மலைநாட்டு சிறுத்தைகளின் அதிகரிப்பானது, மனித – சிறுத்தை மோதலை அதிகரிக்க வழிவகுத்திருக்கின்றது. இதனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பணியிட சூழலை வழங்குவது யாருடைய பொறுப்பு? தோட்ட நிர்வாகங்கள் தோட்டங்களை முறையாக பராமரிக்காத ஒரு சூழ்நிலையில் அவை காடுகளாக உருமாறத் தொடங்கியுள்ளன. இதனால் வன விலங்குகள் தோட்டங்களை நோக்கி நகருவதை தவிர்க்க முடியாதுள்ளது. பெருந்தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் 200 வருடங்களை கடந்தும் இன்னும் பாதுகாப்பான பணியிட சூழலுக்கு மாற்றப்படாமையும் வருத்தத்துக்குரிய விடயமாகும்.
தோட்டத் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஏற்கனவே சிறுத்தைகளின் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதையும் தோட்டங்களுக்குள் நுழைந்த சிறுத்தைகள் வலைகளில் சிக்கி உயிரிழந்த சம்பவங்களும் அதிகம் பெருந்தோட்டப் பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அவற்றின் நடமாட்டம் விரிவடைந்து மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சுற்றுச்சூழல் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. மலையக சிறுத்தைகளின் சனத்தொகை அதிகரிப்பு காரணமாக அவற்றின் இறப்பு வீதமும் அதிகரித்துள்ளதாக நக்கிள்ஸ் அபே சுற்றாடல் அமைப்பின் பிரதிநிதி சமிந்த விதானகே தெரிவித்துள்ளார். (டெய்லி மிரர்)
சிறுத்தைகளில் பெரும்பாலானவை கம்பி பொறிகளில் சிக்கி உயிரிழப்பதாகவும் 2020 இல் 15 சிறுத்தைகளும் 2021 இல் 8 சிறுத்தைகளும் 2022 இல் ஏழு சிறுத்தைகளும் மனித நடவடிக்கைகளால் உயிரிழந்துள்ளன. நுவரெலியா மற்றும் புளத்கொஹ_பிட்டிய பிரதேசங்களில் கடந்த வருட இறுதியில் கம்பி பொறிகளில் சிக்கி இரண்டு சிறுத்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் நாய்கள் மற்றும் ஏனைய வீட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக மனித வாழ்விடங்களுக்குள் சுற்றித்திரியும் சிறுத்தைகள் கொல்லப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மலைநாட்டுச் சிறுத்தைகளின் நடமாட்டம் ஸ்ரீபாத வனப்பிரதேசம், ஹட்டன், நாவலப்பிட்டிய, கினிகத்தேனை, யட்டியாந்தோட்டை, தொலஸ்பாகே, தெதுகல, இஹலதுவ, தம்பெல்கொட, பொகவந்தலாவ, பலாங்கொட, கொட்டகலை, தலவாக்கலை, போபத்தலாவ, நுவரெலியா, ஹக்கல, புஸ்ஸல்லாவ, ஹேவாஹெட்ட, தெல்தொட்டை, கலஹா, பெராதெனிய மற்றும் கம்பளை பகுதிகளிலும் அதிகம் காணப்படுவதாகவும் இதுவரை 800 மலைநாட்டு சிறுத்தைகள் இருந்தாலும் அவற்றை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டங்களுக்கு நுழையும் சிறுத்தைகள்
மலைநாட்டு சிறுத்தைகளின் பெருக்கம் அவை பெருந்தோட்ட மக்களின் குடியிருப்பு மற்றும் பணியிடங்களுக்கு வரும் சந்தர்ப்பத்தை அதிகரித்துள்ளது. இதனால் மனித – சிறுத்தை மோதல்கள் அதிகரித்து காணப்படுகின்றன. 2015 – 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மத்திய மாகாணத்தில் 35 சிறுத்தைகளும் ஊவா பிராந்தியத்தில் 11 சிறுத்தைகளும் கிளிநொச்சி பிராந்தியத்தில் 2 சிறுத்தைகளும் அநுராதபுரம் பிராந்தியத்தில் 2 சிறுத்தைகளும் பொலனறுவை பிராந்தியத்தில் 2 சிறுத்தைகளும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சிறுத்தைகளின் தாக்குதல்கள் தொடர்பிலான ஊடக அறிக்கையிடலை அடிப்படையாகக் கொண்டு திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 2015 – 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெருந்தோட்டப் பகுதியில் சிறுத்தையின் தாக்குதலினால் 32 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் அதிகமானோர் தோட்டத் தொழிலாளர்களாவர்.
மனித – சிறுத்தை மோதல்கள் அதிகரிப்பினால் சிறுத்தைகளின் நடமாட்டத்தை குறைப்பதற்கு மக்கள் கம்பி வலைகளை (பொறிகள்) அமைக்கும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். அத்துடன் ஏனைய காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக அமைக்கப்படும் கம்பி பொறிகளுக்குள் சிறுத்தைகள் சிக்கி மரணிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு 2015 – 2023 மார்ச் காலப்பகுதியில் 41 சிறுத்தைகள் உயிரிழந்துள்ளன. (இவற்றில் இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டு இறந்த சிறுத்தைகளும் உள்ளடங்கும்) அத்துடன் தேயிலை தோடடங்களில் இருந்து 29 சிறுத்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் இரவு வேளைகளில் சிறுத்தைகள் வருகைத்தருவதும் அங்குள்ள நாய்களை வேட்டையாடிச் செல்வதும் பல சந்தர்ப்பங்களில் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரிப்பதானது பெருந்தோட்ட மக்களுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதோடு தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக சட்டவிரோத வழிமுறைகளை பின்பற்றுவதையும் தவிர்க்க முடியாத நிலையும் காணப்படுகின்றது.
2020 – 2023 வரையான சிறுத்தை மரணம் மற்றும் தாக்குதல்கள்
18 ஏப்ரல் 2020: மஸ்கெலியா காட்மோர் தம்பேதன்ன தோட்டத்தில் ஐந்து அடி நீளமான பெண் சிறுத்தையொன்று மரத்தில் சிக்கிய நிலையில் மீட்பு: பின்னர் சிகிச்சை பலனின்றி மரணம்.
24 ஏப்ரல் 2020: ஹட்டன், டிக்கோயா எட்லி தோட்ட தேயிலை மலை பகுதியில் சிறுத்தையொன்று உயிருடன் மீட்பு.
29 மே 2020: யட்டியாந்தோட்டை, சீபொத் பகுதியில் பொறியொன்றில் சிக்கிய நிலையில் சிறுத்தை மீட்பு.
04 ஜூன் 2020: ஹப்புத்தளை கெல்பன் பெருந்தோட்ட தேயிலைப் புதருக்குள்ளிருந்து சிறுத்தையொன்று இறந்த நிலையில் மீட்பு.
23 ஜூன் 2020: புசல்லாவை, ஹெல்பொட தோட்டப் பகுதியில், இரண்டு சிறுத்தைகள் வலையில் சிக்கிய நிலையில் ஒரு சிறுத்தை மரணம்.
02 ஜூலை 2020: நாவலப்பிட்டி, மாப்பாகந்த பகுதியில் உள்ள காடொன்றில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு.
12 ஜூலை 2020: கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெனில்வத்த தோட்டப் பகுதியில் வலையில் சிக்குண்ட நிலையில் சிறுத்தையொன்று உயிருடன் மீட்பு.
23 ஆகஸ்ட் 2020: கம்பளை, தொலுவ பகுதியில் இன்றைய தினம் மேலும் ஒரு சிறுத்தை பொறியில் சிக்கி உயிரிழந்துள்ளது.
23 ஆகஸ்ட் 2020: பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவ் தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீது மரத்தின் மேல் இருந்த சிறுத்தை பாய்ந்ததால் இருவர் காயம்.
22 செப்டெம்பர் 2020: மஸ்கெலியா, பிரவுன்லோ தோயிலைத் தோட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சிறுத்தையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
25 செப்டெம்பர் 2020: கண்டி, உடுதும்பற பகுதியில் சிறுத்தையொன்றை கொன்று, அதன் இறைச்சியை விற்பனை செய்த மூவர் கைது.
03 அக்டோபர் 2020: கொட்டகலை கிறிலஸ்பாம் பகுதியில் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை
09 அக்டோபர் 2020: நுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகி தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு.
27 அக்டோபர் 2020: தலவாக்கலை, டயகம பிரதான வீதியில் லிந்துலை நாகசேனை பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையொன்று மீட்பு.
06 ஜனவரி 2021: ஹட்டன் லெதண்டி தோட்டத்தில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு.
15 பெப்ரவரி 2021: பொகவந்தலாவ சீனாகொலை (செப்பல்ட்டன்) தோட்ட எல்லை பகுதியில் பொறியில் சிக்குண்ட சிறுத்தை தப்பியோட்டம்.
24 பெப்ரவரி 2021: கொட்டகலை மேபீல்ட் தேயிலை மலையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு.
24 மார்ச் 2021: அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போபத்தலாவ வனப் பகுதியில் கம்பிகளில் சிக்குண்டு, காயமடைந்த நிலையில் சிறுத்தை மீட்பு.
04 ஜூலை 2021: டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேவர்லி தோட்டப்பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு.
25 ஆகஸ்ட் 2021: நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஸ்டோல் தோட்டத்தில் சுமார் இரண்டு வயதுடைய சிறுத்தை குட்டி இறந்த நிலையில் மீட்பு.
02 டிசம்பர் 2021: நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட புளியாவத்தை பிலிங்பொனி தோட்ட தேயிலை மலையில் இருந்து சிறுத்தையின் உடல் மீட்பு.
12 ஜனவரி 2022: பத்தனை குயின்ஸ்பெரி தோட்ட தொழிற்சாலைக்கு செல்லும் வீதிக்கு அருகாமையில் சிறுத்தையொன்றின் சடலம் மீட்பு.
05 ஆகஸ்ட் 2022: தலவாக்கலை கூம்வூட்டில் உயிருடன் சிறுத்தை மீட்பு.
05 ஆகஸ்ட் 2022: தலவாக்கலை மல்லிகைப்பூ தோட்டத்தில் சிறுத்தை தாக்குதலில் ஒருவர் காயம்.
07 ஆகஸட் 2022: ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குபட்ட டிக்கோயா வனராஜா பழையகாடு தோட்டப்பகுதியிலிருந்து சிறுத்தையொன்று உயிருடன் மீட்பு
12 அக்டோபர் 2022: பொகவந்தலாவ – செப்பல்ட்டன் தோட்டத்தின் மேற்பிரிவில் சிறுத்தை உயிருடன் மீட்பு.
12 அக்டோபர் 2022: இராகலை, ஹய்பொரஸ்ட் தோட்டத்தில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு.
13 அக்டோபர் 2022: அட்டன் – டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு சிறுத்தைகள்.
07 ஜனவரி 2023: அக்கரபத்தனை நியூ கொலனி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அவதானிப்பு.
10 பெப்ரவரி 2023: தலவாக்கலை வட்டகொடை தெற்கு மடக்கும்புற தோட்டத்தில் மூன்று சிறுத்தைக் குட்டிகள் உயிருடன் மீட்பு.
14 பெப்ரவரி 2023: சிறுத்தையை கொன்று இறைச்சிக்கு விற்பனை செய்த இருவர் பொகவந்தலாவ கொட்டியாக்கலையில் கைது.
26 பெப்ரவரி 2023: ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெரோல் தோட்டத்தில் மலசலகூடத்தில் சிறுத்தை உயிருடன் மீட்பு.
01 மார்ச் 2023: பொகவந்தலாவ டியன்சின் தோட்டப்பகுதியில் முதலாம் இலக்க தேயிலை மலையில் ஆண் தொழிலாளி ஒருவர் மீது சிறுத்தை தாக்குதல்.
பிரச்சினை எப்போது ஆரம்பித்தது?
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் சிவப்பு பட்டியலில் இலங்கை சிறுத்தை பாதிக்கப்படக்கூடியதாக பட்டியலிடப்பட்டுள்ளது, 800 க்கும் குறைவான முதிர்ந்த சிறுத்தைகள் உயிருடன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் வாழ்விடத்தை ஆக்கிரமித்து வேட்டையாடுவது மனித - சிறுத்தை மோதலை அதிகப்படுத்தியுள்ளதாக மழைக்காடுகளுக்கான கூட்டமைப்பின் ஆலோசகரும் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் தலைவருமான ஜெஹான் கனகரெட்ன தெரிவித்துள்ளார். (த மோர்னிங்)
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், சுமார் 24 சிறுத்தைகள் - ஒரு அரிய கருப்பு சிறுத்தை உட்பட - கொல்லப்பட்டுள்ளன. இவற்றில் 90 வீதமானவை தேயிலைத் தோட்டங்களில் நிகழ்கின்றன. தேயிலை தோட்டங்களில் காடுகளை அழித்தல், மக்கள் குடியிருப்புகள், சிறுத்தை பற்றிய விழிப்புணர்வு இந்த சமூகத்திடம் இல்hமை சிறுத்தைகளின் நடமாட்டத்தை அதிகரித்துள்ளது.
மனித - சிறுத்தை மோதல் இந்தியாவில் நடப்பது போன்ற பகுதிகளில் இல்லை, ஆனால் இலங்கையில், கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில், குறிப்பாக மலையகத்தில் சிறுத்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது முதன்மையாக வாழ்விடம் இழப்பு மற்றும் இரை இழப்பு காரணமாக தூண்டப்படுகிறது. அதன் இரை முன்பை விட அதிக எண்ணிக்கையில் வேட்டையாடப்படுகிறது என்பதும் கையில் உள்ள சவால்களை அதிகரிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.இலங்கையில் தேயிலை உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகளை கடக்கின்றபோதும், சிறுத்தைகளின் நடமாட்டம் சமீப காலங்களிலேயே அதிகரித்துள்ளது. கடந்த 10 - 20 ஆண்டுகளில் நடந்த காடழிப்பு மற்றும் மனித மக்கள்தொகை அதிகரிக்கும்போது, அவர்கள் வன நிலங்களுக்குள் அத்துமீறி நுழைவதால் மோதல்கள் அதிகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. தோட்டத் தொழிலாளர்களில் சுமார் 30 – 35 வீதத்தினர் மட்டுமே உண்மையில் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள். இதனால் ஏனையோரால் வேட்டையாடும் நடவடிக்கை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் 42 சிறுத்தைகள் பொறி வைத்து கொல்லப்பட்டுள்ளன. இவற்றில் 50 வீதமானவை கடந்த இரண்டு ஆண்டுகளில் கொல்லப்பட்டுள்ளன. சிறுத்தைகள் கொள்ளப்படுவதானது, விவசாயத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
சிறுத்தைகள் இறைச்சிக்காகவும் உடல் உறுப்புகளுக்காகவும் வேட்டையாடப்படும் நேரங்களும் உண்டு, ஆனால் பொதுவாக சிறுத்தைகள் சிறிய விலங்குகளுக்கான பொறிகளில் சிக்கி இறந்துவிடுகின்றன. அவற்றிலிருந்து விடுபடும் முயற்சியால் இறக்கின்றன. சிறுத்தைகள் மனிதர்களைக் கொல்வதில்லை என்ற செய்தியை நாம் தெளிவாகச் சொல்ல வேண்டியிருந்தது. ஏனென்றால் மனிதர்கள் அவற்றின் இரை இனம் அல்ல. எனவே, மனிதர்களைக் கொல்வது அவர்களின் டி.என்.ஏவில் இல்லை என்றாலும், ஒரு மனிதன் சிறுத்தைக்கு சவால் விடக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு?
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுத்தைகளினால் அதிகமாக பணியிடங்களிலேயே ஆபத்தினை எதிர்கொள்கின்றனர். சிறுத்தைகளால் தாக்கப்பட்ட பெரும்பாலான சம்பவங்கள் தேயிலை தோட்டங்களிலேயே இடம்பெற்றுள்ளன. எனவே சிறுத்தைகளை தொழிலாளர்கள் தாக்காவிட்டாலும் அவர்களை சிறுத்தைகள் தாக்கும் அபாயம் எப்போதும் காணப்படுகின்றது. எனவே அவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகும் அபாயம் உள்ள பெருந்தோட்ட மக்களுக்கு யார் பாதுகாப்பு வழங்குவது என்ற கேள்வி எழுகின்றது.
‘பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொழில் புரியும் களம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் எவ்வித சட்ட விளக்கங்களும் இல்லை. நட்டஈட்டு கட்டளைச் சட்டத்தின் மூலம் விபத்துக்களுக்கான நிவாரணங்களை பெறுவதற்கான பொறிமுறை காணப்பட்டாலும் சிறுத்தை தாக்குதலை விபத்தாக கொண்டுவருவதில் சிக்கல் காணப்படுகின்றது. இதனால் கம்பனிகள் இவ்வாறான பிரச்சினைகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு காப்புறுதி பொறிமுறையினை கையாள்கின்றனர்’ என சட்டத்தரணி சுகுமாரன் விஜயகுமார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இறுதியாக இடம்பெற்ற கூட்டு ஒப்பந்தத்தில் கள பிரதேசங்களை முறையாக பராமரிக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்வாறெனின் அவற்றை கண்காணிப்பது யார்? முகாமைத்துவமே அதனை கண்காணித்தால் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்புடுத்த முடியாது. எனவே இவற்றுக்கான தனியான பொறிமுறை அவசியமாகும். வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து இதற்கான திட்டம் வகுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து கம்பனிகள் விலகியிருந்தன. இதனால் பெருந்தோட்டங்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில உரிமைகளில் இருந்தும் தொழிலாளர்கள் விடுபட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆனந்தி சிவசுப்ரமணியம் கருத்து தெரிவிக்கையில், ‘தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படாமையே சிறுத்தைகளின் நடமாட்டத்துக்கு பிரதான காரணமாகும். இந்நிலையானது தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது, அவர்களது குடும்பங்கள், வளர்ப்பு பிராணிகள் என்பவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு தோட்ட நிர்வாகம் பொறுப்பு கூற வேண்டும். தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொழில் வழங்குநரின் கடமை. தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கூட்டு ஒப்பந்தம் காணப்பட்ட நிலையில் தற்போது அவை இல்லாமலாக்கப்பட்டுள்ளது. பொது சட்டத்தை பயன்படுத்தினாலும் கூட்டு ஒப்பந்தம் அவர்களின் உரிமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தியது' என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இதனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான தனியானதொரு சட்டமுறைக்கான தேவை இருக்கின்றது. அந்த சட்டங்கள் உருவாக்கப்படவில்லை. பெருந்தோட்டங்கள் முறைசார் தொழில் துறையாக இருக்கும் போது தொழிலாளர்களின் உரிமை பாதுகாக்கப்பட்டது. இன்று பெருந்தோட்டங்கள் முறைசார் தொழில்துறையாக மாற்றப்பட்டுள்ளமையால் அவர்களின் உரிமை பாதுகாப்பற்ற நிலையினை எட்டியுள்ளது. மலையகம் 200 வருடங்களை எட்டியுள்ளபோதும் தொழிலாளர்களின் சுயமரியாதை உறுதிப்படுத்தப்படவில்லை. விபத்துக்களின் போது தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய நஷ்டஈடுகள் தொடர்பில் நஷ்டஈட்டு சட்டத்தில் குறிப்பிடப்பட்டாலும் சிறுத்தை தாக்குதல், குளவி தாக்குதல், பாம்புகடி போன்றவற்றுக்கான நஷ்டஈடுகள் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. எனவே சட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
எனவே இலங்கையில் 200 வருடகால வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்டத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் தொழில் பாகாப்பினையே உறுதிப்படுத்த முடியாத நிலையில் வாழ்கின்றமையை எம்மால் உணரமுடிகின்றது. இதற்கான பொறிமுறையினை உருவாக்குவது அவசியமாக காணப்படுகின்றது. மலையகம் 200 நிகழ்ச்சி நிரலில் இவ்வாறான விடயங்களையும் உள்ளடக்க வேண்டும். சிறுத்தைகளை பெருந்தோட்டங்களை விட்டு அகற்றுவது சாத்தியமான விடயமா என்பதில் கேள்வி காணப்பட்டாலும் அவற்றின் தாக்குதல்களில் இருந்து தம்மை எவ்வாறு சுயமாக பாதுகாத்துக்கொள்வது என்பது தொடர்பில் தெளிவுபடுத்துவது அவசியமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக