பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்தி மற்றும் வளப்பற்றாக்குறை தொடர்பாக மிக நீண்டகாலமாகவே பேசப்பட்டு வருகின்றன. ஆனால் சமமான வளப்பகிர்வு இலங்கை கல்வித்துறையில் அமுல்படுத்தப்படாத நிலை காணப்படுகின்றது. குறிப்பாக பெருந்தோட்டப் பாடசாலைகள் அமைந்திருக்கின்ற காணிகள், தனியார் கம்பனிகளுக்கு சொந்தமானவையாகவே இருக்கின்றன. அவற்றுக்கான புதிய காணிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்களும் நீடிக்கின்றன. தற்போது பாடசாலைகள் அமைந்துள்ள பகுதிகளில் போதியளவு காணிகள் இல்லையெனின் புதிய காணிகள் தெரிவு செய்யப்படுமிடத்துக்கு பாடசாலையை மாற்ற வேண்டும். அவ்வாறெனின் அவற்றுக்கான உட்கட்டமைப்புகள் யாரால் பெற்றுக்கொடுக்கப்படும். எனவே அவை சாத்தியமில்லாதவையாக இருக்கின்றன. தற்போது பாடசாலை அமைந்துள்ள காணிகளுக்கு உறுதிப்பததிரங்கள் இல்லாததுடன் எல்லப்படுத்தப்படவும் இல்லை. எனவே பெருந்தோட்ட பாடசாலைகள் அனைத்துக்கும் உரித்துடன்கூடிய காணிகள் அவசியமாகின்றன.
பாடசாலைகளின் மைதானத் தேவையை நிறைவேற்றும் வகையிலாவது காணிகள் ஒதுக்கப்பட வேண்டும். இடப்பற்றாக்குறை காரணமாக மைதானங்களே இல்லாமல் பல பெருந்தோட்டப் பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இதன் காரணமாகவே கடந்த அரசாங்கத்தில் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு 2 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை அமைச்சரவை அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்டது. பெருந்தோட்ட சமுதாயப் பிள்ளைகளின் கல்வி நோக்கங்கள் கருதி 843 எண்ணிக்கை கொண்ட பாடசாலைகள் தாபிக்கப்பட்டுள்ளன. குறித்த காணிப் பிரதேசமானது இப்பாடசாலைகளுக்கு நிலையாக அமைக்கப்படாத போதிலும் ஒவ்வொரு பாடசாலைக்கும் 2 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட காணித் துண்டொன்றை ஒதுக்குவதற்கு அரசாங்கம் கொள்கையளவில் இணங்கியுள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கத்தின் வசமிருந்த பெருந்தோட்டங்கள் குத்தகை அடிப்படையில் தனியார் கம்பனிகளுக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளமையினால், பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆகக்கூடியது 2 ஏக்கர் கொண்ட காணியானது இப்பாடசாலைகளின் அபிவிருத்தி செயற்பாடுகள் கருதி தனியார் கம்பனிகளிடமிருந்து பெற்றக் கொள்ளப்படவேண்டியுள்ளது.
அதற்கிணங்க, வரையறுக்கப்பட்ட இடவசதியுடன் தற்போது நடாத்தப்பட்டு வரும் 7 மாவட்டங்களில் அமைந்துள்ள 354 பெருந்தோட்ட பாடசாலைகள் சார்பில் தலா ஆகக்கூடியது 2 ஏக்கர் கொண்ட காணியை உரிய கம்பனிகளுடமிருந்து சுவீகரிக்கும் பொருட்டு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அரசாங்க தொழில்முயற்சிகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க ஆகியோரினால் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு 2018.04.10 அன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அங்கீகாரம் வழங்கப்பட்டு 2 வருடங்கள் கடக்கின்றபோதும் இன்னும் அந்நடவடிக்கை முழுமையாக செயற்படுத்தப்படவில்லை. இவ்விடயம் தொடர்பாக கல்வியமைச்சு மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வினவிய போது பின்வரும் விடயங்கள் கிடைக்கப்பெற்றன.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் தகவல்களின்படி, மேற்குறிப்பிட்ட அமைச்சரவை தீர்மானத்துக்கு அமைவாக நான்கு பாடசாலைகள் இதுவரை காணிகளை கைப்பற்றியுள்ளன. காணிகளுக்கான இழப்பீடுகள் தொடர்பில் காணிகள் அமைந்துள்ள பிரதேசங்களின்; பிரதேச செயலாளர்களிடம் தகவல்களைக் பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அட்டவணை 01 இல் காணிகளை கைப்பற்றியுள்ள பாடசாலைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தோட்ட பாடசாலைகளுக்கான காணிகளை விடுவிக்கும்போது அந்த இடத்திற்கான திட்டம், அதனுடன் தொடர்புபட்ட பெருந்தோட்ட நிறுவனங்களினது பணிப்பாளர் குழுவின் அனுமதி மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் தகுதிச் சான்றிதழையும் பெற்றுக்கொள்வது அத்தியவசியமாகும். இவ் ஆவணம் பூரணமாக்குகையில் சிறிது காலம் செல்லும் என்றும் அவதானிக்கப்பட்டது. தோட்ட பாடசாலைகளுக்காக காணிகளை விடுவிப்பது புதிய பாடசாலைகளுக்காக அல்லாமல் இருக்கின்ற பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காகும். அதனுடன் தொடரபுடைய மாகாண கல்வி அமைச்சு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நில அளவைத் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்கள் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுக்கு அதனுடன் தொடர்புபட்ட ஆவணங்களை பெற்றுத்தந்து இச்செயற்பாட்டிற்காக அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் தகவல்களுக்கு அமைய, பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு 2 ஏக்கர் காணியினை வழங்கும் 2018.04.10 அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் 354 பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான காணிகளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது வரையிலும் இவ் அமைச்சரவை தீர்மானத்திற்கிணங்க கல்வி அமைச்சினூடாக எந்தவொரு பெருந்தோட்ட தனியார் கம்பனியிடமிருந்தும் காணிகளை பெற்றுக்கொள்ளும் செயற்பாட பூர்த்தியாக்கப்படவில்லை. பெருந்தோட்டப் பாடசாலைகள் அமைந்துள்ள காணிகள் பெருந்தோட்ட தனியார் கம்பனிகள் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமானதாலும் அவற்றில் சில காணிகள் விளைநிலங்களாக இருப்பதாலும் பெருந்தோட்டக் கம்பனிகளிடமிருந்து இழப்பீடு இன்றி இக்காணிகள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சரவைத் தீர்மானத்தில் குறிப்பிடப்படாமையினாலும் காணிகளை பெற்றுக்கொள்ளும் நடைமுறையில் சிக்கல்கள் காணப்படுகின்றன.
காணிகளைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பின்வருமாறு:
பெருந்தோட்டப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக கம்பனிகளின் கீழ் நிர்வாகிக்கப்படும் அரச தோட்டங்களின் காணிகளைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பான கூட்டு அமைச்சரவைப் பத்திரம் 2018.04.04 அன்று சமர்ப்பிக்கப்பட்டு அதற்குரிய அமைச்சரவைத் தீர்மானம் 2018.04.25 அன்று வழங்கப்பட்டது.
இது தொடர்பில் சகல மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களை அறிவுறுத்தி காணிகளைப் பெற்றுக்கொள்வதன் நடைமுறைகளை விளக்கும் சுற்றறிக்கையொன்று (இல.25/2018) 2018.07.06 அன்று வெளியிடப்பட்டது.
மேலும் அமைச்சரவைத் தீர்மானம் பெறப்பட்ட பெரந்தோட்ட பாடசாலைகள் அமைந்துள்ள பெருந்தோட்டக் கம்பனிகளின் பணிப்பாளர்களை அறிவுறுத்தும் மற்றும் அக்காணிகளைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை தொடர்பான கலந்தரையாடலொன்று 2018.08.07 அன்று கல்வி அமைச்சில் நடைபெற்றது. அக்கூட்ட அறிக்கையும் எடுக்கப்பட்ட முடிவுகளும் பெருந்தோட்டப் பாடசாலைகள் அமைந்துள்ள மாகாணங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. மாகாண கல்வி அமைச்சும் மாகாண கல்வித் திணைக்களங்களும் தத்தமது பிரதேச பாடசாலை அதிபர்களைத் தொடர்புகொண்டும் கள தரிசனங்களை மேற்கொண்டும் காணிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான காணிகளைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையிலுள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்யும் விசேட கலந்துரையாடலொன்று பாராளுமன்றத்தில் 2019.03.28 அன்று நடைபெற்றது. அதன்போது பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான காணிகளைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறைகளை மாகாண கல்வித் திணைக்களங்களோடு இணைந்து கல்வி அமைச்சு, காணி அமைச்சு மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில்கள் அமைச்சு மேற்கொள்ள வேண்டுமென்று கலந்துரையாடப்பட்டது.
இதன் அடிப்படையில் கல்வி அமைச்சினால் மாகாணக் கல்வித் திணைக்களங்களோடு இணைந்து பெருந்தோட்டப் பாடசாலைகளிற்காகப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய காணிகள் தொடர்பான விபரங்கள் உரிய படிவங்கள் ஊடாகப் பெறப்பட்டு 2019.04.22 அன்று முதல்கட்ட கோவைகள் காணி அமைச்சிற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன. தற்போது அமைச்சரவை அனுமதி பெற்ற அனைத்து பாடசாலைகளினதும் காணி விபரங்கள் காணி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தற்போது காணி அமைச்சினால் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான காணிகளைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அதேவேளை, கம்பனிகளுக்கான இழப்பீடுகளை வழங்க வேண்டியேற்படும் சந்தர்ப்பங்களின் போதான வகைகூறல்களை பொறுப்பெடுக்க நேரிடும் என்ற நடைமுறைச் சிக்கல் எழுந்துள்ளது.
அதனடிப்படையில் 2020.02.07 அன்று கல்வி அமைச்சு மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு அதிகாரிகளிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க ஒவ்வோர் பெருந்தோட்டக் கம்பனிகளின் காணிகளில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கான காணிகளை உரிய கம்பனிகளின் நிர்வாக சபையின் அனுமதியுடன் இழப்பீடு இன்றி பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் பெருந்தோட்டங்களின் முகாமைத்துவ மற்றும் கண்காணிப்புப் பிரிவு பொறுப்பெடுத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பெருந்தோட்டங்களை தனியார் கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கியதன் பின்னர், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்பு, உட்கட்டமைப்பு மற்றும் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு காணிகளை பெற்றுக்கொள்வது முடியாத காரியமாகவே இருந்து வருகின்றது. அமைச்சரவை அனுமதி வழங்கியும் கல்வி அமைச்சு மற்றும் காணி அமைச்சு முயற்சி செய்தும் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு தலா 2 ஏக்கர் காணியை பெற்றுக்கொள்வதற்கு முடியாதுள்ளது. எனவே பெருந்தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டமை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது, அவர்களது பிள்ளைகளின் கல்வித்துறையிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதை அறியமுடிகின்றது. பெருந்தோட்டப் பாடசாலைகளில் வளப்பற்றாக்குறை ஒரு குறைபாடாக இருந்தாலும் இடப்பற்றாக்குறை காரணமாக உட்கட்டமைப்புகளை விருத்தி செய்வதிலும் பிரச்சினை காணப்படுகின்றது. எனவே பெருந்தோட்ட பாடசாலைகள் மற்றும் மாகாண கல்வித்திணைக்களங்கள் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை பயன்படுத்தி பாடசாலைகளுக்கான காணிகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பதுடன் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சும் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக