பாடசாலைகளுக்கு சமமான வளங்கள் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வதற்காக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ செயற்றிட்டம் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. 65,000 மில்லியன் ரூபா செலவில் 9063 பாடசாலைகளில் 18 ஆயிரம் திட்டங்களை 2020 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்வதை இத்திட்டம் நோக்கமாக கொண்டிருந்தது. அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் 477 பாடசாலைகள் இத்திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தன.
இத்திட்டத்தில் 450 பாடசாலைகளுக்கு வகுப்பறைகளும் 845 பாடசாலைகளுக்கு ஆரம்ப கற்றல் வள நிலையமும் 249 பாடசாலைகளுக்கு இரண்டாம் நிலை கனிஸ்ட விஞ்ஞான ஆய்வு கூடமும் 26 பாடசாலைகளில் நுண்கலை பிரிவுகளும் 4939 பாடசாலைகளில் பாரிய மற்றும் சிறியளவிலான புனரமைப்பு பணிகளும் 168 அதிபர் மற்றும் 371 ஆசிரியர் விடுதிகளும் நிர்மாணிக்கப்படவிருந்தன. அவற்றில் 185 தங்குமிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 260 பாடசாலைகளில் தொழில்நுட்ப கட்டிடமும் 25 தோட்டபுற பாடசாலைகளின் அபிவிருத்தியும் 53 உணவு விடுதியும் 7 பாடசாலைகளில் விளையாட்டு கட்டிடத் தொகுதியும் 150 பாடசாலைகளில் பற்சுகாதார பிரிவும் 3667 பாடசாலைகளில சுகாதார வசதி கட்டமைப்பும் 860 பாடசாலைகளுக்கு குடிநீர் திட்டம், 3116 பாடசாலைகளுக்கு மின்சார விநியோகமும் வழங்கப்படவிருந்தது.
இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலமாக கல்வி அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இக்கட்டுரை எழுதப்படுகினறன. மேலதிக தகவல்களை மாகாண கல்வி அமைச்சிடம் இருந்தே பெற்றுக்கொள்ளவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் 477 பாடசாலைகள் இத்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டாலும் பெரும்பாலான பாடசாலைகளில் இத்திட்டம் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என்பதுடன் தற்போதுவரை அவற்றை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. திட்டத்துக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் முறையாக மேற்கொள்ளாமையே இந்நிலைக்கு காரணமாகும். அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்றிட்டத்தில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள 5 கல்வி வலயங்களிலுள்ள 477 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. இவற்றில் ஹட்டன் கல்வி வலயத்தில் 127 பாடசாலைகளும் ஹங்குராங்கெத்த கல்வி வலயத்தில் 65 பாடசாலைகளும் கொத்மலை கல்வி வலயத்தில் 70 பாடசாலைகளும் நுவரெலியா கல்வி வலயத்தில் 132 பாடசாலைகளும் வலப்பனை கல்வி வலயத்தில் 82 பாடசாலைகளும் இவற்றில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்றிட்டமானது 9 பிரிவுகளாக செயற்படுத்தப்பட்டிருந்தது. ஏ செயற்றிட்டத்தில் ஒரு பிரதேச செயலகப் பிரிவில் குறைந்தபட்சம் இரண்டு பாடசாலை என்ற அடிப்படையில் சகல பிரதேச செயலகப் பிரிவினாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 600 பாடசாலைகளை சகல வசதிகளுடனும் அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டதுடன் நுவரெலியா மாவட்டத்தில் ஒன்பது பாடசாலைகள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டன.
பி செயற்றிட்டத்தில் சமீப காலத்தில் எந்தவொரு செயற்றிட்டத்திலும் அடங்காத க.பொ.த உயர்தரம் கொண்ட சுமார் 1200 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டதுடன் நுவரெலியா மாவட்டத்தில் 49 பாடசாலைகள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டன. சி செயற்றிட்டத்தில் 1000 இடைநிலைப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்துக்குரிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டதுடன் நுவரெலியா மாவட்டத்தில் ஆறு பாடசாலைகள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டன. டீ செயற்றிட்டத்தில் 3600 ஆரம்ப பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டதுடன் நுவரெலியா மாவட்டத்தில் 256 பாடசாலைகள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டன. ஈ செயற்றிட்டத்தில் கிராமிய மற்றும் கஸ்டப் பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்கி பாடசாலைகளுக்கு அதிபர், ஆசிரியர் விடுதிகள் மற்றும் ஓய்வறை போன்ற வசதிகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டதுடன் நுவரெலியா மாவட்டத்தில் 37 பாடசாலைகள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டன.
எப் செயற்றிட்டத்தில் சகல பாடசாலைகளிலும் நீர் மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்ட சுத்திகரிப்பு வசதிகளை போதியளவு வழங்குதல். நாட்டின் சகல பாடசாலைகளுக்கும் நீர் மற்றும் சுத்திகரிப்பு வசதிகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டதுடன் நுவரெலியா மாவட்டத்தில் 102 பாடசாலைகள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டன. ஜி செயற்றிட்டத்தில் சகல பாடசாலைகளுக்கும் மின்சாரத்தை வழங்குதல். சகல பாடசாலைகளுக்கும் தேசிய மின் வழங்கல் தொகுதி ஊடாக அல்லது சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை எதிர்பார்க்கப்பட்டதுடன் நுவரெலியா மாவட்டத்தில் 13 பாடசாலைகள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டன. எச் செயற்றிட்டத்தில் தோட்ட பிரதேசத்தில் 25 பாடசாலைகளை இடைநிலை மட்டத்துக்கு தரம் உயர்த்தி உயர்தர விஞ்ஞானக் கல்விக்கான வசதிகளை விருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டதுடன் நுவரெலியா மாவட்டத்தில் நான்கு பாடசாலைகள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டன.
ஜே செயற்றிட்டத்தில் பாடசாலை மாணவர்களின் பற்சுகாதாரத்தை பரிசோதித்தல் மற்றும் வைத்திய சிகிச்சைகளுக்கான வசதிகளைக் கொண்ட பற் சிகிச்சை நிலையங்களை பாடசாலைகளுக்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டதுடன் நுவரெலியா மாவட்டத்தில் ஒரு பாடசாலை இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டது.
இத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்காக மதிப்பீட்டு செலவாக 2538.82 மில்லியன் ரூபாவாக காணப்பட்டதுடன் ஒப்பந்த செலவாக 1764.58 ரூபா காணப்பட்டதுடன் 1179.46 ரூபா மாத்திரமே நிதி வழங்குகை காணப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக மதிப்பிடப்பட்ட தொகை மற்றும் ஒப்பந்தகாரர்களுக்கு வழங்க வேண்டிய தொகை வழங்கப்படாமையினாலேயே அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்றிட்டமானது தற்போது பெரும்பாலான பாடசாலைகளில் கைவிடப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றது.
பாரிய நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்றிட்டத்தில் பாடசாலைகளை தெரிவு செய்வதற்கு முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. அதேவேளை செயற்றிட்டம் மூலம் வகுப்பறை, மலசலகூடம், குடிநீர், கட்டிடத் திருத்தங்கள், மாணவர் கதிரை, மேசைகள் ஆகியவை அத்தியாவசிய தேவையாக காணப்பட்டிருந்தும் அவை சம்பந்தமாக போதிய கவனம் செலுத்தப்படாது, தேவையில்லாத அதிபர் மற்றும் ஆசிரியர் விடுதிகள் நிர்மாணிக்கப்பட்டிருந்தமை 2017 ஆம் ஆண்டு கல்வி அமைச்சு தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் கல்வி வலயத்தில் இச் சம்பவங்கள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிபர் மற்றும் ஆசிரியர் விடுதிகள் முழுமை பெற்றுள்ள போதும் ஏனைய நிர்மாணங்கள் கைவிடப்பட்டுள்ளன. அத்துடன் அதிபர் விடுதிகளில் ஆடைத் தொழிற்சாலைகள் இயங்கியமையையும் அவதானிக்க முடிந்தது. முத்திய மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்களில் 4 ஒப்பந்த நிர்மாணங்களுக்கு கேள்வி மற்றும் செயலாற்றல் பிணைகள் போலியானவையாக காணப்பட்டன. மேலும் நிர்மாண வேலைகள் தரம் குறைந்தவையாகவும் பொருத்தமான இடத்தில் அமைக்கப்படாமையும் திட்டத்தின் பாரிய குறைபாடுகளாக அடையாளம் காணப்பட்டிருந்தன.
மேலும் ஊவா மாகாணத்தில் 3 நிர்மாண வேலைகளுக்காக ஒப்பந்தகாரர்களுக்கு மேலதிகமாக 3,742,285 ரூபா செலுத்தப்பட்டிருந்தது. செயற்றிட்டம் தொடர்பாக பத்திரிகை விளம்பரங்களை பிரசுரிக்கும் போது கவனயீனம் காரணமாக சில விளம்பரங்கள் மீண்டும் மீண்டும் திருத்தப்பட்டு பத்திரிகைகளில் பிரசுரிக்க வேண்டியிருந்தமை காரணமாக ஒப்பந்தகாரர்களை தெரிவு செய்வதற்கு 2017 செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை 6,506,810 ரூபா செலவு செய்யப்பட்டிருந்தது.
ஒப்பந்தகாரர்களுக்கு போதியளவு முற்பணம் வழங்கப்படாமையினாலும் திட்டத்தினை செயற்படுத்துவதற்கான போதிய மேற்பார்வைகள் மேற்கொள்ளப்படாமையும் இத்திட்டம் முழுமையாக நிறைவுறுவதில் தோல்வி கண்டுள்ளது. மேலும் இத்திட்டமானது கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டாலும் மாகாண கல்வி திணைக்களத்துக்கும் பங்குண்டு. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினூடாக கல்வி அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பிலான விடயங்களை மாத்திரம் அறிந்து கொள்ள முடிந்தது. ஓப்பந்தகாரர்கள் தொடர்பான விபரம், ஒப்பந்த தொகை, நுவரெலியா மாவட்டத்தில் திட்டம் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமைக்கான காரணம் மற்றும் திட்டம் எப்போது நிறைவு செய்யப்படும் போன்ற விடயங்களுக்கான தகவல்கள் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்திடமே பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
2016 - 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த திட்டம் நிறைவு செய்யப்பட்டிருக்குமாயின் நுவரெலியா மாவட்டத்தில் பல பாடசாலைகள் வளங்களுடன் இயங்குவதற்கு வழியேற்பட்டிருக்கும். தற்போது 1000 தேசிய பாடசாலைகள் திட்டத்திலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அசமந்தமான போக்கு நாடு முழுவதும் பாடசாலை வளங்களில் பாரிய ஏற்றத்தாழ்வினை உருவாக்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக