கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

30 டிசம்பர், 2021

போதையற்ற சமூகத்தை உருவாக்கும் பொறுப்பு யாருடையது?


இலங்கையை போதைபொருளற்ற நாடாக மாற்றுவதே பலருடைய நோக்கமாக இருந்த நிலையில் தற்போது வருமானத்துக்காக கஞ்சா பயிரை சட்டரீதியாக அங்கீகரிப்பதற்கு பாராளுமன்றத்தில் வாதங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மறுபுறம் போதைபொருள் பாவனையால் சமூக பாதிப்புகளுடன் மருத்துவ செலவுகள் அதிகரிப்பதால் பொருளாதார இழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே போதையற்ற நாட்டை உருவாக்குவது சாத்தியமில்லாத கனவாக மாறியுள்ளது. மேல் மாகாணத்திலுள்ள 37 பொலிஸார் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 

இவர்களில் 28 பொலிஸ் அதிகாரிகள் கொழும்பு வலயத்துக்குள்ளும் 6 அதிகாரிகள் களுத்துறை வலயத்துக்குள்ளும் மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருவரும் மேல்மாகாணத்தின் தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு அதிகாரியும் இவ்வாறு போதைக்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அதிகாரிகளே இவ்வாறு போதைக்கு அடிமையாகும் நிலை காணப்படுகையில் இலங்கையில் போதையற்ற சமூகத்தை எவ்வாறு உருவாக்குவது. மேலும் இலங்கையில் 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, போதைப்பொருள் பாவனையால் வருடாந்தம் 43 ஆயிரம் பேர் மரணிப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் போதைப்பொருள் பாவனையாளர்கள் தொடர்பான விபரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையிடமிருந்து பெற்றுக்கொள்ள முடிந்தது. அவை வருமாறு:

இலங்கையில் போதைப்பொருள் பாவனையாளர்கள்

இலங்கையில் மிக அதிகமாக மதுபானம், சிகரட், கஞ்சா, ஹெரோயின், கொக்கெயின், ஹசிஸ், மருத்துவ குளிசைகள், மெதம்படைன் என்பன பிரதான போதைப்பொருளாக பயன்படுத்தப்படும் நிலை காணப்படுகின்றது. எனினும் கஞ்சா, ஹெரோயின், மருத்துவ குளிசைகள் போன்றன விற்பனை செய்வது இலங்கையில் சட்டரீதியாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையிலும் பாரியளவில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன. தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை இறுதியாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கையில் 3,035,143 மதுபாவனையாளர்களும் 2,406,581 சிகரட் பாவனையாளர்களும் 301,898 கஞ்சா பாவனையாளர்களும் 92,540 ஹெரோயின் பாவனையாளர்களும் 24,211 மருத்துவ குளிசைகளை பாவிப்பவர்களும் 111,324 பேர் ஏனைய போதைப்பொருட்களை பாவிப்பவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும் தற்போதைய நிலைகளில் இத்தரவுகள் இன்னும் அதிகரிக்கலாம். 


மாகாணங்களின் அடிப்படையில் மேல் மாகாணத்தில் மிக அதிகமான போதை பொருள் பாவனையாளர்களும் வட மாகாணத்தில் ஒப்பீட்டளவில் குறைவான பாவனையாளர்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் 1,848,726 போதைப்பொருள் பாவனையாளர்களும் மத்திய மாகாணத்தில் 863,565 பாவனையாளர்களும் தென் மாகாணத்தில் 736,341 பாவனையாளர்களும் சப்ரகமுவ மாகாணத்தில் 600,709 பாவனையாளர்களும் வடமேல் மாகாணத்தில் 542,867 பாவனையாளர்களும் வடமத்திய மாகாணத்தில் 438,171 பாவனையாளர்களும் ஊவா மாகாணத்தில் 417,237 பாவனையாளர்களும் கிழக்கு மாகாணத்தில் 272,377 பாவனையாளர்களும் வட மாகாணத்தில் 255,704 பாவனையாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதேவேளை 2021 ஆம் ஆண்டு ஜனவரி – அக்டோபர் வரையான காலப்பகுதியில் ஹெரோயின் தொடர்பில் 19,582 பேரும் கஞ்சா தொடர்பில் 14,649 பேரும் கொக்கெயின் தொடர்பில் 22 பேரும் ஹசிஸ் போதைப்பொருள் தொடர்பில் 26 பேரும் மெதம்படைன் தொடர்பில் 3744 பேரும் மருத்துவ குளிசைகள் தொடர்பில் 155 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 1328.8 கிலோ ஹெரோயினும் 5587.1 கிலோ கஞ்சாவும் 1.64 கிலோ கொக்கெயினும் 334.5 கிலோ மெதம்படைனும் 93.2 ஹசிஸ் போதைப்பொருளும் 10463 கெப்சுல்ஸ் மற்றும் 49722 குளிசைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கொவிட் தொற்றும் போதைப்பொருள் பாவனையும் 

நாட்டில் நிலவிய கொவிட் தொற்று காரணமாக முடக்கப்பட்ட காலப்பகுதியில் போதைப் பொரட்களை கட்த்தல் மற்றும் விநியோகித்தல் செயற்பாடுகளில் ஏற்பட்ட தடங்கல் நிலை காரணமாக போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கொவிட் தொற்றுக் காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள் காரணமாகவோ அல்லது பொருளாதார நெருக்கடிகளின் காரணமாகவோ போதைப்பொருள் பாவனையில் அல்லது விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கருதமுடியவில்லை.

கேரளா கஞ்சா பாவனையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் ஹெரோயின் உள்ளிட்ட ஏனைய சட்டவிரோத போதைப்பொருட்களின் பாவனையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்படவில்லை. கோவிட் தொற்று காலப்பகுதியில் போதைப்பாருள் துஸ்பிரயோகம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் முன்னைய காலங்களில் ஒப்பிடும்போது சற்று வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. எனினும் ஹெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய கைதுகளில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கவில்லை. 


பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியிலும் நாட்டில் பொதைப்பொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளதுடன் போதைப்பொருள் விற்பனையாளர்கள் அதற்கான விசேட வழிமுறைகளை பின்பற்றியுள்ளனர். கொழும்புக்கு வெளியே போதைப்பொருட்களை விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிள் பயன்படுத்தியமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், கொவிட் தொற்று பரவல் காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் மோட்டார் சைக்கிள்களும் போதைப்பொருள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. 

கொவிட் தொற்றுக் காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஏனைய காலங்களில் அடையாளம் காணப்படும் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கையினைவிடவும் அதிகமாகும். கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் புதிய போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருந்ததுடன் ஏனைய பகுதிகளில் ஒப்பீட்டு ரீதியாக வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. மேலும் கொவிட் தொற்று காரணமாக பொலிஸார் கொவிட் கடமைகளில் ஈடுபடுபட்டிருந்தமையால் போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்புகள் மிக குறைந்தளவிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

கொவிட் தொற்று காலப்பகுதியில் பெருந்தோட்டங்களில் மது விற்பனை மற்றும் பாவனை என்பன ஒப்பீட்டளவில் குறைவு ஏற்பட்டிருந்தாலும் மறுபுறம் சட்டவிரோதமான மதுபான உற்பத்திகள் அதிகரித்திருந்தமையினையும் அவதானிக்க முடிந்ததது. 

புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை நிலையங்கள்

இலங்கையில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்காக 43 புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. 2021 ஆகஸ்ட் 11 ஆம் திகதி வரை காலியில் 12 பேரும் தலங்கமவில் 19 பேரும் நிட்டம்புவவில் 20 பேரும் கண்டியில் 22 பேரும் சிகிச்சைபெற்ற நிலையில் கொவிட் தொற்றின் காரணமாக சிகிச்சை நிலையங்களுக்கான அனுமதிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. 

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை திட்டத்துக்காக 2021 ஆம் ஆண்டில் 37 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை முகாம்கள், மேற்கத்திய மருத்துவம், உளவியல் ஆலோசனை, குத்தூசி மருத்துவம், 12 படி முறை, நம்பிக்கை அடிப்டை போன்ற சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன. உளவியல் சிகிச்சை முறை தனிநபரின் அடிப்படையில் கவனம் செலுத்துகின்றது. மற்றும் உளவியல் கோட்பாடுகளிலும் கவனம் செலுத்துகின்றது. உளவியல் பகுப்பாய்வு கோட்பாடு, அறிவாற்றல் கோட்பாடு, அறிவாற்றல் நடத்தை கோட்பாடு, பகுத்தறிவு உணர்ச்சி கோட்பாடு, நடத்தை கோட்பாடு என்பன இவற்றில் உள்ளடங்கும்.

மேலும் இங்கு முக்கிய கருவியாக ஆலோசனை உபயோகிக்கப்படுகின்றது. துனிப்பட்ட ஆலோசனை, குழு ஆலோசனை, சிகிச்சை ஆலோசனை, குடும்ப ஆலோசனை மற்றும் பாலியல் ஆலோசனை என்பனவும் வழங்கப்படுகின்றன. புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட நபர்களில் 24 பேர் செம்டெம்பர் - டிசம்பர் காலப்பகுதியில் தேசிய இளைஞர் கழகத்தில் இணைந்த திறன் மேம்பாட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் தற்போது 2 தனியார் புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை நிலையங்களுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இதுவரை 23 புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை நிலையங்கள் குறைந்தபட்ச தரங்களை பூர்த்தி செய்யாமையினால் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினால் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை.

சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு தொடர்பாக தற்போதைய தேவை மற்றும் வரையறைகளை உணர்ந்து சிகிச்சை சந்தர்ப்பங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான ரீதியான சான்றுகள் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளைப் பயன்படுத்தி மிகச் சிறந்த சிகிச்சை சேவைகள் மூலம் தேசிய போதைப்பொருள் ஒழிப்புப் படையணிக்கு பங்களிக்கும் உற்பத்தித் திறன்களைக் கொண்ட குடிமக்களை உருவாக்கும் நோக்கத்துடன் தொழில் பயிற்சி மற்றும் மென் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாடசாலை முறைமை தொடர்பாக கவனத்தை செலுத்தி போதைப்பொருள் தடுப்பு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தேசிய அளவிலான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது 24 மணி நேரம் செயற்பாட்டிலுள்ள 1927 தொலைபேசி வழியாக ஆலோசனை சேவைகளையும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆரம்பித்துள்ளது.

சிகிச்சைகளும் சவால்களும்

நாட்டில் கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவினரே சிகிச்சைக்காக உள்வாங்கப்படுவதால் 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2020ஆம் ஆண்டில் சிகிச்சை பெறுவதற்கான குறைந்த சாத்தியக்கூறுகளே காணப்படுகின்றன. 2019 ஆம் ஆண்டு சிகிச்சை வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3613 ஆக இருந்ததுடன் 2020 ஆம் ஆண்டு சிகிச்சை வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1649ஆக இருந்தது. இதேவேளை 2015 ஆம் ஆண்டு 1481 பேரும் 2016 இல் 2355 பேரும் 2017 இல் 2706 பேரும் 2018 இல் 4447 பேரும் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

சிகிச்சை சேவைகளுக்கான கேள்வி அதிகரித்திருந்த போதும், அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலப்பகுதியினுள், சிகிச்சை நிலையங்களுக்கு அனுமதிக்காக செல்ல முடியாமை, நாடு தழுவிய தனிமைப்படுத்தல் காரணமாக எழுந்த பொதுவான கட்டுப்பாடுகள், முறையான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அனுமதி பெறுவதில் உள்ள சிரமங்கள்,  பி.சீ.ஆர். மற்றும் துரித அன்டிஜன் பரிசோதனைகள் காரணமாக எழுகின்ற பொதுவான நடைமுறைக் கட்டுப்பாடுகள், பி.சீ.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியானதன் பின்னர் சிகிச்சை நிலையங்களில் அனுமதி பெறும் முடிவினை மாற்றிக்கொள்ளல், பி.சீ.ஆர்.பரிசோதனை முடிவுகள் வெளி வருவதற்கு அதிக நாட்கள் எடுத்தல், சிகிச்சை நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட சிகிச்சை வசதிகளே காணப்படல் மற்றும் புதிய சுகாதார வழிமுறைகளின் கீழ் முன்பு அனுமதிக்கப்பட்ட அதே அளவு நோயாளர்களை சிகிச்சை நிலையங்களினுள் அனுமதிப்பதற்கு முடியாமை ஆகியன பிரதான பிரச்சினைகளாக காணப்பட்டன. 

கொவிட் - 19 வைரஸ் தொற்றுப் பரவல் காலப்பகுதியில், முன்பு நடைமுறையில் இருந்த தங்கியிருந்து சிகிச்சை பெறும் முறைகள் மீள்வடிவமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டி இருந்தது. குறிப்பாக, குடும்ப உளவளத்துணை அமர்வுகள் பிராந்திய ரீதியாக நடாத்தப்படுகின்றன. சிகிச்சைத் திட்டங்களுக்கான வெளிவாரி வளங்களைப் பயன்படுத்துவது ஒரு சவாலாகக் காணப்பட்டதுடன் வளங்களும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்பட்டன.

இவ்வாறான நிலையில் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமையினை ஓரளவுக்கு எதிர்கொள்வதற்கு மதுபானம் மற்றும் புகையிலை பொருட்களுக்கான வரியினை அதிகரிப்பது முக்கியமென பலதரப்பினரினாலும் சுட்டிக்காட்டப்பட்டது. 2020 – 2021ம் ஆண்டுகளில் முறையான முறையில் சிகரட்டிற்கான வரி அறவிடப்படாமையினால் சுமார் ரூபா 100 பில்லியன்களை அரசாங்கம் இழந்துள்ளது. இழக்கப்பட்ட இத்தொகையை முன்மொழியப்படவுள்ள 2022ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் கோரியிருந்தது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு தொடக்கம் சிகரட் மீதான வரி அதிகரிப்பு இடம்பெறவில்லை. இவ்விரண்டு வருடங்களுக்குள் முறையாக சிகரட் வரி அதிகரிப்பை குறைந்த பட்சம் ரூபா 20.00 இனால் உயர்த்தியிருப்பின், சுமார் ரூபா 100 பில்லியன்களை அரசாங்கம் வருமானமாக பெற்றிருக்கலாம். நிதியமைச்சின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கையால் நாட்டிற்கு கிடைக்கப்பெற வேண்டிய சுமார் ரூபா 100 பில்லியன்கள் இழக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இடம்பெற்றிருக்காவிடின் அரசாங்கம் அத்தியவசிய பொருட்களுக்கான வரியை இந்தளவு அதிகரித்திருக்க நேரிட்டு இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது அரசாங்கம் கஞ்சாவை சட்டரீதியாக அங்கீகரிக்கும் நிலையினை வலியுறுத்தி வருகின்றது. ஆனால் அவை மக்களின் வாழ்க்கைச் செலவினை குறைக்குமா என்பது கேள்விக்குரியது. நூட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார செருக்கடி, அத்தியாவசிய பெருட்களுக்கான விலையேற்றம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்றவற்றை கட்டு;படுத்துவதற்கு மதுபானம் மற்றும் புகையிலை பொருட்களுக்கான வரியினை அதிகரிப்பதும் உதவியாக இருக்கலாம். அரசாங்கம் அவை தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை. அதேவேளை சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பதற்கு சட்டத் தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் அவற்றை குறைக்க முடியவில்லை. கடுமையான சட்ட நடைமுறைகள் இல்லாமையும் அரசியல் ரீதியான தொடர்புகளும் சட்டவிரோத போதைப்பொருள் இலங்கையில் மேலெழுவதற்கு காரணமாக இருக்கின்றன. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக