தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை கடந்த 20 வருடங்களாக தீர்மானித்த கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து முதலாளிமார் சம்மேளனம் விலகியுள்ள நிலையில் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்தை நோக்கி செல்வதற்கு தொழிற்சங்கங்கள் விரும்புவதாக அறியமுடிகின்றது. 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டுமென அரசாங்கம் அறிவித்த பின்னர் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகிய கம்பனிகள் தொழிலாளர்களுக்கு கடும் நெருக்கடியினை வழங்கியுள்ளது. இந்நிலையில் முதன்முறையாக தொழிலாளர்களைக்கொண்டு 1000 ரூபா வேதனத்தை வழங்குமாறுகோரி இ.தொ.கா. போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றது. இந்நிலையில் தற்போது கூட்டு ஒப்பந்தமானது தொழிலாளர்களுக்கா? அல்லது தொழிற்சங்கங்களுக்கா? அதிக தேவையினை ஏற்படுத்தியுள்ளது என்பது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது.
கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருந்த காலப்பகுதியிலும் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை என்றாலும் அவர்களுக்கான தொழில் பாதுகாப்பினை ஓரளவுக்கு வழங்கியது. அதேவேளை தொழிற்சங்கங்களுக்கு சந்தா பணத்தின் மூலம் பாரிய தொகையினையும் வழங்கியது. தொழிற்சங்கங்களின் அலுவலக செலவுகள் மற்றும் அலுவலகத்தில் கடமையாற்றும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் இதன் மூலம் வழங்கப்பட்டதுடன் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் வழங்கிய சந்தாவின் மூலம் இலாபகரமாக இயங்கியிருந்தன. எனினும் கூட்டு ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்ட பின்னர் தொழிற்சங்கங்களுக்கு சந்தா பணம் செல்வது நிறுத்தப்பட்டமையால் பெரும் நிதி நெருக்கடியினை எதிர்கொண்டமையினை வெளிப்படையாகவே அறிய முடிந்தது.
எனவே தற்போது கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் கரிசணை கொண்டுள்ள தொழிற்சங்கங்கள், முதலாளிமார் சம்மேளனம் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்த போதே ஏன் நடவடிக்கையினை மேற்கொள்ளவில்லை என்ற கருத்தும் மேலெழுகின்றது. எனவே கூட்டு ஒப்பந்தம் மூலம் அதிக நன்மைகளை பெற்றுக்கொண்டது தொழிலாளர்களா அல்லது தொழிற்சங்கங்களா என்பது தொடர்பில் நாம் ஆராய வேண்டிய தேவை எழுந்துள்ளது.
தொழிலாளர்களின் வேலை நிபந்தனைகளும் நிலைமைகளும், அவர்களின் முறையான உரிமைகளும் பொறுப்புக்களும் தொழில் பிணக்குகளைக் தீர்க்கும் வழிவகை ஆகியவை சம்பந்தமாக தொழில் வழங்குநர், தொழிலாளர்கள் அல்லது தொழிற்சங்கம் ஆகியவற்றுக்கிடையே செய்து கொள்ளப்படும் ஒப்பந்தமே கூட்டு ஒப்பந்தமாகும்.
1998 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான 21 வருட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 12 கூட்டு ஒப்பந்தங்களில் 11 கூட்டு ஒப்பந்தங்கள் தொழிலாளர்களுடைய சம்பள விடயங்கள் தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளன. ஆனால் அவற்றை தவிர்த்து மேலதிகமாக தொழிலாளர்களின் நலன்களில் எவ்வித அக்கறையினையும் கொண்டிருக்கவில்லை. 2003 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தில், தொழில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், ஊதியங்கள் மற்றும் விலைபங்கு, மேலதிக நேரவேலை, வேலைநாட்களும் சம்பள முற்பணங்களும், வேலை ஏற்பாடுகள், பணி நிலையும் அது தொடர்பான பிரச்சினைகளும், மிகை விகிதங்கள், வருகை போனஸ், சுகயீன விடுமுறை, ஓய்வு பெறும் வயது, மகப்பேறு நலன்கள், தொழில் முகாமைத்துவ உறவுகள், ஒழுக்காற்று நடவடிக்கை, குறை/பிணக்கு நடைமுறை, தொழிலுறவு என 20 சரத்துக்களை உள்ளடக்கியிருந்தது. ஆனால் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தங்களில் அவை தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. அத்துடன் கூட்டு ஒப்பந்த சரத்துக்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தொழிலாளர்களுடைய சேமநலன்கள் இதுவரையும் அமுல்படுத்தப்பட்டுள்ளனவா என்பதும் கேள்விக்குரியாகும்.
ஆனால் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் கடந்த 20 வருட காலத்தில் அடிப்படைச் சம்பளத்தில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு 599 ரூபாவும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு 602 ரூபாவுமே சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுடைய அடிப்படைச் சம்பளமாக 101 ரூபா காணப்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு அத்தொகை 700 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டது. எனவே தோட்டத் தொழிலாளர்கள் 599 ரூபாவினை பெற்றுக்கொள்ள 20 வருடங்கள் காத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
1997 ஆம் ஆண்டு முதல் கூட்டு ஒப்பந்தமானது நடைமுறைக்கு வந்தாலும் 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னரே தொழிலாளர்களுடைய சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. 2000 - 2021 ஆம் ஆண்டின் அரையாண்டு காலப்பகுதி வரை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பானது கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் எவ்வாறு அதிகரித்துள்ளது என்பதை அட்டவணையின் மூலம் அவதானிக்கலாம்.
அதேவேளை கூட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததன் பின்னர் தொழிற்சங்கங்கள் தாங்களாகவே நிர்ணயித்துக்கொண்ட சந்தா பணத்தின் மூலம் வருடாந்தம் எவ்வளவு நிதியினை பெற்றுக்கொண்டார்கள் என்பது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2015/2016 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் சந்தாப்பணத்தின் மூலம் 94,731,687 ரூபாவைப் பெற்றுக் கொண்டுள்ளது. 2016/2017 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் 77,751,933 ரூபாவும் 2017/2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 66,769,603 ரூபாவும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அரசியல் நிதியெனும் வகையில் 2015ஃ2016 காலப்பகுதியில் 10,525,743 ரூபாவும் 2016/2017 காலப்பகுதியில் 8,639,104 ரூபாவும் 2017/2018 காலப்பகுதியில் 19,668,944 ரூபாவும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏனைய வரவுகள் எனும் வகையில் வட்டி, வாடகை, முதலீடுகள், கடன்கள் மூலமான வட்டி மற்றும் காப்புறுதி என 2015 /2016 காலப்பகுதியில் 20,879,977 ரூபாவும் 2016/2017 காலப்பகுதியில் 23,375,980 ரூபாவும் 2017/2018 காலப்பகுதியில் 19,668,944 ரூபாவும் இலாபமாக பெற்றுக்கொண்டுள்ளன. இவ்வாறு சந்தாப்பணம், அரசியல் நிதி மற்றும் ஏனைய வரவுகள் என்ற அடிப்படையில் மொத்தமாக 2015/2016 காலப்பகுதியில் 126,37,407 ரூபாவும் 2016/2017 காலப்பகுதியில் 109,767,017 ரூபாவும் 2017/2018 காலப்பகுதியில் 973,49,464 ரூபா என்றவகையில் வருமானம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
தொழிலாளர் தேசிய சங்கம் தொழிலாளர்களின் சந்தா பணத்தின் மூலம் 2015/2016 காலப்பகுதியில் 26,052,673.87 ரூபாவினையும் 2016/2017 காலப்பகுதியில் 34,524,328.41 ரூபாவினையும் 2017/2018 காலப்பகுதியில் 43,059,329 ரூபாவினையும் பெற்றுக்கொண்டிருந்தது.
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தொழிலாளர்களின் சந்தா பணத்தின் மூலம் 2015/2016 காலப்பகுதியில் 19,489,213.85 ரூபாவினையும் 2016/2017 காலப்பகுதியில் 22,437,558.53 ரூபாவினையும் 2017/2018 காலப்பகுதியில் 24,702,439.33 ரூபாவினையும் பெற்றுக்கொண்டிருந்தன.
அதன்படி 2017/2018 காலப்பகுதியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மாதமொன்றுக்கு சராசரியாக 55 இலட்சம் ரூபாவினையும் தொழிலாளர் தேசிய சங்கம் சராசரியாக 35 இலட்சம் ரூபாவினையும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் சராசரியாக 20 இலட்சம் ரூபாவினையும் சந்தா பணமாக பெற்றுக்கொண்டுள்ளன. இதேவேளை 2015/2016 காலப்பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சராசரியாக மாதமொன்றுக்கு 79 இலட்சம் ரூபாவினை சந்தா பணமாக பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் சந்தா பணத்தினால் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நிலையான வைப்பில் 9 கோடி ரூபா காணப்படுவதுடன் அதற்கு மாதாந்தம் வட்டியாக 15 இலட்சம் ரூபா கிடைக்கப்பெறுவதாகவும் இராஜகிரியவில் 1 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சங்க தலைமைக்காரியாலய கட்டிடம் காணப்படுவதாகவும் அதன் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஸ் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளை விடவும் தொழிற்சங்கங்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளே அதிகமாக இருக்கின்றன. எனவே மீண்டும் கூட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிப்பதில் ஒரு பாதுகாப்பை வழங்கும் என்றாலும் தொழிற்சங்கங்களுக்கும் தனிப்பட்ட ரீதியில் நன்மைகள் இருக்கின்றன. எனவே கூட்டு ஒப்பந்தம் மீண்டும் கைச்சாத்திடப்பட்டாலும் சந்தா பணத்தினை பெற்றுக்கொள்ளாமல் செயற்படுவதற்கு தொழிற்சங்கங்கள் தயாராக இருக்கின்றனவா? மீண்டும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்போகும் தொழிற்சங்கங்கள் எவை? மற்றும் எவ்வாறான கோரிக்கைகள் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டும், தொழிலாளர்களுடைய சேமநலன்களை பாதுகாப்பது தொடர்பான சரத்துக்கள் உள்ளடக்கப்படுமா? போன்ற விடயங்கள் தொழிலாளர்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் நிபுணர்களின் கருத்துகளும் அவற்றில் இடம்பெற வேண்டும். அதைவிடுத்து தொழிற்சங்க நலன்களுக்காக மாத்திரம் கூட்டு ஒப்பந்தத்தை பயன்படுத்திக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக