கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

24 ஜனவரி, 2023

நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் காணிப் பிரச்சினை தீர்க்கப்படுமா? உருவாக்கப்படுமா?


பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் மலையகத் தமிழ் மக்கள் இலங்கையின் பொருளாதாரத்துக்கு வழங்கி வரும் பங்களிப்பை கௌரவித்து விசேட நிகழ்ச்சிகளை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 200 வருடங்களுக்குப் பின்னரே மலையக மக்களின் பொருளாதார பங்களிப்பு தொடர்பில் அரசாங்கம் சிந்தித்திருப்பது வேடிக்கையானது. ஆனால் 200 வருடங்களில் மலையக மக்கள் எதிர்நோக்கும் விடயங்கள் எவையும் முழுமையாக பூர்த்தி செய்து கொடுக்கப்படவில்லை என்பது இத்தனை வருடங்களிலும் மலையக மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதியாகவே கருத வேண்டியுள்ளது.

பெருந்தோட்டத்தின் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கிய மலையக தமிழ் சமூகத்தின் முதலாவது குழு இலங்கைக்கு வந்து இருநூறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் தங்களுடைய 1000 ரூபா வேதனத்துக்காக போராட வேண்டிய நிலை காணப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்சவால் ஆரம்பித்து வைக்கப்பட்ட 1000 ரூபா வேதன பிரச்சினை இன்றும் முடிவடையாமல் நீண்டு கொண்டே செல்கின்றது. தற்போதைய அரசாங்கமும் அரசியல்வாதிகளும் அவை தொடர்பில் எவ்வித கரிசனையும் செலுத்தியிருக்கவில்லை.

இந்நிலையில் மலையகத்தமிழர்களின் 200 வருட பங்களிப்பினை கருத்தில் கொண்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 150,000 க்கும் மேற்பட்ட மலையக தமிழ் தோட்ட தொழிலாளர்கள் முக்கியமாக மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் கலாசாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இதனால் அவர்களை கௌரவிப்பதற்காக தொடர் விசேட நிகழ்வுகளை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியலையும் வாழ்க்கைத் தரத்தினையும் மாற்றியமைக்குமா? என்பது எம்முள்ள பாரிய கேள்வி.


இதுவொரு புறமிருக்க அண்மையில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா மக்களின் காணிப் பிரச்சினைக்கு பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வழங்குவதாகவும் அறிவித்திருந்தார். நுவரெலிய மாவட்டத்தின் காணிப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களும் ஒன்றிணைந்து தயாரிக்கும் அறிக்கையை பெப்ரவரி 04 ஆம் திகதிக்கு முன்னர் தனக்கு கிடைக்கச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அந்த அறிக்கையை சமர்பிக்கத் தவறினால் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய நடவடிக்கை எடுக்க நேரிடுமென்றும் குறிப்பிட்டார்.

நுவரெலியா மக்களின் காணிப் பிரச்சினைக்கு துரித தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இம்மாவட்டத்திலுள்ள அரசுக்கு சொந்தமான காணி தொடர்பில் மாவட்டச் செயலக அலுவலகம், பெருந்தோட்ட அமைச்சு மற்றும் காணிப் பதிவுத் திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து அறிக்கை ஒன்றைத் தயாரித்து எதிர்வரும் ஒரு மாதக் காலப்பகுதிக்குள் அதனை சமர்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து காணிகளுக்குமான அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்து மக்களுக்கு அவசியமான காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பணிகளை எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆனால் இங்கு பெருந்தோட்ட மக்களுக்கான காணி பிரச்சினையை தீர்ப்பது தொடர்பிலோ, காணிகள் வழங்குவது தொடர்பிலோ எவ்வித செல்லாடலும் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. கருத்தாடலும் மேற்கொள்ளப்படவில்லை. நுவரெலியா மக்கள் என்பது நுவரெலியா மாவட்ட மக்கள் அனைவரையும் குறிக்கும். இதனால் அரச காணிகள் யாருக்கு பகிர்ந்தளிக்கப்படப் போகின்றது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் காணி பகிர்ந்தளிக்கும் செயற்பாட்டில் பெருந்தோட்ட மக்கள் அதிகம் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதும் பலரின் கருத்தாக இருக்கின்றது. அத்துடன் இத்திட்த்தின் மூலம் பெருந்தோட்ட மக்களின் காணிகள் பறிபோகுமோ என்ற அச்சமும் பலரிடமும் எழுந்துள்ளது. 

இதேவேளை 1992 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்களை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் பெருந்தோட்டக் காணிகள் குத்தகையின் அடிப்படையில் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் 1992 ஆம் ஆண்டு அரசாங்கத்துக்குரிய 249,843 ஹெக்டேயர் அளவான காணி பிரதேசம் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு 53 வருடகால குத்தகை அடிப்படையில் கையளிக்கப்பட்டிருந்தது. (ஆனால் அதனை 99 வருடங்களாக மாற்றுவதற்கான முயற்சிகள் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டிருந்தன.) எனவே குத்தகை காலத்தை இரத்துச் செய்து அனைத்து பெருந்தோட்ட காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை என்பது சாத்தியமற்றது. அவ்வாறான திட்டம் அரசாங்கத்திடமும் தற்போது இல்லை. ஆனால் பாவிக்கப்படாத அரசாங்க காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம். அவற்றில் பெருந்தோட்ட காணிகளும் உள்ளடங்குகின்றன. அதற்கானதோர் நடவடிக்கையே தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகின்றது. 

இதனடிப்படையில் பெருந்தோட்டங்களில் பாவனைக்குட்படுத்தப்படாத காணிகள் இருப்பதுடன் அவை காடுகளாகவும் சதுப்பு நிலங்களாகவும் காணப்படுகின்றன. அத்துடன் குறித்த காணிகள் தொடர் நிலங்களாக இல்லையென்பதுடன் ஆங்காங்கே துண்டு துண்டு நிலங்களாகவே காணப்படுகின்றன. பெருந்தோட்ட கம்பனிகளை தவிர்த்து பிரதேச செயலகங்கள், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், பெருந்தோட்ட அமைச்சு போன்ற அரச நிறுவனங்களுக்கு சொந்தமானவையாக காணப்படுகின்றன. இவற்றில் பயிரடப்படாத காணிகளை அடையாளம் காண்பதும் அவற்றில் பயன்படுத்த முடியுமான காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதும் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கும் நிலையில், அரசாங்கத்தின் இந்நடவடிக்கை பெருந்தோட்ட மக்களின் காணி உரிமையையோ அல்லது காணிப் பிரச்சினையையோ தீர்த்துவிடும் என்று உறுதியாக கூறமுடியாது. 

இவ்விடயம் தொடர்பாக மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் பிரதான ஏற்பாட்டாளர் எஸ்.டி.கணேசலிங்கம் கருத்து தெரிவிக்கையில், ‘தற்போதைய ஜனாதிபதி நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்தபோது 10 வருடங்களுக்கு தொடர்ச்சியாக குடியிருக்கும் மக்களுக்கு குறித்த காணி சொந்தமாக்கப்படுமென தெரிவித்திருந்தார். ஆனால் அது நுவரெலியா மக்களுக்கு எந்தளவுக்கு சாத்தியமாகவிருந்தது என்பது பெரிய கேள்விக்குரியதாகும். தற்போதைய ஜனாதிபதி 1993 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது அமரர் சௌமிய மூர்த்தி தொண்டடமான் தலைமையில் மக்களின் குடியிருப்புகளையும் (லயன்கள்) அதற்கு அருகிலுள்ள காணியையும் சொந்தமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அவற்றில் எந்த பயனும் ஏற்படவில்லை. 2015 ஆம் ஆண்டு மலைநாட்டு பதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சராகவிருந்த திகாம்பரத்தினால் காணி உறுதிகள் வழங்குவதற்கு பெருமளவு நிதி செலவளிக்கப்பட்ட போதும் வழங்கப்பட்ட காணியுறுதிகள் பொய்யானதாகவே இருந்தன. அதே காலப்பகுதியில் ஜனாதிபதியாவிருந்த மைத்திரிபால சிறிசேன ஊட்டுவள்ளி கிராமத்தை திறந்து வைத்து வழங்கிய காணியுறுதிகளும் உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போதைய ஜனாதிபதி பரிந்துரையின் அடிப்படையில் பெருந்தோட்டப் பகுதிகளில் பயிரிடப்படாத காணிகள் வெளியாருக்கு வழங்கப்படும் சாத்தியங்களே காணப்படுகின்றது. இவை வரலாற்று ரீதியான உண்மை. எனவே இந்த உறுதிமொழிகள் பெருந்தோட்ட மக்களுக்கு நன்மை பயக்குமென்பது கேள்விக்குரியாகும். அத்துடன் எங்களுடைய காணிகள் பறிபோவதற்கான அடித்தளமோ தெரியவில்லை. எனினும் பெருந்தோட்ட மக்களுக்கு காணிகள் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தால் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. நகர்புறங்களில் வசிக்கும் மலையக மக்களுக்கும் இதுவரை காணி உறுதிகள் வழங்கப்படவில்லை. மஸ்கெலியா நகரத்தில் வசிக்கும் 90 வீதமானோருக்கு இதுவரை காணியுறுதிகள் வழங்கப்படவில்லை. எனவே அரசாங்கம் சாதகமான நிலைப்பாட்டை பரிசீலிக்குமாயின் இத்திட்டம் வெற்றியளிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை அம்பேவல பாற்பண்ணை உற்பத்தி நிலையத்துக்கு அருகாமையில் 30 ஏக்கர் கைவிடப்பட்ட காணியை பாற்பண்ணை அபிவிருத்திக்காக விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் 1690.2 சதுர கிலோ மீற்றர் நிலமாகவும் 50.8 சதுர கிலோ மீற்றர் நீர்த்நிலைகளும் காணப்படுவதுடன் 737.3 சதுர கிலோமீற்றர் பயிர் நிலங்களாகவும் 274.4 சதுர கிலோமீற்றர் பயிரிடப்படாத நிலங்களாகவும் 729.2 சதுர கீலோமீற்றர் காடுகளாகவும் காணப்படுவதாக நுவரெலியா மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

மேலும் நுவரெலியா மாவட்டத்தில் 16 தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான 59,964 ஹெக்டேயர் நிலம் காணப்படுவதுடன் இவற்றில் 34,639 ஹெக்டேயர் தேயிலை காணிகளும் 125 ஹெக்டேயர் இறப்பர் காணியும் 5484 ஹெக்டேயர் ஏனைய தேவைகளுக்கு பயன்படுத்தும் காணிகளும் காணப்படுகின்றன. 19,839 ஹெக்டேயர் பயிரிடப்படாத காணிகளாகவும் காணப்படுகின்றன. இவற்றில் நுவரெலியா வலயத்தில் 7,116 ஹெக்டேயரும் ஹட்டன் வலயத்தில் 12,723 ஹெக்டேயரும் பயிரிடப்படாத காணிகளாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவை காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமானவையாகும்.

எனினும் சமீபத்திய காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் வெற்றுக் காணிகளில் விவசாயம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளின் போது பல நிலங்கள் ஆக்கிரமிப்புக்குள் உள்ளாகியுள்ளதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இதன்போதும் பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு எவ்வித வாய்ப்புகளும் ஏற்படுத்திக்கொடுக்கவில்லை. அத்துடன் பயிரிடப்படாத நிலங்களை விடுவிப்பதற்கும் பெருந்தோட்ட நிறுவனங்கள் அனுமதி வழங்கவில்லை. இதேவேளை பெருந்தோட்ட மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கான காணி ஒதுக்கீடுகளின் போதும் அவர்களுக்கான காணி உறுதிகள் வழங்கப்படுவதிலும் தொடர்ச்சியாக இவர்கள் புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர். எனவே தற்போதைய ஜனாதிபதியின் அறிவிப்பும் பெருந்தோட்ட மக்களுக்காகவல்லாது, வெளியாருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு முரண்பாடுகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் பலரில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்மையில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில், ‘நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. அதில் பிரதானமானதாக ஜனாதிபதியின் தலைமையிலான உணவு பாதுகாப்பு வேலை திட்டம் அமைந்திருக்கின்றது. இத் திட்டத்தின் பின்னணியில் பெருந்தோட்டங்களில் காணப்படும் பயிரிடப்படாத காணிகளை பகிர்ந்தளிப்பது தொடர்பாக பேசப்படுகின்றது. இந்நிலையில் பெருந்தோட்ட காணிகள் எமது மக்களிடம் இருந்து பறிபோகும் அபாய நிலை தோன்றியுள்ளது. இதனை தடுப்பதற்கான பொருத்தமான வேலை திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். உணவு பாதுகாப்பிற்காக பிரதேச செயலக மட்டத்திலே குழுக்கள் அமைக்கப்படுகின்றது. அப்பிரதேச செயலக பிரிவில் பயிரிடப்படாது இருக்கின்ற காணிகளை இனம் காண்பதற்கும் அவற்றை தேவையுடையோருக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அக்காணிகளில் பயிரிடுவதற்கு அவசியமான வசதிகளை ஏற்பாடு செய்வதற்கும் இக்குழுக்களுக்கு அதிகாரம்’  வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

காணி பகிர்ந்தளிப்பதற்கான நடைமுறை மற்றும் காணிகள் வழங்கப்படும் நபர்கள் தொடர்பில் வெளிப்படையான தகவல்கள் பின்பற்றப்பட வேண்டும். காணிகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றாலும் ஏற்கனவே அபிவிருத்திகள் என்ற போர்வையில் மேற்கொள்ளப்பட்ட காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளினால் இத்திட்டம் மீது சந்தேகம் கொள்ள வைத்துள்ளது. நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி சபை கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட போதும் அவை தொடர்பில் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற எந்த பாராளுமன்ற உறுப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கவில்லை.

பெருந்தோட்ட மக்களுக்கான காணியுரிமை கடந்த 200 வருடங்களாக இழுத்தடிப்பிலேயே உள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் 7 பேர்ச் நிலத்தில் வீடமைக்கும் பணிகள் வழங்கப்பட்டாலும் அவற்றக்கான உறுதிகள் வழங்குவது தொடர்ச்சியாக இழுத்தடிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே தற்போதைய நிலைமையில் பெருந்தோட்ட மக்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். பெருந்தோட்டங்களை அண்டியுள்ள அரச காணிகள் அப்பகுதியிலுள்ள பெருந்தோட்ட இளைஞர்களின் சுயதொழில் அபிவிருத்திக்காக வழங்கப்பட வேண்டும். வெளியாரின் ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தக்கூடாது. அதற்கான முறையான வேலைத்திட்டங்களுடன் நுவரெலியா மாவட்டத்திலுள்ள பயிரிடப்படாத அரச காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்து தரப்பினரும் குரல் எழுப்ப வேண்டும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக