கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

7 செப்டம்பர், 2021

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை கைவிடப்பட்டுள்ள கட்டுமானங்கள்


2016 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் கருத்திட்டத்துக்கமைய கல்வி அமைச்சினால் ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ தேசிய வேலைத்திட்டம் (2016 - 2020) முன்னெடுக்கப்பட்டது. சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பாடசாலைகளை அபிவிருத்தி செய்வது இதன் நோக்கமாகும். இதன்படி குடிநீர், மின்சாரம், மலசலகூடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், புதிய கட்டிட நிர்மாணம், மனிதவள அபிவிருத்தி, தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள் போன்ற வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக இக்கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 5 வருடங்கள் கடக்கின்ற நிலையிலும் இதுவரை பூர்த்திசெய்யப்படாத மற்றும் கைவிடப்பட்டுள்ள திட்டம் தொடர்பிலேயே நாம் ஆராயவுள்ளோம்.

‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட மஸ்கெலியா ‘புளும்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயமும்’ (தேசிய பாடசாலை) ஒன்றாகும். குறித்த பாடசாலையில் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 5 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மூன்று வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இரண்டு வேலைத்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இவை தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக கல்வி அமைச்சில் கோரப்பட்ட தகவலுக்கு அமைவாக (RTI/Appeal/2011/2021ஒரு வருடத்தின் பின்னர் தகவல்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. 

‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மஸ்கெலியா புளும்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஹட்டன் வலயக் கல்விப்பணிமனை வழங்கியுள்ள தகவல்களில், அதிபர் விடுதி கட்டுமான பணி மற்றும் வகை 12 மற்றும் 9 மலசலகூடத் தொகுதிகளின் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் கனிஸ்ட விஞ்ஞான கூடம் 60 வீதமும் ஆசிரியர் விடுதி தொகுதி 50 வீதமும் முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இவற்றில் பாதுகாப்பு வேலி நிர்மானம் தொடர்பிலான விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை.  

மல்வத்த கன்ஸ்ட்ரக்ஸன் எனும் ஒப்பந்தகாரரால் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் போதியளவு முற்பணம் வழங்கப்படாமையினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தினை மீண்டும் முன்னெடுப்பதற்கு வலய கல்விப் பணிப்பாளருக்கு ஊடாக மாகாண பிரதான மற்றும் கல்வி அமைச்சின் செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டு பொறியியலாளர்களினால் மீண்டும் வேலைகள் ஆரம்பிப்பதற்காக திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய மாகாண பொறியியல் சேவை திணைக்களத்தின் தகவல்களின்படி, வகை 9 மலசலகூடத்தினை அமைப்பதற்கு ஒப்பந்த தொகையாக 1,653,099.14 ரூபா காணப்பட்டதுடன் 20.12.2016 ஆம் திகதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 20.06.2017 திகதி வரையான 6 மாத காலத்தில் நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. சுற்றாடல் பாதுகாப்பு வேலி அமைப்பதற்காக ஒப்பந்த தொகையாக 1,943,840 ரூபா காணப்பட்டதுடன் 29.05.2019 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 29.11.2019 வரையான 6 மாத காலப்பகுதிக்குள் திட்டத்தினை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டிருந்தது. 

அதிபர் விடுதிக்கான ஒப்பந்த தொகையாக 10,697,928 ரூபா காணப்பட்டதுடன்  28.10.2016 திகதி அல்லது அதற்கு முன்னர் ஆரம்பித்து 11.04.2017 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரான காலப்பகுதியில் 365 நாட்களில் நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

72’ஒ 38’ இரண்டு மாடி தொழில்நுட்ப ஆய்வு கூடத்துக்கான ஒப்பந்த தொகையாக 15,496,235 ரூபா காணப்பட்டதுடன் 28.10.2016 திகதி அல்லது அதற்கு முன்னர் ஆரம்பித்து 26.01.2017 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரான காலப்பகுதியில் 365 நாட்களில் நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இரண்டு மாடி ஆசிரியர் விடுதிக்கான ஒப்பந்த தொகையாக 11,650,160 ரூபா காணப்பட்டதுடன் 06.03.2017 திகதி அல்லது அதற்கு முன்னர் ஆரம்பித்து 14.08.2017 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரான காலப்பகுதியில் 365 நாட்களில் நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

வகை 12 மலசலகூடத்தினை அமைப்பதற்கு ஒப்பந்த தொகையாக 837,729.75 ரூபா காணப்பட்டதுடன் 31.10.2016 ஆம் திகதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 30.04.2017 திகதி வரையான 6 மாத காலத்தில் நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மலசலகூடம் மற்றும் அதிபர் விடுதி மாத்திரம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனைய அபிவிருத்தி திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தற்போது 5 வருடங்கள் கடந்துள்ள நிலையில் மீண்டும் இத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாடசாலை வளங்கள் மாணவர்களின் பயன்பாட்டுக்கு உகந்தவையாக அமைய வேண்டும். மேலும் பெருந்தோட்ட பாடசாலைகள் வளப்பற்றாக்குறைகளுடன் இயங்கி வரும் சூழலில் இவ்வாறு கிடைக்கும் அபிவிருத்திகளும் அதிகாரிகளின் அசமந்தத்தினால் இடைநிறுத்தப்படுவது பெருந்தோட்ட பாடசாலைகளை திட்டமிட்டு புறக்கணிப்பதாகவே கருத வேண்டியுள்ளது. 

பெருந்தோட்ட பாடசாலைகளில் ஆய்வுகூடங்கள் அமைவது ஒரு வரபிரசாதமாகும் அத்துடன் அவ்வாறு அமையும் பட்சத்தில் மாணவர்கள் சாதாரணம் மற்றும் உயர்தர பிரிவுகளில் தூர பாடசாலைகளுக்கு சென்று கல்வி கற்க வேண்டிய தேவை காணப்படாது. உயரதரத்தில் விரும்பிய துறைகளில் கற்பதற்கு வாய்ப்பு காணப்படும். பெருந்தோட்ட மாணவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும் தாம் விரும்பிய துறையினை தெரிவு செய்வதில் வளப்பற்றாக்குறைகள் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்துகின்றன. ஆனால் மாணவர்களின் நலன்களை கருதாமல் அரசியல் ரீதியாக தீர்மானங்களை மேற்கொள்வதால் ஒவ்வொரு அரசாங்கமும் ஆட்சிக்கு வரும்போது முன்னைய அரசாங்கத்தின் திட்டங்களை இடைநிறுத்துவது வழமையாகி போய்விட்டது.

ஆனால் ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ தேசிய வேலைத்திட்டத்தினை முன்னெடுத்த நல்லாட்சி அரசாங்கத்தின் கல்வி அமைச்சானது, வேலைத்திட்டங்களுக்கான ஒப்பந்த தொகையினை முழுமையாக செலுத்தாமை காரணமாகவே திட்டத்தினை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புதிய அரசாங்கமும் அந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை. அத்துடன் புதிதாக 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து செயல்படுத்தி வருகின்றது. இதுவரை காலமும் மாகாண பாடசாலைகளாக இருந்த பல பாடசாலைகள் தற்போது தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. கல்வி அமைச்சின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் அப்பாடசாலைகள் உள்வாங்கப்படுவதால் அபிவிருத்தி பெறும் என்பது பலரின் கருத்தாக இருக்கின்றது. 

மறுபுறம் தேசிய பாடசாலைகள் அதிகரிப்பால் கல்வி அமைச்சுக்கு சுமை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதனை தீர்ப்பதற்கு ஏற்கனவே கைவிடப்பட்ட அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதன் மூலம் தேசிய பாடசாலை பெற்றுக்கொள்ளும் வளங்களை சகல பாடசாலைகளும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என்பது முக்கியமானது. 














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக