கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 டிசம்பர், 2021

1000 ரூபா வேதன அதிகரிப்பு : தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரித்துள்ளதா?


பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2021 ஆம் ஆண்டு   வரவு – செலவுத்திட்டத்தின் மூலம் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமென அரசாங்கம் அறிவித்த பின்னர் பெருந்தோட்ட நிறுவனங்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல், உயர் நீதிமன்றத்தில் வழக்கு மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும் நெருக்கடிகள் என பல்வேறு  பிரச்சினைகள்  எழுந்தன.  பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000  ரூபா சம்பளம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் இன்னும் அவர்கள் அத்தொகையினை பெற்றுக்கொள்ளவில்லை. தினசரி 20 கிலோ கொழுந்து பறித்தால் மாத்திரமே 1000 ரூபா வழங்கப்படுமென கம்பனிகள் அறிவித்துள்ளன.

எனவே தற்போது அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் என்பன தொழிலாளர்களை நிர்கதி நிலைக்குத் தள்ளியுள்ளதால் தோட்ட நிர்வாகங்கள் தங்களுடைய விருப்பத்துக்கு தொழிலாளர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கின்றன. இந்நிலையில் 1000 ரூபா தினசரி சம்பள அதிகரிப்புக்குப் பின்னர் தொழிலாளர்களுடைய வருமானம் அதிகரித்துள்ளதா? என்பது தொடர்பில் ஆராய முற்பட்ட வேளை அவர்களுடைய வருமானம் சரிபாதியாக குறைந்துள்ளமையை அவதானிக்க முடிந்தது.


2017 – 2021 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பெருந்தோட்டத் தொழிலாளர் ஒருவர் மாதந்தம் பெற்றுக்கொண்ட வருமானம், செலவீனம் மற்றும் மொத்த சம்பளம் என்ற அடிப்படையில் சம்பளச் சீட்டை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 2017 ஆம் ஆண்டு பெற்றுக்கொள்ளப்பட்ட மொத்த வருமானம் 22,679 ரூபாவாக இருக்கும் நிலையில் 2021 ஆம் ஆண்டு அத்தொகை 13,000 ரூபாவாக குறைவடைந்துள்ளது. இதேவேளை தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையால் மொத்தக் கழிவுகள் உட்பட மிகுதிச் சம்பளமாக தொழிலாளி ஒருவருக்கு 2017 ஆம் ஆண்டு 17,880 ரூபா கிடைக்கப்பெற்ற அதேவேளை 2021 ஆம் ஆண்டு 8570 ரூபாவே கிடைக்கப்பெற்றுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2017 – 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அறுவடை, மேலதிக கிலோ, கைகாசு கிலோ, உற்பத்தி திறன் ஊக்குவிப்பு, வரவு ஊக்குவிப்பு, மேலதிக ரேட் என பல்வேறு வழிகளில் வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கு கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் வழியேற்படுத்தப்பட்டாலும் 2021 ஆம் ஆண்டு முதல் கூட்டு ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டுள்ளமையால் மேலதிக வருமானம் எவையும் தொழிலாளர்களினால் பெற்றுக்கொள்ளப்படுவதில்லை. 


2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெருந்தோட்டத் தொழிலாளர் ஒருவருக்கு அடிப்படைச் சம்பளமாக 5000 ரூபாவும் விலைக்கேற்ற கொடுப்பனவாக 30 ரூபாவும் உற்பத்தி திறன் கொடுப்பனவாக 140 ரூபாவும் வரவுக் கொடுப்பனவாக 60 ரூபாவும் என மொத்தமாக 730 ரூபா தினசரி ஊதியமாக வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர் ஒருவருக்கு அண்ணளவாக 22,679 ரூபாவினை பெற்றுக்கொள்ள முடிந்தது. 

2019 ஆம் ஆண்டு  மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெருந்தோட்டத் தொழிலாளர் ஒருவருக்கு அடிப்படைச் சம்பளமாக 700 ரூபாவும் விலைக்கேற்ற கொடுப்பனவாக 50 ரூபாவும் என 750 ரூபா வழங்கப்பட்டது. அதனடிப்படையில் தோட்டத் தொழிலாளியொருவர் 2019 ஆம் ஆண்டு 19,218 ரூபாவும் 2020 ஆம் ஆண்டு 22,220 ரூபாவும் அண்ணளவாக பெற்றுக்கொள்ள முடிந்தது. 2021 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்ட பின்னர் வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே அரசியல் நோக்கங்களுக்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா தினசரி ஊதியம் வழங்கப்படுமென கூறி ஏமாற்றப்பட்டுள்ளனர். 


தற்போதைய நிலைவரப்படி மாதம் 22 நாட்கள் வேலைநாட்களாக கொண்டுள்ள ஒருவர் 22,000 ரூபாவினை வருமானமாக பெறவேண்டும். ஆனால் பறிக்கும் கொழுந்துக்கேற்பவே ஊதியம் வழங்கப்படுவதால் மாதாந்தம் 10,000 க்கும் குறைவான தொகையினையே ஊதியமாக பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. எனவே தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது தொடர்பில் அரசாங்கம் பெருமிதம் கொண்டாலும் நடைமுறையில் தொழிலாளர்கள் அவற்றை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. 

இப்பிரச்சினை தொடர்பாக பெருந்தோட்ட கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. தொழிற்சங்கங்களுக்கான சந்தா நிறுத்தப்பட்டது முதல் தோட்டத் தொழிலாளர்களின் நலன்கள் மற்றும் பிரச்சினைகளில் தொழிற்சங்கங்கள் அக்கறை காட்டுவது இல்லை. இப்போது தனித்து விடப்பட்டவர்களாகவே தொழிலாளர்கள் இருக்கின்றனர். தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கேற்ப வேதனம் அதிகரிக்கப்பட வேண்டுமென பல்வேறு துறையினைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்துக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு குரல் கொடுப்பதற்கு எவரும் இல்லை. மீண்டும் கூட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் முண்டியடித்துக்கொண்டு தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை தேடி வரலாம்.

தொழிலாளர்களின் வேதனம் உள்ளிட்ட ஏனைய சேமநலன்களை தீர்மானிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த போது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களைத் தவிர ஏனைய தொழிற்சங்கங்கள் ஒப்பந்தத்தில் இருந்து சகலரும் வெளியேற வேண்டுமென தெரிவித்திருந்தன. அவ்வாறு கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் பட்சத்தில் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்திருந்தன. ஆனால் தற்போது கூட்டு ஒப்பந்தம் முற்றாக இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில் எவ்வித ஆதரவும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. தொழிலாளர்களிடம் இதுவரை பெற்றுக்கொண்ட சந்தா பணம் நிறுத்தப்பட்ட பின்னர் சகலதையும் தொழிற்சங்கங்கள் முடித்து கொண்டுள்ளன. 

தற்போது ஒரு கிலோ பச்சை தேயிலை கொழுந்துக்கு 50 ரூபா வழங்கப்படுகின்றது. தினசரி பறிக்கும் கொழுந்தின் அளவுக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படுகின்றன. தேயிலை தோட்டங்களுக்கு உரங்கள், களைகொல்லிகள் என்பன இல்லாமையினால் விளைச்சல் மிக குறைவாக இருப்பதுடன் தேயிலை தோட்டங்களும் அருகி வரும் நிலை காணப்படுகின்றது. எனவே 1000 ரூபா என்ற அரசியல் இலாபத்துக்காக தோட்டத் தொழிலாளர்கள் அடகு வைக்கப்பட்டுள்ளனர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக