கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

7 செப்டம்பர், 2021

வீதி அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது?


கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட பல வேலைத்திட்டங்கள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையை அவதானிக்க முடிகின்றது. அவை மீண்டும் ஆரம்பிக்கப்படுமா என்பது ஒரு புறம் இருந்தாலும் அவை தற்போது பாழடைந்து கிடக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவற்றில் வீதி அபிவிருத்திகள் முக்கியமானவையாகும். தோட்டபுறங்களுக்கான பல வீதிகள் கடந்த காலங்களில் காபட் பாதையாக மாற்றப்பட்டிருந்தாலும் ஒரு சில வீதிகளின் கட்டுமானங்கள் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளன. அத்தோடு அவற்றுக்காக ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்பதும் தெரியாது. இவ்வாறு பல இலட்ச ரூபா மக்கள் பணம் அபிவிருத்தி என்ற பெயரில் சூறையாடப்பட்டுள்ளது. 

கடந்த அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் மூலம் டீசைட் மல்லியப்பு சந்தி தொடக்கம் காட்மோர் வரையான பாதையினை தார் பாதையாக மாற்றியமைக்கும் செயற்பாடு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் மேற்பார்வையில் 20.05.2018 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தற்போது மூன்று வருடங்கள் கடக்கின்ற நிலையிலும் குறித்த பாதை அபிவிருத்தி முழுமை பெறாத நிலையில் காணப்படுவதோடு மேலும் பழுதடைந்து மக்கள் பாவனைக்கு உட்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது. 

குறித்த வீதி அபிவிருத்திக்காக 15.9 மில்லியன் ரூபா (15,974,379.55) அமைச்சால் ஒதுக்கப்பட்டு அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டாலும் தற்போது வரை 18 வீதமான கட்டுமான பணிகளே நிறைவு பெற்றுள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மூலம் (05.02.2020) பெற்றுக்கொண்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவற்றுக்காக 2,893,953.87 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுடன் மீதமுள்ள தொகைக்கு என்ன நடந்ததென்பது தெரியாது. எம்பிலிபிட்டியிலுள்ள டீ.ஜே.டபிள்யு கட்டுமானம் மற்றும் வழங்குநர் (D.J.W. Construction & Suppliers) ஊடாக மேற்கொள்ளப்பட்ட வீதி கட்டுமானத்துக்கான ஒப்பந்ததொகை 14,755,199.97 ரூபாவாகும். 

அதேவேளை இவ்விடயம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் தேசிய சங்கத்தின் மஸ்கெலியா பிரதேசசபை உறுப்பினர் ரவீந்திரராஜா கருத்து தெரிவிக்கையில், ‘வீதி அபிவிருத்தியினை விரைவாக முடிக்க வேண்டுமென்பதற்காக இரு பிரிவுகளாக பிரித்து வழங்கப்பட்டது. இதில் முதல் கட்டமான டீசைட் மல்லியப்பு சந்தி தொடக்கம் மொக்கா தோட்ட மருந்தகம் வரையிலான பகுதி மாகாண வீதி அதிகார சபையினால் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமான, மொக்கா தோட்ட மருந்தகம் தொடக்கம் காட்மோர் வரையான 2.5 கி.மீ. நீளமான வீதி பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. குறித்த நிதியத்தின் இலஞ்ச ஊழல் காரணமாக ஒரு கி.மீ. வரையில் சாதாரண அபிவிருத்திகள் இடம்பெற்றதுடன் பின்னர் வேலைகள் கிடப்பில் போடப்பட்டன. இத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் நிதியம் கைமாறியதால் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்திடம் இவ்விடயம் தொடர்பில் கேட்ட போதும், வேலைத்திட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்ட போதும் இதுவரையில் அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை’ எனத்  தெரிவித்திருந்தார். 

வீதி அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு மறுப்பு தெரிவித்திருந்த அதேவேளை கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டு முடிக்கப்படாத திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சால் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் திட்டங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் பரிசீலனை செய்யப்படுமெனவும் தெரிவித்துள்ளது. 

ஆனால் வேலைத்திட்டம் நிறுத்தப்படவில்லையெனவும் மேலும் வீதி கட்டுமானப்பணிகள் செயற்பாட்டில் உள்ளதாகவும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் குறித்த வீதியின் கட்டுமானப்பணிகளை மீண்டும் ஆரம்பத்திலிருந்தோ மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. அவ்வாறெனின் மீண்டும் குறித்த திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டிய தேவை இருக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு அரசாங்கமும் அபிவிருத்திகளை புறக்கணிப்பதால் மக்களின் பணமே அதிக விரயமாகின்றது. 

அதேவேளை ‘குறித்த திட்டம் இடைநிறுத்தப்பட்டதற்கு ஒதுக்கிய நிதி முடிவுற்றமையே காரணமென கூறப்படுகின்றது. வீதியின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்த போது, புதிய பாலம் மற்றும் வடிகாலமைப்பு முறை என்பன உருவாக்கப்படுமென கூறப்பட்டது. ஆனால் அச்செயற்பாடுகள் எவையும் இடம்பெறவில்லை. மொக்கா தோட்ட மருந்தகம் தொடக்கம் காட்மோர் வரையில் வீதி அபிவிருத்தியில் இறுதிப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. குறித்த வீதியினை தரம் முறையாக பேணப்படவில்லை. வீதியின் தடிப்பு குறித்த நியமங்களின் அடிப்படையில் பேணப்படவில்லை. ஒரு சில பகுதிகளில் கற்கள் இடப்பட்டு தார் மாத்திரமே பூசப்பட்டுள்ளது. தரமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்பதற்காகவே வாக்களித்து உறுப்பினர்களை தெரிவு செய்தோம். ஆனால் அவ்வாறு இடம்பெறுவதில்லை’ என இப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் கோவிந்தசாமி கிருபானந்தன்  தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மற்றும் அமைச்சரவை உருவாக்கப்பட்டு ஒரு வருடங்களை கடக்கின்ற நிலையிலும் நிறுத்தப்பட்ட மக்களுக்களுக்கு அத்தியாவசியமான வேலைத்திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படுவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. மல்லியப்பு சந்தி தொடக்கம் காட்மோர் வரையான பாதை அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 13.4 மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்ததென்பது தொடர்பாகவும் அமைச்சு விளக்கமளிக்கவில்லை. 

கடந்த ஆட்சிக்காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டம் முற்றாக தடைபட்டுள்ளதுடன் கட்டிடங்கள் அனைத்தும் பாழடைந்துள்ளன. அத்துடன் பெருந்தோட்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கம் ஒதுக்கிய 300 மில்லியன் ரூபாவுக்கும் என்ன நடந்ததென்பது தெரியவில்லை. கல்வி அமைச்சும் கடந்தகால திட்டங்கள் அனைத்தையும் புறக்கணித்து செயற்படும் நிலையே காணப்படுகின்றது. அத்துடன் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டங்கள் தொடர்பிலும் பல்வேறு முரண்பாடான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருவதோடு பயனாளிகளுக்கு உரிய முறையில் வீடுகள் சென்றடைவதை தொடர்ச்சியாக அமைச்சு இழுத்தடிப்பு செய்து வருகின்றது. கடந்த இரு நூற்றாண்டுகளாக அபிவிருத்தியில் பின்தங்கியுள்ள மலையகத்தில் இவ்வாறு வேலைத்திட்டங்கள் முடிவடையாமல் கிடப்பில் போடப்படுவது ஏமாற்றத்தை அள்ளிக்கின்றது. மக்களுடைய வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதில் அபிவிருத்திகளும் முக்கிய பங்கை செலுத்துகின்றதென்பதை அரசியல் தலைமைகள் கவனத்தில் கொள்ள வேண்டும். 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக