தேயிலைச்சாயம் எனப்படுவது இலங்கையில் பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள இளைஞர் யுவதிகளின் தேசிய புகைப்பட கண்காட்சியாகும். இக்கண்காட்சி அதன் புகைப்படக் கலைஞர்களை உள்ளடக்கும் சமூகத்தின் கதையினை எம்மிடம் கொண்டு வருவதற்கு கமரா விழிகள் மூலம் அவர்களது உலகினை அனுபவிப்பதற்கும் மற்றும் எதிர்காலத்திற்கான அவர்களது எதிர்பார்ப்பினை எம்முடன் பகிர்ந்து கொள்வதற்கும் முன்னெடுக்கப்பட்ட முயற்சியொன்றாக இக்கண்காட்சி இருக்கின்ற அதேவேளை இப்புகைப்பட கண்காட்சியில் மலையகத்தின் இருண்ட பக்கங்கள் மாத்திரம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அபிவிருத்திகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்மறையான விமர்சனங்களையும் சமூகவலைத்தளங்களில் சந்தித்திருந்தது. விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆனால் அவை ஆரோக்கியமானவையாக இருப்பதை விரும்புவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் இங்கு புகைப்படங்களை காட்சிப்படுத்தியிருந்த இரு இளம் புகைப்பட கலைஞர்களுக்கு இலங்கையில் பிரசித்தி பெற்ற புகைப்படப்பிடிப்பாளர் டொமினிக் அந்தனியின் அலுவலகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. பல ஊடகங்களிலிருந்தும் பலருக்கு பணியாற்றுவதற்கான அழைப்பும் வந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த புகைப்படங்கள் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் அனுபவிக்கும் இன்னல்களையே காட்சிப்படுத்தியிருந்தது. இடவசதியில்லாத லயன் அறைகளில் கழியும் அவர்களுடைய வாழ்க்கையையும் தேயிலை நிறுவைக்கான தராசுகளை தொழிலாளர்கள் தங்களுடைய தலையில் சுமப்பதும், வசதியில்லாத வளங்களில்லாத வாழ்க்கையிலும் பெருந்தோட்ட சிறுவர்கள் புன்னகைத்து வாழ்வதும் எம்மை கடந்த காலங்களுக்குள் அழைத்துச் செல்வதாக இருக்கின்றது. மலசலக்கூடமும் சமையலறையும் ஒருங்கே அமைந்த இடத்தில் சமையல் நடப்பதும், பெற்றோர் தேயிலை கூடைகளுடன் செல்கையில் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும் காட்சியும் வெற்று மதுபான போத்தலில் நிரப்பிய தேயிலைச்சாயத்தை தாய் அருந்துவதையும் தேயிலை மலைகளிலேயே வசதியற்ற நிலையில் அமர்ந்து உணவு உண்பதையும் வெளிப்படுத்தும் புகைப்படங்கள், எமது வாழ்க்கையில் வழக்கமாகிப்போன விடயங்களாகவே பார்க்க வேண்டியுள்ளது.
கோடிகளில் சந்தா பணம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழும் தொழிற்சங்கவாதிகளுக்கு இருண்டுபோன வாழ்க்கையை வாழும் தொழிலாளர்கள்தான் வாழ்வு கொடுத்திருக்கின்றார்கள் என்பதற்கு புகைப்படங்கள் சாட்சிகளாகின்றன. இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த புகைப்படங்கள் மலையக மக்களின் ஒரு சில பிரச்சினைகளின் வெளிப்பாடு. இன்னும் சொல்லமுடியாத எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. அவற்றையும் எதிர்காலத்தில் கமராக்கள் வெளிக்கொண்டு வரவேண்டும். அழிந்து வரும் எமது சமூக அடையாளங்களை தேடி பிடித்து பொருட்களாகவும் மருவிப்போன கூத்துக்கலைகளை காட்சிகளாகவும் கண்காட்சி வெளிப்படுத்தியிருந்தது.
“தேசிய கலையரங்கில் மலையக மக்களின் பிரச்சினைகளை காட்சிப்படுத்தியிருப்பது முக்கியமான விடயம். மக்களின் வாழ்வியலை மொழியை கடந்த புகைப்பட காட்சியானது சகலரும் புரிந்து கொள்ளக்கூடியது. புகைப்படங்களிலுள்ள மக்களின் முகங்களிலுள்ள ரேகைகள் எமக்கு பல விடயங்களை சொல்கின்றது. மலையகமக்களின் பிரச்சினைகளை வெளிகொண்டுவருவது அரசியல்வாதிகள் என்ற நிலை இருக்கின்றது. உண்மையில் அதற்கு அப்பால் கலைஞர்கள், எழுத்தாளர்கள், சிவில் சமூகத்தினரும் கூட தங்களுடைய மொழயில் வெளிப்படுத்துகின்றார்கள். புகைப்படம் என்பதே ஒரு மொழியாகும். அதனை வெளிப்படுத்த சிவில் சமூகங்கள் முயற்சிக்க வேண்டும். இது ஒடுக்கப்பட்ட மக்களின் காட்சிப்படுத்தலாகவே நான் பார்க்கிறேன்” என நிகழ்வில் கலந்து கொண்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்திருந்தார்.
18 மாத பயிற்சியின் பின்பு இளம் புகைப்பட கலைஞர்களினால் அவர்களது முதலாவது கண்காட்சி தேயிலைச் சாயம் என நுவரெலியாவில் 2020 ஆகஸ்ட் 23 நடைபெற்றதோடு ஆகஸ்ட் 29 மற்றும் செர்டெம்பர் 14, 15 ஆம் திகதிகளில் பதுளை நகரில் நடைபெற்றது. நிஜவாழ்க்கையில் அவர்களுடன் நேரடியாக தொடர்புபட்ட அம்சங்களை அவர்களின் கமராவுக்குள் உள்வாங்கி எமக்கு அளித்திருக்கின்றார்கள். இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் எமக்கு செய்தியை பிரதிபலித்து காட்டுகின்றது. நமது சமூகம் இன்னும் எவ்வளவு பின்தங்கியிருக்கின்றது என்பதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தியிருக்கின்றது. இதுவே பெருந்தோட்ட மக்களின் இன்றைய நிலை அவற்றில் மாற்றங்களை கொண்டுவருவதே எமது தேவை. அதனை நிறைவேற்றுவதே இந்த சமூகத்தின் பாரிய பொறுப்பும் கூட.
“இந்த புகைப்பட காட்சிகளை நாங்கள் ஒரு வருடங்களாக முயற்சித்து பெற்றுக் கொண்டிருக்கின்றோம். மலையக மக்களின் வாழ்வாதாரத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே இப்புகைப்படங்களை நாங்கள் பெற்றுள்ளோம். இரு குழுக்களாக பிரிந்து 40 புகைப்படக்கலைஞர்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட 40 ஆயிரம் புகைப்படங்களில் மிகச்சிறந்த நூறை இங்கு காட்சிப்படுத்தியிருக்கின்றோம்.” என இளம் புகைப்படவியலாளர் தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.
கடந்த இரண்டு வருடங்களாக தனது சமூகத்தின் அவலங்களை வெளிக்கொண்டு வருவதற்காக கலைஞர்கள் பாடுபட்டிருக்கின்றார்கள். வெறுமனே இவை காட்சிகளாக இருப்பதில்லை. அவற்றையும் தாண்டி மக்களின் வாழ்க்கையை எம்முள்ளே விதைப்பவையாக இருக்கின்றன. அந்த விதைகள் எதிர்காலத்தில் விருட்சமாக வேண்டுமென்பதே பலரின் எதிர்பார்ப்பு. எமது சமூகத்தின் அவலங்களை நாமே வெளிக்கொண்டுவரவேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது. காலங்காலமாக அரசியல்வாதிகளையே சார்ந்திருப்பதே நாம் இன்னும் முன்னேறாமைக்கு காரணமாகவும் அமைந்து விட்டது.
“கடந்த 200 வருடங்களாக மலையக மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றார்கள். எனவே அர்களுடைய பிரச்சினைகளை புகைப்படங்கள் மூலம் எவ்வாறு தீர்த்து கொள்வது என்பதாகவே இந்த கண்காட்சி அமைந்திருக்கின்றது. குறிப்பாக கொழும்பு வாழ் இளைஞர் யுவதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மலையக மக்களுடைய பிரச்சினைகளினை பல வடிவங்களில் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். எங்களுடைய பிரச்சினைகளை, உண்மையான நிலைவரங்களை சகோதர இனத்துக்கு வெளிப்படுத்துவதே எமது பிரதான நோக்கம். மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்ட அபிவிருத்தியை காட்சிப்படுத்துவதால் நாங்கள் அரசியலுக்கு விளம்பரம் கொடுப்பதாக அமையும். அவ்வாறு செய்திருந்தால் அதை அரசியல் சார்பு என்று விமர்சித்திருப்பார்கள். மலையகத்தில் 200 வருட அபிவிருத்தி என்ன? கம்பனிகள் என்ன அபிவிருத்தி செய்திருக்கின்றன? என்பதை இப்புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன. சிலர் இப்புகைப்படங்கள் எந்த காலத்துக்குரியது என கேட்குமளவுக்கு நாங்கள் பின் தங்கியிருக்கின்றோம். மலையகத்திலிருந்து தற்போது கொழும்பில் வசிப்பவர்களே மலையகம் அபிவிருத்தி அடைந்து விட்டதாக கூறுகின்றனர். இந்த புகைப்படங்களை மலையகத்திலுள்ளவர்களிடம் கொண்டு செல்லும்போது அவர்கள், இதைவிடவும் மோசமான பகுதிகளுக்கு எங்களை அழைத்துச் செல்ல காத்திருக்கின்றார்கள். அவ்வாறெனின் இதைவிடவும் இருண்ட யுகம் மலையகத்தில் இருப்பதை உணர முடிகின்றது. மலையகம் வளர்ந்து விட்டதாக கூறும் சிலருக்கு இப்புகைப்பட கண்காட்சி பாடமாக அமையும். மலையகத்தின் ஒருபகுதியை மாத்திரம் பார்த்துவிட்டு அபிவிருத்தி என்று கூறுவது தவறு. ஒரு சிலருக்கு அதிகம் விமர்சிக்க மாத்திரமே தெரியும். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் எங்களுடைய முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்.” என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரதீபன் தெரிவித்திருந்தார்.
இன்று 26 மற்றும் 27 ஆம் திகதிகில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுகளை ஐரோப்பிய சங்கம் மற்றும் ஜெர்மன் சமஷ்டி வெளிநாட்டு அலுவலகத்தின் மூலம் சமநிதி அனுசரணையினை பெற்றுக்கொடுக்கும் இலங்கையின் நல்லிணக்க செயல்பாடுகளை வலுவூட்டுவதற்கான செயல்திட்டம் உடனான ஒத்துழைப்புடன் ஊவா சக்தி நிறுவனத்துடன் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் இச்செயல்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக