கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், YouTube videos

7 மார்ச், 2016

2015 இல் சர்வதேசம்

இன்னும் சில நாட்களில் 2015 ஆம் ஆண்டு நிறைவுக்கு வர இருக்கிறது. 2016 ஆண்டு உலக மக்களுக்கு சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் முழுமையாக வழங்குமா என்பதுதான் தற்போதுள்ள கேள்வி. 2015 ஆம் ஆண்டு ஒரு சில நன்மையான விடயங்கள் இடம்பெற்றிருந்தாலும் அதிகமான யுத்த நடவடிக்கைகள் உலகமக்களை பலிகொண்டிருந்தது. இவற்றில் பெரும்பாலான யுத்த நிலைமைகள் 2016 ஆம் ஆண்டில் இன்னும் தீவிரமடைய உள்ளன. சீனாவின் செயற்கைத்தீவு, ஈரானின் அணுநிகழ்ச்சித்திட்டம், அகதிகள் நெருக்கடி, அமெரிக்க-கியூபா உறவின் மலர்ச்சி என பல வரலாற்று முக்கிய நிகழ்வுகள் கடந்த காலங்களில் அரங்கேறியிருக்கின்றன.
அதேவேளை அரபு நாடுகளின் விரிசல், சிரியா மற்றும் ஈராக்கில் நிலவும் பயங்கரவாதம், மீண்டும் முளைத்த காஸா பிரச்சினை, லிபியா-யேமன் உள்நாட்டு யுத்தம், தென் சூடான் கலவரம், மேற்கு ஆபிரிக்காவில் எபோலா வைரஸ் தொற்று--, வட நைஜீரியாவில் போகோஹரம் செயற்பாடு, ரஷ்யா-உக்ரைன் விரிசல் என பல போராட்டங்களில் உலகம் அதிகமான உயிரிழப்புகளையும் சொத்திழப்புகளையும் சந்தித்திருக்கின்றன. இந்நிலை 2016 ஆம் ஆண்டும் தொடர்வதற்கு அதிகமான சாத்தியங்கள் இருக்கின்றன. சர்வதேச நிறுவனங்கள், மேற்குலக நாடுகள் இவ்விடயங்களுக்கான நிரந்தர தீர்வினை எட்ட தவறியிருக்கின்றன. கூட்டுப் படைகளின் தாக்குதல்களில் உலக சனத்தொகையில் வீழ்ச்சியில் மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. இந்நிலை அடுத்த வருடமும் தொடருமா?

உலகம் கடந்த 12 மாதங்கள்

உலக நாடுகளிடையே நிலவும் அரசியல் போட்டித்தன்மைகளினால் தீவிரவாதம் வளர்த்தெடுக்கப்படுகிறது. இதில் ரஷ்யாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கிடையிலும் காணப்படும் அரசியல் நெருக்கடி முக்கியமானது. இருதரப்பும் ஈரான் அணுவிவகாரம் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நவடிக்கைகளில் முறுகல் நிலையை பின்பற்றுக்கின்றன. அதேபோலவே கிழக்கு மற்றும் தென்சீனக் கடல் பிரச்சினையில் மேற்குலகோடு சீனா கொண்டிருக்கும் நிலைப்பாடு, ஈரான் மற்றும் சவூதி அரேபியா நாடுகளிடையே நிலவும் ஷியா, சன்னி பிளவுகள் என்பன கடந்த காலங்களில் அதிகபாதிப்பை ஏற்படுத்திய விடயங்களாகும்.

அதிகார மையங்களுக்காக சோமாலியா மற்றும் தென் சூடான் போன்றன உள்நாட்டு போரை அதிகரித்துள்ளன. இதில் கொங்கோவும் முக்கியமாகும்.  இஸ்லாமிய அரசு புதிதாக சினாய் மற்றும் வட ஆபிரிக்காவிலும் செயற்படத் தொடங்கியிருந்தது. அதேபோலவே நைஜீரியாவில் போகோஹரம், சோமாலியா மற்றும் கென்யாவில் அல்-சபாப், தென் ஆசியா, மத்திய ஆசிய பகுதிகளில் அல் ஹைடா, யேமன் கிளர்ச்சிக் குழு என்பன பொதுமக்களை கொன்றதுடன் அவர்களின் இடம்பெயர்வுக்கும் காரணமாக இருந்தன.

இவ்வாறான தீவிரவாத நிலைமைகளில் தொடங்கிய 2015 ஆம் ஆண்டில், மேற்குலக நாடுகள் தமது எதிர்ப்பினை கடுமையாக வெளிப்படுத்தியிருந்தது. இஸ்லாமிய அரசுக்கெதிராக அமெரிக்க கூட்டுப்படைகளும், போகோஹரமுக்கெதிராக நைஜீரியாவும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன.இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மற்றும் நோய்த் தாக்கங்கள் என்பன அதிகமான அகதிகளை உருவாக்கியிருந்தது. இவர்கள் புகலிடக்கோரிக்கையாளர்களாக வேறுநாடுகளுக்கு செல்லும் வழியில் இறந்தோர் தொகையும் அதிகமாகும். அதிகமான சிறுவர்கள் கல்வியினை இழந்ததுடன் சுகாதாரம், உணவு, காலநிலை என சகல விடயங்களிலும் 2015 ஆம் ஆண்டு கடுமையான பின்னடைவை சந்தித்தது.

இவ்வாறு 2015 ஆம் ஆண்டு உலகளவில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள், பிரச்சினைகள் மற்றும் பின்னடைவுகளை ஆராய்வதே இப்பத்தியின் நோக்கம்! 2015 ஆம் ஆண்டு அதிகமாக தீவிரவாதத்துடனேயே நிறைவு பெற்றிருக்கின்றது. ஆனால் எவ்வித போர்நிறுத்தங்களும் நீடிக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலைமைகள் உலக காலநிலை, பொருளாதாரம், அகதிகள் பிரச்சினை, பாதுகாப்பு என்பனவற்றில் அதிக தாக்கத்தினை செலுத்தியிருக்கிறது. இந்நிலைமை எதிர்வரும் ஆண்டுகளிலும் தொடரும் சூழ்நிலையே தற்போது வரையும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறான மிக முக்கிய நிகழ்வுகள் சில;

1.ஐரோப்பியாவின் அகதிகள் நெருக்கடி

2015 ஆம் ஆண்டு ஐரோப்பா மிகப்பெரும் நெருக்கடியை அகதிகளால் சந்தித்திருந்தது. இது அவர்களின் பொருளாதாரத்தை மந்தகதிக்கு கொண்டு சென்றிருந்தது. சிரியாவில் நிலவும் உள்நாட்டுப் போர் மற்றும் வன்முறைகள் காரணமாக அதிகமானோர் ஐரோப்பாவுக்குள் நுழைகின்றனர். அத்தோடு சிலர் பொருளாதார நிலைமையினை கருத்தில் கொண்டு சிறந்த தொழிலொன்றை பெற்றுக்கொள்ள அகதிகளாக செல்கின்றனர். அதிகமான அகதிகள் சட்டவிரோதமாக பயணங்களை மேற்கொள்கையில் சிலவேளைகளில் மரணத்தை சந்திக்கின்றனர்.ஐரோப்பாவின் அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகளுக்கிடையே அகதிகளை எவ்வாறு அனுமதிப்பது, பகிர்வது என்பது தொடர்பில் கடுமையான சர்ச்சைகளும் நிலவியிருந்தன.

2016 ஆம் ஆண்டு 10,000 அகதிகளை உள்வாங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.. இருப்பினும், அதன்பின் இடம்பெற்ற பாரிஸ், சன்பிரான்சிஸ்கோ தாக்குதல்கள் முஸ்லிம் அகதிகள் விடயத்தை பிற்போட்டுள்ளன. இருப்பினும் சிரிய உள்நாட்டு யுத்தம் தொடரும் வரை இந்நிலைமை ஐரோப்பிய நாடுகளில் எதிர்வரும் ஆண்டுகளிலும் தொடரலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வருடத்தில் ஐரோப்பாவிற்குள் புகலிடக்கோரிக்கையாளர்களாக நுழைந்தவர்களின்  எண்ணிக்கை1 மில்லியனுக்கும் அதிகமென்பது குறிப்பிடத்தக்கது.

2.இஸில் தீவிரவாதிகளின் தாக்குதல்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இஸிஸ் தீவிரவாதிகளுக்கெதிரான தாக்குதல்கள் எதிர்வரும் காலங்களும் தொடருமென கடந்த மாதம் அறிவித்திருந்தார். இவ்வறிவித்தலுக்கு முன் முக்கிய மேற்குலக நாடுகளில் இஸ்லாமிய அரசின் தீவிரவாத தாக்குதல்கள் 3 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டிருந்தன. பாரிஸில் 4 இடங்களில்  மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 130 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் துருக்கியில் 33 பேர் கொல்லப்பட்டனர். மூன்று மாதங்களின் பின்பு 2 தற்கொலைதாரிகளின் தாக்குதல்களில் அங்காராவில் 102 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அக்டோபர் மாதம் சினாய் பிரதேசத்தில் ரஷ்ய பயணிகள் விமானம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 224 பேரும், கலிபோர்னியாவில் கணவன்-மனைவியால் டிசம்பர், 2 மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர்வரை கொல்லப்பட்டனர்.

இதன் எதிரொலியாக மேற்குலகின் வான்தாக்குதல்கள் இஸ்லாமிய அரசில் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்நிலைமை 2016 ஆம் ஆண்டும் தொடருமென எதிர்பார்க்கலாம்.

3.ஈரானின் அணுநிகழ்ச்சித்திட்டம்

2012 ஆம் ஆண்டு முதல் மீண்டும், மீண்டும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் ஈரானின் அணு உற்பத்தி நிறைவுக்கு வந்தது. கடந்த ஜூலை மாதம் முதல் அமுலுக்கு வந்த ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டமானது மேற்குலகுக்கு மிகப்பெரும் வெற்றியாக அமைந்தது. ஈரானின் 97 வீதமான யுரேனிய செறிவூட்டலை அழிப்பதற்கான திட்டம் நிறைவேறியதுடன், ஈரான் மீதான அமெரிக்கத் தடைகளும் நீக்கப்பட்டன. சர்வதேச அணுசக்தி கழகத்தின் நடைமுறைகளை ஈரான் ஏற்றுக்கொண்டுள்ளதுடன் இத்திட்டம் எதிர்வரும் 10-15 ஆண்டுகள் வரை நடைமுறையிலிருக்கும். இதன் மூலம் ஈரானின் அணுஉலைகள் மற்றும் அணு ஆயுதங்கள் செயற்பாடுகளை இடைநிறுத்திக்கொள்வதுடன் மேலதிக செறிவூட்டப்பட்ட யுரேனியமானது ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

4.கிரேக்க நிதி நெருக்கடி

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு செலுத்தவேண்டிய கடன் தொகை நிலுவையிலுள்ள பாரிய இக்கட்டான சூழ்நிலையில் கிரேக்கத்தின் பிரதமராக அலக்சிஸ் சிப்ராஸ் ஜனவரி 2015 ஆம் ஆண்டு பதவியேற்றார். கிரேக்கத்தின் நிதிநெருக்கடியை சமாளிக்க ஏனைய ஐரோப்பிய நாடுகளிடம் கிரேக்கம் நிதியுதவியை கோரியிருந்தது. ஆனால், கிரேக்கம் செலுத்தவேண்டிய கடன் தொகைக்கான கால எல்லையும் கடந்த நிலையில் கிரேக்கத்தை ஐரோப்பிய ஒன்றியத்தில் நீட்டிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மீள்கடன் தொகையை பெறவேண்டுமானால் செலவீனக்குறைப்பை மேற்கொள்ளவேண்டுமென்ற நிபந்தனையை 61 வீத கிரேக்க மக்கள் எதிர்த்திருந்தனர். இதனால் கிரேக்கம் இக்கட்டான நிலையினை எதிர்கொண்டது. கிரேக்கத்தின் கடன் சுமை எதிர்வரும் ஆண்டுகளில் 25 வீதம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. வேலையற்றோரின் தொகை 25 வீதமாக அதிகரித்தது. கடன் தொகை குறிப்பிட்ட காலப்பகுதியில் மீள செலுத்தப்படாமையினால் கிரேக்கம் செப்டெம்பர் மாதம் மீண்டுமொரு பொது தேர்தலை எதிர் நோக்கியிருந்தது. ஆனால் மீண்டும் பிரதமராக அலக்சிஸ் சிப்ராஸே தெரிவாகியிருந்ததுடன், யூரோ வலயத்தில் கிரேக்கம் நீடிப்பதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

5.ட்ரான்ஸ்-பசுபிக் கூட்டுறவு

கடந்த 7 வருடங்களுக்குப் பிறகு அமெரிக்கா தலைமையிலான சீன எதிர்ப்பு கூட்டணி 11 நாடுகளின் பங்குபற்றலுடன் அக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்டது. இதுவரலாற்றில் பதிவான வலய பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தமாகும். இது ஒபாமா அரசாங்கத்தின் ஆசிய தலையீட்டின் ஒரு பகுதியாகும். வர்த்தக தொடர்புகளை வளர்த்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், சுற்று சூழல் பாதுகாப்பு போன்றவற்றை அங்கத்துவ நாடுகளிடையே மேம்படுத்தலே இதன் நோக்கமாகும். புருணே, சிலி, நியூசிலாந்து, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, கனடா, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, பெரு, அமெரிக்கா, வியட்நாம் என்பன அங்கத்துவம் பெற்றுள்ளன.

சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தை ஒட்டியதே இந்த நடைமுறையாக தெரிகிறது. உலக வணிக கேந்திரங்களை ஒன்றிணைப்பதே சீனாவின் பட்டுப்பாதை திட்டமாகும். இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில் சீனாவின் பொருளாதார ஸ்திரத்தன்மை உயர்மட்டத்தை அடையும். இதுவே ட்ரான்ஸ் பசுபிக் கூட்டுறவின் தோற்றத்துக்கு காரணம். அடுத்த ஆண்டில் இதன் செயற்பாடுகளில் இவற்றை இனங்காண முடியுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

6.சிரியாவில் ரஷ்யத் தலையீடு

நான்கு வருடங்களாக நீடித்துவரும் சிரிய உள்நாட்டு யுத்தத்தில் 200,000 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 9 மில்லியன் பேர் தமது வீடுகளை இழந்துள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் முதல் ரஷ்யா, சிரியா மீது வான் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் வேண்டுகோளுக்கிணங்கவே தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா கூறினாலும், சிரிய ஜனாதிபதி எதிர்ப்பு கூட்டணி மீதும், அமெரிக்க ஆதரவு படைகள் மீதுமே ரஷ்யா தாக்குதல்களை மேற்கொள்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. கடந்த நவம்பர் மாதம் துருக்கி எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக துருக்கி உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

ஆனால், இதை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சதியாகவே ரஷ்யா கருதுகிறது. ரஷ்யா, சிரிய ஜனாதிபதிக்கு ஆதரவானது. அமெரிக்கா, துருக்கி இதற்கு எதிரானதாகும். எனவே, மறைமுக யுத்தமாகவே இது கருதப்படுகிறது. சிரியாவில் ரஷ்யா மேற்கொண்டுள்ள தாக்குதல்களின் எதிரொலியாகவே இது தென்படுகிறது. ரஷ்யா-அமெரிக்காவின் உறவு நாளுக்கு நாள் விரிசலடைந்து வரும் நிலையில் சிரியாவில் ரஷ்யாவின் தலையீடும் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்நிலைமை எதிர்வரும் ஆண்டுகளிலும் நீடிக்கவாய்ப்புண்டு

7.உலக காலநிலை மாற்றத்திற்கான உடன்படிக்கை

மனித வாழ்வுக்கு எதிராக இருக்கும் உலக காலநிலை மாற்ற விடயங்களில் உலகநாடுகள் மென்போக்கையே கொண்டிருக்கின்றன. 1992 இல் உருவான கியோட்டோ உடன்படிக்கையும் பெரிதளவில் வெற்றியளிக்கவில்லை. கடந்த நவம்பர் மாதம் 195 நாட்டுத் தலைவர்கள் பாரிஸில் ஒன்றுகூடி காலநிலை மாற்றத்துக்கு எதிரான புதிய திட்டங்களை ஒன்று திரட்டியிருந்தனர். இரண்டு வாரங்களாக இடம்பெற்ற இம்மாநாட்டில் காலநிலை மாற்றத்தில் உள்ள சவால்களை முறியடிப்பதற்கான வழிமுறைகள், காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துகின்றன காரணிகளை குறைத்தல், உள்ளிட்ட அம்சங்களடங்கிய 31 பக்க ஆவணத்தில் சகல நாடுகளும் கைச்சாத்திட்டிருந்தன.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுடன் அமுலுக்கு வரவுள்ள இத்திட்டமானது, பாரிஸ் மாநாட்டின் மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. எதிர்வரும் ஆண்டுகளில் இவற்றில் உலக நாடுகள் கவனம் செலுத்தி காலநிலை மாசடைவு காரணிகளை எதிர்த்து செயற்பட முனைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னைய ஆண்டுகளை விட 2015 ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்துக்கான காரணிகள் துரிதப்பட்டிருந்தன. அவற்றை தடைசெய்வதற்கான காலம் தற்போது கனிந்துள்ள நிலையில் 2016 இல் இதனை எதிர்பார்க்கலாம்.

8.சீனாவின் நாணய பெறுமதியிழப்பு மற்றும் பொருளாதார வீழ்ச்சி

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பெய்ஜிங் உலகப்பங்குச் சந்தையில் நாணயபெறுமதியிழப்பை சந்தித்து வருகின்றது. யுவான் அல்லது ரென்மின்பி என அழைக்கப்படும் சீன நாணயங்கள் டொலருக்கெதிரான நாணய மதிப்பிறக்கத்தை பெற்றுள்ளன. ஆகஸ்ட் 11 ஆம் திகதி 1.9 வீதமும் 12 ஆம் திகதி 1.6 வீதமும் நாணயத்தின் பெறுமதியை சீனா குறைத்திருந்தது. சீனநாணயமான ரென்மின்பியின் பெறுமதியைக் குறைத்ததன் மூலம் சீன பொருளாதாரத்தின் வலுவிழந்த நிலை வெளிப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். 2015 ஜூலை மாதத்திற்கான சீன ஏற்றுமதி 8.3 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

தனது ஏற்றுமதியை தக்கவைத்துக் கொள்ள ரென்மின்பியின் பெறுமதி டொலருக்கு எதிராக 15 வீதம் குறையவேண்டுமென நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் சீனா இம்முடிவை எடுத்திருந்தது. அதேபோல் உலக பொதுபணபரிமாற்று அலகாக டொலர் இருக்கின்ற நிலையில் ரென்மின்பியின் பெறுமதியையும் அதற்கு நிகராக கொண்டுவருவதே சீனாவின் மறைமுக நோக்கமாகவும் இருக்கிறது. 2016 ஆம் ஆண்டு அதற்கான நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளலாமென தெரிகிறது.

9.தெனசீனக்கடலில் சீனாவின் செயற்கை தீவு

தென்சீனக்கடலில் சீனாவால் உருவாக்கப்படும் செயற்கை தீவு விவகாரத்தால் அண்டைய நாடுகள் பாதுகாப்பு விடயத்தில் அதிகளவு பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளன. வியட்நாமுக்குக் கிழக்கே தென்சீனக்கடலில் ஸ்ப்ரட்லி தீவுக்கூட்டம் உள்ளது. இதனை சீனா, வியட்நாம், தாய்வான், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருணே ஆகிய நாடுகள் உரிமை கோரி வருகின்றன. இந்நிலையில் சர்ச்சைக்குரிய ஸ்ப்ரட்லி தீவுப்பகுதியில் சீனா புதிய செயற்கை தீவொன்றை உருவாக்கி வருகிறது.

3கிலோமீற்றர் நீளத்தில் விமானத்தளம் அமைக்கும் வகையில் அமைந்திருப்பதோடு சரக்குகப்பல், போர் கப்பல்களை நிறுத்தும் வகையில் துறைமுகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இது தென்சீனக்கடலின் ஆதிக்கத்தை சீனா தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சியாகும். ஒவ்வொரு வருடமும் சுமார் 5 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தக நடவடிக்கைகள் இப்பகுதியினூடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிக்கிறது. ஆனால் அமெரிக்காவின் தலையீடு காரணமாக இந்நிலை இன்னும் மோசமடையலாம்.

10.யேமனில் சவூதியின் தலையீடு

கடந்த மார்ச் மாதம் முதல் சவூதி வான்தாக்குதல்களை யேமனில் தனது ஒன்பது அரபு கூட்டணி நாடுகளின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டுவருகின்றது. தீவிரவாதிகள் யேமனின் தலைநகரை கைப்பற்றியுள்ளதால் ஜனாதிபதி மன்சூர் ஹாதி சவூதியில் தஞ்சமடைந்திருந்தார். யேமனின் சிறுபான்மையினரான ஹௌதிகள் ஈரானின் அணுசரணையோடு யேமனில் போராடுகின்றனர். ஈரான், சவூதியின் மிகப்பெரும் எதிரி நாடாகும். ஹளதிகள் ஏற்கனவே யேமனின் முன்னாள் ஜனாதிபதியான அப்துல்லா கலாஹுக்குக்கு ஆதரவு தெரிவித்துவந்தனர். அரபு வசந்தத்தின் போது ரியாத்துடன் அதிகம் தொடர்புகளை இவர் பேணியிருந்தார்.

அதேவேளை அமெரிக்காவிற்கு மிகப்பெரிய எதிரியாக அரேபிய தீபகற்ப அல்கொய்தா இருக்கின்றது. இதனால் கூட்டுப்படைத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. தற்போதைய நிலையில் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள், கண்காணிப்பு கருவிகளை ஈரான் வழங்கி வருகின்றது. சமாதானப் பேச்சுவார்த்தையின் பின் இம்மாதம் 7 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. ஆனால் அவை தொடருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதனால் யேமன் உடனடி போர்நிறுத்தத்தை ஆரம்பிக்க பேச்சுவார்த்தை மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு 2015 ஆம் ஆண்டு முக்கிய பல விடயங்களை கடந்துள்ளதுடன், ஆரம்பித்தும் உள்ளது. இம்மோசமான நிலைமைகள் 2016 ஆம் ஆண்டும் தொடருமாயின் உலகம் பல மோசமான விளைவுகளை சந்திக்க நேரலாம். சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை பெரிதும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை உலக நாடுகளுக்கு உண்டு.“ அவற்றை 2016 ஆம் ஆண்டு நிறைவு செய்யும் என எதிர்பார்க்கலாம்.

க.பிரசன்னா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக