இலங்கையில் நலிவடைந்துள்ள பொருளாதாரத்தினால் பொது மக்கள் பாரிய பிரச்சினைகளை சமீபத்தில் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் உட்பட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மக்கள் அதிக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். தற்போது எரிவாயு சிலிண்டர்களின் பற்றாக்குறை, விலை அதிகரிப்பு மற்றும் எரிவாயு கலவையில் மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள வெடிப்பு சம்பவங்களினால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் இலங்கையில் எரிவாயு சிலிண்டர்களின் விலையினை அதிகரிப்பதற்கு விடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக உள்ளுர் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அண்மையில் அதிகரிக்கப்பட்டன.
இந்நிலையில் மீண்டும் எரிவாயு சிலிண்டர்களுக்கான கலவையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும் நிலை காணப்படுவதாக முன்வைக்கப்படும் கூற்றுக்கள் மக்கள்; பீதியடைந்துள்ள அதேவேளை லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்கள் குறித்த குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளன. நாட்டில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவியது முதல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டும் பாவனையாளர்களுக்கும் எரிவாயுவுக்குமான பிரச்சினை இன்னும் நீங்கவில்லை.
இதேவேளை நாட்டில் எரிவாயுவின் நுகர்வு, இறக்குமதி மற்றும் விலை தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக சில தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் அளவு மற்றும் லிட்ரோ நிறுவனம் இறக்குமதி செய்யும் எரிவாயுவின் அளவு போன்ற தகவல்கள் மூன்றாம் தரப்பினருக்கு வழங்கப்படமாட்டாது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை சுங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படுவதால் மூன்றாம் தரப்பினருக்கு வழங்க முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனம் விற்பனை செய்யும் எரிவாயுவின் அளவு மற்றும் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை போன்ற தகவல்கள் 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் 57 ஆம் பிரிவின் கீழ் தரவுகள் திரட்டப்படுவதனால் மூன்றாம் தரப்பினருக்கு வழங்க முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. லாஃப் எரிவாயு தொடர்பான எவ்வித தகவல்களும் பாவனையாளர்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
விலை அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் ஏற்படுகின்ற விலை மாற்றத்தினை அடிப்படையாகக் கொண்டும் தேர்தல் காலத்தினை இலக்காகக் கொண்டும் நாட்டில் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் கடந்த காலங்களில் அதிகரித்து குறைக்கப்பட்டுள்ளன. நாட்டில் 2015 – 2021 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 11 தடவைகள் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2021 ஆம் ஆண்டு இரு முறை விலை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் 2015 – 2018 ஆம் ஆண்டு வரை லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் ஒரேயளவாகவே பேணப்பட்டுள்ளன. (மேலதிக விபரங்கள் அட்டவணையில்) இவ்வருடம் ஜூலை மாதம் எரிவாயு சிலிண்டர்களுக்கு மாவட்ட அடிப்படையில் விலைகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட 9.6 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டருக்கு கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டத்துக்கு குறைந்தபட்ச விலையும் அதிகபட்சமாக யாழ் மாவட்டத்துக்கும் விலை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது. எனினும் தற்போது 18 லீற்றர் (9.6 கிலோகிராம்) எரிவாயு சிலிண்டர் விற்பனையானது தடைசெய்யப்பட்டுள்ளது.
இறுதியாக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் லாஃப் மற்றும் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அக்டோபர் 10 ஆம் திகதி அதிகரிக்கப்பட்டன. 12.5 கிலோ லாஃப் சிலிண்டரின் விலை 1856 ரூபாவிலிருந்து 2840 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. 5 கிலோ சிலிண்டர் 743 ரூபாவிலிருந்து 1136 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. எனினும் தற்போது நாடு முழுவதும் லாஃப் எரிவாயுவுக்கான தடுப்பாடு நிலவுகின்றது. லிட்ரோ நிறுவனமானது, 12.5 கிலோ சிலிண்டரின் விலையானது 2675 ரூபாவாகவும் 5 கிலோ சிலிண்டரானது, 598 ரூபாவிலிருந்து 1101 ரூபாவாகவும் 2.5 கிலோ சிலிண்டரானது 289 ரூபாவிலிருந்து 520 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டது.
எரிவாயு கலவை சர்ச்சை
நாடு முழுவதும் எரிவாயு கசிவினால் ஏற்படும் வெடிப்புச் சம்பவங்களுக்கு எரிவாயு கலவையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமே பிரதான காரணமென குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதன்படி எரிவாயு சிலிண்டர்கள் கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களே அவை வெடித்துச் சிதறக் காரணம் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துசான் குணவர்த்தன தெரிவித்தமை சர்ச்சையை ஏற்படுத்தியது.
லிட்ரோ நிறுவனமும் லாஃப் நிறுவனமும் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் அனுமதியின்றி இந்த மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. கடந்த ஏப்ரலில் இருந்து லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் சிலிண்டரின் வாயுக் கலவையை பியூட்டன் 80 : புரொபேன் 20 என்ற நிலையிலிருந்து முறையே பியூட்டன் : புரொபேன் 50 : 50 என மாற்றியுள்ளன. வால்வுகளில் கசிவுகள் ஏற்படுகின்றன என வெளியான முறைப்பாடுகளுக்கு இதுவே காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கை ஒரு வெப்பமண்டல நாடு என்பதால் எல்பி வாயுவில் குறைந்தளவு புரொபேனும் அதிகளவு பியூட்டனும் காணப்பட வேண்டும். இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அறிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாராளுமன்றத்தில் எரிவாயு கலவை மாற்றம் தொடர்பில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் கிங்ஸ் நெல்சன் ஆகியோர் கேள்வி எழுப்பியிருந்தனர். எனினும் எரிவாயு சிலிண்டர்களில் வெடிப்பு ஏற்படவில்லையெனவும் எரிவாயு கசிவினால் விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை எரிவாயுவின் தரம் தொடர்பிலான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு இலங்கையில் வசதிகள் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சர்ச்சை நீடிக்கும் நிலையில் இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பதிவான வெடிப்புச் சம்பவங்கள்
நாட்டில் தொடர்ச்சியாக எரிவாயு கசிவினால் வெடிப்புச் சம்பவங்கள் பதிவு செய்யப்படும் நிலையில் பாவனையாளர்கள் அச்சமடைந்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 அக்டோபர் 31 வரையான காலப்பகுதியில் 233 சிறியளவிலான எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2021 நவம்பர் மாத காலப்பகுதியில் 21 வெடிப்புச் சம்பவங்கள் (பத்தி எழுதும் வரை) பதிவாகியுள்ளதுடன் இவ்வருடத்தில் 22 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நவம்பர் 30 ஆம் திகதி தியத்தலாவையிலுள்ள தொடம்வத்தை ஹெலவத்தையில் உள்ள வீடொன்றிலும் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதுருகசர பிரதேசத்தில் கடையொன்றின் பின்புறத்திலும் வெடிப்பு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நவம்பர் 29 ஆம் திகதி நாடு முழுவதும் பத்து எரிவாயுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹட்டன் மல்லியப்பூ, ஜா-எல, மாரவில, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஹங்வெல்ல, பாதுக்க, எம்பிலிபிட்டிய, மாவனல்லை மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் இவ்வெடிப்பு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் 4 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 28 ஆம் திகதி வரை மொத்தமாக ஒன்பது வெடிப்புச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெலிகம - கபரதொட்ட, பொலனறுவை – வெலிகந்த, இரத்தினபுரி, கொழும்பு 7 குதிரைப்பந்தயத்திடல், பன்னிப்பிட்டிய – கொட்டாவ, சாய்ந்தமருது, யாழ்ப்பாணம் - கந்தரோடை மற்றும் கேகாலை – கஹட்டபிட்டி, நிக்கவரெட்டிய - கந்தேகெதர ஆகிய பகுதிகளில்; இச்சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.
எரிவாயு நிறுவனங்களினால் அங்கீகரிக்கப்படாத எரிவாயு கலவையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் காரணமாகவே நாடு முழுவதும் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எரிவாயு நிறுவனங்கள் மறுப்பு
எரிவாயு கலவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதனால் நாடு முழுவதும் வெடிப்புச் சம்பவங்கள் பதிவு செய்யப்படுவதாக வெளியிடப்படும் அறிக்கைகளுக்கு எரிவாயு நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. ‘அனைத்து செய்திகளும் உண்மையல்ல, கற்பனையானவை மற்றும் ஆதாரமற்றவை. தவறான அறிக்கைகளை வெளியிடுவது நிறுவனம், அரசாங்கம் மற்றும் ஆறு மில்லியன் மக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். நாங்கள் சுமார் 150 ஆண்டுகளாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரத்தை கடைபிடித்து உள்ளுர் சந்தைக்கு எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்படுவதாக’ லிட்ரோ கேஸ் லங்காவின் விற்பனைப் பணிப்பாளர் ஜானக பத்திரத்ன தெரிவித்துள்ளார்.
எல்பி கேஸ் என்பது புரொப்பேன்-பியூட்டன் உற்பத்தியின் கலவையாகும். தொழில்துறை மற்றும் உள்நாட்டு பயன்பாட்டிற்கான ஒரே வாயு கலவை நீண்ட காலமாக ஒரு சர்வதேச சுயாதீன அமைப்பால் சோதிக்கப்பட்டு சான்றளிக்கப்பட்டது. ளுடுளு 712 காற்றழுத்தத் தரநிலை இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இலங்கையின் காலநிலைக்கு ஏற்ப கலவை தயாரிக்கப்படுகிறது. இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளுக்கு இந்த சமன்பாடு மாறுபடும் என லிட்ரோ கேஸ் லங்கா இரசாயன எதிர்வினை பொறியியலாளர் ஜயந்த பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
லாஃப் எரிவாயு சிலிண்டர்களின் கலவை இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் விதிக்கப்பட்ட விவரக்குறிப்புகளின் படி பராமரிக்கப்படுகிறது. மேலும் லாஃப் எரிவாயு நிறுவனத்தால் தனித்துவமான தரநிலைகள் பராமரிக்கப்படும். லாஃப் எரிவாயு வழங்கும் எரிவாயு சிலிண்டர்கள் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் விதிக்கப்பட்ட ளுடுளு 1178/2013 தரத்தின் கீழ் தயாரிக்கப்படுவதால், ஒவ்வொரு லாஃப் எரிவாயு சிலிண்டரும் பாவனைக்கு பாதுகாப்பானது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பொது முகாமையாளர் குலமித்ர பண்டார தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொடர்ச்சியாக எரிவாயு தொடர்பில் சர்ச்சைகள் நிலவி வந்தாலும் விநியோகிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெறுவதற்கான எவ்வித திட்டத்தையும் அரசாங்கம் அறிவிக்கவில்லை. அத்துடன் அதிகமாக 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு மற்றும் அழுத்தங்களின் காரணமாகவே விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் எரிவாயு தரம் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் இலங்கையில் இல்லாமையும் உடனடி தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு தடையாக அமைந்துள்ளது. எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு முன்னர் நாடு முழுவதும் எரிவாயுவுக்கான தட்டுப்பாடுகள் நிலவி வந்த நிலையில் தற்போது சந்தையில் லிட்ரோ எரிவாயு அதிகமாகவே காணப்படுகின்றது. மக்கள் ஏற்கனவே கொள்வனவு செய்த எரிவாயு சிலிண்டர்களும் அச்சத்தினால் பாவிக்கப்படாமல் இருக்கின்றது. எனவே எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் நாட்டல் நிலவிய எரிவாயு தட்டுப்பாட்டினை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக