கள் மாற்றப்படுகின்றன.

சமூக ஊடகங்களில் பேணுகின்ற கணக்குகள் பாதுகாப்பாக இருக்கின்றனவா? அதில் பகிரப்படும் தகவல்கள் உண்மையானதா? என்பதில் கூடிய அக்கறை கொள்ள வேண்டிய காலத்தில் அனைவரும் இருக்கின்றனர். சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு வயது கட்டுப்பாடுகள் இருக்கின்ற நிலையிலும் விரும்பிய பெயர், திகதிகளை பயன்படுத்தி கணக்கினை ஆரம்பிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றமையால் போலி கணக்குகளும் அதிகம் சமூக ஊடகங்களில் உலாவுகின்றன. இந்த கணக்குகளுக்கு கிடைக்கின்ற ஆதரவே ஆபத்தில் முடிகின்றன.

சிலர் கடவுச் சொற்களை மறந்துவிட்டு ஒவ்வொரு முறையும் புதிய கணக்கொன்றினூடாக சமூக வலைத்தளங்களை உபயோகித்து வருகின்றனர். இணையத்தை அதிகம் நம்பிவாழ்பவர்களினாலேயே இணைய குற்றங்கள் அதிகரிக்கின்றன. கணக்குகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்படும் கடவுச்சொற்கள் உறுதியானதாக இல்லாமையும் கணக்கு ஊடுருவலுக்கு முக்கிய காரணமாக அமைகின்றது. இலங்கையிலுள்ள இளைஞர்களில் 65 வீதமானோர் மின்னஞ்சல் முகவரியையும் 47 வீதமானோர் தொடர்பு இலக்கத்தையும் 18 வீதமானோர் தங்களது வீட்டு முகவரியையும் 24 வீதமானோர் வேலைத்தள முகவரியையும் 76 வீதமானோர் பிறந்த திகதியையும் 25 வீதமானோர் உறவுமுறைகள் மற்றும் விவாகநிலை என்பவற்றை கடவுச் சொல்லாக தெரிவிக்கின்றனர். (தகவல் - கணினி அவசரநிலை தயார்படுத்தல் குழு - இஉகீகூ)

மேற்கூறிய பல்வேறு குற்றங்களிலிருந்து மக்களை பாதுகாக்கவே ஐகுO 27000 அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு கொள்கை (2009) தரவுகள் பகிர்ந்து கொள்ளும் கொள்கை, சட்ட இலக்கம் 19 இன்  2006, இலத்திரனியல் பரிவர்த்தனை சட்டம் - சட்ட இலக்கம் 24 இன் 2007 குற்றவியல் சட்டம் போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இதனை விடவும் கணினி குற்றப் பிரிவு என்ற தனியான குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பான இணையத்தினூடாக சமூக ஊடகங்களை திறனுடன் கையாள்வதற்கு அதை பற்றியதான தெளிதல் அவசியமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக