கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

3 ஜூலை, 2019

பெருந்தோட்ட மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர்பில் விழிப்புணர்வு அவசியம்

கல்வியமைச்சின் அண்மையக்கால கல்வி சீர்திருத்தங்கள் மாணவர்களின் எதிர்கால கல்வி மற்றும் தொழில் நடவடிக்கைகளை இலகுவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கின்றது. தரம் ஐந்து மாணவர்களின் புலமைப்பரீட்சையினை கட்டாயமற்றதாக்கியமை, சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்களும் உயர்தரத்தில் கல்வி கற்பதற்கு சான்றிதழ் கற்கை நெறிகளை உருவாக்கியமை என்பவற்றை குறிப்பிடலாம். ஆனால் உயர்தரத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விடயங்கள் முறையாக எத்தனை மாணவர்களுக்கு சென்றடைந்திருக்கின்றது என்பதே எம்முன்னுள்ள கேள்வியாகும்.

அண்மையில் சாதாரண தரப் பரீட்சையெழுதிய மாணவியொருவரை சந்திந்தபோது, அவர் கணிதப்பாடத்தில் திறமைச்சித்தி பெற்றால் மாத்திரமே உயர்தரத்துக்கு செல்லமுடியுமென பாடசாலை அதிபரால் அறிவுறுத்தப்பட்டுள்ளார். ஆனால் அவர் சாதாரண தரத்தில் ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருந்தார். புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட  13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக எவ்விதமான தகவல்களையும் அறிந்திராததுடன் பாடசாலை அதிபரும் இவை தொடர்பாக தெளிவுபடுத்தியிருக்கவில்லை என்று கூறியிருந்தார்.


கல்வியமைச்சின் 37/2017 இலக்க சுற்றறிக்கையின் மூலம் நாட்டிலுள்ள சகல மாகாண பிரதம செயலாளர்கள், கல்வி செயலாளர்கள், கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலை அதிபர்கள் ஆகியோருக்கு இவ்விடயம் தொடர்பாக 2017.09.20 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சுற்றறிக்கை வெளியிடப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடக்கின்ற நிலையில் 2018 ஆம் அண்டு டிசம்பர் மாதம் சாதாரணதரப் பரீட்சையெழுதி 2019 மார்ச் பெறுபேறுகள் வெளியாகிய மாணவியொருவருக்கு இவ்விடயம் தெரியாதிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.பாடசாலைகள் தம்முடைய பாடப் பெறுபேறுகளை 100 வீதத்துக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனவே தவிர மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு செயற்படுவதில்லை. க.பொ.த உயர்தர பாடத்துறை பிரிவுகளுக்குரித்தானதாக விநியோகிக்கப்பட்ட இல. 2016 - 13 சுற்றுநிருபத்தில் குறிக்கப்பட்ட பாடத்துறைப் பிரிவுகள் ஆறுக்கு மேலதிகமாக 12,13 தரங்களுக்காக இந்த ஏழாவது பாடத்துறைப் பிரிவுகள் 13 வருட உறுதிப்படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சித்திட்டம் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


உயர்தரப் பாடப்பிரிவுகளை கொண்ட சகல பாடசாலைகளிலும் இந்த 13 வருட உறுதிப்படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்காக கல்வியமைச்சால் தெரிவு சய்யப்பட்ட 43 பாடசாலைகள் (2017) காணப்படுகின்றன. அங்கு மட்டுமே இந்நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஆனாலும் அவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் பாடத்துறை தொடர்பாக மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்த வேண்டியது பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும். இவை முறையாக அறிவுறுத்தப்படாத நிலையில் சாதாரணத்தரப் பரீட்சையில் ஓரளவு பாடங்களில் சித்திபெற்ற மாணவர்கள் உயர்தரக் கல்வியை தொடர முடியாமல போனதாக மனஉளைச்சலுக்கு ஆளாகுவதும், அத்துடன் தமது கல்விச் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்வதும் வழமையான விடயமாக மாறிவிட்டது. இது மாணவர்களிடையே போதிய தெளிவு இல்லையென்பதையே சுட்டிக் காட்டுகின்றது. இது எமது மலையகக் கல்வி முன்னேற்றத்துக்கு மிகப்பெறும் தடையாகவே அமையும். அமைந்தும் வருகின்றது.

இந்த கல்வி நிகழ்ச்சித் திட்டத்துக்காக 2017 ஆம் ஆண்டில் 42 பாடசாலைகளும் 2018ஆம் ஆண்டு 137 பாடசாலைகளும் அறிமுகம் செய்யப்பட்டன. இத்துறையை பாடசாலையில் ஆரம்பிப்பதற்கு 2 மில்லியன் ரூபாவை கல்வியமைச்சு ஒதுக்கியுள்ளது. பெரும்பாலும் இப்பாடசாலைகள் ஏனைய பெருந்தோட்ட பாடசாலைகளில் இருந்து தொலை தூரத்திலேயே இருக்கின்றன. இங்கு சென்று பாடங்களை கற்பதற்கு ஒரு சில உதவிகளை கல்வியமைச்சு வழங்குகின்றது. மேற்படி நிதியில் மாணவர் அடிப்படையான கொடுப்பனவு தொழின் முறை பயிற்சிக் காலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

எனவே இனிவரும் காலங்களில் சகல மாணவர்களும் தொழில்பயிற்சி நெறிகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை இத்திட்டம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. ஆனாலும் மாணவர்கள் விரும்புகின்ற கற்கைகளை தொடர்வதற்கு வாய்ப்பு காணப்படுமா என்பதும் ஒரு பாடசாலையில் அதிகமான மாணவர்கள் கற்கவிரும்பும் பாடத்துறைக்கே முதன்மையிடம் வழங்கப்படும். அதேவேளை சகல கற்கைநெறிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்ட பாடசாலைகளில் வளவாளர்கள் காணப்படுவார்கள் (ஆசிரியர்கள்) என்பதுவும் தெளிவில்லாத விடயமாகக் காணப்படுகின்றது.

இது தொடர்பாக பாரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை கல்வியமைச்சு மற்றும் உரிய அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக பெருந்தோட்டப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மட்டுமல்லாது பெற்றோர்களுக்கும் தெளிவூட்டல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். சாதாரண தரம் சித்தியடையாவிட்டாலும் அனைவரும் உயர்தரம் கற்கும் வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. இதனை சகலரும் சாதகமாகப் பயன்படுத்த வேண்டும். பாடசாலைக் கல்வியினை நிறைவு செய்யும் போதே தொழிற்கல்வியினை நிறைவு செய்யும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது பெரும்பாலான மலையக, இளைஞர் யுவதிகள் சாதாரண தரத்துடன் கல்வியினை இடைநிறுத்திவிட்டு அல்லது உயர்கல்வியின் பின்னர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்குச் செல்கின்றனர். இது பாராட்டத்தக்க விடயமாக இருந்தாலும் பெரும்பாலும் பணச் செலவுகளை சமாளிக்க முடியாத அல்லது தூர இடங்களுக்கு செல்லவேண்டிய நிலையினை ஏற்படுத்துகிறது.

எனவே 13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சித் திட்டத்தினை அதிகமான பாடசாலைகளில் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னேடுக்கப்படுகின்றன. 2017 ஆம் ஆண்டு 43 பாடசாலைகளில் முன்னோடியாக ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக இவ்வருடம் 154 பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாங் கட்டத்தில் 662 பாடசாலைகளுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. முதலாம் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட பாடசாலைகளுக்கு தேவையான ஆசிரியர்கள் கல்வி அமைச்சினால் ஆட்சேர்க்கப்பட்டுள்ளனர். மூன்றாங் கட்டம் நடைமுறைப்படுத்தும் போது 60 ஆயிரம் மாணவர்கள் வரை பயனாளிகளாக இருப்பார்களென எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட 42 பாடசாலைகள் பெரும்பாலும் தேசிய பாடசாலைகளாகவே காணப்பட்டன. ஆனால் நுவரெலியா மாவட்டத்தில்  தமிழ் தேசிய பாடசாலை காணப்பட்டமையின் காரணமாக மாகாண பாடசாலையான நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனவே எதிர்வரும் காலங்களில் நாடு முழுவதும் இக்கல்வி நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. அதேவேளை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாடத்துறைகள் தேசிய தொழிற் தகைமையினை (Nஙகி) கொண்டனவாக காணப்படுகின்றன. இத்தகைமையினை பூர்த்தி செய்கின்றவர்கள் க.பொ.த. சாதாரணதரம் மற்றும் உயர்தர தகைமைக்கு இணையானவர்களாகவே கருதப்படுவர் என்பதுவும் சிறப்பாகும். இவ்வாறான முன்னோடியான செயற்றிட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் க.பொ.த. சாதாரணதரத்தில் சிறப்பு சித்தி பெற்றால் மட்டுமே உயர்தரம் செல்லமுடியும் என மாணவர்களை அதிபர்கள் தவறாக வழிநடத்தக் கூடாது. தமது பாடசாலையில் உயர்தரம் இருக்கும் நிலையில் வெளிப்பாடசாலைகளுக்கு மாணவர்கள் சென்றுவிடக்கூடாது என்பதில் பல அதிபர்கள், ஆசிரியர்கள் செயற்படுகின்றனர். ஆனால் அந்த மாணவன் எந்தத்துறையை தேர்ந்தெடுக்க விரும்புகின்றான் என்பதை கவனத்தில் கொள்வதில்லை.

இந்நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக மாணவர்கள் மட்டுமல்ல பெற்றோரும் கூட தெளிவற்ற நிலையிலேயே இருக்கின்றனர். எனவே சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின்பு பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களையும் பெற்றோரையும் ஒன்றிணைத்து கலந்துரையாடலொன்றை பாடசாலை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். அல்லது கல்விச் சேவைகளை முன்னேடுக்கும் நிறுவனங்கள், அமைப்புக்களாவது மேற்கொள்ள வேண்டும். எதிர்கால மலையகச் சமூகம் கல்வியில் தன்னிறைவினை காண்பதற்கு இக்காலத்தில் சிறந்த வழிகாட்டல்களை மேற்கொள்வது அவசியமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக