பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் அரசியல்வாதிகள் தங்களுடைய நலன்களுக்கேற்ற வகையில் தீர்மானங்களை மேற்கொள்கின்றனர். இதற்கு முன்னாள் ஜனாதிபதியும் விலக்கல்ல. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியிலிருந்த காலத்திலும் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற நிலையிலும் சர்ச்சைகளுக்கு சொந்தக்காரராகவே இருக்கின்றார். அவருடைய முன்மொழிவில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்விதமான நன்மைகளும் கிடைக்கவில்லை. அவற்றுக்கு பல உதாரணங்கள் கூறமுடியும் என்றாலும் கடந்த 2019.02.13 ஆம் திகதி தேயிலை தொழில்துறை எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள், அதற்கான குறுகிய மற்றும் நீண்டகால தீர்வு திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவும் தேயிலை தோட்;டத்துறையில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரச்சினைகள் மற்றும் சம்பள சிக்கல்களை தீர்க்கும் நோக்கில் அப்போது ஜனாதிபதியாகவிருந்த மைத்திரிபால சிறிசேனவினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
குழு நியமிக்கப்பட்டது தொடக்கம் இன்று வரை அது தொடர்பில் எவ்விதமான தகவல்களும் இல்லை. இவ்விடயம் தொடர்பிலான செய்தி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்தும் கடந்த வருடமே நீக்கப்பட்டுவிட்டது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இக்குழு நியமிக்கப்பட்டது. இதனால் தகவல் அறியும் உரிமைக்கான சட்டத்தினை பயன்படுத்தி ஜனாதிபதி செயலகத்தில் தகவல் கோரிக்கையை 24.08.2019 முன்வைத்தபோதும், கோரிக்கை 01.10.2019 ஆம் திகதி நிராகரிக்கப்பட்டது. அதன்பின்னர் தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவில் மேன்முறையீட்டினை மேற்கொண்டிருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தகவல் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவே மீண்டும் பதில் வழங்கப்பட்டிருந்தது. கிட்டதட்ட ஒரு வருடங்கள் ஜனாதிபதி செயலகம் தேடியும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைத்த குழு தொடர்பான விபரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
குறிப்பிட்ட குழு தொடர்பில் எவ்விதமான தகவல்களும் ஜனாதிபதி செயலகத்தின் கட்டுப்பாட்டிலோ அல்லது உடைமையின் கீழோ இல்லையென்பதாலேயே குறித்த தகவல் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தனது சொந்த தேவைகளுக்காக குழுவினை நியமித்திருக்க முடியாது. அவ்வாறெனின் அரசியல்வாதிகளை திருப்திபடுத்தவும் பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காகவுமே இக்குழு நியமனம் இடம்பெற்றுள்ளது என கருத வேண்டியுள்ளது. (அதுவே உண்மை) அக்குழுவின் தீர்வுத்திட்டங்களை 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் முன்வைப்பதற்கு பணிக்கப்பட்டிருந்தனர்.
ஜனாதிபதி செயலணியின் பிரதானி எம்.ஜீ. ஹிடிசேகர, பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளர் ஜே.ஏ. ரஞ்சித், தொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.பீ.ஆர். ராஜபக்ஷ, திறைசேரியின் பணிப்பாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ் சமரதுங்க, தேயிலை சபையின் தலைவர் டபிள்யூ.எல்.பி. விஜேவர்தன, தொழில் ஆணையாளர் நாயகம் ஜே.விமலவீர ஆகியோருடன் சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி சங்கத்தின் தலைவர், இலங்கை தோட்ட உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள், தேயிலை உற்பத்திசாலை உரிமையாளர் சங்கம், தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம், தேயிலை முகவர்கள் சங்கம் உள்ளிட்டவைகளின் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் அங்கம் வகித்திருந்தனர்.
இந்த குழுவானது, தேயிலைத் தொழில் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதையும், தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதையும், தொழில்துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் நலன்புரி நடவடிக்கைகளை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்ததுடன், தேயிலைத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் எழுந்துள்ள தடைகள் மற்றும் தேயிலை ஏற்றுமதி துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்துவதை இக்குழு பணியாக கொண்டிருந்தது.
இக்குழு நியமனத்தின் போது முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் மற்றும் தேயிலை தொழிலுடன் தொடர்புடைய சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்குபற்றியிருந்தனர். ஆனால் இக்குழுவின் தகவல்கள் எவையும் ஜனாதிபதி செயலகத்தில் இல்லையென தெரிக்கப்பட்டிருப்பது வேடிக்கையானது. இக்குழு நியமனமானது பெருந்தோட்ட மக்களுக்கு எவ்வகையிலும் நன்மையை ஏற்படுத்தாது என்பது வெளிப்படையாக தெரிந்திருந்தாலும்கூட பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பது தொடர்பில் அறிவதற்காகவே இப்பத்தி எழுதப்படுகின்றது. அதற்காகவே ஜனாதிபதி செயலகத்திடம் தகவல் கோரிக்கையும் விடுக்கப்பட்டது.
ஐந்து வருடங்களாக ஜனாதிபதியாக தனது பதவி காலத்தை அலங்கரித்தவர், பதவிகாலம் நிறைவடைவதற்கு 6 மாதங்களுக்கு முன்னரே இக்குழுவினை நியமித்திருந்தார். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மைத்திரி காணாமல்போனது போல் அவர் நியமித்த குழுவும் காணாமல் போய்விட்டது. அத்துடன் அவருடைய பதவி காலத்தில் நாடு முழுவதும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள கோரிக்கை தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போதும் எவ்விதமான கருத்தையும் முன்வைத்திருக்கவில்லை. அத்துடன் அரசாங்கம் வழங்குவதாக உறுதியளித்த 50 ரூபா அதிகரிப்பு தொடர்பிலும் எவ்விதமான அழுத்தங்களையும் வழங்கவில்லை. ஆனால் பெருந்தோட்ட மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்திருந்த அவர், அவர்களுக்கென நிரந்தர திட்டம் எதனையும் இறுதி காலம் வரை முன்வைத்திருக்கவில்லை. இருந்தாலும் அவர் பதவி விலகுவதற்கு முன்பாக தனக்கு தேவையான சகல வரப்பிரசாதங்களையும் தயார்படுத்திக்கொண்ட பெருமை அவரை சாரும்.
தற்போது புதிய ஜனாதிபதியும் வாக்குறுதியளித்த தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பளவுயர்வுக்காக போராடிக்கொண்டிருப்பதாகவே அறியமுடிகின்றது. இலங்கையில் ஜனாதிபதிகளுக்கே முடியாத அதிகாரங்களை முதலாளிமார் சம்மேளனம் கொண்டிருக்கிறதா என்பது பெரும் கேள்வி. தங்களுடைய அதிகாரங்களை பெருக்கிக் கொள்ள மக்களின் ஆணையை பயன்படுத்திக் கொள்பவர்கள், ஏன் மக்களுக்காக தங்களுடைய ஆணையை பயன்படுத்த மறுக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷ தொடங்கி மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போது கோட்டாபய ராஜபக்ஷ வரை 15 ஆண்டுகளுக்கும் மேலாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை தேசிய பிரச்சினையாக கவனத்தில் கொள்ளாது, தேர்தல் வாக்குறுதிகளாக மாத்திரம் பாவித்திருக்கின்றார்கள். அதேபோல முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த குழுவும் பத்தில் பதினொன்றாக காணாமலே போய்விட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக