கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

28 மார்ச், 2023

6 வருடங்களாக முழுமைப்படுத்தப்படாத 4000 இந்திய வீட்டுத்திட்டம்


இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு அமைக்கப்படவிருந்த  14,000 தனி வீட்டுத்திட்டங்களில் 4000 தனி வீட்டுத்திட்டம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட பின்னரே 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. ஆனால் முதல் கட்டமாக வழங்கப்பட்ட 4000 வீட்டுத்திட்டங்களில் எத்தனை வீடுகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்பதில் அரசியல் தலைமைகளிடையே கருத்து முரண்பாடு காணப்படுகின்றது. இத்திட்டம் விரைந்து செயற்படுத்தப்படாமையால் மலையக மக்களுக்கான 10 ஆயிரம் வீட்டுத்திட்டமும் முடங்கியுள்ளது. 2012 ஆம் ஆண்டு உறுதியளிக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டம் 2016 ஆம் ஆண்டு முன்னாள் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சால் ஆரம்பிக்கப்பட்டு 6 வருடங்களை கடந்தும் இத்திட்டம் தற்போதுவரை முழுமைப்படுத்தப்படவில்லை.

4000 வீட்டுத்திட்டங்களில் முழுமைப்படுத்தப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை தொடர்பில் ஒவ்வொருவரும் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவ்வாறெனின் வீட்டுத்திட்டத்தை முழுமைப்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது? இவை தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களில் 4000 இந்திய வீட்டுத்திட்டங்களில் 181 தனி வீடுகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சின் தகவல்களின் அடிப்படையில்…

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயற்பட்ட தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் தகவல் அதிகாரி வீ.அருள்ராஜாவினால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு (SMEHCI/2/4/4/RTI-2022) அமைவாக, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்ட 84 வீட்டுத்திட்டங்களைச் சேர்ந்த 3819 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் 5 வீட்டுத்திட்டங்களைச் சேர்ந்த 181 வீடுகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை கீழ் முதல் கட்டமாக வழங்கப்பட்ட 4000 வீடுகளில் இதுவரை 659 வீடுகளுக்கு மாத்திரமே காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. 3341 வீடுகளுக்கான காணி உறுதிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

4000 தனி வீட்டுத்திட்டம்

2016.01.08 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரத்துடன் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடனான 2016.04.01 ஆம் திகதி இடம்பெற்ற புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இந்திய வீடமைப்புத்திட்டத்தின் முதலாம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டது. வீடொன்றுக்கு 950,000 ரூபாவினை இந்திய அரசாங்கம் ஒதுக்கீடு செய்ததுடன் 30,000 ரூபா உரிய பெருந்தோட்ட கம்பனிகளும் 20,000 ரூபா பெறுமதியான உழைப்பு பயனாளிகளாலும் வழங்கப்பட்டது. குறித்த வீடமைப்பு திட்டத்துக்கு தேவையான குடிநீர் வசதிகள், பிரவேச பாதை உள்ளடங்களாக ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. 

இந்திய நன்கொடையின் கீழ் வழங்கப்பட்ட 4000 வீடுகள் முன்னாள் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அவ்வப்போது மாறிய அரசாங்கத்தினால் இத்திட்டம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இறுதியாக முழுமையாக பூர்ர்தி செய்யப்படாத மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பூர்த்தி செய்யப்படாத 1235 வீடுகள் முன்னாள் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானால் கடந்த வருடம் கையளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

புதிய உடன்படிக்கை கைச்சாத்து

இந்நிலையில் 4000 வீட்டுத்திட்டத்தில் எஞ்சியுள்ள வீடுகளை முழுமைப்படுத்துவதற்கு தேவையான நிதியினை பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கிடையில் கடந்த 14 ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.


இந்திய அரசின் நிதி பங்களிப்புடன், மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இவ்வீடமைப்பு திட்டத்தில், ஒரு வீட்டுக்கு தலா 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு சுமார் 28 இலட்சம் ரூபா தேவையென தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே,இத்திட்டத்தில் எஞ்சியுள்ள வீடுகள் புதிய மதிப்பீட்டு விலையின்கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்கான உடன்படிக்கையே அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.

இதன்போது கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், 2020 ஆம் ஆண்டில்,இராஜாங்க அமைச்சராக பதவியேற்கும்போது இந்தியாவின் 04 ஆயிரம் வீட்டு திட்டம் அமுல்படுத்தப்பட்டு வந்தது. அப்போது, 699 வீடுகளே முழுமைப்படுத்தப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தன. சுமார் 02 ஆயிரம் வீடுகளில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்கவில்லை. அவற்றை முழுமைப்படுத்தி பயனாளிகளிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம்.

இதற்கிடையில், கொரோனா, அதன் பின்னர் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் இந்திய வீட்டு திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இக்கால கட்டத்தில் 03 ஆயிரம் ரூபா வரை சீமெந்து விலை அதிகரிக்கப்பட்டது. அன்று ஒரு வீட்டுக்கு 09 லட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போதைய சூழ்நிலையில் ஒரு வீட்டுக்கு 28 இலட்சம் ரூபா அவசியமென மதிப்பிடப்பட்டுள்ளது. இவ் விலையின்கீழ் எஞ்சியுள்ள வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை மகிழ்ச்சிக்குரிய விடயம். இது முழுமைப்படுத்தப்பட்ட பின்னர் 10 ஆயிரம் வீட்டு திட்டமும் வெகுவிரைவில் அமுல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

இதனால் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 4000 வீட்டுத்திட்டங்களில் எத்தனை வீடுகள் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதின் உண்மைத்தன்மையை அறிய முடியாதுள்ளது.

எத்தனை வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன?

இதேவேளை 2019 ஜூலை மாதத்துக்கு முன்பாக பெருந்தோட்டங்களில் 1600 வீடுகள் முமையாக பூர்த்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரும் கவுன்சிலரும் வீடமைப்புத்திட்ட பொறுப்திகாரியுமான மஞ்சுநாத் தெரிவித்துள்ளார்.

காலி மாவட்டம் தலகஸ்வல தோட்டத்தில் 2019.07.27 ஆம் திகதி இடம்பெற்ற 50 தனி வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.


முன்னாள் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பியசேன கமகே, நுவரலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் ஆகியோர் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை மலைநாட்டு புதிய கிரமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 2018 ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கையில், 4000 இந்திய வீட்டுத்திட்டத்தில் முதல் கட்டமாக 1113 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதுடன் 2887 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் 2019 ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கையில் இந்திய வீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் தோட்ட ஊழியர் கூட்டுறவு சங்கத்தின் ஊடாக 4000 வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 2019.12.31 ஆம் திகதியின் போது, முதலாம் கட்டத்தின் கீழ் 1057 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அவற்றில் 699 வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தின் கீழ் 2943 வீடுகள் பலதரப்பட்ட நிர்மாணிப்புக் கட்டங்களில் நிர்மாணிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4000 வீடுகளுக்காக இந்திய நன்கொடையாக 3800 மில்லியன் ரூபாவும் அரசாங்கத்தின் பங்களிப்பாக 480 மில்லியன் ரூபாவும் பங்களிப்பு செய்வதற்கு உடன்படிக்கை செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் 2022.07.27 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் மூலம் தோட்ட மக்களுக்கு வீடமைப்பு வசதிகளை வழங்கும் செயற்றிட்டத்தின் செயலாற்றல் அறிக்கையில், இந்திய உதவியின் கீழ் 2017 ஆம் ஆண்டு 420 வீடுகளும் 2018 ஆம் ஆண்டு 750 வீடுகளும் 2019 ஆம் ஆண்டு 1251 வீடுகளென மொத்தமாக 2421 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் இவற்றில் ஹட்டன் வலயத்தில் 543 வீடுகளும் நுவரெலியா வலயத்தில் 938 வீடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4000 வீடுகளில் 2019.12.31 ஆம் திகதி வரை முதலாவது கட்டத்தின் 1057 வீடுகளில் 699 வீடுகள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்ததுடன் 315 வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கவில்லை எனவும் டன்சீனன் வடக்கு தோட்டத்தின் 43 வீடுகள் செயற்திட்டம் தொடர்பாக எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை எனவும் செயற்திட்டத்தின் இரண்டாவது கட்டம் தொடர்பான 2943 வீடுகளில் 2019.12.31 ஆம் திகதி வரை 37 வீடுகளை நிர்மாணித்தல் பூர்த்தி செய்யப்பட்டிருந்த போதிலும் நலன்பெறுநர்களுக்கு ஒப்படைக்கப்படாது உட்கட்டமைப்பு வசதிகளை வழங்காதிருந்த வீடுகளின் எண்ணிக்கை 1053 எனவும் காணியைத் தெரிவு செய்து தயாரிக்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை 222 எனவும் 2020 மார்ச் 06 ஆம் திகதிய உள்ளக கணக்காய்வு மூலம் அவதானிக்கப்பட்டுள்ளது.


அதற்கிணங்க பெருந்தோட்ட மானிட அபிவிருத்தி நம்பிக்கைப் பொறுப்பிற்கு செலுத்தக்கூடியதானது  32,263,200 ரூபாவாக இருந்த போதிலும் முறையான மேற்பார்வையின்றி 34,997,000 ரூபா செலுத்தியதன் காரணமாக 2,733,800 ரூபா தொகை மிகையாகச் செலுத்தியமை 2019.12.31 ஆம் திகதியில் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் 2020 ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கையில் 2020.12.31 ஆம் திகதியாகும் போது 3576 வீடுகளின் நிர்மாணிப்புக்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றில் தற்பொழுது 699 பயனாளிகளுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட வீடுகளில் 2877 வீடுகளுக்கு மின்சாரம் மற்றும் நீர் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் 424 வீடுகள் பலதரப்பட்ட நிர்மாணிப்புக் கட்டங்களில் காணப்படுகின்றன. எனவே 424 வீடுகளின் நிர்மாணிப்புக்கள் 2021 ஆம் ஆண்டின் செப்தெம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 2020 ஆம் ஆண்டுக்காக இச் செயற்றிட்டம் தொடர்பாக பொதுத் திறைசேரியினால் நிதி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்காததுடன் பணி நிறைவு செய்யப்பட்ட 2,877 வீடுகள் தொடர்பாக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்பாடு செய்வதற்கு இயலாமல் போனது. அதே போல செயற்றிட்ட கால எல்லை 2021 செப்டெம்பர் மாதம் வரை நீடித்துக் கொள்வதற்கும் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை விநியோகிப்பதற்காக 522 மில்லியன் ரூபா நிதி ஏற்பாடுகளைச் செய்து கொள்வதற்கு அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டம் என்ன?

4000 வீட்டுத்திட்டத்தினை முழுமையாக நிறைவு செய்தாலே 10,000 வீட்டுத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுளை இந்திய அரசாங்கம் மேற்கொள்ளும். எனினும் செயற்றிட்டத்துக்கான மதிப்பீடுகளை மீள மேற்கொள்ள வேண்டியுள்ளதடன் மேலதிக நிதியினை இந்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். தற்போது ஒரு வீட்டுக்கான செலவு 2.8 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பழைய உடன்படிக்கையில் 1 மில்லியன் ரூபாவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பதில் ஏற்பட்ட தாமதமே தற்போதும் 4000 வீட்டுத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கு தடையாக அமைந்துள்ளது. 

கொவிட் தொற்று, பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றம் என்பனவற்றுடன் அரசியல் நெருக்கடியும் 4000 இந்திய வீட்டுத்திட்டத்தை முழுமைப்படுத்துவதில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் வீட்டுத்திட்டங்களை முறையாக மேற்பார்வை செய்யாமையால் பூர்த்தி செய்யப்பட்ட வீடுகள் தொடர்பில் தெளிவான தரவுகளை அணுகமுடியாத நிலையும் காணப்படுகின்றது. எனவே புதிய உடன்படிக்கையின் பிரகாரம் 4000 வீட்டுத்திட்டத்தை உடனடியாக பூர்த்தி செய்து 10,000 வீட்டுத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையினை நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மேற்கொள்ள வேண்டும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக