நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல ஆர்ப்பட்டங்கள் தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா வேதனம் தொடர்பில் எவரும் தற்போது கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. கூட்டு ஒப்பந்தத்திலிருந்து கம்பனிகள் விலகிய நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் அங்கம் வகிக்கின்ற தொழிற்சங்கங்களுக்கான சந்தா பணம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தோட்டத் தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையேயான உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. தற்போது எந்தவொரு தொழிலாளர்களும் 1000 ரூபா வேதனத்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பது உண்மை. ஜனாதிபதி தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு பொறியே 1000 ரூபாவாகும். இந்த பொறியில் தோட்டத் தொழிலாளர்கள் இலகுவாக சிக்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவை வழங்குவதற்கு திடமான தலைமைத்துவத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொறியிலிருந்து விடுபடுவதற்கு தொழிலாளர்களுக்கு வாய்ப்பு இல்லை.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவோ அல்லது தனி வீடுகளோ முக்கியமில்லை எனவும் காணி உரிமையே அவசியமென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அவ்வாறெனின் அவர்களுடைய முன்னோர் இதனை செய்யவில்லை. தற்போது அதிகரித்துள்ள வாழ்க்கைச்செலவுக்கு ஏற்ப மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவதற்கு பொருளாதார ரீதியில் மக்கள் முன்னேறுவது அவசியமாக இருக்கின்றது. தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் இறுதியாக வழங்கப்பட்ட 750 ரூபா வேதனத்தின் மூலம் தொழிலாளர்களின் பொருளாதார தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாவிட்டாலும் பணியிடங்களில் அதிக நெருக்கடிகளை எதிர்கொள்ளவில்லை.
தற்போது 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டுவிட்டதாக தங்களுடைய கடமைகளை முடித்துக்கொள்ளும் அரசியல்வாதிகள் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு பதில் வழங்கவில்லைஇ தற்போது ஒரு கிலோ பச்சை தேயிலை 50 ரூபா என்ற அடிப்படையிலேயே தோட்ட நிர்வாகங்களினால் கொள்வனவு செய்யப்படுகின்றது. அவ்வாறெனின் தினசரி 1000 ரூபா வேதனத்தை பெற்றுக்கொள்வதற்கு 20 கிலோ தேயிலை கொழுந்தினை பறிக்க வேண்டிய தேவை தொழிலாளர்களுக்கு காணப்படுகின்றது. இதன்மூலம் முதலாளிமார் நினைத்ததை நிறைவேற்றி கொண்டுள்ளனர். சிலோன் டி நாமத்தை தக்கவைத்துக் கொள்ள அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளில் சிலோன் டி உற்பத்திக்கு பங்களிக்கும் தொழிலாளர்கள் மீது வைக்காமை அவர்களின் தொழில் உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு கடந்த வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்~ அறிவிப்பு விடுத்தபோது மலையகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பாற்சோறு பொங்கி இ.தொ.கா. ஆதரவாளர்களினால் கொண்டாடப்பட்டது. ஆனால் ஒரு சிலமாதங்கள் கூட அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. முதலாளிமார் சம்மேளனம் தொடர்ச்சியாக பெருந்தோட்ட கம்பனிகள் நட்டத்தில் இயங்குவதாக கூறி தப்பித்துக்கொள்கின்றன. ஆனால் தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்காமல் கம்பனிகள் மாத்திரம் நட்டத்தில் இயங்குவதாக எவ்வாறு கூறமுடியும்.
தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா வேதனம் தொடர்பான பிரச்சினை நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்த நிலையில் எதிர்காலத்தில் தொழிலாளர்களுக்கு எழும் பிரச்சினைகள் தொடர்பில் கவனத்தில் கொள்ளாது, அவசர அவசரமாக 1000 ரூபா விவகாரத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் கொவிட் தொற்று, நாடு முடக்கம், விலை உயர்வு, கப்பல் விபத்து போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்தமையினால் தொழிலாளர்களுடைய பிரச்சினைகள் மறக்கடிக்கப்பட்டன. அண்மையில் பொவந்தலாவ நகரில் தமிழ் முற்போக்கு கூட்டணியினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் விலை உயர்வு தொடர்பாகவும் இராஜாங்க அமைச்சர் தொடர்பாகவும் குறைகள் முன்னெடுக்கப்பட்டனவே தவரி தொழிலாளர்களுடைய 1000 ரூபா தொடர்பில் எவ்வித கருத்தும் முன்வைக்கப்படவில்லை. தொழிலாளர்களும் அப்பிரச்சினையை மறந்துவிட்டே போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
தற்போது தொழிலாளர்கள் ஒரு விடயத்தில் நன்கு விழிப்புணர்வு அடைந்து விட்டனர். அவர்களுக்கு 1000 ரூபாவினை விடவும் குடும்பத்தை கொண்டு நடத்துவதற்கு மாதாந்தம் ஒரு தொகை வருமானம் தேவைப்படுகின்றது. பெருந்தோட்ட நிறுவனங்கள் 1000 ரூபா கிடைக்காவிட்டாலும் தங்களுடைய குடும்பத்தின் வறுமைக்காக நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உழைப்பதற்கு பழகிவிட்டனர். இது முதலாளிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் வாய்பாகிவிட்டது. தற்போது கூட்ட ஒப்பந்தத்தை நோக்கி தொழிற்சங்கங்கள் நகர்வது தொழிலாளர்கள் மீது கொண்டுள்ள அக்கறையின் அடிப்படையில் அல்ல. சந்தா பணத்தை திரும்ப பெற்றுக்கொள்வதற்கே ஆகும். தற்போது பெரும்பாலான தொழிற்சங்கங்கள் தங்களுடைய அலுவலக வாடகை மற்றும் ஊழியர்களின் கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு தடுமாறிக் கொண்டிருக்கின்றன.
இதுவரை காலமும் தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு மட்டுமல்ல தொழிற்சங்கங்களுக்கும் இலாபத்தை உழைத்து கொடுத்திருந்தனர். தொழிலாளர்கள் வழங்கிய சந்தா இன்று தனிப்பட்ட நபர்கள் அதிக சொத்துடையவர்களாக மாறுவதற்கு வழிவகுத்துள்ளது. ஆனால் உழைத்தவர்கள் இன்னும் ஏழைகளாகவே இருக்கின்றனர். மக்களுடைய வருமானம் தொடர்பில் தொழிலாளர்களே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிடியில் தங்கியிருக்காது சுயமாக தீர்மானங்களை மேற்கொள்ள தொழிலார்கள் பழக வேண்டும். தற்போது தொழிற்சங்கங்களுக்கு சந்தா வழங்குவது தடைபட்டதால் தொழிலாளர்கள் நிர்க்கதி நிலைக்கு விடப்பட்ட நிலையிலிருந்து பாடமொன்றை கற்றுக்கொள்ள வேண்டும்.
நாடு முழுவதுமுள்ள சுகாதாரம், ஆசிரியர் - அதிபர், பெற்றோலியம், மின்சாரம், விவசாயம் என சகல துறைகளிலுள்ள மக்களும் தங்களுடைய வருமானத்தை காலத்துக்கேற்றவகையில் அதிகரிப்பதற்கு தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் அரசியல்வாதிகளுக்கு தேவை ஏற்பட்டால் மாத்திரமே தொழிலாளர்களுடைய 1000 ரூபா தொடர்பில் போராட்டத்தை ஒழுங்கு செய்து வீதியோரத்தில் நிற்பார்கள். தொழிலாளர்களும் காலங்காலமாக போராட்டத்தையே வாழ்க்கையாக்கி கொண்டுள்ளதாலும் அரசியல் ரீதியில் பிரிக்கப்பட்டு வழிநடத்தப்பட்டுள்ளதாலும் அவர்களால் சுயமாக இயங்குவதற்கு தயக்கம் ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக