இலங்கை ரயில் சேவையானது இலங்கையின் நீண்ட கால பாரம்பரியத்தை கொண்டது. ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இலங்கையின் ரயில்வே சேவை இன்னும் தொழில்நுட்ப ரீதியாக மேம்படாமல் பாரம்பரிய முறையிலேயே இயங்கி வருவதை அவதானிக்க முடிகின்றது. ரயில் என்ஜின்கள் மற்றும் பெட்டிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் சேவைகள் இன்றும் புத்துயிர் பெறவில்லை. இதேவேளை இலங்கை ரயில் சேவையை அபிவிருத்தி செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்ட பல ரயில் என்ஜின்கள் மற்றும் பெட்டிகள் பாவனைக்குட்படத்தப்படாமல் ரயில்வே துறைக்கு கடன் சுமையை அதிகரித்துள்ளது. இதனால் இலங்கை ரயில்வே தொடர்ச்சியான நட்டத்தினை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை ரயில் கடவைகள் அமைக்கப்படாமை, இலங்கை ரயில் பாதைகளுக்கு ஏற்வகையிலான ரயில் என்ஜின்கள் மற்றும் பெட்டிகள் இறக்குமதி செய்யப்படாமை, ரயில் பாதைகள் அடிக்கடி பழுதடைகின்றமையாலும் அதிகளவில் ரயில் விபத்துக்கள் ஏற்படுவதுடன் யானைகள் அதிகளவில் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகின்றது. இதனால் தொடர்ச்சியாக ரயில் திருத்த வேலைகளுக்கு அதிக நிதியினை செலவிட வேண்டி ஏற்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் ரயில்வே திணைக்களத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 2015 – 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 5051 ரயில் விபத்து சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும் அவற்றின் மூலம் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் எவ்வித மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்படுவதில்லையென இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. சமீப காலங்களில் ஏற்படும் விபத்துகள் அல்லது ரயில் தண்டவாளத்தை விட்டு வெளியேறுதல் என்பன இலங்கையின் தண்டவாளங்களுக்கு பொறுத்தமற்ற ரயில் என்ஜின்கள் மற்றும் ரயில் பெட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டமையே காரணமாகும். இதனால் 2015 – 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 56,972.31 மில்லியன் ரூபா செயற்பாட்டு இழப்பினை இலங்கை புகையிரத திணைக்களம் எதிர்கொண்டுள்ளது.
இதேவேளை இந்திய கடன் வசதியின் கீழ் வழங்கப்பட்ட ரயில் என்ஜின்கள் மற்றும் பெட்டிகள் தொடர்பில் ரயில்வே தொழிற்சங்கங்களினால் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதன்படி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ரயில் என்ஜின்கள் மற்றும் பெட்டிகள் தொடர்பில் பின்வரும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிகாலத்தில் இலங்கைக்கு எம்-9 வகையை சேர்ந்த 10 என்ஜின்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் 2 என்ஜின்களே தற்போது செயற்பாட்டில் உள்ளன. தற்போது மீண்டும் 10 என்ஜின்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
- இலங்கை புகையிரத திணைக்களத்துக்கு இந்திய கடன் திட்டத்தின் அடிப்படையில் 10 என்ஜின்களும் 160 பெட்டிகளும் கொள்வனவு செய்யப்பட்டமையினால் 2500 கோடி ரூபா கடன் சுமை அதிகரித்துள்ளது. கொள்வனவு செய்யப்பட்ட 10 என்ஜின்களும் இலங்கை ரயில் பாதையில் இயக்குவது கடினமாகும். எம்-11 வகையைச் சேர்ந்த என்ஜின்கள் எமது நாட்டு பாதைகளுக்கு பொருத்தமானவை அல்ல.
- எம்-11 வகையைச் சேர்ந்த என்ஜின் ஒன்றின் எடை 120 தொன்னாகும். எமது நாட்டு ரயில் பாதையில் 100 தொன்னுக்கும் குறைவான என்ஜினை இயக்க முடியும். இந்த ஒரு என்ஜினின் பெறுமதி 76 கோடி ரூபா என புகையிதை திணைக்களத்தின் தகவல் பிரிவு தெரிவிக்கிறது. நமது நாட்டுக்கு சரியான என்ஜினானது 60 அடி கொண்டதாக அமைய வேண்டும்.
- 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இந்திய கடனுதவியின் மூலம் 10 என்ஜின்களும் 160 பெட்டிகளும் இறக்குமதி செய்யப்பட்டதுடன் அவை 7 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. 41 முன்றாம் வகுப்பு பெட்டிகளும் 41 இரண்டாவது வகுப்பு பெட்டிகளும் மூன்றாவது வகுப்பில் 17 பிரேக் வேன்களும் இரண்டாவது வகுப்பில் 8 பிரேக் வேன்களும் மூன்றாம் வகுப்பில் 13 கென்டின் பெட்டிகளும் குளிரூட்டப்பட்ட 35 பெட்டிகளும் 5 சரக்கு பெட்டிகளும் இவற்றில் உள்ளடங்கும்.
- மூன்றாம் வகுப்பு பெட்டிகள் 41 இல் ஒன்றின் விலை 584,240 அ.டொலராகும். (இலங்கை பெறுமதி 93,479,811 ரூபா) இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 41 இல் ஒன்றின் விலை 572,254 அ.டொலராகும். (இலங்கை பெறுமதி 11 ரூபா) மூன்றாவது வகுப்பு 17 பிரேக் வேன்களில் ஒன்றின் விலை 587,247 அ.டொலராகும். (இலங்கை பெறுமதி 93,959,572 ரூபா) இரண்டாவது வகுப்பு 8 பிரேக் வேன்கள் ஒன்றின் விலை 578,251 அ.டொலராகும். (இலங்கை பெறுமதி 92,520,297 ரூபா) மூன்றாவது வகுப்பில் 13 கென்டின் பெட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவற்றின் ஒன்றின் விலை 631,891 அ.டொலராகும். (இலங்கை பெறுமதி 101,126,065 ரூபாவாகும்) குளிரூட்டப்பட்ட 35 பெட்டிகளில் ஒன்றின் விலை 801,251 அ.டொலர்கள் ஆகும். (இலங்கை பெறுமதி 16 கோடி ரூபா) சரக்கு பெட்டிகள் 5 இல் ஒன்றின் விலை 483,188 அ.டொலர்களாகும். (இலங்கை பெறுமதி 77,310,132 ரூபாவாகும்)
- இலங்கை ரயில்வே திணைக்களத்துக்கு ஒரு நாளைக்கு 10 கோடி ரூபாவுக்கும் மேல் இழப்பு ஏற்படுவதுடன் மாதாந்தம் 300 கோடியை தாண்டும். 2021 ஆம் ஆண்டு வருமானமாக 260 கோடி பெறப்பட்டுள்ளதுடன் 3200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜூலை வரையில் 480 கோடி வருமானமாக பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் 3300 கோடி இழப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ரயில் விபத்துகள், ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படுதல் போன்றவற்றினாலும் அதிக இழப்புகள் எதிர்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் இலங்கையில் ரயில் விபத்து மற்றும் புதிய ரயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் இறக்குமதி தொடர்பில் இலங்கை புகையிரத திணைக்களத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் ஆன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு அமைவாக திட்டமிடல் பிரிவின் உதவி பணிப்பாளர் ஜே.ஏ.டி.ஆர்.புஸ்பகுமார் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இலங்கைக்கு பொருத்தமில்லாத புதிய ரயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் இறக்குமதியினால் அதிக இழப்புகளை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளமையினை எம்மால் அறிந்து கொள்ள முடிந்தது.
2017ஆம் ஆண்டு இந்தியாவின் கடன் மானியத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டிருந்த ரயில் பெட்டிகள் பல வருடங்கள் காலதாமதமாகி இறக்குமதி செய்யப்பட்டமை மற்றும் அவற்றில் பல இன்னும் பயன்படுத்தப்படாமல் இருப்பது தொடர்பில் தொடர்ந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எம் 11 வகை 10 டீசல் லோகோமோட்டிவ் என்ஜின்களும் எஸ்13 வகை 12 டீசல் எலக்ரிக் பவர் ரயில் பெட்டிகளும் எஸ்14 வகை 18 எலக்ரிக் பவர் ரயில் பெட்டிகளும் எஸ்14ஏ வகை 4 டீசல் எலக்ரிக் பவர் கார்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் திட்டமிடல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட லோகோமோட்டிவ் என்ஜின்கள் மற்றும் பயணிகள் ரயில் பெட்டிகளுக்காக 99,206,265.5 அமெரிக்க டொலர்கள் செலவு (இலங்கை பெறுமதி 35,898,749,471.95 ரூபா) செய்யப்பட்டுள்ளது. லோகோமோட்டிவ் என்ஜின்கள் இறக்குமதிக்கு 58,831,265.50 அ.டொலர்களும் (இலங்கை பெறுமதி 21,288,664,084.45 ரூபா) பயணிகள் ரயில் பெட்டிகளுக்கு 40,375,000 அ.டொலர்களும் (இலங்கை பெறுமதி 14,610,085,387.50 ரூபா) செலவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கை ரயில்வே திணைக்களத்துக்கு பலகோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் ரயில் விபத்துகள், ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டமையின் காரணமாகவும் பல இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இலங்கை ரயில் பாதைகளுக்கு பொருத்தமற்ற ரயில் என்ஜின்கள் மற்றும் பெட்கள் காரணமாக அதிக விபத்துக்கள் ஏற்படுவதுடன் பழமையான ரயில் கட்டமைப்பினாலும் விபத்துகள் ஏற்படுவதை அவதானிக்க முடிகின்றது. 2015 – 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 5051 ரயில் விபத்து சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும் அவற்றின் மூலம் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பிலான தகவல்கள் வழங்கப்படவில்லை. 2015 இல் 743 விபத்துகளும் 2016 இல் 780 விபத்துகளும் 2017 இல் 719 விபத்துகளும் 2018 இல் 865 விபத்துகளும் 2019 இல் 841 விபத்துகளும் 2020 இல் 550 விபத்துகளும் 2021 இல் 553 விபத்துக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனினும் ரயில் விபத்துக்களினால் இலங்கை புகையிரத திணைக்களத்துக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பில் வினவப்பட்ட போதும் அதற்கு உரிய பதில் வழங்கப்படாமையினால் தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவில் மேன்முறையீடு மேற்கொள்ளப்பட்டது. குறித்த மேன்முறையீட்டு விசாரணையின் போது ரயில் விபத்துக்கள் மற்றும் ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டமையால் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் செயற்பாட்டு பிரிவிலிருந்து தகவல் பெற்றுத் தருவதாக அறிவித்த போதும் அவை தொடர்பான தகவல்கள் எவையும் இலங்கை புகையிரத திணைக்களத்தால் பேணப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் இடம்பெற்ற ரயில் விபத்துக்களினால் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் உரிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
பாரிய செலவில் இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தாத நிலையில் பல ரயில் பெட்டிகள் காணப்படுகின்றன. நானுஓயா ரயில் நிலைய யார்டில் டிசி 15508, டிசி 15250, டிசி 8262 இலக்க ரயில் பெட்டிகளும் மாளிகாவத்தை யார்டில் 8381 இலக்க பெட்டிகளும் இரத்மலானை யார்டில் டிசிபியு 16223, எஸ்3 7893, டிசி 7960, எஸ்6 எஸ்.பி.சி 8090, டிசி 8413, டிசி 7953, எஸ்சி 79, டிசி 15949, டிவி 15949 (பன்னலிய), ஓ.எப்.வி 8375 (யட்டல்கொட), டிவி 15945 (பொதுஹர) ஆகிய இலக்க ரயில் பெட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டு எவ்வித செயற்பாடும் இன்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அண்மையில் இரத்மலானை யார்டில் ஏற்பட்ட தீவிபத்தில் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டியொன்று தீவிபத்துக்குள்ளாகியது. அத்துடன் இவ்வாண்டு இதுவரை 45 ரயில்கள் தடம்புரண்டுள்ளன.
இவ்வாறு உரிய திட்டமிடலின்றியும் தொழில்நுட்ப குழுவின் ஆலோசனைகளை புறக்கணித்தும் செயற்படுவதின் விளைவாக இலங்கை புகையிரத திணைக்களம் நாட்டுக்கு அதிக நட்டத்தை ஏற்படுத்தும் நிறுவனமாக மாறியுள்ளது. 2015 – 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 56,972.31 மில்லியன் ரூபா செயற்பாட்டு இழப்பினை இலங்கை புகையிரத திணைக்களம் எதிர்கொண்டுள்ளது. இவற்றினை ஈடுசெய்ய மக்களே அதிக சுமையினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே பாரம்பரிய சேவை நடவடிக்கையிலிருந்து விலகி நவீன தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. இலங்கை சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்வதற்கு ரயில் பயணங்களும் பங்கு வகிக்கும் நிலையிலும் ஆபத்தான பயணங்கள் பயணிகளின் பாதுகாப்பினையும் கேள்விக்குட்படுத்துகின்றது. எனவே இலங்கை புகையிரத திணைக்களத்தில் இடம்பெறுகின்ற நிர்வாக சீர்கேடுகளை களைந்து உரிய முகாமைத்துவத்தினை உறுதிப்படுத்த வேண்டியுள்ளதுடன் நாட்டுக்கும் மக்களுக்கும் நட்டத்தை ஏற்படுத்தாத சேவையினை உறுதி செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக