நல்லாட்சி அரசாங்கத்தால் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தற்போது கைவிடப்பட்ட நிலையில் இருப்பது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவில்லை. இதேவேளை நிறைவு செய்யப்பட்ட திட்டங்களும் இன்னும் மக்களுக்கு கையளிக்கப்படாமல் இருக்கின்றன. முன்னைய அரசாங்கத்தால் முழுமைப்படுத்தப்பட்ட திட்டங்களை யாரை கொண்டு திறப்பு விழா செய்வது என்ற அரசியல் போட்டிகளின் காரணமாக திட்டங்கள் இன்னும் மக்களுக்கு கையளிக்கப்படாமல் இருக்கின்றன. இங்கு மக்களின் நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. இதேவேளை தோட்டங்களில் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் முரண்பட்ட நிலையில் இருப்பதால் இதற்கு தீர்வு காண முடியாத நிலை காணப்படுகின்றது.
மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையத்தை திறப்பதிலும் இவ்வாறே சர்ச்சைகள் நிலவுகின்றன. இதனால் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பாழடைந்த சிறுவர் அபிவிருத்தி நிலையத்திலேயே பாதுகாப்பற்ற முறையில் பராமரிக்கப்பட்டு வரும் நிலை காணப்படுகின்றது. எனவே இந்த சிறுவர் அபிவிருத்தி நிலையம் எப்போது மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
பெருந்தோட்டங்களில் முன்பள்ளிக் கல்வியினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் உலக வங்கியின் நிதியுதவியுடன் ஆரம்பகால சிறுவர்பராய அபிவிருத்தி திட்டம் (Early Childhood Development Project) 2015 - 2020 ஆண்டுவரை 5 வருட காலப்பகுதிக்கு முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டத்துக்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை அரசாங்கத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் பெருந்தோட்டப் பிள்ளைகளுக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டிருப்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எம்மால் தெரிந்து கொள்ள முடிந்தது. இதன் இலங்கைப் பெறுமதி 1812 மில்லியன் ரூபாவாகும். பெருந்தோட்டங்களிலுள்ள 5 வயதுக்குக் குறைவான முன்பள்ளி பிள்ளையொன்றுக்கு 27876 ரூபா ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
இப்பாரிய தொகையானது 7 செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அவை இரண்டாக வகுக்கப்படுகிறது. ஒன்று கட்டிடங்கள் (Hardware Activities) சம்பந்தப்பட்டதாகவும் மற்றொன்று ஆசிரியர், கற்பிப்பவர், பிள்ளைகள், பெற்றோருக்கான பயிற்சி, வழிகாட்டல்கள் (Software Activities) தொடர்பானது. இலங்கை முழுவதும் 17,020 (உலகவங்கி) ஆரம்பகால குழந்தைப் பருவ அபிவிருத்தி நிலையங்கள் காணப்படுகின்றன. இங்கு 29,340 ஆசிரியர்கள் காணப்படுவதுடன் இவற்றில் 84 வீதமான நிலையங்கள் தனியாரின் முகாமைத்துவத்தின் கீழேயே செயற்படுகின்றன. இந்த 5 வருட திட்டத்தின் மூலம் மேலதிகமாக நாடு முழுவதும் 150,000 சிறுவர்களை புதிய நிலையங்களுக்குள் உள்வாங்க முடியும்.
இதில் முதல் பிரிவில் பெருந்தோட்டங்களில் முன்பள்ளிக் கல்வி நிலையம் இல்லையென்றால் புதிதாக கட்டிடமொன்றை அமைப்பதற்கு 65 இலட்சம் ரூபா ஒதுக்கப்படுகின்றது. முன்பள்ளியொன்று இருக்குமாயின் அதனை புனரமைப்புச் செய்வதற்கு 13.5 இலட்சம் ரூபாவும் புதிய கட்டிடமொன்று இருக்குமாயின் விளையாட்டு முற்றமொன்று அமைப்பதற்கு 4 இலட்சம் ரூபாவும் விளையாட்டு முற்றம் இருக்குமாயின் அதற்கு வேலி அமைப்பதற்கு 2.5 இலட்சம் வழங்கப்படுகின்றது.
இரண்டாவது பிரிவில், சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் உள்ளவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கும் முறை காணப்படுகின்றது. இதில் பிரதான நோக்கமாக பிறநாடுகளில் வழங்கப்படுகின்ற முன்பள்ளிக் கல்விக்கான டிப்ளோமாவை இவர்களுக்கும் பெற்றுக் கொடுப்பதாக இருக்கின்றது. ஆனால் இங்கு சிறுவித்தியாசம் காணப்படுகிறது. பொதுவாக நகர்புறங்களிலுள்ள முன்பள்ளிகளில் 3 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளே அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் தோட்டபுறங்களிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் 6 மாத குழந்தைகள் முதல் சேர்க்கப்படுகின்றனர். அதனால் அதற்கேற்றாற்போல பாடநெறிகளோடு பயிற்சிகளும் வழங்கப்படும். அத்துடன் பெருந்தோட்டங்களிலுள்ள பெற்றோருக்கு முன்பள்ளிக் கல்வி தொடர்பான அறிவினை பெற்றுக் கொடுப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கின்றது. இத்திட்டமானது பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தினால் செயற்படுத்தப்பட்டது.
இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட திட்டம் அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமை பெருந்தோட்ட சிறுவர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் செயற்பாடாகும். இத்திட்டம் முழுமையாக திட்டமிடப்பட்ட வகையில் செயற்படுத்தப்பட்டிருக்குமாயின் அது சிறுவர்களின் வளர்ச்சியில் முக்கிய மைல் கல்லாக அமைந்திருக்கும். கடந்த ஆட்சியில் செயற்படுத்தப்பட்ட இந்திய வீட்டுத்திட்டம், கம்பரெலிய திட்டம் மற்றும் ஆரம்பகால சிறுவர்பராய அபிவிருத்தி திட்டம் என்பன தற்போது முழுமையாக நிறுத்தப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது.
அதேவேளை கடந்த ஆட்சிக்காலப் பகுதியில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தில் காணப்பட்ட முறைகேடுகளும் ஆரம்பகால சிறுவர்பராய அபிவிருத்தி திட்டத்தில் காணப்பட்ட அரசியல் தலையீடுகளும் இத்திட்டம் பெருந்தோட்டங்களுக்கு சென்றடைவதில் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டது. இவ்வேலைத்திட்டத்துக்காக மாதாந்தம் 270,000 ரூபா வாடகை செலுத்தி இரண்டு வாகனங்கள் (PH 2787 / PH 3072) வாடகைக்குப் பெற்றுக்கொள்ளப்பட்டன. பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்தின் அப்போதைய தலைவர் வருடாந்தம் வாகனத்துக்கு மாத்திரம் 30 இலட்சம் ரூபாவினை செலவளித்திருந்தார். இந்த இரண்டு வாகனங்களில் ஒரு வாகனமே வேலைத்திட்டத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது. மற்றையது தனிப்பட்ட தேவைகளுக்காகவே பயன்பட்டிருந்தது.
ஒரு மனிதன் பூரணமடைவதற்கு முதலாவது தேவையாக இருப்பது ஆரம்பக்கல்வியாகும். 8 வயது வரையே ஆரம்பக்கல்வி என உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் 0 - 5 வயது வரையே ஆரம்பக்கல்வியென இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இக்காலப்பகுதியிலேயே 85 வீதமான மூளை வளர்ச்சி ஏற்படுகின்றது. இக்காலப்பகுதியில் ஏதாவது குறைப்பாடுகள் காணப்பட்டால் அது அப்பிள்ளையின் எதிர்காலத்தையே பாதித்துவிடும். சிறுவர் பராமரிப்பு நிலையமானது பிள்ளைகளை பார்த்துக் கொள்ளும் ஒரு இடமாக மாத்திரம் இல்லாமல், பிள்ளைகளின் அபிவிருத்திக்கும் உதவ வேண்டும்.
மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையத்தை உடனடியாக திறப்பது அவசியமாகும். அதேவேளை தற்போது சிறுவர் பராமரிப்பு நிலையமாக செயற்படும் கட்டிடமானது எவ்வித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படாமல் மிகவும் பாழடைந்த நிலையில் காணப்படுவதால் எந்த நிலையிலும் அது சிறுவர்களுக்கு ஆபத்தானதாக மாறக்கூடிய நிலை காணப்படுகின்றது. அங்கு சிறுவர்களை பராமரிப்பதற்கேற்ற சூழல் காணப்படவில்லை. நெருங்கிய குடியிருப்புகளுக்கு மத்தியில் எவ்வித வசதிகளுமற்ற நிலையிலேயே இருப்பதை அவதானிக்க முடிகின்றது. எனவே சிறுவர்களின் பாதுகாப்பினை கவனத்தில் கொண்டு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக