‘நீரின்றி அமையாது உலகு’ என வள்ளுவர் தனது திருக்குறலில் நீரின் பெருமையை எடுத்தியம்பியுள்ளார். இலங்கை அதிக நீர் வளங்களை பெற்றிருப்பதால் நீரின் பெருமை தொடர்பில் பலரும் அறிவதில்லை. அதேபோல நீருக்காக பல மைல் தூரம் கடந்து செல்ல வேண்டிய நிலையில் இலங்கையின் பல பகுதிகளில் காணப்பட்டாலும் பெரும்பாலான நகர்புறங்களுக்கு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டு கட்டணம் அறவிடப்படுகின்றன.
இதனடிப்படையில் அண்மையில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நிதி நிலைபேற்றை உறுதிப்படுத்தல் மற்றும் பொதுமக்களுக்கு தொடர்ச்சியாகவும் தடையின்றியும் நீர் வழங்கலை மேற்கொள்வதற்கு கட்டணங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மீண்டெழும் செலவுகள் மற்றும் மூலதனக் கடன் பொறுப்புக்களை ஈடு செய்வதற்கு இயலுமான வகையில் தற்போது அறவிடப்படும் நீர்க் கட்டணம் மற்றும் மலக்கழிவகற்றல் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதனால் மின்கட்டணம், போக்குவரத்து கட்டணம் போன்றவற்றுக்கு அடுத்தபடியாக நீர் கட்டணத்தையும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையானது நீர் விநியோகத்துக்கு குறைந்தளவான கட்டணத்தை அறவிடுவதால் மாத்திரம் நட்டத்தை எதிர்கொள்வதாக கருதி விடமுடியாது. மாறாக நிலுவையில் உள்ள நீர் கட்டணத்தை அறவிடுவதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமையும் இதற்கு காரணமாகும். அதில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட இல்லங்களின் நீர் கட்டணங்களும் உள்ளடங்கும்.
இந்நிலையில் நாட்டில் நிலுவையிலுள்ள நீர் கட்டணங்கள் மற்றும் குடிநீர் இணைப்புகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் (DGM/CP/RTI 12-2016/321 Appeal) தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களிலுமுள்ள நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வாடிக்கையாளர்களிடமிருந்து 4721 மில்லியன் ரூபா நீர் கட்டணம் (2022 ஏப்ரல் மாதம் வரை) இதுவரை அறவிடப்படவில்லை. இவற்றில் மேல் மாகாணத்தில் 3045 மில்லியன் ரூபாவும் ஊவா மாகாணத்தில் 89 மில்லியன் ரூபாவும் தென் மாகாணத்தில் 609 மில்லியன் ரூபாவும் சப்ரகமுவ மாகாணத்தில் 158 மில்லியன் ரூபாவும் வட மேல் மாகாணத்தில் 162 மில்லியன் ரூபாவும் வட மத்திய மாகாணத்தில் 186 மில்லியன் ரூபாவும் வடக்கு மாகாணத்தில் 60 மில்லியன் ரூபாவும் கிழக்கு மாகாணத்தில் 278 மில்லியன் ரூபாவும் மத்திய மாகாணத்தில் 134 மில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டியுள்ளது.
வீட்டுப்பாவனை, தொழிற்சாலை மற்றும் வணிக நடவடிக்கை, அரச நிறுவனங்களுக்கான நீர் விநியோகத்துக்கான நீர் பட்டியல் கட்டணமாக 2021 ஆம் ஆண்டு 27,550 மில்லியன் ரூபா செலுத்த வேண்டிய நிலையில் 4793 மில்லியன் ரூபா நிலுவைத் தொகை பாவனையாளர்களினால் செலுத்தப்பட்டிருக்கவில்லை.
இதேவேளை வீட்டு பாவனையின் நிமித்தம் வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புக்களின் ஊடாக 2021 ஆம் ஆண்டுக்குரிய நீர்கட்டணம் 18,563 மில்லியன் ரூபாவாக காணப்பட்ட நிலையில் 3698 மில்லியன் ரூபா நிலுவை கட்டணமாக பாவனையாளர்கள் செலுத்த வேண்டியுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
தொழிற்சாலைகள் மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புக்களுக்கு 2021 ஆம் ஆண்டு 6153 மில்லியன் ரூபா நீர் கட்டணம் அறவிடப்பட்டுள்ள நிலையில் 730 மில்லியன் ரூபா நிலுவைக்கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புக்களுக்கு 2021 ஆம் ஆண்டு 2834 மில்லியன் ரூபா நீர் கட்டணம் அறவிடப்பட்டுள்ள நிலையில் 365 மில்லியன் ரூபா பாவனையாளர்களால் நிலுவைக்கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் செலுத்த வேண்டியுள்ள நீர் கட்டணங்கள் தொடர்பில் வினவிய போது, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நீர்பட்டியல் கணக்கு விபரங்களை பிரித்து கண்டறிவதற்குரிய முறையொன்று தற்போது பட்டியலிடல் வலையமைப்பினுள் இல்லாததன் காரணத்தால் கோரப்பட்டுள்ள குறித்த தகவல்களை திட்டவட்டமாக வழங்க முடியாதுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
எனினும் நீர் கட்டணங்களை செலுத்தாத முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 45 பேர் வரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 10 பேர் வரை உயிருடன் இல்லையெனவும் முன்னாள் நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருந்தார்.
அமைச்சு மட்டத்தில் தமக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை பெற்றுள்ளதால், செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களை அந்தந்த அமைச்சுக்கள் ஊடாக பெற்றுக்கொள்ளுமாறு இவர்களில் சிலர் தமக்கு அறிவித்துள்ளதாகவும் இத்தகைய முறைமையொன்று இல்லையென்பதால் தம்மால் கட்டணங்களை செலுத்த இயலாதென அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலைமை தொடர்பில் அமைச்சரவைக்கு அறியப்படுத்தி இறுதித் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சரவையினால் வழங்கப்படும் பதிலுக்கு அமைவாக செயற்படாத, கட்டணத்தை செலுத்துவதில் இருந்து தவறும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது. எனினும் புதிய அரசாங்கம் பதவியேற்றமையால் அவை தொடர்பில் தொடர்ச்சியாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கி 2,817,987 நீர் இணைப்புக்கள் (2022 ஏப்ரல் மாதம் வரை) வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் மேல் மாகாணத்தில் 1,193,398 இணைப்புகளும் ஊவா மாகாணத்தில் 139,433 இணைப்புகளும் தென் மாகாணத்தில் 371,607 இணைப்புகளும் சப்ரகமுவ மாகாணத்தில் 142,135 இணைப்புகளும் வட மேல் மாகாணத்தில் 113,092 இணைப்புகளும் வட மத்திய மாகாணத்தில் 163,528 இணைப்புகளும் வடக்கு மாகாணத்தில் 39,546 இணைப்புகளும் கிழக்கு மாகாணத்தில் 339,613 இணைப்புகளும் மத்திய மாகாணத்தில் 315,635 இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை நாடு முழுவதும் சட்டவிரோதமான குடிநீர் இணைப்புக்களின் மூலம் பயன்பெற்றுள்ளமை தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டாலும் அவை தொடர்பான தரவுகள் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பேணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவல்களை பட்டியலிலடல் கணினி வலையமைப்பின் ஊடாக திட்டவட்டமாக கண்டறிய முடியாதுள்ளமையினால் உரிய தகவல்களை தற்போது வழங்க முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் நீர் கட்டணம் 70 வீதத்தால் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதேபோல், 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் மின் கட்டண அதிகரிப்பு காரணமாக செலவை குறைக்கும் நோக்கில் நீர் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை வருமானத்திற்கேற்ப நுகர்வோரிடமிருந்து கட்டணத்தை அறவிடுவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. தற்போது குறைந்த வருமானம் பெறுபவருக்கும் அதிக வருமானம் பெறுவோருக்கும் ஒரே முறையாலன கட்டணமே அறவிடப்படுகின்றது. இதனால் குறைந்த வருமானம் பெறுபவருக்கு நிவாரணம் வழங்கவும் அதிக நீரை பயன்படுத்துவோருக்கு வேறு முறையில் நீர் கட்டணத்தை அறவிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 60 அரசியல்வாதிகளின் நீர் விநியோகத்தை துண்டிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது. அந்த குடிநீர் கட்டணங்களின் மொத்த மதிப்பு ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமாகும். இவ்வாறு குடிநீர் கட்டணத்தை செலுத்த தவறியவர்களில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர்களும் அடங்குவர். முன்னாள் அமைச்சர்களில் சிலர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் கட்டணத்தைச் செலுத்தத் தவறிய ஓய்வுதியம் பெறும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய நிலுவைத் தொகையை மீளப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக