கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

12 ஜனவரி, 2021

தை மாதம் 1000 ரூபா கிடைக்குமா?


ஜனவரி மாதம் முதல் தோட்;டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள நிலையில் அதற்கான பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் இடம்பெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் தோட்டத் தொழிலாளர்களின் தற்போதைய அடிப்படைச்சம்பளமான 700 ரூபாவினை அதிகரிப்பதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணங்கவில்லை. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரமளவில் இடம்பெறக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் தொழிலாளர்களுக்கான வேதன உயர்வை கூட்டு ஒப்பந்தத்தின் மூலமே முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாகவே தெரிகின்றது. இதன்படி ஜனவரி மாதம் வேதன உயர்வு தொடர்பில் இறுதி தீர்மானத்துக்கு வருவதற்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுவதுடன், மீண்டும் நீண்ட போராட்டத்தின் பின்பே வேதனவுயர்வை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையே காணப்படுகின்றது.

2019 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தின் படி அடிப்படைச் சம்பளத்தில் 40 வீத அதிகரிப்பை மேற்கொண்டு 700 ரூபாவும் தேயிலைஃ இறப்பர் விலைக் கொடுப்பனவாக 50 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 750 ரூபா சம்பளத்துடன் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்கான 105 ரூபாவினையும் சம்பளத்துடன் சேர்த்தே 855 ரூபா மொத்த சம்பளமாக காண்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் மீண்டும் 1000 ரூபாவுக்கான பேச்சு எழுந்துள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்கான கொடுப்பனவையும் மொத்த சம்பளமாக கணிப்பிடும் துர்பாக்கியம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இருந்து வருகின்றது. அதனை கூட்டு ஒப்பந்த பங்காளிகளான தொழிற்சங்கங்களும் ஏற்றுக்கொண்டே கடந்த காலத்தில் செயற்பட்டிருக்கின்றன. எனவே புதிய வேதன உயர்வு கோரிக்கையானது 700 ரூபா அடிப்படைச் சம்பளத்தில் இருந்து கணிக்கப்படுமா அல்லது 855 ரூபா மொத்தச் சம்பளத்திலிருந்து கணிக்கப்படுமா என்பதிலேயே பலருக்கும் குழப்பமுண்டு. 

இதேவேளை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் முற்றாக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கலப்பு முறையொன்றின் ஊடாக மொத்த சம்பளமாக 1025 ரூபா வழங்குவதற்கான யோசனையை முன்வைத்துள்ளனர். அதற்குரிய உத்தேச வரைபும் பேச்சுவார்த்தையின்போது சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 

முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த சம்பளத்துக்கான உத்தேச வரைபில் அடிப்படைச் சம்பளம் 700 ரூபா எனவும் விலைக்கொடுப்பனவு 75 ரூபா எனவும் வருகைக் கொடுப்பனவு 70 ரூபாவாகவும் உற்பத்தி அதிகரிப்புக் கொடுப்பனவு 75 ரூபாவாகவும் ஊழியர் சேமலாப நிதிக்கான தொகை 105 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனடிப்படையிலேயே மொத்த சம்பளமாக 1025 ரூபாவை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனத்தினர் தீர்மானித்துள்ளனர். கடந்த வருட கணக்கு அறிக்கையுடன் ஒப்பிடும் போது ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்படுமாக இருந்தால் 15 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுவதாகவும் உற்பத்தி அதிகரிக்கப்படும் பட்சத்திலேயே அடிப்படைச் சம்பளத்திலும் அதிகரிப்பை மேற்கொள்ள முடியுமெனவும் தீர்மானித்துள்ளனர். 

அடிப்படைச் சம்பளத்தில் அதிகரிப்பை ஏற்படுத்துவதற்கு முதலாளிமார் சம்மேளனம் விரும்பவில்லை. மாறாக வேறு நிரந்தரமல்லாத கொடுப்பனவுகள் மூலம் மொத்தமாக 1000 ரூபாவினை வழங்குவதற்கே எதிர்பார்த்துள்ளனர். 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இரு கூட்டு ஒப்பந்தங்களிலும் தொகை அதிகரிப்பை காண்பிக்க முயன்றாலும் தொழிலாளர்களுக்கு 20 ரூபா சம்பள அதிகரிப்பே வழங்கியிருப்பதை அவதானிக்கலாம். (அட்டவணை 01)


தற்போதைய கூட்டு ஒப்பந்தமானது அமுலில் இருக்கும் வரை அரசாங்கத்தின் வாக்குறுதிகளோ அல்லது சம்பள அதிகரிப்புகளோ கம்பனிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. 1994 ஆம் ஆண்டில் 72.24 ரூபாவாகவிருந்த நாட்சம்பளம் 83 ரூபாவாக உயர்த்தப்பட்டது. அன்று ஜனாதிபதியாகவிருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலையீட்டினால் அது சாத்தியமாகியிருந்தது. 1994 ஆம் ஆண்டுக்குப்பிறகு தோட்டத் தொழிலாளர்களின் வேதன விடயத்தில் தலையிடுவதை அரசாங்கம் நிறுத்திக்கொண்டமையினால் சம்பள விடயங்களில் தொழிற்சங்கங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிகளுக்கு இலகுவான விடயமாகவிருந்தது.

1992 ஆம் ஆண்டு தோட்டங்களின் முகாமைத்துவம் தனியார் கம்பனிகளிடம் கையளிக்கப்பட்டதால், தோட்டத் தொழிலாளர்களது வேதனங்கள் வேதனச்சபைகளின் தீர்மானங்களுக்கு உட்பட்டே இடம்பெற்றன. 1996 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வரவு – செலவு திட்டப்படி என்ற வகையில் 8.00 ரூபாவினை தொழிலாளருக்கும் செலுத்தவேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கைவிடுத்த நிலையிலும் வாழ்க்கைச் செலவுப்படியொன்று செலுத்தப்பட்டு வருவதால் இதனை வழங்க முடியாதென கம்பனிகள் மறுப்புத் தெரிவித்திருந்தன. அதேவேளையில் பொதுத்துறை ஊழியர்களுக்கு வரவு – செலவுத்திட்டத்தின் மூலம் 500 ரூபா வேதன உயர்வு வழங்கப்பட்டது. பின்னர் தனியார்த்துறை தொழில் வழங்குநரும் 400 ரூபாவினை வேதன உயர்வை வழங்கவேண்டுமெனவும் ஓய்வூதியம் பெறுவோருக்கு மாதாந்தம் 200 ரூபா அதிகரிப்பை வழங்கவேண்டுமெனவும் விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டது. ஆனால் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் வேதன உயர்வை வழங்கியிருந்த தொழில் வழங்குநர்கள் இத்தொகையை செலுத்த தேவையில்லையென கூறப்பட்டிருந்ததால் தோட்டத் தொழிலாளர்களுக்கு 400 ரூபா அதிகரிப்பு வழங்கப்படவில்லை. 

எனவே அரசாங்கத்தின் தீர்மானமானது, முதலாளிமார் சம்மேளனத்தின் தீர்மானத்தை கட்டுப்படுத்தாது என்பதனை விளங்கிக்கொள்ள முடியும். தற்போதைய 1000 ரூபா வாக்குறுதியும் அவ்வாறானதே. 2000 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையான சுமார் 20 வருடங்களில் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு 599 ரூபாவும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு 602 ரூபாவுமே சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தில் அடிப்படைச்சம்பளத்தில் 200 ரூபா அதிகரிப்பு வழங்கப்பட்டு 700 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டது. எனவே 2021 ஆம் ஆண்டு முதல் 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கவேண்டுமாயின் கம்பனிகள் அடிப்படைச் சம்பளத்தை 300 ரூபாவால் அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அட்டவணை 02 இல் 2000 - 2019 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிகரிப்பு தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதேவேளை, 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் குறைந்தபட்ச நாளாந்த கூலியாக ரூபா 1000 இனைக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஆரம்பித்ததுடன் அதனை தொடர்ந்து அடிப்படை நாளாந்த கூலியானது 500 ரூபாவிலிருந்து ரூபா 700 க்கு அதிகரிக்கப்பட்டது. எனினும் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு செலுத்தப்பட்ட வருகை மற்றும் உற்பத்தித்திறன் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டமை காரணமாக மொத்தச் சம்பளத்தில் ரூபா 20 மட்டுமே அதிகரிப்பு காணப்பட்டதாக மத்திய வங்கியின் 2019 ஆம் ஆண்டு ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உற்பத்தியின் அடிப்படையிலான வேதன முறைக்கு செல்வதற்கே முதலாளிமார் சம்மேளனம் விரும்புகின்றது. ஆனால் கம்பனிகள் நிர்ணயிக்கின்ற தொகைக்கேற்ப தினந்தோறும் தேயிலையின் விளைச்சல் காணப்படுமென்று கூறமுடியாது. கம்பனிகள் தற்போது 3 நாட்கள் தினசரி வேதனமும் 3 நாட்கள் உற்பத்தியின் அடிப்படையிலான வேதனமும் வழங்குவதற்கு இணக்கத்தை வெளியிட்டுள்ளன. தேயிலைச் செடிகள் முறையாக பராமரிக்கப்படாமல் விளைச்சலை எதிர்பார்ப்பது தவறு. அதிக விளைச்சலை தரக்கூடியவகையில் தேயிலைகள் பராமரிக்கப்பட வேண்டும், புதிய நடுகைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் மற்றும் தொழிலாளர்களுக்கு ஏற்ற வகையில் அறுவடை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இவற்றின் மூலம் தொழிலாளர்கள் ஓரளவு வேதனத்தை பெற்றுக்கொள்ள வழியேற்படும்.

1000 ரூபா நாட் சம்பளமானது எவ்விதமான நிபந்தனைகளற்ற வகையிலும் வேலைநாட்கள் உறுதிபடுத்தப்பட்டும் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் அதன்மூலம் தொழிலாளர்கள் நன்மை பெற முடியாது. குறிப்பாக ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளப்படுமாயின் நிலுவைத் தொகையினை பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். மேலும் வேதனவுயர்வு மட்டுமல்லாது உட்கட்டமைப்பு மற்றும் சுகாதார நலன்களை மேம்படுத்தும் வகையிலும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக