மலையகத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரத போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தலவாக்கலை நகரை ஆக்கிரமித்து மேல் கொத்மலை நீர் மின் கருத்திட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது. 2012 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்ட இத்திட்டத்தின் மூலம் பல தொழிலாளர் குடியிருப்புகள் உட்பட பல வீடுகள், கடைகள் மற்றும் வேலைத்தளங்கள் என்பன பாதிக்கப்பட்டதுடன் அவர்கள் புதிய இடத்துக்கு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது.
அவ்வாறு இடம்பெயர்ந்தவர்களுக்கான வீடுகள், கடைகள் மற்றும் பாடசாலைகள் என்பன புதிதாக அமைத்துக்கொடுக்கப்பட்டாலும் இன்னும் அதற்;கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை. இவ்விடயம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினூடாக இலங்கை மின்சார சபையிடம் (CEB/AGMP/RTI/23/2021/03/029) தகவல் கோரிய போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு காணி உறுதிகள் வழங்குவது இலங்கை மின்சார சபையின் பொறுப்பல்லவெனவும் மின்சக்தி அமைச்சினால் காணி ஆணையாளர் நாயகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பாக இலங்கை மின்சார சபையும் சம்பந்தப்பட்ட நுவரெலியா பிரதேச செயலகத்துக்கும் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிலவுரிமை இன்னும் சம்பந்தப்பட்ட தரப்பினரால் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சினால் காணி ஆணையாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 2020.07.03 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலமாக, ‘மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தி திட்டம் செயற்படுத்தப்படும்போது சுவீகரிக்கப்பட்ட காணிக்கு பதிலாக பெறப்பட்ட மாற்று இடத்துக்கு காணி உரித்து பத்திரம் பெற்றுகொடுப்பது தொடர்பான 22.07.2020 ஆத் திகதிய அமை/20/1107/226/068 அமைச்சரவை தீர்மானம் மற்றும் அமைச்சரவை சிபாரிசு கடிதத்தை மேலதிக நடவடிக்கைகளுக்காக அத்துடன் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
22.07.2020 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்தின்படி, மேல் கொத்மலை நீர்மின் கருத்திட்டம் 2006 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டில் அதன் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன. இந்தக் கருத்திட்டம் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வீடுகள், கடைகள் மற்றும் வேலைத்தளங்கள் என்பவற்றிற்கான மாற்று இடங்கள் நிர்மாணிக்கப்பட்டு 2014 ஆகஸ்ட் மாதம் அளவில் இவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளதோடு, உரிய நட்டஈடு கொடுப்பனவு நடவடிக்கைகளும் தற்போது முடிவுறுத்தப்பட்டுள்ளது. ஆயினும் மீளக் குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட காணிகளின் உரிமை இதுவரை வழங்கப்படவில்லை. ஆதலால், மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட்டதன் காரணமாக இடம் பெயர்ந்தவர்களுக்கு மாற்று குடியிருப்புகள் மற்றும் கட்டடங்களை நிர்மாணிப்பதற்காகவும் பயிர்செய்கை நோக்கங்களுக்காகவும் வழங்கப்பட்டுள்ள மாற்று காணிகளை உரிய பயனாளிகளுக்கு இறையிலி கொடைப்பத்திரத்தின் மூலம் உடைமையாக்கும் பொருட்டு மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அதேவேளை இலங்கை மின்சார சபையினால் 21.10.2020 ஆம் திகதி நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், ‘மேல் கொத்மலை நீர்மின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்ட காணிகளில் மேற்கொள்ளப்படுகின்ற மீள்பதிவு மற்றும் மீள்குடியேற்றத்துக்கு சட்டபூர்வமான அதிகாரத்தை வழங்குவதற்காக காணியை குறித்த பிரதேச செயலகத்துக்கு பொறுப்பளிக்க இலங்கை மின்சார சபை முடிவு செய்துள்ளது. அது தொடர்பாக இலங்கை மின்சார சபை பொது முகாமையாளரின் இல.ருமுர்PஃPனுஃடுயுNனுஃ01 உடன் 2020.01.19 ஆம் திகதிய கடிதம் மூலம் உங்களுக்கு இக்காலப்பகுதிக்குள் அறியத்தருகிறோம்.
மேற்கூறிய தகவல்கள் ஒருங்கிணைப்பு மற்றும் குறித்த காணியை ஒப்படைத்தல் மூலம் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் று.று.ளு.னு.ஜயவர்தனவுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளதால் குறித்த காணியை பொறுப்பேற்க தேவையான நடவடிக்கைகளை செயற்படுத்தி தருவதாக தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் கொத்மலை நீர் மின் உற்பத்தி திட்டத்தினால் 534 வீடுகள் பாதிக்கப்பட்டன. அவ்வாறு பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு பதிலாக மாற்று புதிய வீடுகள் வழங்கப்பட்டன. தற்போது பாதிக்கப்பட்ட 534 வீடுகளுக்கும் புதிய வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு கொடுப்பனவுகள் திட்டம் ஆரம்பக்கப்பட்டது தொடக்கம் காலத்துக்கு காலம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் நுவரெலியா பிரதேச செயலகத்தினால் இழப்பீடுகள் வழங்கப்பட்டதுடன் இலங்கை மின்சார சபை அதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்ததாகவும் மேலதிக தகவல்களை நுவரெலியா பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ளும்படி இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
‘நீர்மின் திட்டத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ள போதும் இதுவரை காணி உறுதிகள் வழங்கப்படவில்லை. இவ்விடயம் தொடர்பில் பல தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்ட போதும் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. புதிய வீடுகள் வழங்கப்பட்ட போது கொடுக்கப்பட்ட பத்திரத்தில் பழைய வீடுகளுக்கு பதிலாக இப்புதிய வீடுகள் வழங்கப்படுவதாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கான காணி உறுதிகளுக்கும் மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தி திட்டத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் காணி அமைச்சே இதற்கான உறுதிகளை வழங்க வேண்டுமென இலங்கை மின்சாரசபை தெரிவிக்கிறது. ஆனால் இலங்கை மின்சார சபையே காணி உறுதி வழங்க வேண்டுமென காணி அமைச்சு தெரிவிக்கிறது. அதனால் 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் காணி உறுதிகள் கிடைக்கப்பெறவில்லை’ என மேல் கொத்மலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 200 வருடங்களாக மலையகத்தில் வசித்து வரும் மக்களுக்கு காணி உறுதிகளை வழங்குவதில் இன்னும் அரசாங்கம் இழுத்தடிப்பையே செய்து வருகின்றது. புதிதாக அமைக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டம் மற்றும் அமைச்சால் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் உட்படி அபிவிருத்தி திட்டங்களால் புதிதாக உருவாக்கப்பட்ட எந்த வீட்டுத்திட்டங்களுக்கும் காணி உறுதிகளை அரசாங்கம் வழங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றது. மலையக மக்கள் காணி உறுதிகள் பெற்று நில உரிமையாளர்களாக மாறுவதை பெரும்பான்மையின அரசாங்கம் விரும்பவில்லை.
எனவே தற்போதைய அரசாங்கம் அவற்றை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும். மேல் கொத்தமலை திட்டத்தின் போது பாதிக்கப்பட்ட பல தொழிலாளர் குடியிருப்புகளுக்கும் தனி வீடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மலையகத்தில் காணியுரிமைக்காக இன்னும் போராட வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. 20 பேர்ச் காணியினை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தவர்கள் இன்று 7 பேர்ச் காணியை உறுதியுடன் பெற்றுக்கொடுப்பதற்கு இலாயக்கற்றவர்களாக இருக்கின்றனர். மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தி திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணி உறுதியினை பெற்று கொடுப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அரசாங்க அனுமதியினை உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும். தற்போதைய அரசாங்கம் இவை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக