கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

27 பிப்ரவரி, 2023

வட மாகாணத்தில் அதிகரிக்கும் பாடசாலை இடைவிலகல்கள்


  • இலவச கல்வியினை பெற்றுக்கொள்வதில் காணப்படும் தடைகள் என்ன?
  • 2020 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வட மாகாணத்தில் 2206 மாணவர்கள் பாடசாலை கல்வியினை இடைநிறுத்தியுள்ளதாக வடமாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் தகவல்களின் படி, 2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரீட்சைப் பரீட்சைக்கு வட மாகாணத்தில் தோற்றிய 17,627 மாணவர்களில் 2749 மாணவர்கள் வெட்டுப்புள்ளி மற்றும் அதற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். 7344 மாணவர்கள் 100 புள்ளிகள் அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளையும் 13,846 மாணவர்கள் 70 புள்ளிகளையும் அதற்கு மேற்பட்ட புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளனர். இறுதியாக வெளியான 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வடமாகாணத்தில் பரீட்சைக்குத் தோற்றிய 16,563 மாணவர்களில் 12,002 மாணவர்கள் உயர்தரத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் 2020 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வட மாகாணத்தில் 2206 மாணவர்கள் பாடசாலை கல்வியினை இடைநிறுத்தியுள்ளதாக வடமாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வட மாகாண கல்வித் திணைக்களத்தின் தகவல் அதிகாரி திருமதி கி.வாசுதேவன் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இவற்றை எம்மால் அறிந்துகொள்ள முடிந்ததுடன் பெரும்பாலான மாணவர்கள் வறுமை மற்றும் குடும்ப பிரச்சினைகளினால் பாடசாலை கல்வியினை இடைநிறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வட மாகாணத்தில் இயங்கும் பாடசாலைகள்

வட மாகாணத்தில் 2020 ஆம் ஆண்டு 1003 பாடசாலைகள் இயங்கிய நிலையில் 2022 ஆம் ஆண்டு 996 பாடசாலைகளே இயங்குவதாக வடமாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் படி 2020 ஆம் ஆண்டு 950 தமிழ் மொழி மூல பாடசாலைகள் காணப்பட்ட நிலையில் 2022 ஆம் ஆண்டு 942 தமிழ் மொழி மூல பாடசாலைகளே காணப்படுகின்றன. 7 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதேவேளை 2022 ஆம் ஆண்டு புதிதாக ஒரு சிங்கள மொழிமூல பாடசாலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் 455 பாடசாலைகளும் (440 தமிழ்மொழி மூல பாடசாலைகள் மற்றும் 15 தமிழ், ஆங்கில மொழி மூல பாடசாலைகள்) கிளிநொச்சி மாவட்டத்தில் 104 பாடசாலைகளும் (102 தமிழ் மொழி மூல பாடசாலைகள் மற்றும் 2 தமிழ், ஆங்கில மொழிமூல பாடசாலைகள்) மன்னார் மாவட்டத்தில் 136 பாடசாலைகளும் (134 தமிழ் மொழி மூல பாடசாலைகள் மற்றும் 2 சிங்கள மொழிமூல பாடசாலைகள்) வவுனியா மாவட்டத்தில் 174 பாடசாலைகளும் (150 தமிழ் மொழி மூல பாடசாலைகள், 4 தமிழ், ஆங்கில மொழிமூல பாடசாலைகள் மற்றும் 20 சிங்கள மொழிமூல பாடசாலைகள்) முல்லைத்தீவு மாவட்டத்தில் 127 பாடசாலைகளும் (116 தமிழ் மொழி மூல பாடசாலைகள், 2 தமிழ், ஆங்கில மொழிமூல பாடசாலைகள் மற்றும் 9 சிங்கள மொழிமூல பாடசாலைகள்) தற்போது இயங்கி வருகின்றன.

வட மாகாணத்தில் கல்வி கற்கும் மாணவர்கள்

2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வட மாகாணத்தில் 238,517 பேர் பாடசாலை கல்வியினை தொடர்ந்து வருகின்றனர். இவர்களில் யாழ் மாவட்டத்தில் 116,104 மாணவர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 31,173 மாணவர்களும் மன்னார் மாவட்டத்தில் 27,613 மாணவர்களும் வவுனியா மாவட்டத்தில் 36,067 மாணவர்களும் (31,761 தமிழ் மாணவர்கள் மற்றும் 4306 சிங்கள மாணவர்கள்) முல்லைத்தீவு மாவட்டத்தில் 27,560 மாணவர்களும் (25,139 தமிழ் மாணவர்கள் மற்றும் 2421 சிங்கள மாணவர்கள்) கல்வி கற்று வருகின்றனர். 

வட மாகாணத்திலுள்ள மொத்த மாணவர்களில் 119,099 ஆண்களும் 119,418 பெண்களும் உள்ளடங்குவர். இவர்களில் 3392 சிங்கள மொழிமூல ஆண் மாணவர்களும் 3335 சிங்கள மொழிமூல பெண் மாணவர்களும் காணப்படுகின்றனர். வட மாகாணத்தில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாத்திரமே சிங்கள மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

கல்வியை இடைநிறுத்தும் மாணவர்கள்

வடமாகாணத்தில் பெருவாரியான மாணவர்கள் கல்வி நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தாலும் கடந்த இரு வருடங்களில் 2206 மாணவர்கள் பாடசாலை கல்வியினை இடைநிறுத்தியுள்ளனர். வட மாகாணத்திலுள்ள 13 கல்வி வலயங்களில் 2020 ஆம் ஆண்டு 485 மாணவர்களும் 2021 ஆம் ஆண்டு 1127 மாணவர்களும் 2022 ஆம் ஆண்டு 616 மாணவர்களும் கல்வியினை இடைநிறுத்தியுள்ளனர்.


2020 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் பாடசாலை கல்வியினை இடைநிறுத்தியவர்களில் 268 ஆண்களும் 217 பெண்களும் உள்ளடங்குவர். இவர்களில் தரம் 8 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களே அதிகம் பாடசாலை கல்வியினை இடைநிறுத்தியுள்ளனர். அதிகமாக மடு கல்வி வலயத்தில் 94 மாணவர்களும் மன்னார் கல்வி வலயத்தில் 82 மாணவர்களும் கிளிநொச்சி தெற்கில் 52 மாணவர்களும் கிளிநொச்சி வடக்கில் 51 மாணவர்களும் பாடசாலையிலிருந்து இடைவிலகியுள்ளனர். 2020 ஆம் ஆண்டு இடைவிலகிய 485 மாணவர்களில் தரம் 8 இல் 38 ஆண்களும் 21 பெண்களுமாக 59 மாணவர்களும் தரம் 9 இல் 45 ஆண்களும் 34 பெண்களுமாக 79 பேரும் தரம் 10 இல் 76 ஆண்களும் 59 பெண்களுமாக 135 பேரும் தரம் 11 இல் 85 ஆண்களும் 55 பெண்களுமாக 140 பேரும் தரம் 12 இல் 12 ஆண்களும் 25 பெண்களுமாக 37 பேரும் தரம் 13 இல் 11 ஆண்களும் 23 பெண்களுமாக 34 பேர் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகியுள்ளனர். 

2021 ஆம் ஆண்டு 1127 மாணவர்கள் தங்களது பாடசாலை கல்வியினை இடைநிறுத்தியுள்ளனர். அதிகமாக கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தில் 181 மாணவர்களும் வலிகாமம் கல்வி வலயத்தில் 148 மாணவர்களும் மன்னார் கல்வி வலயத்தில் 135 மாணவர்களும் பாடசாலையிலிருந்து இடைவிலகியுள்ளனர். இவற்றில் கரைச்சி கோட்ட கல்வி வலயத்தில் 98 பேரும் கண்டாவளை கோட்டத்தில் 92 பேரும் பூநகரி கோட்டத்தில் 83 பேரும் மன்னார் கோட்டத்தில் 60 பேரும் கரைதுறைப்பற்று கோட்டத்தில் 53 பேரும் இடைவிலகியுள்ளனர். 

2022 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் 616 மாணவர்கள் தங்களது கல்வியினை இடைநிறுத்தியுள்ளனர். இவர்களில் 423 ஆண்களும் 193 பெண்களும் உள்ளடங்குவர். அதிகமாக வலிகாமம் கல்வி வலயத்தில் 123 பேரும் (77 ஆண்கள், 46 பெண்கள்) மன்னார் கல்வி வலயத்தில் 135 பேரும் (88 ஆண்கள், 47 பெண்கள்) வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 100 பேரும் (67 ஆண்கள், 33 பெண்கள்) மடு கல்வி வலயத்தில் 56 பேரும் (45 ஆண்கள், 11 பெண்கள்) முல்லைத்தீவு வலயத்தில் 54 பேரும் (38 ஆண்கள், 16 பெண்கள்) இடைவிலகியுள்ளனர். 

இடைவிலகளுக்கான காரணங்கள் என்ன?

2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடமாகாணத்திலுள்ள மாணவர்கள் கல்வியினை இடைநிறுத்துவதற்கு கொவிட் தொற்றும் ஒரு காரணமாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை பெற்றோரின் அக்கறையின்மை, கல்வியில் நாட்டமின்மை, பெற்றோரின் தொழிலுக்கு உதவுதல், குடும்ப பிரிவு, வீட்டுச்சூழல், குடும்ப வறுமை, இளைய சகோதரர் அல்லது முதியோரை பராமரித்தல், தேர்வில் தேர்ச்சி பெறமாட்டேன் என்ற எண்ணம், தொழில் தேடல், சிறுவயதில் தொழில் செய்தல், வருமானம் ஈட்டுதல், தாய் அல்லது தந்தை வெளிநாடு செல்லுதல், மாணவர் வெளிநாடு செல்ல முயற்சித்தல், நோய் நிலைமை, வீட்டில் கண்காணிப்பின்மை போன்ற காரணங்களும் பாடசாலை மாணவர்கள் தங்களது கல்வியை இடைநிறுத்துவதற்கு காரணமாக அமைவதாக வட மாகாண கல்வித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொவிட் தொற்றுக்குப் பின்னரான காலப்பகுதியில் பாடசாலை கல்வியில் பாரிய இடையூறு ஏற்பட்டிருந்தது. பாடசாலைகள் முழுமையாக மூடப்பட்டமையால் மாணவர்கள் கல்வியினை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. அத்துடன் நிகழ்நிலை மூலம் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அதற்கான வசதியில்லாத மாணவர்கள் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதுவும் கல்வி பின்னடைவுக்கான வாய்ப்பை ஏற்படுத்தியது.

கொவிட் தொற்றுக்குப் பின்னரான பொருளாதார நெருக்கடி நிலைமைகள் பெரும்பாலான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதித்தது. இதனால் பெரும்பாலானோர் தொழில் இன்றிய நிலையிலும் குடும்ப வருமானம் பாதிக்கப்பட்ட நிலையிலும் செலவுகளை ஈடுசெய்ய முடியாத நிலையிலும் இருந்தமை பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையினை பாதிக்கும் காரணியாக அமைந்துள்ளது.


போதைப்பொருள் பாவனை காரணமாகின்றதா?

இதேவேளை வட மாகாணங்களில் சமீப காலங்களில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையினாலும் கல்வி நடவடிக்கையிலிருந்து விலகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. யாழ் மாவட்டத்துக்கான கள விஜயத்தின்போது சந்தித்த நபர்களில் பாடசாலை மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இவற்றை தடுப்பதற்கும் கல்வி திணைக்களம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

2022.01.06 ஆம் திகதி சகல கல்வி வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் ‘பாடசாலைகளில் மாணவரைச் சமுதாய மேம்பாட்டுக்கான உறுப்பினர்களாக மாற்றுவதற்கான செயற்றிட்டம் 2022’ எனும் தலைப்பிலான அறிவுறுத்தற் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக பிரதி வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமைகளில் காலைப் பிரார்த்தனையின் பின்னர் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அறிவுறுத்தப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் ஜூன் 26 ஆம் திகதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தையொட்டி ஜூன் 26 ஆம் திகதி முதல் ஜூலை 1 ஆம் திகதி வரையில் பாடசாலை மாணவர்களிடையே தடுப்பு மற்றும் ஒழிப்பிற்கான விழிப்புணர்வு நடைபெறும்.

அக்டோபர் 10 ஆம் திகதி உளவள நாளை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் விழிப்புணர்வு நடைபெறும். இவ்வருடத்தில் இதன் தாக்கம் அதிகளவு இருக்கும் காரணத்தால் செப்டெம்பர் 26 ஆம் திகதியில் இருந்து அக்டோபர் 26 வரையிலான காலப்பகுதியில் மாணவர்களது சுய பாதுகாப்பு, நான் யார், பரிந்துரை போன்ற தலைப்புகளில் செயற்படுத்தவதற்கான அறிவுறுத்தற் கடிதம் சகல கல்விவலயப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி. பாடசாலைகளில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைத் தலைவரின் NCPA/MIU/SANP/2022/04 ஆம் இலக்க 2022.09.22 ஆம் திகதிய அறிவுறுத்தற் கடிதத்துக்கு அமைவாக தேசிய சிறுவர் பாதுகாப்புக் குறித்த சிரேஷ்ட பாடசாலை மாணவர் தலைவர்களுக்கான ‘மாணவர் தூதுவர் தேசிய திட்டம்’ எனும் கடிதம் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் தரம் 9 இல் இருந்து 13 வரையான வகுப்புகள் கொண்ட பாடசாலைகளுக்கு அறிவுறுத்துவதற்கான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், சுகாதார பணிமனை ஆகியவற்றின் வளவாளர்கள் குழுவினரால் தரம் 9 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான விழிப்புணர்வு நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது தெரிவு செய்யப்பட்ட மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வும் இடம்பெறுவதாக வடமாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும் 2023 ஆம் ஆண்டில் பாடசாலை கற்றல் செயற்பாடுகளில் மாணவர்களின் பங்குபற்றல் மற்றும் பாடசாலை இடைவிலகல் தொடர்பான விடயங்களை அறிந்துகொள்வதற்கு வடமாகாண கல்வி திணைக்கள கல்விப் பணிப்பாளரை தொடர்பு கொள்வதற்கு தொடர்ந்தும் முயற்சித்தும் பலனளிக்கவில்லை. பாடசாலை இடைவிலகல்கள் அதிகரிக்கின்றமையானது எதிர்கால கல்வி சமூகத்தை கடுமையாக பாதிக்கும் ஒரு செயற்பாட்டாக அமையக்கூடும். சமூகத்தின் அபிவிருத்திக்கு கல்வி முக்கிய ஆதாரமாக இருக்கும் நிலையில் அவற்றை பிள்ளைகள் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. வடமாகாணத்தில் பெரும்பாலான மாணவர்கள் வறுமை மற்றும் குடும்ப சூழ்நிலையினை கருத்தில் கொண்டு இடைவிலகும் நிலை காணப்படுகின்றது. எனவே பாடசாலைகளின் பழைய மாணவர்கள், கல்விச் சமூகத்தினர் இணைந்து வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான உதவிகளை வழங்க வேண்டும்.

இந்த நிலையை மாற்றுவதற்கு சமூக செயற்பாட்டாளர்கள் கரம் கொடுக்க வேண்டும் பாரிய பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் பல குடும்பங்கள்; கல்விச்செலவுக்கு பெருமளவான தொகையை முதலீடு செய்ய முடியாத நிலையிலுள்ளனர். எனவே இவற்றை கருத்தில் கொண்டு அப்பியாச கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கு உதவுதல், பாடசாலைக்கு தொடர்ந்து செல்லாத மாணவர்களை கண்டறிந்து அவர்களை பாடசாலைக்கு அனுப்ப சமூக ஆர்வலர்கள் உதவல், பாடசாலைகளில் மாணவர் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை நடாத்தல், உளவள ஆலோசனை வழங்கல், மாணவர்களுக்கான வினாத்தாள்களை அச்சிட்டு வழங்குதல் போன்ற அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதன் ஊடாகவும் மாணவர்களின் பாடசாலை இடைவிலகல்களை குறைப்பதற்கான பங்களிப்புகளை வழங்க முடியும்.





















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக