கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

23 பிப்ரவரி, 2023

வடக்கை போதைப்பொருள் ஆக்கிரமிக்கிறதா?

‘நண்பர்களின் ஆசைக்கு இணங்க 16 வயதில் ஹெரோயின் போதைப்பொருளை பாவித்தேன். இதனால் தரம் பத்திலேயே என் கல்வி செயற்பாடு நின்றுவிட்டது. போதைப்பொருள் பாவனையால் எனக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. என்னை அறியாமலேயே பல விடயங்களை செய்ய ஆரம்பித்தேன். என் குடும்பத்தினர் என்னால் கவலையடைந்தனர். என்னை புனர்வாழ்வுக்கு உட்படுத்த நினைத்தனர். நான் போதையிலிருந்து விடுப்பட்டு மீண்டும் தரம் 11 இல் என் கல்வியை தொடர விரும்புகிறேன்.' இது போதையினால் கல்வியை தொலைத்த ஒரு சிறுவனின் கதையாக இருக்கின்றது.(அவருடனான மேலதிக கலந்துரையாடலை இந்த வீடியோ வாயிலாக அறிந்து கொள்ள முடியும்)

இவர் மட்டுமே பாதிக்கப்பட்ட நபரல்ல. இவரை போன்றே இன்னும் அதிகமான நபர்கள் சமூகத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் தேசிய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக குறைந்த கல்வியறிவினை கொண்ட நபர்களை விடவும் கூடிய கல்வியறிவு கொண்டவர்கள் போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறை தண்டனை பெறும் நிலை அதிகம் காணப்படுகின்றது. 

2015 ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்புடைய குற்றங்களுக்காக பாடசாலைகளில் இருந்து இடைவிலகிய 600 மாணவர்கள் சிறையிலடைக்கப்பட்ட போதும் இவ்வெண்ணிக்கை 2022 இல் 190 ஆக குறைவடைந்திருந்தது. அதேவேளை, உயர்தரம் மற்றும் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்த 2000 நபர்கள் 2015 ஆம் ஆண்டு சிறைத்தண்டனை பெற்றிருந்தனர். இந்த எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டு 5000 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் மேலதிக ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கைகள் தேசிய மட்டத்தில் உள்ள பிரச்சினை ஒன்றை பிரதிபலிக்கின்றன. எனினும் பிராந்தியத்துக்கு தனித்துவம் மிக்க பிரச்சினைகளும் காணப்படுகின்றன. இந்தியாவின் தென்பகுதியிலிருந்தே இலங்கையின் கடற்பரப்புக்குள் போதைப்பொருட்கள் பெருமளவில் கொண்டு வரப்படுவதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மற்றும் இலங்கை கடற்படையினரால் மீட்கப்படுவதை தவிர்த்து எஞ்சியவை யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதிக்குள் கொண்டு வரப்படுகின்றன. ஹெரோயின் போதைப்பொருள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் ஊடாக இலங்கையின் தென்மாகாணங்களுக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் இந்நிலைமை எவ்வாறு இருக்கின்றது என்பதை அறிந்து கொள்வதற்கு யாழ்ப்பாணத்துக்கான கள விஜயத்தை நாங்கள் மேற்கொண்டிருந்தோம். அங்கு நாம் வைத்தியர்கள், போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள், பொலிஸ் மற்றும் உள்ளுர் அதிகாரிகளுடன் பேசினோம். இதனூடாக பின்வரும் விடயங்களை எம்மால் அறிய முடிந்தது. 

போதைப்பொருளால் யார் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்?

'யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் தொடர்பான விடயங்கள் ஏனைய மாவட்டங்களை விட ஒப்பீட்டளவில் அதிகரித்து வருவதாக (நேர்காணல் மேற்கொள்ளும்போது அப்போதைய) யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் எம்மிடம் தெரிவித்தார். குறிப்பாக போதைப்பொருள் தொடர்பிலான கைதுகள் அதிகளவில் இடம்பெறுகின்றன. இதனால் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவிக்கின்றார். (அவருடனான மேலதிக கலந்துரையாடலை இந்த வீடியோ வாயிலாக அறிந்து கொள்ள முடியும்)

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்; “வடக்கு மாகாணத்தில் கடந்த ஆறு மாதங்களாக கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அவை பெரும்பாலும் 20 மற்றும் 35 வயதுக்கு உட்பட்டவர்களாலேயே பயன்படுத்தப்படுகின்றது. பாடசாலைகளின் சுற்றயலில் போதைப் பொருட்களின் விற்பனையில் ஈடுபடுவோர் மிகவும் சூட்சுமமாக தமது வியாபாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்” எனக் கூறினார்.  (அவருடனான மேலதிக கலந்துரையாடலை இந்த வீடியோ வாயிலாக அறிந்து கொள்ள முடியும்)

போதைப்பொருள் சந்தை யாழ்ப்பாணத்தில் நன்கு விரிவடைந்து உள்ளதாக எம்மிடம் தெரிவிக்கப்பட்டது. இதன் பொருள் போதைப் பொருட்கள் மிகவும் பரவலாக கிடைக்கின்றது என்பதாகும். பலர் வருமானம் ஈட்டும் தொழிலாக போதைப்பொருள் விற்பனையை மேற்கொள்கின்றனர். கடைகளில் ஊழியர்களாக பணியாற்றும் சிலர் பகுதி நேர தொழிலாக போதைப்பொருள் விற்பனையை மேற்கொள்கின்றனர். உதாரணமாக, 15.10.2022 ஆம் திகதி நான்கு போதைப்பொருள் வியாபாரிகள் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டநபர்கள் யாழ். நகர் பகுதியில் உள்ள மூன்று புடவைக் கடைகளில் வேலை செய்துக்கொண்டு, 1000 போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பாடசாலைகளுக்கு அருகாமையிலுள்ள கடைகளிலும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் விற்பனை செய்தமை தொடர்பில் யாழ் மாநகரசபைக்குட்பட்ட இரு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் ஏற்படுத்தும் விளைவுகளும் தாக்கங்களும் எவை? 

‘நான் ஹெரோயின் பாவித்தேன். நண்பர்களே எனக்கு பழக்கினார்கள். நான்கு வருடமாக இதனை பாவித்தேன். போதைப்பொருள் பாவனையால் குடும்பத்தில் இருந்து என்னை ஒதுக்கி வைத்தார்கள். அப்பா இறந்து விட்டார். இதனால் உடல் மெலிந்து, உடல் நடுக்கம் ஏற்பட்டதுடன் பேசுவதற்கும் சிரமப்பட்டேன்’ என போதைப்பொருளுக்கு அடிமையான 21 வயதுடைய இளைஞர் தன்னுடைய நிலையினை விபரித்தார். (அவருடனான மேலதிக கலந்துரையாடலை இந்த வீடியோ வாயிலாக அறிந்து கொள்ள முடியும்)


போதைப்பொருள் பாவனை குடும்பம், சமூகம் என சகல பிரிவுகளையும் பாதித்துள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையான நபர்களை சந்திக்கும்போது அவர்களால் நடக்க முடியாத, பேச முடியாத நிலைமையினை அவதானிக்க முடிந்தது. உணவு உட்கொள்ள முடியாமலும் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளமுடியாத நிலையிலும் அவர்கள் இருந்தனர். குடும்பங்களால் அவர்கள் வெறுத்தொதுக்கப்படும் நிலையினை எதிர்கொண்டுள்ளனர்.

போதைப்பொருளுக்கு அடிமையான நபர்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் மாற்றம் அறக்கட்டளையின் பிரதிபலிப்பு சிகிச்சையாளர் நிர்மலன் கருத்து தெரிவிக்கையில், “எங்களிடம் ஆறு மாத காலமாக சிகிச்சை பெற்ற நபரை வீட்டுக்கு அழைத்துச் சென்ற போது அவரின் குடும்பத்தினர் அவரை திரும்ப ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த மனப்பாங்கு அவர்களின் எதிர்காலத்தை மீண்டும் கேள்விக்குட்படுத்துகின்றது” எனத் தெரிவித்தார். (அவருடனான மேலதிக கலந்துரையாடலை இந்த வீடியோ வாயிலாக அறிந்து கொள்ள முடியும்)



இதேவேளை போதைப்பொருளை பாவிப்பதனால் கடும் உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்வதுடன் மரணமும் சம்பவிக்கும் நிலை அதிகரித்துள்ளது. யாழ் மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் இவ்வாறு அதிகளவான மரணங்கள் சம்பவித்துள்ளமை முக்கிய விடயமாகும். இவ்விடயம் தொடர்பாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் தங்கமுத்து சத்தியமூர்த்தி கருத்து தெரிவிக்கையில், “யாழ் போதனா வைத்தியசாலையில் மாத்திரம் போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்ட  நேரடி விளைவினால் 13 இறப்புகள் சம்பவித்துள்ளன. 300க்கும் அதிகமானோர் பல்வேறு பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர். (கடந்த ஆண்டு டிசம்பர் வரை) ஹெரோயின் போதைப்பொருளை இரத்த நாளங்களில் செலுத்தும்போது தொற்றுக்கள் பரவும் அபாயம் காணப்படுவதுடன் இவை இதயத்தை தாக்கி இதய செயலிழப்பை ஏற்படுத்துகின்றது” எனத் தெரிவித்தார். 

மேலும் ஐஸ் போதைப்பொருள் பாவனையினால் இதயத்தின் திடீர் செயலிழப்பு மரணத்தை ஏற்படுத்துகிறது. போதைக்கு அடிமையான பலர் மனநோய்க்கு இலக்காகிதற் கொலைக்கு முயற்சிக்கின்றனர். இவை பதிவு செய்யப்பட்ட மரணங்களாக இருக்கும் நிலையில் பதிவு செய்யப்படாத மரணங்களும் பல காணப்படுகின்றது. அத்துடன் மாணவர்களுக்கு முதலில் இலவசமாக போதைப்பொருள் வழங்கப்படுவதுடன் பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்றுக் கொள்ளலாம் என்ற மனநிலையினை உருவாக்கியும் போதையினை வழங்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். (அவருடனான மேலதிக கலந்துரையாடலை இந்த வீடியோ வாயிலாக அறிந்து கொள்ள முடியும்)


மேலும் போதைப்பொருள் பாவனையானது விபத்துக்கள், வன்முறைகள், திருட்டு, ஆட்கொலைகள் என்பவற்றிலும் தாக்கம் செலுத்துகின்றது. இது சமுதாயத்திலுள்ள அனைவரையும் பதற்றத்துக்கு உள்ளாக்குகின்றது. இவற்றில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டாலும் பலர் சமூகத்துடனேயே இணைந்துள்ளனர்.

யார் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்?

பெற்றோர் பிள்ளைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதில்லையெனவும் பெற்றோரை பிரிந்து வாழும் பிள்ளைகள் அல்லது உறவினர்களின் பாதுகாப்பில் இருக்கும் பிள்ளைகள் இவ்வாறு போதைப்பொருள் பிரச்சினைக்கு முகங்கொடுப்பதாக யாழ் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர். பிள்ளைகள் கல்வி, தொழில் என்பவற்றிலிருந்து விலகி இருக்கும் போது அவர்கள் போதைப்பொருளை நாடிச்செல்வதற்கான வாய்ப்பும் நேரமும் அதிகம் காணப்படுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர். 

பொலிசார், ஆசிரியர்களையும் இது தொடர்பில் குறை கூறுகின்றனர். ஆசிரியர்களும் மாணவர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வுகளை முன்வைப்பதற்கு தயக்கம் காட்டுவதாகவும் மாணவர்களின் நடத்தைகளை ஆராய்ந்து அவற்றுக்கு உரிய தீர்வினை வழங்குவது ஆசிரியர்களின் பங்கு எனவும் ஆனால் ஆசிரியர்கள் தங்களுடைய பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அவ்வாறான சம்பவங்களில் இருந்து விலகி இருப்பதாகவும் பொலிசார் கூறுகின்றனர்.  

பாடசாலை மாணவர்களிடையே நிலவும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் வடமாகாண கல்வித்திணைக்களத்தின் கல்விப் பணிப்பாளர் டி.ஜோன் கியூன்டஸிடம் வினவியபோது, “வடமாகாணத்தில் ஏனைய மாகாணத்தை விட போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளே பாடசாலை மட்டத்திலும் மிகையாக இருப்பதாக பல்வேறு தரப்பினரால் சுட்டிக்காட்டப்படுகின்றது. போதைக்கு அடிமையான நபர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு மீண்டும் பாடசாலைக்கு இணைக்கப்படுகின்றனர். இவர்கள் மீண்டும் போதைப்பொருள் பாவனைக்கு நாடும் போது அவரை சுற்றியுள்ள மாணவ நண்பர்களும் குறித்த விடயத்தில் ஆர்வம்  காட்டும் நிலை உருவாகியுள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஒரு சில பாடசாலைகள், போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய மாணவன் அடையாளம் காணப்பட்டால் அது பாடசாலைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் நிலைமையை வெளிக்கொணர்வதில் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்” என அவர் மேலும் தெரிவித்தார். (அவருடனான மேலதிக கலந்துரையாடலை இந்த வீடியோ வாயிலாக அறிந்து கொள்ள முடியும்)




அதேவேளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் இது தொடர்பில் கூறிய வேளை, “வடக்கில் கடல் மார்க்கமாகவே அதிகமான போதைப்பொருள் நாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றது. வடக்கு மாகாணம் அதிகம் இராணுவமயப்படுத்தப்பட்ட பகுதியாக இருக்கின்றது. அவ்வாறிருக்கையில் கடற்படையையும் இராணுவத்தையும் மீறி எவ்வாறு போதைப்பொருள் வடக்கு பகுதிக்குள் வரமுடியும்?” எனத் தெரிவித்தார்.

புனர்வாழ்வு செயற்பாடுகள் திருப்திகரமாக உள்ளனவா?

போதைப் பொருளுக்கு அடிமையான நபர்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் குடும்ப உறுப்பினர்களின் தன்னார்வ அடிப்படையிலும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் நிலை காணப்படுகின்றது. அந்தவகையில் தன்னார்வ தொண்டு அடிப்படையில் போதைப்பொருளுக்கு அடிமையான நபர்களை மீட்கும் நடவடிக்கையினை முன்னெடுக்கும் மாற்றம்  அறக்கட்டளையின் இயக்குநர் அருட் கலாநிதி டேவிற் வி.பற்றிக் இது தொடர்பில் தெரிவிக்கையில்:

“போதைப்பொருளுக்கு அடிமையாகிய இளம் சமூகத்தினரை அதிலிருந்து மீட்டெடுத்து நல்வழிப்படுத்துவதே எமது நோக்கமாகும். போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவரை புனர்வாழ்வளிப்பது, மாற்றியமைப்பது கடினமான செயல் என்றாலும், நாங்கள் மனச்சோர்வு அடையாமல் செயற்படுகின்றோம்”

“இவர்கள் கைவிடப்பட வேண்டியவர்கள் அல்ல. அவர்கள் வாழ வைக்கப்பட வேண்டியவர்கள். போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் ஆரம்பத்தில் நிம்மதியில்லாமல், நித்திரையில்லாமல், அமைதியற்று காணப்பட்டாலும் மருத்துவ சிகிச்சைகள், தியானம், உடல், உள பயிற்சிகள் என்பவற்றின் மூலம் நம்பிக்கையூட்டப்படுகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்தார். (அவருடனான மேலதிக கலந்துரையாடலை இந்த வீடியோ வாயிலாக அறிந்து கொள்ள முடியும்)

இதேவேளை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகத்தின் கீழ் இராணுவத்தால் நடத்தப்படும் சேனபுர மற்றும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையங்களும் தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டு சபை ஆகியவற்றால் போதைப்பொருளுக்கு அடிமையான நபர்களுக்கான புனர்வாழ்வு நிலையங்கள் செயற்படுத்தப்படுகின்றது. 

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெறும் நபர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்களில் 2022 ஜூன் 29 ஆம் திகதி ஒருவர் கொல்லப்பட்டதுடன் 100 க்கும் மேற்பட்டோர் தப்பிச் சென்றிருந்தனர். நவம்பர் 7 ஆம் திகதி ஏற்பட்ட மோதலில் 200 க்கும் மேற்பட்டோர் தப்பிச்சென்றிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதனிடம் வினவியபோது:


“யாழ் சிறைச்சாலையில் 400 பேர் வரையில் போதைப்பொருளை பாவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் பாவனையும் அது தொடர்பிலான கைதுகளும் கடந்த சில வருடங்களாகவே அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. அரசாங்கம் விஞ்ஞான ரீதியில் இதை சுகாதார மற்றும் மனித உரிமை பிரச்சினையாக நோக்கவில்லை. அடிமட்ட மக்களை மாத்திரம் கைது செய்கின்றது. இலங்கையில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 70 சதவீதமானோர் மீண்டும் போதைப் பொருளை பாவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது புனர்வாழ்வு செயற்பாட்டில் பலகுறைபாடுகள் இருப்பதை வெளிக்காட்டுகின்றது. கந்தகாடு மற்றும் சேனபுர புனர்வாழ்வு நிலையங்கள் இராணுவத்தால் முகாமைத்துவம் செய்யப்படுகின்றது. சட்டரீதியில் நோக்கினால் புனர்வாழ்வு செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு இராணுவத்துக்கு எவ்வித அதிகாரமோ அல்லது நிபுணத்துவமோ இல்லை. குறித்த புனர்வாழ்வு நிலையங்களில் வன்முறை மற்றும் சித்திரவதைகள் அதிகம் பதிவு செய்யப்படுகின்றன. இங்கு புனர்வாழ்வு செல்லும் பலர் மீண்டும் போதைப்பொருள் பாவனைக்கு ஆளாகும் நிலையே காணப்படுகின்றது” எனத் தெரிவித்தார்.

யாழ் பல்கலைக்கழக குடும்பநல விரிவுரையாளரும் குடும்ப வைத்திய நிபுணருமான வைத்திய கலாநிதி குமரன் இது தொடர்பில் பின்வருமாறு கூறுகின்றார், “போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பது கடினமான விடயமென்பதால் போதைப்பொருள் பாவிப்பதை தடுப்பதே சிறந்தது என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்”

“இதற்கு பாடசாலை, பல்கலைக்கழகங்கள், வேலைத்தளம், சிறைச்சாலை, கிராமங்கள் தோறும் சுகநல நிலையங்கள் அமைத்து செயற்படுவது போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த வழிவகுக்கும். தன்னை அறிதல் செயற்பாடு, தன்னுடைய சூழல் தொடர்பில் அறிதல், சவால்களை கண்டுபிடித்து எதிர்கொள்வதற்கான திறன், வளங்களை திறம்பட பயன்படுத்தல் என்பன சுகநல நிலையங்களின் செயற்பாடுகளாகும். போதைப்பொருள் என்பது சமுதாய, சுகநல, சுகாதார பிரச்சினை அவற்றை குற்றவியல் பிரச்சினையாக கருத முடியாது” என அவர் மேலும் தெரிவித்தார். (அவருடனான மேலதிக கலந்துரையாடலை இந்த வீடியோ வாயிலாக அறிந்து கொள்ள முடியும்)


எனினும் பொது மக்களால் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிப்பது குறைவெனவும் பயம் மற்றும் நீதிமன்றம் செல்ல வேண்டி ஏற்படுமென்ற அச்சமுமே இதற்கு காரணமென யாழ் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனால் நேரடியாக தகவல் தெரிவிக்க முடியாவிட்டால் கடிதத்தின் மூலம் தகவல் வழங்குவதற்கான வாய்ப்பினை பொலிஸார் வழங்கியுள்ளனர்.

சுக நலமையத்தின் ஒருங்கிணைப்பாளர் வைத்திய கலாநிதி பாலகோபி இது பற்றி தெரிவிக்கையில்; “எமது சமூகத்தில் போதைப்பொருள் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இவற்றில் எமது மாணவர்களும் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது. எனவே பிரச்சினைகளை முன்கூட்டியே தடுக்கவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இது இலகுவான விடயமல்ல. இங்கு பாதிக்கப்பட்டவர்களை மாத்திரம் தண்டிக்கிறோம். இதற்கு காரணமானவர்கள், போதைப்பொருளை நாட்டுக்கு கொண்டு வருபவர்கள், விநியோகிப்பவர்கள் என சகலரையும் அடையாளம் கண்டு தண்டிப்பது எமது ஒவ்வொருவருடைய கடமையாகும்” எனத் தெரிவித்தார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக