கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 டிசம்பர், 2021

17 வருடங்களாக அடையாளம் காணப்படாத மனித உடற்பாகங்கள்

2004 ஆம் ஆண்டு சுனாமி இலங்கை சந்தித்த பாரிய பேரிடராகும். பல மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. பலர் அங்கவீனமானர். பலர் தங்கள் சொந்தங்களை இழந்தனர். பலர் தங்கள் சொத்துக்களையும் இழந்தனர். உலக மக்களே எதிர்பார்க்காத ஒரு சோகத்தை சுனாமி அலை ஏற்படுத்தியது. இலங்கை சுனாமியால் பாதிக்கப்பட்டு 17 வருடங்களை கடக்கின்ற நிலையிலும் சுனாமியால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வது கடினமாக இருக்கின்றது. அதேவேளை சுனாமி இன்னும் இனங்காணப்பட முடியாத இழப்புகளை எம்மிடம் விட்டு சென்றிருக்கின்றது. 

2004 ஆம் ஆண்டு சுனாமியினால் உயிர்நீத்த பலரின் உடல்களை இறுதி வரையில் இடையாம் காணப்பட முடியாமல் இறுதிக்கிரியைகள் நடத்தி முடிக்கப்பட்ட சம்பவங்கள் இருக்கின்றன. சிலரின் உடல்கள் இறுதி வரையிலும் கிடைக்கப்பெறவில்லை. அதேபோலவே Ruhuna பல்கலைக்கழகத்தில் கடந்த 15 வருடங்களாக சேமித்து வைக்கப்பட்டுள்ள சுனாமியினால் உயிர் நீத்தவர்களின் உடற்கூறுகளை இன்றுவரையும் எவராலும் அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சுனாமியினால் உயிர்நீத்தவர்களின் சுமார் 117 உடற் அங்கப் பகுதிகள் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் இருப்பதாக Ruhuna  பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இவ்விடயத்தை எம்மால் விளங்கிக் கொள்ள முடிந்தது. 


இலங்கையை தாக்கிய 2004 ஆம் ஆண்டு சுனாமியினால் 31,229 மரணங்கள் ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் 4093 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 21,411 பேர் காயமடைந்திருந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் மரணித்தவர்களாக அடையாளம் காணப்பட்ட நபர்களின் 117 உடற்கூறுகள் றுஹ_ண பல்கலைக்கழகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. 

அவ்வாறு Ruhuna  பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள 117 உடற்கூறுகளும் எலும்புகளாக மாத்திரம் காணப்படுகின்றது. எலும்புகளை மாத்திரம் வைத்துக் கொண்டு பொது மக்களால் அவற்றை அடையாளம் காண்பது மிகவும் கடினமாகும். இவற்றை அடையாளம் காண்பது சாத்தியமில்லை என்பதால் உடற்கூறுகள் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்படாத 117 உடற்கூறுகளையும் பல்கலைக்கழகத்தில் கடந்த 15 வருடங்களாக சேமித்து வைத்திருப்பதால் இதுவரை எவ்வித பிரச்சினைகளும் எழவில்லை. இவ்வாறு சேமித்து வைக்கப்பட்டுள்ள உடற்கூறுகளை எதிர்காலத்தில் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 15 வருடங்களாக பல்கலைக்கழகத்தில் இந்த உடற்கூறுகளை பாதுகாப்பதற்காக எவ்வித நிதியும் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்படவில்லை என்பதுடன் சமூக நலன்கருதி அவை பாதுகாக்கப்படுகின்றன.

அடையாளம் காணப்படாத உடற்கூறுகள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை. இவ்வாறு அடையாளம் காணப்படாத உடற்கூறுகளை சட்டரீதியாக அகற்றுவதற்கு ஏதாவது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக வினவிய போது பின்வரும் தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன. சுனாமிக்கு பிந்தைய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் ஒரு பகுதியாக எலும்புகள் சேகரிக்கப்பட்டன. இந்த எலும்புகள் முறையாக பாதுகாக்கப்பட்டு நீண்ட காலத்துக்கு சேமிக்கப்படும். அதனால் இந்த எலும்புத் துண்டுகள் அகற்றப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் இத்தகவல்கள் Ruhuna  பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவ பிரிவினால் வழங்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்த மற்றும் காணமல் போனதாக கருதப்படும் உடலகள் தொடர்பிலான விசாரணைகள் முடிவுறுத்தப்பட்டாலும் அடையாளம் காணப்படாத இவ்வாறான உடற்கூறுகளினால் சுனாமியினால் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் எம்மால் ஊகிக்க முடிகின்றது. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக