கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

27 டிசம்பர், 2020

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகள்


மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக கல்லூரி (பெட்டிகலோ கெம்பஸ்) தொடர்பில் சமீபகாலமாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறித்த பல்கலைக்கழகத்துக்கான காணி அனுமதி, வெளிநாட்டு பண உதவி, கற்கைநெறிகளுக்கான அங்கீகாரம் போன்றன அவற்றில் முக்கியமானவையாகும். குறித்த தனியார் பல்கலைக்கழக கல்லூரியை சவீகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ளது. குறித்த பல்கலைக்கழகம் ஆரம்பிப்பதற்கான அனுமதியை அரசாங்கமே வழங்கியிருக்கின்றது. அரச நிறுவனத்துக்குச் சொந்தமான காணியிலேயே கட்டிடம் அமையப்பெற்றுள்ளது. அரச வங்கியூடாகவே வெளிநாட்டு நிதியும் பெறப்பட்டுள்ளது. ஆனால் தற்போதே அரசாங்கம் அவற்றில் சட்டபூர்வமற்ற தன்மைகளை கண்டுபிடித்திருக்கின்றது. அவ்வாறெனின் அனுமதிகள் வழங்கப்படும் முன் எவ்வித ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லையா? குறித்த விடயத்தில் அரச அதிகாரிகள் தவறிழைத்துள்ளனரா? அங்கீகரிக்கப்பட்ட பட்டத்தினை வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையால் அங்கு கற்கைநெறியை தொடருபவர்களின் நிலை என்ன? போன்ற பல விடயங்கள் தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது. 

மஹாவலி அதிகார சபைக்குச் சொந்தமான காணி

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக கல்லூரியினை (பெட்டிகலோ கெம்பஸ்) அமைப்பதற்காக 35 ஏக்கர் காணி சட்டரீதியான குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் சட்டரீதியற்ற வகையில் 55 ஏக்கர் வரையில் பயன்படுத்தப்பட்டுள்ளமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் காணிகளுக்காக முறையான அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படாத சந்தர்ப்பத்தில் இச் செயற்திட்டத்திற்கு இலங்கை முதலீட்டுச் சபை அங்கீகாரம் வழங்கியிருந்தது. 

பொறியியல் கற்கை நெறிகளை நடாத்துவதற்காக தொழில்சார் பயிற்சி நிறுவனத்தை தோற்றுவிப்பதற்காக மஹவெலி காணிகள் 35 ஏக்கர்களை வழங்குமாறு வேண்டி எம்.ஏ.எல்.எம் ஹிஸ்புல்லாவினால் 2013 மே 02 ஆம் திகதி தனது பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பதவியின் உத்தியோக முத்திரையைப் பயன்படுத்தி இலங்கை மஹாவலி அதிகாரசபைக்கு ஒரு கடிதம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

மஹாவலி அதிகார சபையின் பணிப்பாளரின் (காணிகள்) கையொப்பத்தின் மற்றும் மஹாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்தின் சிபார்சின் அடிப்படையில் 2017 செப்டெம்பர் 29 ஆம் திகதி 35 ஏக்கர் பரப்பளவுள்ள 04 காணித்துண்டுகள் பெட்டிகலோ கெம்பஸ் தனியார் கம்பனிக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கை மஹாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளரினால் சிபாரிசு செய்யப்பட்டதுடன், குறித்த அமைச்சின் அமைச்சராக செயற்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

வருடாந்த அனுமதிப்பத்திரத்தின் அடிப்படையில் 2013 ஆம் ஆண்டிலிருந்து 2017 திசெம்பர் வரை ஹிரா மன்றத்திற்கு வழங்கப்பட்ட மேற்கூறிய 04 காணித்துண்டுகள் 2018 பெப்ரவரி 01 ஆந் திகதி நீண்டகால குத்தகை உறுதியின் அடிப்படையில் 2013 ஜூலை 12 ஆந் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் 30 ஆண்டுகள் காலத்திற்கு பெட்டிகலோ கெம்பஸ் தனியார் கம்பனிக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது. 

குத்தகை அடிப்படையில் மகவெலி அதிகாரசபையிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட காணியில் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக மண் நிரப்புதல் இடம்பெற்றிருந்ததுடன் உரிய மண் நிரப்புதலுக்  அருகாமையிலுள்ள சரணாலயத்தில் மண் வெட்டப்பட்டிருந்த போதிலும், 2009 இன் 66 ஆம் இலக்க அதிகாரச்சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 1992 இன் 33 ஆம் இலக்க அதிகாரச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியகத்திடமிருந்து உத்தரவுப் பத்திரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை. சரணாலய பிரதேசத்தில் மண் வெட்டுவதற்காக வன பாதுகாப்பு திணைக்களத்திடமிருந்து அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை. மண்ணை எடுத்துச் செல்வதற்காக வாகரை பிரதேச செயலகத்திடமிருந்து உத்தரவுப் பத்திரம் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை. வயல் காணிகளையும் தாழ் நிலங்களையும் நிரப்புதல் சம்பந்தமாக கமநல சேவைகள் திணைக்களத்தின் எழுத்துமூல அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

செயற்திட்டத்திற்கான கட்டிடங்களை நிர்மாணித்தல் 2013 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும், உரிய செயற்திட்டம் மற்றும் நிர்மாண திட்டங்கள் கோரளைப் பற்று வடக்கு - வாகரை பிரதேச சபைக்குச் சமர்ப்பித்து முறையான அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொள்ளல் உரிய முறைப்படி இடம்பெற்றிருக்கவில்லை.

1947 இன் 08 ஆம் இலக்க காணிகள் கட்டளைச் சட்டத்தின் 199(3) ஆம் பிரிவின் பிரகாரம் பின்னர் நீண்டகால குத்தகைக்கு வழங்கும் குறிக்கோளில் எச்சந்தர்ப்பத்திலும் வருடாந்த குத்தகையின் அடிப்படையில அரசாங்க காணிகளை விடுவிக்கலாகாது என வலியுறுத்தப்பட்டிருந்த அதேவேளை குத்தகைக்கு வழங்கியவரின் முன் அனுமதியின்றி வருடாந்த உத்தரவுப்பத்திரத்தின் அடிப்படையில் குத்தகைக்குப் பெற்றுக்கொள்ளப்பட்ட காணியில் நிரந்தர அல்லது தற்காலிக கட்டிடங்களை நிர்மாணிக்கலாகாது என எல்.சீ 75 ஆம் இலக்க வருடாந்த உத்தரவுப் பத்திர படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற நிலையிலும் வருடாந்த உத்தரவுப் பத்திரத்தில் “கட்டிடத்தை நிர்மாணிக்கும் அனுமதி உள்ளது” எனக் குறிப்பிட்டு வருடாந்த உத்தரவுப் பத்திரத்துடன் காணியில் நீண்டகால பாரிய அளவான செயற்திட்டத்திற்கான கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு மஹாவலி அதிகாரசபையினால் அனுமதி வழங்கப்பட்டு பின்னர் வருடாந்த குத்தகை நீண்டகால குத்தகைக்கு மாற்றப்படுவதற்கு நடவடிக்கை எடுத்ததன் மூலம் தெரிந்தே காணிகள் அதிகாரச்சட்டத்தின் மேற்கூறிய பிரிவு மீறப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட நிதி

பெட்டிகலோ கெம்பஸ் தனியார் கம்பனியின் பெயரில் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் பெயரில் இலங்கை வங்கியின் பல்வேறு கிளைகளில் 14 வங்கி கணக்குகள் பேணப்பட்டு வந்திருந்தன. மேற்கூறிய கணக்குகளுக்கு மத்தியில் 04 இலங்கை வங்கி கணக்குகளுக்கு 2016 - 2017 ஆண்டுகளின் போது ரூபா 4,123,859,831 பெறுமதியான வெளிநாட்டு பணம் அனுப்புதல்கள் கிடைத்திருந்தன. அட்டவணை இலக்கம் - 01 இல் பெட்டிகலோ கெம்பஸ் தனியார் கம்பனி மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் பெயரில் உள்ள வங்கி கணக்குகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட பணம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவில் 2019.06.12 ஆம் திகதி அதுரலிய ரத்னதேரர் முன்வைத்த முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கடந்த 2016.01.14 ஆம் திகதி முதல் 2019.05.31 வரையான காலப்பகுதியில் 206 தடவைகளில் கொள்ளுப்பிட்டி வங்கிக்கிளையிலுள்ள கணக்குக்கு 4,436,282,426.71 ரூபா வைப்புச் செய்யப்பட்டிருந்தமை தெரியவந்தது. அத்துடன் அந்த பணத்தில் 4,436,246,122.24 ரூபா பணம் 825 தடவைகளில் குறித்த கணக்கிலிருந்து மீளப்பெறப்பட்டிருந்தது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியிருந்த கொள்ளுப்பிட்டி இலங்கை வங்கிக் கிளையின் முன்னாள் முகாமையாளர் ஐ.சி.கே.கண்ணங்கர, 2016 ஆம் ஆண்டு முதல், பெட்டிகலோ கெம்பஸ் பிரைவட் லிமிடெட் எனும் குறித்த நிறுவனத்தின் 78495143 எனும் நடைமுறை கணக்குக்கு 3640939488 ரூபா 72 சதம் வெளிநாட்டிலிருந்து கிடைத்துள்ளதாக தெரிவித்திருந்தார். 

பெட்டிகலோ கெம்பஸ் பிரைவட் லிமிடெட் கணக்குக்கு கடந்த 2016 மார்ச் 4 ஆம் திகதி 695824072.90 ரூபாவும் 2016.10.05 அன்று 564112466 ரூபாவும் 2016.08.03 அன்று 526919267.36 ரூபாவும் 2016.10.05 அன்று 424671683.98 ரூபாவும் அத்துடன் 541184733.33 ரூபாவும் 2017.03.03 அன்று 438001538.68 ரூபாவும் 2017.06.07 ஆம் திகதி 450227726.36 ரூபாவும் வெளிநாட்டிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதுடன் 7 சந்தர்ப்பங்களில் குறித்த கணக்குக்கு சவூதி அரேபியாவைச் சேர்ந்த அலி அப்துல்லாஹ் அல் ஜூபாலி எனும் தனவந்தர் மூலம் பணம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

2006 இன் 06 ஆம் இலக்க பண கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் அதிகாரச்சட்டத்தின் பிரகாரம் மத்திய வங்கியினால் 2016 ஜனவரி 27 ஆந் திகதி வெளியிடப்பட்ட 1951/13 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சட்ட விதிக்கோவையின் 59(ஆ) பிரிவின் பிரகாரம் வணிகத் தொடர்புகளுக்காக உள்வருவதற்கு விண்ணப்பித்துள்ள நபர் அரசியல் பின்னணியுடனான ஒரு நபராக இருக்கும் சந்தர்ப்பத்தின் போது உரிய வணிக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு முன்னர் நிதி நிறுவனத்தினால் அதன் நிருவாக சபையின் அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டிய போதிலும், ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் ஹிராஸ் ஹிஸ்புல்லா ஆகிய அரசியல் பின்னிணியுடனான நபர்களை உள்ளடக்கிய நிறுவனத்தினால் வங்கி கணக்கினூடாக வணிகத் தொடர்புகளை மேற்கொள்ளும் போது மேற்கூறிய பிரிவின் பிரகாரம் இலங்கை வங்கி அதன் நிருவாக சபையிடமிருந்து அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொண்டிருக்கவில்லை.

நிதி கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் அதிகாரச்சட்டத்திற்கான மத்திய வங்கி சட்டவிதிக் கோவையின் 47(இ) பிரிவின் பிரகாரம் ஏதாவது ஒரு கணக்கிற்கு மூன்றாந் தரப்பு வாடிக்கையாளரினால் ஒரு தடவைக்கு 200,000 இற்கு மிகைத்த பணத்தை வைப்புச் செய்தல் இடம்பெறுகின்ற சந்தர்ப்பத்தின் போது பணத்தை வைப்புச் செய்பவரின் பெயர், விலாசம், அடையாள இலக்கம், வைப்புச் செய்யும் நோக்கம் முதலிய தகவல்களை வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டியதுடன் வங்கியினால் வைப்பு சம்பந்தமான தகவல்களை கணனி முறைமையிலுள்ள உரிய பிரிவில் உள்ளடக்குதல் வேண்டும். எனினும், பெட்டிகலோ கெம்பஸ் தனியார் கம்பனியின் 7895137 ஆம் இலக்க கணக்கிற்கு 11 சந்தர்ப்பங்களின் போது வைப்புச் செய்யப்பட்ட ரூபா 59,975,000 வைப்பிற்காக வைப்பாளரின் விபரம் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. 

சட்ட விதிக் கோவையின் 24(1) ஆம் பிரிவின் பிரகாரம் எதுவித நிதி நிறுவனத்தாலும் எதுவித புனைக்கப்பட்ட பொய்யான பெயரில், அல்லது மோசடியான நபரின் பெயரில் ஒரு கணக்கை திறக்கலாகாது என தெரியப்படுத்தியிருந்தும் இலங்கை வங்கி காத்தான்குடி கிளையினால் மலிக் அப்துல்லா பின் அப்துல் அசீஸ் மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி என்ற பெயரில் வியாபாரத்தை பதிவு செய்தல் சான்றிதழ் இன்றியும் பதிவு செய்யப்படாத நிறுவனத்தின் கடிதத் தலைப்பின் மூலமும் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா மேற்கொண்ட வேண்டுதலுக்கு பதிலாக போலியான பெயரில் ஒரு கணக்கை ஆரம்பித்து பேணுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. 

கற்கைநெறிக்கான அங்கீகாரம்

ஒரு உயர் கல்வி நிறுவனத்தை செயற்படுத்துவதற்குத் தேவையான அடிப்படை அம்சங்கள் பூரணப்படுத்தப்பட்டிருக்கவில்லை என தொழிற் பயிற்சி அமைச்சு மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழுவால் இனங்காணப்பட்டிருந்தும் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக கல்லூரிக்கு சட்டரீதியான தன்மையை ஏற்படுவதனை உணர்த்தும் வகையில் இளைஞர் விவகார அமைச்சிற்கும் தனியார் பல்கலைக்கழக கல்லூரிக்குமிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தொழில்சார் கல்வி நிறுவனத்தை தோற்றுவிப்பதற்கு ஹிரா மன்றத்தினால் விடுவிக்கப்பட்ட வேண்டுகோளை நிறைவேற்றுவதற்கு தேவைப்படுகின்ற அடிப்படைத் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்திருக்காததன் காரணமாக தொழில்சார் கல்வி ஆணைக்குழுவினால் பதிவு செய்தல் நிராகரிக்கப்பட்டிருந்தும் அந்த நிறுவனத்திற்குபெட்டிகலோ பல்கலைக்கழக கல்லூரி என்ற பெயரிலான உயர்கல்வி நிறுவனத்தை ஆரம்பிப்பதற்காக இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சினால் அனுமதியினை வழங்கி 2013 ஆகஸ்ட் 15 ஆந் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் 03 ஆண்டுகள் காலத்திற்கு ஹிரா மன்றத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது.

NVQ கற்கை நெறிகளை நடாத்துவதற்குத் தேவையான தொழில்சார் கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்தல் நிராகரிக்கப்பட்டிருந்தும் அவ்வாறான கற்கை நெறிக்காக மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் பத்திரிகை அறிவித்தலை வெளியிடுவதற்காக பல்கலைக்கழக கல்லூரியின் தலைவர் மேற்கொண்ட வேண்டுதலுக்கு அமைச்சு செயலாளரால் 2013 ஆகஸ்ட் 05 ஆந் திகதிய கடிதத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் முறையற்றது என்பது கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டது

இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் மூலம் ஹிரா மன்றத்தின் ஒத்துழைப்பின் அடிப்படையில் மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி தோற்றுவிக்கப்பட்டது என்பதனை அறிமுகப்படுத்தி கல்லூரியின் முகாமைத்துவத்தின் மூலம் அரசாங்க இலட்சினையையும் பயன்படுத்தி கற்கை நெறிகளுக்காக விண்ணப்பிப்பதற்கு அழைக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்த பத்திரிகை அறிவித்தல் ஒரு அரசாங்க நிறுவனமாக போலியான தோற்றத்தினைக் கட்டியெழுப்பதற்கு மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி நடவடிக்கை எடுத்திருந்தது.

2015 ஆம் ஆண்டின் போது புரிந்துணர்வு உடன்படிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்ட நிறுவனத்தினால் ஒரு உயர் கல்வி நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்குத் தேவையான அடிப்படை முறைமைகளைத் தயாரிக்காது மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழுவின் பதிவு செய்தலினைப் பெற்று NVQ சான்றிதழ் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

அத்துடன் காத்தான்குடி நகர சபையின் தலைவரினால் 2014 மே 10 ஆம் திகதி ஒரு குத்தகை உடன்படிக்கையின் மூலம் மட்டக்களப்பு நகர சபையின் நூல் நிலையக் கட்டிடம் மற்றும் நிருவாகக் கட்டிடத்தின் ஒரு பகுதி மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரிக்கு 8 ஆண்டுகள் காலத்திற்காக ரூபா 5,000 மாதாந்த வாடகைக்கு வழங்கப்பட்டிருந்தது. கிழக்கு மாகாண மதிப்பீட்டுத் திணைக்களத்தின் பிரதான மதிப்பீட்டாளரால் குத்தகை வாடகை சம்பந்தமான மதிப்பீட்டு அறிக்கையின் பிரகாரம் பயன்படுத்திய கட்டிடத்திற்கான அரசாங்கத்தின் மதிப்பீட்டாளர் குத்தகை வாடகை மாதம் ரூபா 197,500 எனவும் நகர சபைக்குச் செலுத்தப்பட்டுள்ள குத்தகை வாடகை ரூபா 5,000 மாத்திரம் எனவும் அதற்கிணங்க உடன்படிக்கை செய்யப்பட்ட திகதியிலிருந்து 2017 ஜூன் 30 ஆம் திகதி வரை அறவிட வேண்டிய நிலுவையான குத்தகை வாடகை ரூபா 8,475,000 ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல்வேறு முறைகேடுகள், விதிமுறை மீறல்கள், சட்ட மீறல்கள் இடம்பெற்றதாக அரச தரப்புகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதும், தற்போதுவரை பெட்டிகலோ கம்பஸ் நிர்வாகத்துக்கு எதிராக எவ்விதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. குறித்த திட்டத்தில் தவறிழைத்துள்ள அரச அதிகாரிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவில்லை. தற்போதைய நிலையில் குறித்த தனியார் பல்கலைக்கழகமானது, தனிமைப்படுத்தல் நிலையமாகவே செயற்படுகின்றது. எவ்வாறெனினும் அரசாங்கத்தின் அனுமதியின் பின்னரே பல்கலைக்கழக நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவை 2019 ஏப்ரல் குண்டுத்தாக்குதல் சம்பவம் நடைபெறும்வரை அதிகம் கேள்வி எழுப்பப்படாத விடயமாகவே இருந்தது. 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக