கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

24 ஜனவரி, 2023

மலையகம் 200 : கந்தலோயாவில் ஆரம்பமான முதல் நிகழ்வு


மலையக தமிழர்கள் இலங்கையில் குடியேற்றப்பட்டு 200 வருடங்கள் கடக்கின்ற நிலையில் 200 வருடங்களை பிரதிபலிக்கும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு பல்வேறு தரப்பினரும் முனைந்துள்ளனர். இவற்றில் முதல் நிகழ்வு மலையகம்.lk ஊடக வலையமைப்பினால் கந்தலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிகழ்வை எவ்வாறு கொண்டாடுவது என்பதில் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. 200 வருடங்களில் மலையக மக்களுக்கான சகல உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளனவா? அவர்களின் வீட்டுரிமை மற்றும் காணியுரிமை என்பன உறுதிப்படுத்தப்பட்டுள்ளனவா? என்பது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணமுள்ளன.

இவற்றில் புதுவிதமாக மலையகம் 200 நிகழ்வின் முதல் அம்சமாக மலையகம்.lk  ஊடக வலையமைப்பினால் மலையகத்தில் கல்வி, விளையாட்டு, கலை, இசை, ஊடகம் மற்றும் பல்வேறு துறைகளில் சாதித்த மற்றும் சாதித்துக்கொண்டிருக்கின்ற நபர்களை கௌரவிக்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வின் மூலம் மலையகம் 200 வருடங்களை கடந்துள்ளமையை எவ்வாறு கொண்டாட முடியும் என்பதற்கான விடையை வழங்கியிருந்தது. மலையகத்திலிருந்து தாமாகவே முன்வந்து பல்வேறு நிகழ்வுகளை அரங்கேற்றும் விடயத்தை இங்கு அதிகமாகவே காணக்கூடியதாக இருந்தது. இவற்றில் கல்வித்துறையில் பல மாணவர்கள் மருத்துவம், பொறியியல், சட்டம் என பல்வேறு துறைகளுக்கு சென்று சாதித்துள்ளமையினை சிறப்பான விடயமாக கருத வேண்டியுள்ளது. இதில் பல மாணவர்கள் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்திலிருந்து முதன் முறையாக பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பது முக்கிய விடயமாகும். 

மலையகம்.lk ஊடக வலையமைப்பின் அறிமுக நிகழ்வு 2019 ஆம் ஆண்டு ஹட்டன் பொஸ்கோ கல்லூரியில் இடம்பெற்றிருந்தது. இதன்போது மலையக கலைஞர்கள் பலர் கௌரவிக்கப்பட்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக மலையகத்தின் 200 வருடங்களை வெளிப்படுத்தும் வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. நிகழ்வு ஒழுங்கமைப்பினை மலையகம்.lk குழுவுடன் இணைந்து கந்தலோயா பாடசாலை மாணவர்களும் மேற்கொண்டிருந்தனர். பல பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் கந்தலோயா பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டமை மற்றுமொரு சிறப்பாகும். கந்தலோயா பாடசாலைக்கு யட்டியாந்தோட்டை நகரிலிருந்து 33 கிலோ மீற்றர் தூரத்தை கடந்தும் நாவலப்பிட்டி நகரிலிருந்து 25 கிலோ மீற்றர் தூரத்தை கடந்தும் செல்ல முடியும். போக்குவரத்தை மேற்கொள்வதற்கு கடும் சிரமங்களை சந்திக்கும் கந்தலோயா மக்களின் பல பிள்ளைகள் இன்று கந்தலோயா பாடசாலை மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றனர். 

கந்தலோயா பாடசாலையானது மலையக மக்களின் 200 வருடகால வாழ்க்கையினை இன்னும் சுமந்து கொண்டு செல்கின்றது. இங்கு கல்வி கற்ற மற்றும் கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர் கருணாகரன் ஆகியோர் இணைந்து மலையக மக்களின் வாழ்வியலுடன் கூடிய கலைகளுக்கு இன்னும் உயிரூட்டி வருகின்றனர். மலையகம்.lk குழுவின் விருது வழங்கும் நிகழ்வின் முதல் அம்சமாக பறை இசையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர். அத்துடன் விருது வழங்கும் நிகழ்வுடன் மலையக மக்களின் பாரம்பரியம் மற்றும் மலையக கலைகள், கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையிலான கண்காட்சியும் இடம்பெற்றது. 

இக்கண்காட்சியில் மலையக மக்கள் ஆரம்ப காலங்களில் பயன்படுத்திய உபகரணங்கள், பெட்டிகள், புகைப்படங்கள், சமையலறை உபகரணங்கள், காவல் தெய்வங்கள், பாரம்பரியங்களை வெளிகாட்டும் உபகரணங்கள் உள்ளிட்ட மலையக கலைகளின் அடையாளங்கள் போன்ற விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 1964 ஆம் ஆண்டு ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய வம்சாவளி மக்களை இலங்கையிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டது. இதன்போது பதுளையிலிருந்து தலைமன்னார் வரை சென்ற ஒப்பாரி கோச்சியில் மலையகத்திலிருந்து இந்திய தமிழர்கள் கண்ணீருடன் விடைபெற்ற காட்சியினை கந்தலோயா மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து தத்ரூபமாக நடித்து காட்டியிருந்தனர். அத்துடன் 1864 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெள்ளையர்களின் தந்திரோபாயங்களுக்கு ஆட்பட்டு கண்டிச் சீமைக்கு பஞ்சம் பிழைக்க வந்த இந்திய தமிழர்கள் பயணித்த ஆதிலெட்சுமி கப்பல் மூழ்கியமையால் பலரும் உயிரிழந்தனர். குறித்த கொடூர சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் கந்தலோயா மாணவர்களின் ஆதிலெட்சுமி கப்பல் கதை அமைந்திருந்தது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கையர்கள் பலரும் தங்களுடைய குடும்பங்களை விட்டு வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்பு பெற்று செல்லும் நிலையில் இலங்கையில் அவர்களின் குடும்பம் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் எடுத்துகூறும் வகையிலான மாணவன் ஆர்.கே.கவிஷானின் நாடகம் அமைந்திருந்தது. மேலும் பல்வேறு கலாசார நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையில் கந்தலோயா பாடசாலை கல்விச் சமூகத்துடன் இணைந்து மலையகம்.lk ஊடக வலையமைப்பு பல்வேறு நிகழ்வுகளை ஒழுங்கமைத்திருந்தது. 

மலையகம்.lk ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்த விருது வழங்கும் நிகழ்வானது கந்தலோயா பாடசாலையில் அமைந்திருந்தமையானது, மலையகம் 200 ஆண்டுகளில் எதிர்கொண்ட பிரச்சினைகளை இன்றைய சந்ததியினருக்கு வெளிக்காட்டுவதற்கு மிகப்பெரும் வாய்ப்பாக அமைந்திருந்தது.


கந்தலோயா பாடசாலையானது, கற்றல் செயற்பாடுகளுக்கு மேலதிகமாக மலையக மக்களின் பாரம்பரிய கலை, இசை போன்றவற்றை மீட்டெடுத்து மாணவர்களுக்கு போதிக்கும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதுடன், உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளையும் பெற்றுள்ளது. 2016 ஆம் ஆண்டு இங்கு உயர்தர கலைப்பிரிவும் 2018 ஆம் ஆண்டு வர்த்தகப் பிரிவும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இதுவரை 37 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 18 ஆசிரியர்களுக்கான தேவை இப்பாடசாலையில் காணப்பட்ட போதும் 12 ஆசிரியர்களே தற்போது கற்பித்தல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். பாரிய வளப்பற்றாக்குறையுடன் இயங்கிவரும் இப்பாடசாலையில் மாணவர்களுக்கான கட்டிடத் தேவைகள் அதிகம் காணப்படுவதை இனங்காண முடிகின்றது. எனினும் பல்வேறு வளப்பற்றாக்குறைகளுடன் பாடசாலை இயங்கினாலும் தேசிய ரீதியில் மாணவர்கள் பல்வேறு அடைவுகளை பெற்றுள்ளனர்.

கல்வி மட்டுமல்லாது இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் மாணவர்கள் தேசிய மட்டத்தில் வெற்றிகளை குவித்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு தேசிய கணித நாடக விழாவில் கனிஷ்ட பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளதுடன் 2019 ஆம் ஆண்டு சிறந்த செயற்பாட்டுக்கான விருதினையும் பாடசாலை பெற்றுக்கொண்டுள்ளது. 


2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மெய்வல்லுனர் போட்டியில் 20 வயதுக்கு கீழ்ப்பட்ட ஈட்டி எறியதல் போட்டியில் 6 ஆவது இடத்தினையும் 2014 ஆம் ஆண்டு 16 வயதின் கீழ் பெண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் 9 ஆவது இடத்தினையும் 2015 ஆம் ஆண்டு குண்டெறிதல் மற்றும் பரிதிவட்டம் போன்றவற்றிலும் தேசிய ரீதியில் வெற்றிகளை பதிவு செய்துள்ளது. மேலும் இலங்கை கராத்தேதோ சம்மேளனத்தின் கறுப்புபட்டி டிப்ளோமாவினை இப்பாடசாலையின் 10 மாணவர்கள் நிறைவு செய்துள்ளனர். அத்துடன் தேசிய மட்டத்திலும் பல்வேறு சாதனைகளையும் பதக்கங்களையும் பெற்றுள்ளமையினையும் குறிப்பிட வேண்டும்.

இவ்வாறு பல்வேறு சாதனைகளுக்கு சொந்தமான கந்தலோயா பாடசாலையானது பல்வேறு வளப்பற்றாக்குறைகளை எதிர்கொண்டுள்ளது. எனவே மாணவர்களின் கல்வித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான உதவிகளையும் வளப்பற்றாக்குறைக்கான உதவிகளையும் வழங்க பலரும் முன்வர வேண்டும். மலையகம்.lk ஊடக வலையமைப்பின் மலையகம் 200 விருது வழங்கும் விழா இங்கு இடம்பெற்றமையின் மூலம் பாடசாலையின் உயர் அடைவுகளை எம்மால் அறிந்து கொள்ள முடிந்தது. அதேவேளை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோரின் முயற்சி, கஷ்டங்கள், தேவைகளை சமூகத்துக்கு எடுத்து கூறுவதும் எமது கடமையாக இருக்கின்றது.




















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக