கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், YouTube videos

16 டிசம்பர், 2021

நீதிமன்றம் சென்ற 1000 ரூபா விவகாரம்


பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா நாட் சம்பளத்தை பெற்றுக்கொடுத்து விட்டோம் என தொழிற்சங்கங்கள் மார்தட்டி கொண்டதுடன் தொழிலாளர்கள் சிலரும் பாற்சோறு படைத்து கொண்டாடினர். சிலர் கேக் வெட்டினர், சிலர் பட்டாசு கொழுத்தினர், ஊடக சந்திப்பையும் நடத்தினர். ஆனால் தொடர்கதையாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளத்தை உறுதிப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்கக்கோரி 20 பெருந்தோட்ட நிறுவனங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளன. ஆனால் வழக்கு விசாரணைகள் நிறைவு பெறும்வரை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படுமென முதலாளிமார் சம்மேளனம் அறிவித்திருக்கின்றது.

அத்துடன் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒருமாத கால அவகாசத்துடனான அறிவித்தலும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் தொழிலாளர்களின் வேலைநாட்கள், பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவு மற்றும் ஏனைய சேமநலன்கள் தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டு வந்தது. பின்னர் 2021 ஆம் ஆண்டுக்கான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் தொடர்ச்சியாக 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்துக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டமையின் காரணமாக முதலாளிமார் சம்மேளனம் கூட்டு ஒப்பந்த கைச்சாத்திடலை பின்னடிப்புச் செய்து வந்திருந்தது. 

இறுதியாக அரசாங்கத்தின் தலையீட்டுடனும் அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் சம்பள நிர்ணய சபையினூடாக 1000 ரூபா சம்பளம் தீர்மானிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது. ஆனால் தொழிலாளர்களுடைய நலன்கள் தொடர்பாக எவ்விதமான உறுதிமொழிகளும் வழங்கப்படவில்லை. தொழிலாளர்களுடைய சம்பளம் சம்பள நிர்ணய சபையினால் தீர்மானிக்கப்பட்டமையினால், ஏனைய நலன்களை பெற்றுக்கொள்வதற்கு புதிய கூட்டு ஒப்பந்தமொன்றுக்கு செல்ல வேண்டிய தேவை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் காணப்பட்டது. ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை. தற்போது புதியதொரு ஒப்பந்தத்தின் கீழ் தொழிலாளர்களுடைய நலன்களையும் தொழிற்சங்கங்களின் சந்தா அறவிடலையும் தீர்மானிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. 

1998 ஆம் ஆண்டு முதல் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு வந்தாலும் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தோட்டகம்பனிகள் விரும்பவில்லை. இதனால் கூட்டு ஒப்பந்தம் சம்பள விடயத்தை மாத்திரம் தீர்மானிக்கும் விடயமாகவே பார்க்கப்பட்டது. ஆனாலும் ஏனைய சேமநலன்கள் தொடர்பிலும் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளதால் தொழிலாளர்களுக்கு தொழில் பாதுகாப்பினை சட்ட ரீதியாக வழங்கும் தன்மையை கொண்டிருந்தது. 2021 ஆம் ஆண்டு புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமையினால் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது. 

1000 ரூபா சம்பள உயர்வு வழங்குவது தொடர்பிலான தீர்மானத்தினை சம்பள நிர்ணய சபையினூடாக மேற்கொண்ட உடனேயே மாதம் 13 நாட்களே வேலை வழங்க முடியுமென முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துவிட்டது. ஆனால் கூட்டு ஒப்பந்தத்தில் வருடத்துக்கு 300 நாட்கள் வேலை வழங்கும் ஏற்பாடு காணப்படுகின்றது. ஆனால் அவை பின்பற்றப்படுவதில்லை. மாதம் குறைந்தது 25 நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்படும் நிலையிருந்தும் கடந்த காலங்களில் 15 - 20 நாட்களே தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களில் இவ்வாறான பிரச்சினைகளை எவ்வாறு கையாளப்போகின்றார்கள். 

இருப்பினும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக ஒப்பந்தத்தை கைச்சாத்திடுபவர்கள் தவிர மூன்றாம் தரப்பினரால் சட்ட ரீதியில் கேள்விக்குட்படுத்தும் உரிமையில்லையென மக்கள் தோட்ட தொழிலாளர் சங்கம் தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியிருக்கின்றது. எனவே கூட்டு ஒப்பந்தம் என்ற பொறிமுறையிலும் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. 

தற்போதைய நிலையில் அரசியல் ரீதியிலும் பெருந்தோட்ட கம்பனிகள் சார்பிலும் தொழிலாளர்கள் மிகப் பெரும் அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கின்றார்கள். அவர்களை சுயமாக சிந்திக்க விடாமல் தொடர்ச்சியாக பல தொழிற்சங்கங்கள், அரசியல்வாதிகள் வெவ்வேறு கருத்துக்களை கூறி திசை திருப்பி வருகின்றன. இதனால் உண்மை நிலையை அறிவதற்கு அவர்களால் முடியவில்லை. 1000 ரூபாவினை சம்பள நிர்ணய சபை உறுதிப்படுத்தியமை தொண்டமானின் வெற்றியா? அல்லது தொழிலாளர்களின் வெற்றியா? என்றவகையில் விவாதங்கள் நடக்கின்றன. இவ்வாறான அரசியல் நாடகங்களுக்கு தொழிலாளர்கள் என்றுமே இலகுவாக பகடைக்காய்களாக மாற்றப்படுவதால் தீர்வுகள் விரும்பியோ விரும்பாமலோ திணிக்கப்பட்டு வருகின்றன. 

1000 ரூபா தீர்மானத்தின் பின்னாலுள்ள ஆபத்துக்கள் தொடர்பில் அறியாதவர்களாக பாற்சோறு சமைத்து வழிபட்டு மகிழும் மனநிலையில் இருக்கின்றார்கள். அவர்களை அவ்வாறு வழிநடத்தவே தொழிற்சங்கங்களும் விரும்புகின்றன. அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக ரிட் மனுவினை தாக்கல் செய்துள்ள பெருந்தோட்ட நிறுவனங்கள், குறித்த வர்த்தமானி அறிவிப்பால் பெருந்தோட்டத்துறை பாரிய நெருக்கடியினை எதிர்நோக்குமெனவும் பாரிய நிதியினை வரியாக செலுத்த வேண்டிய தேவை ஏற்படுமெனவும் சுட்டிகாட்டியுள்ளன. எனவே பெருந்தோட்ட நிறுவனங்கள் தங்களுடைய வருமானம் தொடர்பில் கவனம் செலுத்துகின்றனவே தவிர தோட்டத் தொழிலாளர்களின் வருமானம் மற்றும் வாழ்க்கைத்தரம் தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. 

அதேவேளை பெருந்தோட்டங்களில் முகாமையாளர் மீது தொழிலாளர்கள் மேற்கொண்ட தாக்குதலின் விளைவாக பெருந்தோட்ட கம்பனிகளின் முகாமையாளர்கள் மற்றும் உரிமையாளர்களினால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஒட்டுமொத்த தொழிலாளர்களின் நலன்களையும் மழுங்கடிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

சம்பள நிர்ணய சபையில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் தீர்மானிக்கப்பட்டது தேர்தல் வாக்குறுதிகளுக்காகவே ஆகும். அதில் தொழிலாளர்களின் நலன் கவனத்தில் கொள்ளப்படவில்லை. முதலாளிமார் சம்மேளனம் எதிர்க்கும் நிலை உருவாகலாம் என்பதை அரசாங்கம் நன்கு அறிந்தே செயல்பட்டிருக்கின்றது. இதனாலேயே குறைந்த பட்ச ஊதியத்தை 1000 ரூபாவாக மாற்றியமைக்கும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்து நிறைவேற்றுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது. தொழில் அமைச்சர் இந்நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு தவறியமையே முதலாளிமார் சம்மேளனம் நீதிமன்றம் வரை செல்வதற்கு வழிசமைத்து விட்டது. குறித்த வழக்கில் எப்போது தீர்ப்பு வெளிவரும் என்பது தெரியவில்லை. ஆனால் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரைக்கும் வர்த்தமானி அறிவித்தலின் படி தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பளம் வழங்கப்படுமென முதலாளிமார் சம்மேளனம் அறிவித்திருக்கின்றமை தற்காலிகமான நிவாரணமாகவே தெரிகின்றது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக